2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்தி(யா)ரா காண் படலம் - 2: ஜே. ஆரின் பெரும் ஆறுதல்

என்.கே. அஷோக்பரன்   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 111)

இந்திரா - எச்.டபிள்யு இரண்டாம் சுற்று   

1983 ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விசேட பிரதிநிதியாக ஜே.ஆரால், இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வைக்கப்பட்ட அவரது சகோதரரும் இலங்கையின் பிரபல்யம்மிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யு.ஜெயவர்தனவுக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.   

முன்னைய தினம், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெற்ற முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையில், இந்திய அரசாங்கம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேசத் தயார் என்று தெரிவித்திருந்தது.   

ஜனாதிபதி ஜே.ஆருடன், இது பற்றிப் பேசியிருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, அதை இந்தியா செய்வதானால், அதற்குத் தாம் சம்மதிப்பதாக, ஜனாதிபதி ஜே.ஆர் தெரிவித்ததாக, இந்திரா காந்தியிடம் தெரிவித்ததுடன், இந்திய நாடாளுமன்றத்தின் சர்வ கட்சிக் குழுவொன்றை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ஜே.ஆர் அழைப்பதாகவும் தெரிவித்தார்.   

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இந்திரா காந்தி இறுதியில் இப்படிக் கூறியதாக, தன்னுடைய கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். “இப்போதைய காலத்தின் தேவை பதற்றத்தைத் தணித்து, நம்பிக்கையை கட்டியெழுப்புதலாகும். இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள யாவரும், நல்லெண்ணமும் இருதரப்பு நம்பிக்கையும் கொண்ட சூழலும் கொண்ட மாநாட்டு மேசையில் சந்தித்து, தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்”.   

இதைத் தொடர்ந்து, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை பற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் பகர்ந்து கொள்ள எண்ணியிருப்பதாகவும், தனது அந்த அறிக்கையில் ஏதேனும் விடயம் தொடர்பில், முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று இலங்கை விரும்பினால் அதை அறியத்தருமாறு எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுக்கு இந்திராகாந்தி சந்தர்ப்பமளித்தார்.   

பேச்சுவார்த்தை அறிக்கை  

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான தன்னுடைய சந்திப்புப் பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அளிக்கவிருந்த அறிக்கையைத் தயார் செய்யும் பொறுப்பு, இந்திய மற்றும் இலங்கை ஆகிய இருதரப்பை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.   

இதன்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான, அதேவேளை இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றோடு தொடர்புடைய, ஒரு சம்பவமொன்றைத் தனது கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

அதாவது, குறித்த அறிக்கையின் முன்வரைவு தயாரிக்கப்பட்டபோது, இந்திய பிரதமர், இலங்கை இனப்பிரச்சினையானது ஒன்றுபட்ட (united) இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று கருதுவதாக இந்திய அதிகாரிகள் பதிவு செய்தனர். இதில் இலங்கைத் தரப்பைச் சார்ந்த ஓர் அதிகாரி ‘ஒன்றுபட்ட’ (united) என்ற சொற்பதம் மாற்றப்பட்டு ‘ஒற்றையாட்சி’ (unitary) என்ற சொற்பதம் பயன்படுத்தப் பட வேண்டும் என்று தெரிவித்து, அழுத்தம் தந்ததாகவும் உடனே எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலையிட்டு, இந்தியப் பிரதமரின் வாய்க்குள் சொற்களை இலங்கை நுழைக்கக்கூடாது என்றும் இந்தியப் பிரதமர்தான் விரும்பும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றும் அந்த இலங்கை அதிகாரிக்குச் சொல்லியிருந்தார்.   

ஆனால், இந்தச் சிக்கல் இங்கு முடிவடையவில்லை. எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இலங்கை திரும்பிய பின், ஜே.ஆர் அமைச்சரவையின் சில அமைச்சர்கள், ‘ஒன்றுபட்ட’ இலங்கை என்ற பதம் இந்திரா காந்தியால் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று தமது ஆட்சேபத்தைப் பதிவு செய்திருந்தனர். குறைந்த பட்சம், இலங்கை தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.   

ஆனால், எச்.டபிள்யூ.ஜெயவர்தன தன்னுடைய நிலைப்பாட்டில் மிகத் தௌிவாக இருந்தார். இந்தியாவினுடைய கொள்கையை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்; இலங்கை தீர்மானிக்க முடியாது என்பது அவரது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.  

‘ஒன்றுபட்ட’ எதிர் ‘ஒற்றையாட்சி’  

‘ஒன்றுபட்ட’ (‘united’) மற்றும் ‘ஒற்றையாட்சி’ (‘unitary’) என்ற சொல்லாடல் முரண்பாடு இன்று சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அரசமைப்புக் குழு வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

 இலங்கையில் நடைமுறையிலிருக்கும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்பின் இரண்டாம் சரத்து, மிகத் தௌிவாக இலங்கை குடியரசு ஓர் ஒற்றையாட்சிக் குடியரசு என்று தெரிவிக்கிறது.   

1972 ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது ‘தோழர்களினால்’ கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசமைப்பின் தொடர்ச்சி இதுவாகும்.

இந்தச் சரத்தை மாற்ற, 1978 இல் ஜே.ஆருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், ஜே.ஆர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர் அரசமைப்பில் 83 ஆம் சரத்தினூடாக இன்னொரு மட்டுப்பாட்டையும் கொண்டுவந்தார். 

அதாவது அரசமைப்பின் 83 ஆம் சரத்தின் படி, மேற்குறித்த இரண்டாம் சரத்து உள்ளிட்ட சில சரத்துகள் திருத்தவோ, நீக்கவோ பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவைப்படுவதோடு, அது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களால் அங்கிகரிக்கப்படவும் வேண்டும் என்ற பெரும் மட்டுப்பாட்டை ஜே.ஆர் கொண்டுவந்தார்.   

இந்த மட்டுப்பாட்டைக் கடக்க முடியாதுதான், இன்றுவரை பல சண்டைகளுள் ஒன்றாக இந்தச் ‘சொல்லாடல்’ சண்டையும் தொக்கி நிற்கிறது. ஆகவே, இந்த வரலாறு எமக்கு ஒன்றைத் தௌிவாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இன்று எம்முன்னால் இருக்கும் பிரச்சினை, இன்றுநேற்றுத் தோன்றிய ஒரு பிரச்சினையல்ல.   

இன்று நாம் தேடிக் கொண்டிருக்கும் தீர்வுகளும் புதிதாய் நாம் கட்டியெழுப்பிய தீர்வுகளல்ல; பல தசாப்தங்களாக நடந்து வருகின்ற ஒரு சுழற்சியின் நீட்சிதான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. வரலாறு மீண்டும், மீண்டும் ஏறத்தாழ ஒரே மாதிரியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிற்க.  

ஓகஸ்ட் 12 ஆம் திகதி மாலை, இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்பு பற்றிய அறிக்கையொன்றை வாசித்தார். அந்த அறிக்கையில், இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக டெல்லி வந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் இந்திய நாடாளுமன்றத்தினதும் இந்திய மக்களினதும் கரிசனத்தை எடுத்துரைத்தாகவும் இலங்கை ஜனாதிபதி நடத்தவிருந்த, ஆனால் நடத்து முடியாது போன சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவிருந்த சில விடயங்களை அவர் தனக்கு எடுத்துரைத்ததாகவும் பதிவு செய்த இந்திரா காந்தி, அந்த முன்மொழிவுகள் தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்று எடுத்துரைத்ததாகவும் அதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளாகத் தமிழ் மக்களுக்கு நாட்டு விவகாரங்களில் அவர்களுக்குரிய பங்கையாற்றத்தக்க வகையிலமையும் வேறு முன்மொழிவுகளை கருத்திற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்ததுடன், தீர்வானது மாநாட்டு மேசையிலேயே எட்டப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் நடத்தப்படுவது இதற்குப் பயனளிக்கும் என்று தான் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு இந்தியா, தனது செல்வாக்கைத் தேவைக்கேற்றபடி வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும், இதை ஏற்பதாக, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் அவரது விசேட பிரதிநிதியான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவூடாக அறியத்தந்ததாகவும் இந்திரா காந்தி தெரிவித்திருந்தார்.   

ஜே.ஆரின் ஆறுதல்  

ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இது நிறைவுற்ற பின்னர் எச்.டபிள்யூ.ஜெயவர்தன இலங்கை திரும்பியிருந்தார். ஜே.ஆரைப் பொறுத்தவரையில் இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று ஜே.ஆர் அஞ்சியிருந்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு என்பது ஜேர்மனியில் நடந்த ‘ஹொலோகோஸ்ட்’ இக்கு (பெரும் இன அழிப்புக்கு) நிச்சயம் ஒப்பானதே. எண்ணிக்கை வேறுபடலாம்; ஆனால் அதன் அடிநாதம் ஒன்றுதான்.   

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பும் இலங்கையில் நடந்தேறியது வெறும் ‘இனக்கலவரம்’ அல்ல. 1983 ‘கறுப்பு ஜூலையை’ இனக்கலவரம் என்று விளிப்பது அதன் தீவிரத்தை குறைக்கும் செயல்; இங்கு நடந்தேறியது ஒரு மாபெரும் மனிதப்பேரவலம்.   

இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர், ‘மனித உரிமைகள்’ கருத்துருவாக்கத்தின் எழுச்சியின் கீழுருவான சர்வதேச சட்டங்களினதும் நியமங்களினதும் கீழாகப் பார்த்தால் கூட, இது சர்வதேசம் உடனடியாகத் தலையிட்டிருக்க வேண்டிய மனிதப் பேரவலம். இது ஜே.ஆருக்கு நிச்சயம் தெரியும்.   

அமெரிக்காவின் ஆதரவாளராக அறியப்பட்ட ஜே.ஆருக்கு, மேற்கு நாடுகளைப் பற்றிப் பெருங்கவலை இருக்கவில்லை. ஆனால், இந்தியாவைப் பற்றியே அவர் பெரிதும் அச்சம் கொண்டிருந்தார். பங்களாதேஷ் பிரிவினையில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவின் பங்கை அவர் அறிவார்.   

அதற்கான அரசியல், இந்த அரசியலிலிருந்து வேறுபட்டது என்றாலும் இந்தியா எந்தளவுக்குச் செல்லக் கூடியது என்பதற்கு அது ஓர் உதாரணம். ஆகவே, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்ற நிலைப்பாட்டை, இந்தியாவே முன்மொழிந்திருந்தமையானது ஜே.ஆரைப் பொறுத்த வரையில் பெரும் ஆறுதல் தரும் விடயம்தான்.   

இந்திரா-அமீர் சந்திப்பு  

எச்.டபிள்யூ.ஜெயவர்தனவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகளைச் சந்திக்க இந்தியப் பிரதமர், இந்திரா தயாரானார். ஓகஸ்ட் 11 ஆம் திகதி, தமிழ்நாட்டை வந்தடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோர் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, டெல்லியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தனர்.   

இந்தச் சந்திப்பு ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடித்ததுடன், இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதியும் இந்திரா காந்தியின் செயலாளர் பி.ஸீ.அலெக்ஸாண்டரும் கலந்து கொண்டிருந்தனர்.   

ஆரம்பத்தில், இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றை இந்திரா காந்திக்கு எடுத்துரைத்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அஹிம்சை வழிப்போராட்டத்தின் தோல்வியை அழுத்தமாக எடுத்துரைத்தோடு, தமிழ் மக்கள் உடனடியாகச் சந்தித்த பாதுகாப்பு பிரச்சினையையும் கூறினார்.   

நாங்கள் சுயாட்சியோடு கூடிய ஒரு சமஷ்டிப் பிராந்தியத்தையே கேட்டோம். அது மறுக்கப்பட்டதனால்தான், நாங்கள் தனி நாடு கேட்க வேண்டி வந்தது என்ற தமது யதார்த்தத்தையும் அமிர்தலிங்கம், இந்திரா காந்திக்கு எடுத்துரைத்தார்.   

இதன் பின்னர், இந்திரா காந்தி இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டை தெட்டத் தௌிவாக எடுத்துரைத்தார். 

இலங்கை பிளவுபடுவதை, இந்தியா விரும்பவில்லை; இலங்கைக்குள் வேறொரு தனியரசு உருவாகுவதை இந்தியா ஆதரிக்காது; ஆகவே, தமிழ் மக்கள் பிரிவினையை விடக் குறைவான ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சுயாட்சிப் பிராந்தியம் என்ற தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனிநாடு கேட்பதற்கு முன்பதான உங்களுடைய முதல் கோரிக்கைக்கு, நீங்கள் மீண்டும் செல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இந்திரா காந்தி, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகளிடம் தெரிவித்தார்.   

தன்னால் வௌிப்படையாகத் தமிழர் அல்லது சிங்களவர்களிடையே ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயற்பட முடியாது என்பதை எடுத்துரைத்த இந்திரா காந்தி, சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு பாதிப்பு வராத வகையில், தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரத் தான் முயல்வதாகச் சொன்னார். தமிழ் மக்களை, இலங்கையின் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழச் செய்வதே தனது முயற்சியின் குறிக்கோள் எனவும் தெரிவித்த இந்திரா காந்தி, இதைச் சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலன்கள் பாதிக்காதவாறு செய்யவே தான் முயற்சிப்பதாகச் சொன்னார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்தி செய்யும் தீர்வுகள் எட்டப்பட்டால், அதைத்தான் வரவேற்பதாகச் சொன்ன அமிர்தலிங்கம், இந்திரா காந்தியின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டார்.   

மேலும், தமிழ் மக்களின் அபிலாஷைகளாக 1956 இல் திருகோணமலையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (சமஷ்டிக் கட்சியின்) மாநாட்டின் சா.ஜே.வே.செல்வநாயகம் முன்வைத்த (1) தமிழ்த் தேசியம்; (2) தமிழ்த் தாயகம்; (3) தமிழர் சுயநிர்ணய உரிமை; (4) குடியுரிமை (இது குடியுரிமை இழந்த இந்தியா வம்சாவளி மக்கள் தொடர்பிலானது) ஆகிய நான்கு விடயதானங்களை இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்திருந்தார்.   

இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி,  எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான தன்னுடைய சந்திப்புப் பற்றி, அமிர்தலிங்கம் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.   

( திங்கட்கிழமை தொடரும்)    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X