2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அல்-ஜசீராவில் ரணிலுக்கு வந்த வினை

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த காலத்தில் பல ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் (கமிட்டிகள்) ஆகியவை நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கு நியமிக்கப்பட்டவை என்ற கருத்து மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. அக்கருத்து தவறென்று கூறவும் முடியாது.

அவ்வாறானதோர் ஆணைக்குழுவொன்றின் அறிக்கை இந்நாட்களில் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஈடுபாட்டுடன் பியகம் பகுதியில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் பட்டலந்த சித்திரை வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையே அதுவாகும்.

1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டு 199ஆம் ஆண்டு அதே ஜனாதிபதியிடமே கையளிக்கப்பட்ட அவ்வறிக்கை கேட்பார் பார்ப்பாரின்றியே கடந்த 27 வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. ஆயினும், கடந்த 6ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவைத் தளமாகக்கொண்ட அல்-ஜசீரா தொலைக்காட்சியுடன் நடத்திய நேர்காணல் ஒன்றை அடுத்தே அது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1987 முதல் 1990ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியை அடக்கும் போது, அரச படைகளும் அரச உதவி பெற்ற கொலைகார கும்பல்களும் 60,000க்கு மேற்பட்டோரைப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அப்படைகளும் கொலைக் கும்பல்களும் அவர்களில் பல்லாயிரக் கணக்கானோரை கொலை செய்யும் முன் நாட்டில் பல பகுதிகளில் நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம்களில் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவற்றை பற்றி நூல்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் நந்தன வீரரரத்ன “பட்டலந்தட்ட கினிதெபுவெமு” (பட்டலந்தவுக்கு தீ வைத்தோம்) என்ற நூலை எழுதியுள்ளார். பட்டலந்த வதை முகாம் ரணிலின் மேற்பார்வையில் இயங்கியதாகவே கூறப்பட்டு வந்துள்ளது. மாத்தறையில் எலியகந்த இராணுவ முகாமில் நடந்த சம்பவங்களை அதில் சித்திரவதைக்குள்ளான ரோஹித்த முணசிங்க என்பவர் 

எலியகந்த வதை முகாம் என்ற பெயரிலான ஒரு நூலில் எழுதியுள்ளார்.
வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த காமிணி முத்துகுமாரண 
என்பவரும் பின்னர் லண்டனுக்குச் சென்று ‘மத்தகக் கிணி புபுரு’ (நினைவுத் தீப் பொறிகள்) என்று ஒரு நூலை எழுதியுள்ளார். மேலதிகமாக பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பட்டலந்த வதை முகாமில் இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட அல்-ஜசீராவின் Head to Head என்ற பெயரிலான மேற்படி நேர்காணல் மிகவும் வித்தியாசமானதொன்றாகும். அதனை நடத்தும் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் மிகவும் கடுமையாக தன்னோடு உரையாடுவோரிடம் கேள்விகளைக் கேட்பார். தன் முன் இருப்பவர் 
ஒரு நாட்டின் தலைவரா? சாதாரண மனிதரா? என்பது அவருக்கு முக்கியமல்ல.
ரணில் விக்ரமசிங்க வழமையாக நேர்காணல்களின் போது, தன்னை விமர்சிக்கும் பாணியிலான கேள்விகள் கேட்கப்பட்டால் கேள்விக்குப் பதிலளிக்காமல் கேள்வி கேட்கும் ஊடகவியலாளரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொள்வார்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஜேர்மனியின் டௌச்செ வெல என்ற தொலைக்காட்சியோடு நடத்தப்பட நேர்காணலின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை விடுக்கும் கோரிக்கையைப் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரின் தேசியத்தை இழுத்துக் கடிந்து பேசினார். “உமது மேற்கத்தியக் கண்ணோட்டத்தை விட்டு விடும்” என்றும் கூறினார். உண்மையிலேயே அங்கு அவர் கோபிக்கக் கூடிய எதுவும் நடைபெறவில்லை.

மற்றொரு முறை சிங்கள பெண் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் தேசிய கலாசாரத்தை மதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே என்று கூறினார். உடனே ரணில் மானவம்ம மன்னரை பற்றித் தெரியுமா? என்று கேட்டார். ஊடகவியலாளர் தடுமாறினார். அதன் பின்னர் ரணில் ஏதேதோ கூறி கேள்வியைத் திசை திருப்பினார்.

ஆனால் அல்-ஜசீரா நேர்காணலின் போது, அவர் ஹசனிடம் மாட்டிக்கொண்டார். ஓரிடத்தில் அவர் நீர் பிறக்கும் முன்னரே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூற, அதுவும் பிரச்சினைக்கான ஒரு காரணம் என்று சிலர் கூறலாம் என்று ஹசன் கூறினார்.

ஹசன், பட்டலந்த ஆணைக்குழுவைப் பற்றிய கேள்வியை எழுப்பிய போது, ரணில் முதலில் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றார். ஹசனிடம் ஆணைக்குழுவின் அறிக்கை இல்லை என்று நினைத்த அவர் எங்கே அறிக்கை? அறிக்கையில் உள்ளவற்றிலிருந்து கேள்வி கேளுங்கள் என்றார். ஹசன் அறிக்கையிலிருந்து முன்கூட்டியே எடுத்த குறிப்புக்களை வாசித்தார். அப்போது அவர் எங்கே? அறிக்கை என்றார்.

அறிக்கை தம்மிடம் இல்லை என்று ஹசன் கூறினால், இல்லாத அறிக்கைப் பற்றி ஏன் கேள்வி கேட்கிறீர்? என்று ஹசனை அசௌகரித்துக்குள்ளாக்குவதே அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், பிபிசி தொலைக்காட்சியின் முன்னாள் இலங்கைக்கான நிருபர் பிரான்சஸ் ஹரிசன் அப்போது தம்மிடம் இருந்த அறிக்கை பிரதியைக் காட்டினார். பின்னர் தான் தனக்கும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார். இந்த சூடான விவாதத்தை அடுத்துத் தான் பட்டலந்த வதை முகாமைப் பற்றி பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபக்‌ஷக்கள் தமது எதிரிகள் என்று ரணில் கூறியிருந்தார். அதைப்பற்றிக் குறிப்பிட்ட ஹசன் ஆனால் நீங்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டீர்கள் என்று கூறினார். அதேவேளை, ராஜபக்‌ஷக்களே அவரை பாராளுமன்றத்தில் வாக்களித்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள் என்றும் அவர் கூறிய போது, ரணில் விக்ரமசிங்க அதனையும் மறுக்க முயன்றார். இது போன்ற சிறுபிள்ளை தனமான சம்பவங்களும் அதில் இடம்பெற்றன.

மெஹ்தி ஹசன், நேர்காணல்களின் போது, தம்மோடு உரையாடுவோரைப் பேச விடுவதில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்க முடியாது. ஆனால், அவரது இந்த நேர்காணல் முறை மூலம் எவருக்கும் கேள்விகளை திசை திருப்ப அவர் இடம் கொடுப்பதில்லை. இருந்த போதும், வதை முகாம் பற்றிய குற்றச்சாட்டை ரணில் விக்ரமசிங்க ஏற்பார் என்று எவரும் முன்கூட்டியே எதிர்ப்பார்த்திருந்ததால் அது மடமையாகும். எவரும் அவ்வாறான குற்றச்சாட்டுகளை ஏற்கப் போவதில்லை.

எனினும், போரின் போது அரச படைகளின் தாக்குதல்களால் போர்க் களத்தில் மருத்துவமனைகளும் சேதமடைந்தன என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். போரில் சிக்குண்ட மக்களுக்கான உணவு வகைகளை அனுப்புவதற்குப் படையினர் தடையாக இருந்தனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல ஊடகவியலாளர்கள் நேர்காணல்களின் போது, அரச தலைவர்கள் போன்றவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் கேள்விகளை கேட்பதில்லை. கேட்டாலும் தொடர்ச்சியாகக் கேட்பதுமில்லை. ஆனால், அல்-ஜசீராவின் இந்த நேர்காணல் நிகழ்ச்சி அவ்வாறானதொன்றல்ல. எனவே, மூடி மறைக்க ஆயிரம் ஊழல்களும் குற்றங்களும் உள்ள இலங்கையின் தலைவர்கள் 

இவ்வாறான நேர்காணல்களில் கலந்து கொள்வது அவர்களுக்கு நல்லதல்ல.
உதாரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ இதில் கலந்து கொண்டால் நிச்சயமாக அவரது பதவிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், போர்க் காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அளவிலான மோசடிகள் ஆகியவற்றைப் பற்றிக் கேட்கப்படலாம். ஊடகவியலாளர்களான நிமலராஜன், லசந்த விக்ரமதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோருக்கு என்ன நடந்தது? என்றும் அவர்களுக்கு ஏன் நீதி வழங்கப்படவில்லை? என்றும் கேட்கப்படலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்காக பிள்ளையானுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெற்றீர்கள் என்றும் கேட்கப்படலாம். அப்போது மஹிந்த என்ன பதில் அளிக்கப் போகின்றார்?
அதேபோல், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் உங்கள் பிரதமரை ஏன்? பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ஒதுக்கினீர்கள் என்று கேட்டால் மைத்திரிபால சிறிசேன என்ன கூறப் போகிறார்? அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தம் இருக்கிறது என்று சகல அமைச்சர்களினதும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டு இருந்தும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு ஏன்? அதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது என்று கேட்டால் மைத்திரி என்ன கூறப் போகிறார்?

நேர்காணலொன்றின் போது, இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் எங்கே என்று கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கேட்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதியிடம் கேளுங்கள் என்று அவர் பதிலளித்தார். Head to Head நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் அவ்வாறு மழுப்பலாக பதிலளித்தால் நிச்சயமாக அவர் வறுக்கப்படுவார்.

உள்ளூரில் நேர்காணல்களின் போது, குறிப்பாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் இந்தத் தலைவர்களிடம் மிகவும் மென்மையான கேள்விகளையே கேட்பார்கள். அதற்குப் பாதுகாப்பு மற்றும் ஊடக ஒழுக்க நெறிகளைப் பற்றிய ஊடகவியலாளரின் அறிவு போன்றவை காரணமாகின்றன. ஆனால், அல்-ஜசீராவின் Head to Head வழமையான நிகழ்ச்சி போன்றவற்றில் அவர்களால் மழுப்பவோ தப்பிக்கவோ முடியாது.        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .