2025 மே 15, வியாழக்கிழமை

அமுக்கப்பட்ட சம்பூர் சர்ச்சை

Thipaan   / 2016 ஜூன் 04 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டித் தீர்த்த சம்பவத்தினால் எழுந்த சர்ச்சையை, அரசாங்கம் இப்போது ஓரளவுக்கு அமுக்கி விட்டது. திடீரென இந்த விவகாரம் வீங்கி வெடித்தபோது, அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பக்கத்தில், தமது அரசாங்கத்திலுள்ள கூட்டணிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை சமாளிக்க வேண்டும். மற்றொரு பக்கத்தில், கடற்படை உள்ளிட்ட முப்படையினரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை, முஸ்லிம் மக்களையும் புண்படுத்தாமல், சிங்கள மக்களையும் கோபப்படுத்தாமல், விவகாரத்தைக் கையாள வேண்டிய சிக்கல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில் தான், ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, ஜப்பானுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எனினும், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளை அழைத்துப் பேசி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் இருந்து திரும்பியதும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை விலக்கிக் கொள்வதாக கடற்படை அறிவித்த பின்னரே, நிலைமைகள் சுமுகமடைந்தன.

ஆனால், இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததற்குக் காரணமான, அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் அப்படியே அமுக்கி விட்டது. இதன் அடிப்படையான பிரச்சினைகள் என்பது, முதலாவது, சிவில் செயற்பாடுகளில் படையினரின் தலையீடுகள், இரண்டாவது, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி. இந்த இரண்டினதும் நேரடி விளைவு தான், சம்பூர் சம்பவம்.

மாகாணக் கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலை ஒன்றில், ஆளுநரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, கடற்படையின் தலையீடுகள் எழுந்தமையால்தான், எல்லாக் குழப்பங்களையும் ஏற்படுத்தியது.

கிழக்கு முதல்வர் வருத்தம் தெரிவித்து எழுதிய கடிதம், அவருக்கு எதிரான தடைகளை நீக்குவதான கடற்படையின் அறிவிப்புடன் எல்லாமே முடிந்து போய்விட்டது போல, ஒரு பிரமை இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடற்படை அதிகாரிக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழ்நிலையும் தீர்ந்துபோய் விட்டாலும், சிவில் நிர்வாகத்தில் படைத் தலையீடுகள் மற்றும் ஆளுநரின் அதிகாரத்துவப் போக்கு என்பன அப்படியே தான் இருக்கப் போகின்றன. சம்பூர் சம்பவம், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொதுவான இந்த இரண்டு அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வுவொன்று கிடைப்பதற்கான வாய்ப்பாக மாறும் என்றே பலரும் கருதியிருந்தனர்.

ஆனால், இப்போதுள்ள நிலைமையைப் பார்க்கும்போது, சம்பூர் சம்பவம் இன்னும் சில நாட்களில் மறக்கப்பட்டு விடும் போலவே தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தன் மீது தவறுகள் இல்லையென்று மறுத்திருக்கின்ற நிலையில், முதலமைச்சர் நஸீர் அஹமட், அவர் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இதேபோன்ற நிலையை, ஏற்கெனவே வடக்கு மாகாணசபை எதிர்கொண்டிருக்கிறது. அங்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான புகைச்சல் நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனை 13ஆவது திருத்தச்சட்டத்தின் குறைபாடு என்று மட்டும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. அதற்கும் அப்பால், நிர்வாகத் துறையில் புரிந்துணர்வும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான விருப்புணர்வும் இல்லாத நிலை இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தமது நிர்வாகத்தின் தலையிடுவதாகவும், தனது முக்கியத்துவத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகவும், கிழக்கு முதலமைச்சர் கூறுகின்ற குற்றச்சாட்டுகளை புறமொதுக்கி விட முடியாது.

ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, நீண்டகாலம் சிவில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர். பாதுகாப்புச் செயலாளராகவும் கடமையாற்றியவர். இப்போதும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும் பணியாற்றுபவர். அவர், கிழக்கு மாகாண நிர்வாக விடயங்களில், கடும்போக்கை வெளிப்படுத்த முனையும் போது, அது, மத்திய அரசாங்கத்தின் கெடுபிடியாகவே பார்க்கப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. சம்பூர் விவகாரத்தில், ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, தன்னிச்சையாக இந்த நிகழ்வை கடற்படை மூலம் ஒழுங்குபடுத்தியதற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ் தான் கல்வி அமைச்சு இருக்கிறது என்றால், அங்கு ஆளுநர் தன்னிச்சைப்படி செயற்படலாம் என்றில்லை.

மாகாண சபை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்டதே தவிர மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிக்குரியது அல்ல. ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநர், மாகாணசபைக்குரிய அதிகாரங்கள், தனக்குத் தரப்பட்டவை என்ற தோரணையில் செயற்பட்டால், அங்கு அதிகாரப்பகிர்வு என்பதற்கு துளியும் இடமில்லை என்றே அர்த்தம்.

மத்தியில் ஜனாதிபதியும், மாகாணத்தில் ஆளுநரும் செய்கின்ற ஆட்சியாகவே அது இருக்கும்.

சிவில் நிர்வாக விடயங்களில் நன்கு அனுபவம்மிக்க ஒருவரான ஒஸ்டின் பெர்ணான்டோ, இவ்வாறு நடந்து கொண்டமை, எந்தவொரு முதலமைச்சராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகவே விடயமாகவே இருந்திருக்கும்.

எனவே தான், சம்பூர் விவகாரத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் கிழக்கு மாகாண முதலமைச்சரோ, அல்லது அவரை அவமதித்த அல்லது அவரால் அவமதிக்கப்பட்ட கடற்படை அதிகாரியோ அல்ல. மாகாண ஆளுநர் என்ற வகையில், தேவையற்ற நிர்வாகத் தலையீடு ஒன்றின் மூலம், மத்திய - மாகாண அரசாங்கங்களுக்குள்ளேயும், மாகாண அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்குள்ளேயும், அரசாங்கத்துக்குள்ளேயும், மக்களிடையேயும் தேவையற்ற சலசலப்பொன்றுக்குக் காரணமாகியிருக்கிறார் ஒஸ்டின் பெர்ணான்டோ. இவ்வளவும் நடந்த பின்னர் அவர், தனது தரப்பில் தவறுகள் ஏதுமில்லை என்று சாதிக்க முனைவது, அவரது நீண்டகால நிர்வாகத்துறை அனுபவத்தின் முதிர்ச்சியின் மீது கேள்வி எழுப்ப வைக்கிறது.

அதைவிட, அதிகாரபீடத்தில் இருப்பதால், அவரால் இந்த நிலைமையின் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுதான் சிக்கலான விடயம். ஆளுநருக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களில் முதலமைச்சரோ, மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில் ஆளுநரோ தலையீடு செய்யும் போது, நிச்சயம் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்.

அதுவும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே 13 ஆவது திருத்தச்சட்டத்தினால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், இத்தகைய முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுவது இயற்கை தான். இதனை அரசாங்கம் சுமுகமான முறையில் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடத் தவறியிருக்கிறது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர்கள் தான், அதிகாரத்துவ மனோநிலையில் செயற்படுகிறார்கள் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போது, தற்போதைய அரசாங்கத்தினால் அவர்கள் மாற்றப்பட்டனர்.

அவர்களுக்குப் பதிலாக அனுபவம்மிக்க முன்னாள் மூத்த சிவில் நிர்வாக அதிகாரிகளை அரசாங்கம் நியமித்தது, வடக்குக்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட எச்.எம்.ஜி.எஸ். பாலிஹக்கார, வடக்கு மாகாணசபையுடன் அவ்வளவாக முட்டி மோதிக் கொள்ளாமலேயே ஓய்வுபெற்றுச் சென்று விட்டார்.

ஆனால், ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாணசபையுடன் முரண்நிலை ஒன்றை வளர்த்து விட்டிருக்கிறார். கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான முரண்பாடுகள் எல்லாவற்றுக்கும், ஆளுநரே காரணம் என்று கூற முடியாது. ஆனால் சம்பூர் விவகாரத்தில் ஆளுநரின் தவறுகளே நிலைமைகள் மோசமடையக் காரணமாகியிருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. இந்தளவுக்கு நிலைமை சென்ற பின்னரும், ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ அதற்காக வருத்தம் தெரிவிக்காமல், தனது தவறை ஒப்புக் கொள்ள மறுப்பது, அவரது அதிகாரத்துவப் போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ சிரித்துக் கொண்டே தன்னை அவமானப்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் நஸீர் அஹமட். சம்பூர் மகாவித்தியாலய மேடையில் கூட அவர் அவ்வாறு தான் சிரித்துக் கொண்டே சமாளிக்கப் பார்த்தார். ஆனால், அவரது சிரிப்பினால் முதலமைச்சரின் வாயை அடைக்க முடியாமல் போனது.

ஒஸ்டின் பெர்ணான்டோ ஒரு நிர்வாக அதிகாரியாக, நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியவர். அவ்வாறு பணியாற்றிய காலங்களில், வடக்கு, கிழக்குத் தொடர்பாக எத்தகைய முடிவுகளை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்று இங்கு விவரிக்கத் தேவையில்லை.

அந்த வகையில் செயற்பட்டு பழகிப்போன ஓர் அதிகாரியாகத்தான் ஒஸ்டின் பெர்ணான்டோ இன்னமும் இருக்கிறார் என்பதையே, அவரது இப்போதைய அணுகுமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன. தற்போதைய அரசாங்கம் மாற்றங்களை விரும்புவதாக காட்டிக் கொள்கிறது, சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்வதாக வெளியரங்குக்கு வெளிப்படுத்தவும் முனைகிறது.

இப்படியானதொரு நிலையில், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துவப் போக்கை வெளிப்படுத்தும், ஆளுநர்களோ அமைச்சர்களோ, சிறுபான்மையினரின் நிர்வாகங்களில் தலையீடு செய்கின்ற சூழ்நிலைகள் காணப்படுவது அரசாங்கத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்கத் தூதுவரின் முன்பாகத் தான், சம்பூர் சம்பவம் நடந்திருக்கிறது. மேடையில் மாணவர்கள் முன்பாக முன்னுதாரணமான ஒருவராக, முதலமைச்சர் செயற்படத் தவறியது, அமெரிக்கத் தூதுவருக்கு எந்தளவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமோ, அதேயளவுக்கு ஆளுநரின் அதிகாரத் தலையீடும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறினால், நல்லிணக்கம் கேள்விக்குறியான பாதையில் தான் பயணிக்கத் தொடங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .