Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 106)
பலிகடாக்கள்
1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது.
‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனால், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க முடியவில்லை’ என்று இயன் குணதிலக, 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
ஆகவே, வெளிநாட்டு ஊடகங்கள், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ததோடு, ஜே.ஆர் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கையும் கடுமையாகச் சாடின.
இதன் விளைவாக, ஜே.ஆர் அரசாங்கம், கடும் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய, கடுஞ்சூழலுக்குள் சிக்கிய ஜே.ஆர், மூன்று இடதுசாரிக் கட்சிகளைப் பலிக்கடாக்களாக முன்னிறுத்தினார்.
1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, ‘மார்க்ஸிய சதி’ என்ற வசதியான சாட்டு, ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.
1983 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகாலம் நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான தொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.
1970 களில், சிறிமாவோவுடன் கூட்டாக, ‘தோழர்கள்’ ஆட்சி அமைத்தபோது, தமிழ் மக்களுக்கெதிராக அமைந்த சிறிமாவோ அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இவர்கள் ஆதரவாக இருந்தார்கள்.
சிறிமாவோ ஆட்சியில், ஐக்கிய முன்னணியில் பங்குபற்றிய இடதுசாரிக் கட்சிகளே, பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகள், பேரினவாதத்தை அரவணைத்திருந்த காலகட்டமது. பேரினவாதத்தை அரவணைக்காது ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியாது என்ற சூழ்நிலை, சில இடதுசாரிகளையும் பேரினவாதம் நோக்கி நகர்த்தியிருந்தது.
ஆனால், 1983 காலப்பகுதியில், தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வு மிக்க பேரினவாத வெறி என்பது, இடதுசாரிகளிடம் இருந்தது. ஆனால், ஜே.ஆர் அரசாங்கம், குறித்துத் தடைசெய்த, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும்தான், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்குப் பின்னணியில் இருந்தார்கள் என்பதற்கு, எந்தச் சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, ஜே.ஆர் அரசாங்கமும் இந்த இடதுசாரிக் கட்சிகள்தான், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரண கர்த்தாக்கள் என்பதற்கு, எந்த சாட்சியங்களையும் முன்வைக்கவில்லை.
ஆகவே, எந்தச் சாட்சியங்களாலும் நிறுவப்படாத, எழுந்தமானமானதொரு குற்றச் சாட்டை மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது சுமத்தி, ஒரு மாபெரும் இன அழிப்புக்கான பழியிலிருந்து, ஜே.ஆர் அரசாங்கம் தப்ப முயன்றது என்பதுதான் யதார்த்தம்.
இதேவேளை, ஜே.ஆர் அரசாங்கத்திலிருந்த பல அமைச்சர்களும் பேரினவாத வெறியைப் பகிரங்கமாகத் தொடர்ந்து கக்கினார்கள். குறிப்பாக, சிறில் மத்யூ, ஜே.ஆர் அரசாங்கத்தின் பேரினவாத முகமாகக் கருதப்படக் கூடியவர். வேறும் சில அமைச்சர்களும், இதில் உள்ளடக்கம்.
இதைவிட, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான பலர், இந்த இன அழிப்பில் ஈடுபட்ட சம்பவங்களையும் சிலர் பதிவு செய்கிறார்கள். ஆகவே வெளிமுகமான சாட்சியங்கள் (prima facie evidence) ஆளும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையே சுட்டி நின்றன.
நியாயமாக, இத்தகைய பாரியதொரு இன அழிப்பு தொடர்பில், அரசாங்கமானது சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் செய்யவில்லை.
ஒருவேளை, ஜே.ஆர் அரசாங்கம் சொன்னது போல, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும் ‘மார்க்ஸிய சதியும்’தான், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரணமென்றால், சுயாதீன விசாரணை ஒன்றுக்குச் சென்று, முறைப்படி அவற்றுக்கெதிரான சாட்சியங்களை முன்வைத்து, சட்டத்தின்படி நடவடிக்கையெடுப்பதில் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு என்ன தயக்கம்?
ஏன்? எழுந்தமானமாக மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிசுமத்தி, எழுந்தமானமாக அவற்றைத் தடைசெய்து, அக்கட்சியில் தலைமைகளைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்?
இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளைத் தடைசெய்ததோடு, அதனோடு தொடர்புடைய 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்ய, ஜே.ஆர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதில், ஏறத்தாழ பாதியளவானோர் ஏலவே கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஜே.வி.பியின் தலைவர்கள் பலரும் உடனடியாகவே பதுங்கிவிட்டார்கள். ஜே.ஆர் அரசாங்கம் அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்
ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒருபுறத்தில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழர்களின் அரசியல், அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பெரும் அழுத்தமாக இருந்த வேளையில், தெற்கிலே இடதுசாரிகளில் அழுத்தமும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படத் தொடங்கியிருந்தது.
ஜே.ஆர் அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்த ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிகள், சிங்களக் கிராமத்து இளைஞர்களிடையே மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தார்கள்.
ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிபோட்டு, அவற்றைத் தடைசெய்தமையானது, சர்வதேசத்துக்குத் தாம், நடவடிக்கை எடுத்ததாகக் காட்டக்கூடியதொன்றாக அமைந்ததுடன், தமக்குத் தலையிடியாக உருவாகிக் கொண்டிருந்த அமைப்புகளை நசுக்கக் கூடிய வாய்ப்பாகவும், அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தும் வாய்ப்பாகவும் அமைந்தது.
ஆனால், இத்தோடு ஜே.ஆர் நின்று விடவில்லை. ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை விழுத்த ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது.
தொண்டாவின் கவலை
1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டானின் உருக்கமான, அதேவேளை காட்டமான அறிக்கை, பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு வன்முறைகளில், கொழும்பிலும் மலையகமெங்கிலும் இந்திய வம்சாவளித் தமிழர் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், பெரும் இழப்பையும் சந்தித்திருந்தார்கள்.
இந்த நிலையில்தான் தொண்டமானின் அறிக்கை வெளியானது. அதில் ‘இந்திய வம்சாவளி மக்கள், ஏறத்தாழ 100 வருடங்களுக்கு மேலாகத் தாங்கள் வேரூன்றிய இடங்களில் இருந்து பிடுங்கியெறியப்பட்டிருக்கிற இந்த சூழலில், அண்மையில் நடந்த இன அழிப்புச் சம்பவங்களை, எமக்கெதிரான சிங்கள மக்களின் எழுச்சி என்று சிலர் சொல்வதைப் போன்றே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளோம். எங்களின் எண்ணத்தின்படி, இது வன்முறைத் தாக்குதல்கள், கலவரம், கொள்ளை மற்றும் எரியூட்டல் என்பவற்றில் திட்டமிட்டு ஈடுபட்ட குழுக்களின் செயற்பாடாகத்தான் தெரிகிறது. இந்த அழிவுச் சக்திகள், குண்டர்கள், கீழ்மையானவர்கள் வீதிகளிலே சுதந்திரமாகத் திரண்டு, இந்த அழிவையும் அவலத்தையும் இந்தளவுக்குச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானது’ என்று தொண்டமான் நொந்துகொள்கிறார்.
மூன்றாவது மாங்காய்
1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பில், சிங்களப் பேரினவாதிகள் ஈடுபட்டமைக்கு, தமிழ் இனவாதிகளின் கோபமூட்டல் (provocation) தான் காரணம் என்ற நியாயப்பாடு தொடர்ந்தும் சொல்லப்பட்டு வந்தது.
‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட, ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிதான், இந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம். அவர்களது பிரிவினைக் கோரிக்கைதான், இந்தப் பிரச்சினை தோன்றுவதற்கே அடிப்படைக்காரணம்; ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தடைசெய்யப்பட வேண்டும்; அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், கைது செய்யப்பட வேண்டும்’ என்ற குரல்கள் ஒலித்தன.
மூன்றாவது மாங்காயாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கைங்கரியம், 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்
1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை விவாதிப்பதற்காக, நாடாளுமன்றம் ஓகஸ்ட் நான்காம் திகதி கூட்டப்படுவதாக ஜே.ஆர் அரசாங்கம் அறிவித்தது.
அவசர மசோதாவாக, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் தொடர்பிலான, நீதியாய்வுத் தீர்ப்பை வழங்கியிருந்த உயர்நீதிமன்றமானது, அதிலிருந்த இரண்டு சரத்துகள் தவிர்த்து, ஏனையவை அரசியலமைப்புக்கு இயைபானவை என்று தீர்மானித்திருந்தது. ஆயினும், அரசியலமைப்போடு இயைபற்றவற்றையும் 2/3 பெரும்பான்மையோடு நிறைவேற்றும் பலம், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு இருந்தது.
1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம் அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அமர்வில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான பெரும் இன அழிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், முழுமையான சுமுக நிலை திரும்பியிராத நிலையில், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு எதிராகக் கடும் வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துபோவதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடச் செய்து தரப்படாத நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகையானது.
ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளாத அமர்வில், அந்த கட்சியையும் பெரும்பான்மைத் தமிழ் உறுப்பினர்களையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்தது.
ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்குதல்
அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதாவின் மூலம், இலங்கையின் ஆட்புலக்கட்டுக்கோப்பை, மீறுவதற்கான தடையொன்றை, அரசியலமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த, புதிய இணைப்பானது, இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆளெவரும், இலங்கைக்கு அல்லது இலங்கைக்கு வெளியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்தல் , ஆக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவியளித்தல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது என்றும் அப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.
குறித்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டநடவடிக்கையை மேற்கொண்டு, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்குவதற்கும் அந்த ஏற்பாடு அமைந்தது.
இதனுடன் நிற்கவில்லை. மேலும், அரசியற்கட்சி அல்லது வேறு அமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு எதுவும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்றை ஸ்தாபித்தலை, தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தல் ஆகாது என்றும் அவ்வாறு செய்யும் கட்சிகள், கழகங்கள், ஒழுங்கமைப்புகளுக்கு எதிராக உயர்நீதிமன்றிலே விண்ணப்பமொன்றைச் செய்வதன் மூலம், அந்தக் அமைப்பைத் தடைக்கு உள்ளாக்கல், அதனுடன் தொடர்புடையோர் மீது, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாராளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இவை தவிரவும், அரசியலமைப்பின் கீழ் உறுதியுரையை, சத்தியப்பிரமாணத்தை எடுக்க வேண்டிய ஆளெவரும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த உறுதியுரைக்கு அல்லது சத்தியப்பிரமாணத்துக்கு மேலதிகமாக இலங்கையின் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக, மேலதிகமாக அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையாகப் புதிதாக, ஆறாவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உறுதியுரையையும் சத்தியப்பிரமாணத்தையும் எடுக்க வேண்டும் என்ற ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகவே, இதன்படி இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குச் சவால் விடுகிற ஆளெவரும் அமைப்பெதுவும் சட்டவிரோதமாக்கப்பட்டதுடன், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.
அவசர சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதா மீது பாராளுமன்றத்தில் தொடர்ந்து 13 மணித்தியாலங்கள் விவாதம் நடந்தது.
(திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago