2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டுள்ள அரசியல் நிர்ப்பந்தம்?

Thipaan   / 2016 ஜூன் 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லியில் சந்தித்துக் கொண்டது, தமிழக அரசியலில் மட்டுமின்றி, அகில இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, மே 23ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டார். மத்தியில் பா.ஜ.க வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும், 2014 ஜூன் 3 ஆம் திகதியன்றே டெல்லிக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது 28 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தார். தமிழ்நாட்டில் நதி நீர் இணைப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி கேட்டிருந்தார்.

இம்முறை முதல்வராக பொறுப்பேற்றதும், ஜூன் 14 ஆம் திகதி டெல்லி சென்று மோடியை சந்தித்த ஜெயலலிதா, 96 பக்கங்கள் கொண்ட பல்வேறு தமிழக கோரிக்கைகளைக் கொடுத்து நிதியுதவி கேட்டிருக்கிறார். 'ஏற்கெனவே வைத்த கோரிக்கைகளை மீண்டும் வைத்து, அரைத்த மாவையே அரைப்பதா' என்று இந்த சந்திப்புக் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. என்றாலும், சென்ற சந்திப்பை விட இந்தச் சந்திப்பு சற்று வித்தியாசமான சூழ்நிலையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடக விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால், இப்போதும் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு, தீர்ப்புக்காக அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னரே முதலமைச்சரைப் பிரதமர் சந்தித்துள்ளார். இந்த முறை அவர், மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அப்போது பிரதமர் மோடி, நம்பிக்கையுடன் தனக்கு கிடைத்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த நேரம். இந்திய அளவில் அவருக்கு மாற்று இல்லை என்று கருதும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. கட்சிக்குள்ளும் நாடாளுமன்றத்தில் மேலவையில் மசோதாக்களை நிறைவேற்றவும் பிரதமர் மோடி சவாலை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து உள்ளார்.

மோடியும், கட்சித் தலைவர் அமித் ஷாவும் பா.ஜ.கவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் என்ற சூழல் உருவானாலும், மத்திய பிரதேச முதல்வர் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ் நாத் சிங் உள்ளிட்டோர் கட்சிக்குள் பலம் பெற்று இருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. அடுத்து வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க அறிவிக்கப் போகும் 'குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்' யார் என்பதில் பெரும் சர்ச்சை கட்சிக்குள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோசி, எல்.கே. அத்வானி போன்றவர்கள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்ற வருத்தத்தில் இருக்கின்றனர். கட்சிக்குள்ளும் இருக்கும் பல தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்றோருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது என்றே கருதுகின்றனர். அவர்களில் பலர், இவர்களுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். மோடியைப் பொறுத்தவரை, பா.ஜ.கவுக்குள் ஏற்படும் உட்கட்சி அரசியலை மனதில் வைத்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிஸ்ஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருடன் அரசியல் ரீதியான நட்பை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றே எண்ணுகிறார். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் போன்றோருடன் கூட கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திக் கொள்ள மோடி தயாராக இல்லை. இந்த மூன்று முதலமைச்சர்களும் மோடிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணத்தை பா.ஜ.கவில் ஏற்படுத்துவது போன்றே, மத்திய அரசின் நடவடிக்கை இந்த மூன்று மாநிலங்களைப் பொறுத்தமட்டில் இருக்கிறது. இது போன்ற மாறுபட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா, மோடியைச் சந்தித்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதே 'தனித்துப் போட்டி' என்ற வியூகம் எடுபடுமா என்ற சந்தேகம் பிறந்திருக்கலாம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 'தனித்துப் போட்டியிட்டு' அ.தி.மு.க பெற்ற அமோக வெற்றியை 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெற முடியவில்லை. ஆகவே, அவர் முன்பு இருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தை இப்போதே வகுக்கத் தொடங்கி விட்டார் என்றே தோன்றுகிறது. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காத ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் தலைமையை முன்னிறுத்தி, தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்று நினைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனென்றால், காங்கிரஸுடன் உடனடியாக அ.தி.மு.க கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க கடுமையாக சேதாரமடைய வைத்து விட்டது. போதாக்குறைக்கு 2-ஜி ஊழல் பிரச்சினையில் 'காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி' என்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார் ஜெயலலிதா. அது மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸின் அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அளித்தது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான அந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எல்லாம் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, 'வாசன்' தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகியிருப்பதால், காங்கிரஸின் பலத்தின் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் இருக்கிறது. ஆகவே, 2019இல் காங்கிரஸுடன் கை கோர்ப்பதற்கு வாய்ப்பு அரிது.

இந்தச் சூழ்நிலையில் அத்வானி ஒரு முறை கூறியது போல் 'பா,ஜ.கதான் அ.தி.மு.கவுக்கு இயற்கையான கூட்டணிக்  கட்சி' என்ற நிலை இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அக்கட்சியுடன் யாரும் கூட்டணி வைக்க தயங்கிய நிலையில் முதன் முதலில் 1998 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா. அப்போது 'வைகோ, டொக்டர் ராமதாஸ், மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி' ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்றார். அப்போது பா.ஜ.க தலைவர்களாக இருந்த அதல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி ஆகியோரை விட இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியிடம் அ.தி.மு.கவுக்கு நெருக்கமான நட்பு வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. ஏனெனில், குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றுக் கொண்ட போதும் சரி, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட போதும் சரி, பரஸ்பரம் இருவரும் அந்தந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சம்பவங்களே இதற்கு உதாரணமாக இருக்கிறது.

ஆகவே, எதிர்காலத்தில் மோடிக்கு உதவியாகவும் 2019இல் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியாகவும் மாறுவதற்கான முகாந்திரம் இந்த சந்திப்பு மூலம் உருவாகியிருக்கிறது. அதனால்தான் பிரதமரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதா, அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆளுநர் உரையில் 'தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்து இருக்கிறார். மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்ற ஆளுநர் அறிவிப்பு 'அ.தி.மு.க- பா.ஜ.க உறவு' நெருங்கி வருவதற்கான முதல் படிக்கட்டாகவே அமைந்திருக்கிறது. தி.மு.கவுக்கு தமிழக சட்டமன்றத்தில் கிடைத்திருக்கும் 89 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.கவை மத்திய அரசாங்கத்தை நோக்கி நட்பு ரீதியாக நகர வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், அ.தி.மு.கவுக்கு எதிரே இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்தால் கூட அக்கட்சிக்கு எதிராக துரும்பைக் கூட தூக்கிப் போட முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கவுக்கு கிடைத்திருப்பதால் 'அ.தி.மு.க உறுப்பினர்களை சமதானமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது' என்று சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.கவுக்கு கிடைத்த பலமும் அ.தி.மு.க- பா.ஜ.க உறவு மீண்டும் மலரும் அத்தியாயம் தொடங்கக் காரணமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஆகவே, தமிழக முதல்வரின் டெல்லி விஜயம் அ.தி.மு.கவுக்கு உள்ள அரசியல் நிர்பந்தத்தையும், பா.ஜ.கவுக்குள்ள அரசியல் நிர்பந்தத்தையும் அடிப்படையாக வைத்து நடைபெற்ற நிகழ்வு. 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் இந்த சந்திப்பு முக்கிய அத்தியாயமாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .