Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச விசாரணையொன்றின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவினால் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக அங்கிகரிக்கப்பட்டதை அடுத்து, கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டு இருந்த கருத்தொன்று தென் பகுதியில்; அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வன்னி மாவட்டத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மற்றும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதற்காக வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சேனாதிராஜா, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை நிராகரித்து இருந்தார்.
சர்வதேச விசாரணை என்ற கருத்தை தாம் நிராகரிக்காத போதிலும் அது ஏற்கெனவே நடைபெற்று இருப்பதாகவும், மேலும் விசாரணையொன்றை கோருவது அரத்தமற்றது என்றும் அவர் கூறியிருந்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்தவுடன் தமிழ்க் கூட்டமைப்பு மாறிவிட்டதா என்றதைப் போன்றதொரு நிலையை இந்த கூற்று உருவாக்கியிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் தெற்கே வாழும் சில பெரும்பான்மை தீவிரவாதிகளையும் அது அதிருப்பதியடையச் செய்துள்ளது. வட பகுதி அரசியல்வாதிகள் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் தீவிரவாதக் கருத்துக்களை வெளியிடும் வரை தென் பகுதி தீவிரவாதிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது தான்; அவர்களுக்கும் தமது அனல் கக்கும் கருத்துக்களை வெளியிட வாய்ப்பு கிடைக்கிறது. சேனாதிராஜாவின் கருத்து அதற்கு மாறாக அமைந்துள்ளது.
சர்வதேச விசாரணை என்ற விடயம் இப்போது தமிழ் அரசியலிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், விக்னேஸ்வரன் மட்டுமன்றி, வேறு பலரும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
ஆயினும், இந்த விடயத்தில் சேனாதிராஜா போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு, தர்க்க ரீதியானது என்றே தெரிகிறது. ஏனெனில், சேனாதிராஜா கூறியதைப் போல் ஏற்கெனவே இந்த விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடைபெற்று அதன் அறிக்கையும் இன்று வெளியிடப்படவிருக்கிறது. அந்த அறிக்கையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கியிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராத் ஹூசைன் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.
ஆனால், இந்த விடயத்தில் சேனாதிராஜா தெரிவித்திருந்த ஒரு கருத்தில் அரை உண்மை தான் இருக்கறது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சர்வதேச விசாரணை, சேனாதிராஜா கூறுவதைப் போல் தமிழ்க் கூட்டமைப்பு, ஐ.நா. மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆரம்பிக்கப்படவில்லை. நீண்ட காலமாக சர்வதேச விசாரணையொன்றை கோரி வரும் குழுக்களில் தமிழ் கூட்;டமைப்பும் ஒன்று என்பதே உண்மை.
அதேவேளை, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சர்வதேச விசாரணையின் போது தமது தரப்பு வாதங்களை விசாரணைக் குழுவின் முன் சமர்ப்பிக்க, தமிழ்க் கூட்;டமைப்போ, தற்போது மற்றொரு சர்வதேச விசாரணையை கோரும் விக்னேஸ்வரன் உட்பட ஏனைய தமிழ் தலைவர்களோ, புலம் பெயர் தமிழ் அமைப்புக்களோ, முயற்சிகளை மேற்கொண்டதாக எவ்வித தகவலும் இல்லை. பொதுவாக அந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதும் சரி தமிழ்த் தலைவர்களும் ஏனையோரும் அதனை முற்றாக மறந்துவிட்டார்கள். அந்த மறதியின் காரணமாகவே சில தமிழ் தலைவர்கள் திடீரென நித்திரையில் இருந்து விழித்துக் கொண்டவர்களைப் போல் புதிதாக சர்வதேச விசாரணையொன்;றை கோருகிறார்கள்.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையையடுத்து, அது தொடர்பான வாய்மூல அறிக்கையொன்று, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. அதனை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமையிலான புதிய அரசாங்கம் மனித உரிமை பேரவையிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அது இம்மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது சர்வதேச விசாரணை கோருபவர்கள் பலர் அந்த அறிக்கை ஒத்திவைக்கப்படும் போதும் மௌனமாகவே இருந்தனர்.
கூட்டமைப்பும் தமிழக தலைவர்களும் உட்பட பலர் சர்வதேச விசாரணையொன்றைக் கோரி வரும் நிலையில் தான், கடந்த 2012ஆம் ஆண்டுஇலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக மனித உரிமை பேரவையில், அமெரிக்கா முதன் முதலாக பிரேரணையொன்றை சமர்ப்பித்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நியமித்த 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் சிபாரிசுகளை அமுலாக்க வேண்டும் என்றே அந்தப் பிரேரணை வலியுறுத்தியது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்பது தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசாக இருந்தது. அதாவது, அமெரிக்கா தமது பிரேரணையின் மூலம் உள்நாட்டு விசாரணையொன்றையே வலியுறுத்தியது. தமிழக சினிமா பட இயககுநர் சீமான் தவிர்ந்த இலங்கையிலும் தமிழத்தரப்பிலும் சகல தமிழ் தலைவர்களும் இந்த அமெரிக்க பிரேரணையை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். சீமான் மட்டும், இது உள்நாட்டு விசாரணைக்கான பிரேரணையெனக் கூறி அதனை நிராகரித்தார்.
இந்தப் பிரேரணையை அடுத்து, சர்வதேச சமூகத்தை மஹிந்தவின் அரசாங்கம் ஏமாற்ற முயற்சித்தது. எனவே, சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டிவரும் என எச்சரித்து நவநீதம்பிள்ளை 2013ஆம் ஆண்டு அறிக்கையொன்றை வெளியிட்டார். அதனை அடிப்படையாக வைத்தே 2013ஆம் ஆண்டு அமெரிக்கா இலங்கை தொடர்பான இரண்டாவது பிரேரணையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தது.
அது தொடர்பாகவும் மஹிந்தவின் அரசாங்கம் சர்வதேச சமூகம் எதிர்பார்த்த வகையில் நடந்து கொள்ளவில்லை. எனவே, நவி பிள்ளையின் 2014 ஆண்டுக்கான அறிக்கையில் இலங்கையில் அரச படைகளும் புலிகள் அமைப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே கடந்த வருடம் அமெரிக்கா மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பிரேரணை மூலம் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது.
நவி பிள்ளை, கடந்த வருடம் மனித உரிமை உயர் ஸ்தானிகர் பதவியிலிருந்து ஓய்வு பெறுமுன் இலங்கையில் அரச படைகளும் புலிகள் அமைப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான விசாரணைக் குழுவையும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று நிபுணர்களையும் நியமித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக் காலப் பகுதியான 2002ஆம் ஆண்டு முதல் 2009 வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றியே இக் குழுவும் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. எனவே, இது தமிழ்க் கூட்;டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவாகும் எனக் கூறுவது பொருத்தமல்ல.
நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநரும் கம்போடியாவில், இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த சர்வதேசக் குழுவின் அங்கத்தவராக செயலாற்றியவருமான சில்வியா கார்ட்ரைட், நொபெல் சமாதான பரிசை வென்ற முன்னாள் பின்லாந்தின் ஜனாதிபதி மார்ட்டி ஆர்ட்டிசாரி மற்றும் பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளின் சங்கத்தின் முன்னாள் தலைவி அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரே இக் குழுவின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அது தொடர்பான அறிவித்தலை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி மனித உரிமை பேரவை வெளியிட்டது.
விசாரணைக் குழுவில் சட்ட வைத்திய நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்த 12 நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டனர். சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் அதிகாரியான சந்திரா பெய்டாஸ் அதன் இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், விசாரணையைப் பற்றிய எந்த விதத் தகவலும் அதன் பின்னர் வெளிவரவில்லை. விசாரணைக்குழு எந்த அடிப்படையில் தகவல்களைத் திரட்டியது என்பதைப் பற்றி எவரும் அக்கறை கொள்ளவில்லை. தமிழ்த் தரப்பினரும், விசாரணைக்குழு முன் தமது தரப்பின் வாதங்களை முன்வைக்க முற்பட்டதாக தகவல்கள் இல்லை. அதற்கான ஏற்பாடுகளை மனித உரிமை பேரவை செய்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இப்போது, புதிதாக சர்வதேச விசாரணையை கோருபவர்கள், கடந்த வருடம் நடத்தப்பட்ட இந்த சர்வதேச விசாரணையை நிராகரிக்கிறார்களா? இல்லாவிட்டால் புதிதாக ஏன் மற்றொரு சர்வதேச விசாரணையைக் கோர வேண்டும்? அவ்வாறு இந்த விசாரணையை நிராகரிப்பதாயின் எந்த அடிப்படையில் அவர்கள் அதனை நிராகரிக்கிறார்கள், எனவே, ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கையை பார்த்துவிட்டே அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதன் பின்னரே மாற்று யோசனைகளை முன்வைக்க வேண்டும்.
தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர், போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி உள்நாட்டு விசாரணையொன்றை நடத்துவதென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தார். அதன் பிரகாரம், உள்நாட்டு விசாரணையொன்றுக்கான பொறிமுறையொன்று தொடர்பான பிரேரணையொன்றை அமெரிக்க அரசாங்கம் இம்முறை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் கடந்த வருட பிரேரணையின் பிரகாரம் சர்வதேச விசாரணையொன்று நடைபெற்று இருக்கும் நிலையில் அமெரிக்கா உள்நாட்டு விசாரணையொன்றைப் பற்றி மீண்டும் ஏன் பேச வேண்டும் என இங்கு சந்தேகம் எழுகிறது. சிலவேளை நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையை இத்தோடு கைவிட போகிறார்களா என்ற சந்தேகமும் சிலருக்குள் எழலாம்.
அமெரிக்காவைப் பொறுத்தவறை இதில் முரண்பாடுகள் இல்லை. ஏனெனில், கடந்த வருடம் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையிலேயே இவ்வாறு தேசிய மற்றும் சர்வதேச என இரண்டு விசாரணைகளுக்கு ஏற்பாடுகள் இருந்தன. தேசிய விசாரணையை வலியுறுத்தும் அதேவேளை, சர்வதேச விசாரணையொன்றை விதிப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத்த ஆர்யசிங்க அப்போது கூறியிருந்தார்.
போரக்; காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக, இலங்கையில் ஏற்கெனவேயும் ஒரு தேசிய விசாரணை நடைபெற்றுள்ளது. காணாமற்போனோர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவுக்கே கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அந்தப் பொறுப்பும் வழங்கப்பட்டது. அது தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவிடம் கையளிக்கபட்டது.
இவ்வாறு மனித உரிமை விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்தளவு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டது என்பதை உலகம் கண்டதன் விளைவாகவே மேற்படி சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போரின் போது எவருமே காணாமற்போகவில்லை என்றும் போரின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இராணுவமும் வைத்துக் கொண்ட புள்ளிவிவரங்கள் அதனை காட்டுகின்றன என்றும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். இராணுவத்தினால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழுவொன்று அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பித்த அறிக்கையொன்றிலும் போரின் போது எவரும் காணாமற்போகவில்லை என்றும் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற ஜனாதிபதியின் கட்டளைக்கிணங்கவே போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், சர்வதேச நெருக்குதல்கள் அதிகரிக்கவே அதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் சமாதானத் திட்டம் ஆரம்பிக்கப்பட் 2002ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற சம்பவங்களை விசாரணை செய்யுமாறு நல்லிக்க ஆணைக்குழுவை பணித்த ராஜபக்ஷ, இந்த காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு 1990ஆம் ஆண்டு பிரேமதாஸ அரசாங்கத்தின் சமாதானத் திட்டம் முறிவடைந்த நாளான 1990ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் இடம் பெற்ற சம்பவங்களை விசாரணை செய்யுமாறு பணித்தார்.
பின்னர் இலங்கையின் மிகப் பெரிய இனக் கலவரம் இடம்பெற்ற 1983 ஆம் ஆண்டிலிருந்த இடம்பெற்ற சம்பவங்களை விசாரணை செய்யுமாறு கடந்த வருடம் மார்ச் மாதம் அதே ஆணைக்குழுவுக்கு பணிக்கப்பட்டது. கடந்த வருடம் ஜூன் மாதம் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சாதாரண மக்களின் கொலைகள் மற்றும் புலிகள் பொது மக்களை கேடயமாக பாவித்தமை ஆகியவற்றைப் பற்றி விசாரணை செய்யுமாறு ராஜபக்ஷ அதே பரணகம ஆணைக்குழுவை பணித்தார்.
அந்த விடயத்தில் ஆணைக்குழுவுக்;கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த வருடம் ஜூலை மாதம் 14ஆம் திகதி சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகிய மூன்று சர்வதேச நிபுணர்களை நியமத்தார். இவர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள். ஒரு மாதம் கழித்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இந்தியரான அவ்தாஷ் கௌஷல் மற்றும் பாகிஸ்தானியரான அஹ்மர் பிலால் சூபி என்ற இருவரையும் ஆலோசகர்களாக அதே ஆணைக்குழுவுக்கு அவர் நியமித்தார். அதன் பின்னர் கடந்த டிசெம்பர் மாதம் ஜப்பானியரான மோ டூ நொகுச்சியையும் ஆலோசகராக நியமித்தார்.
முதலில், அமெரிக்க மற்றம் பிரிட்டிஷ்காரர்களை நியமித்த ஜனாதிபதி பின்னர் அண்டை நாடான இந்தியா கோபித்துக் கொள்ளுமோ என்று நினைத்து கௌஷாலை நியமித்தார். அப்போது பாகிஸ்தான் கோபித்துக் கொள்ளுமோ என நினைத்து சூபியை நியமித்தார். இத்தனையையும் செய்த பின் இலங்கைக்கு பெருமளவில் உதவி வழங்கும் ஜப்பான கோபித்துக் கொள்ளுமோ என நினைத்து ஜப்பானியர் ஒருவரை நியமித்தார்.
இது போன்ற செயற்பாடுகளினாலேயே இலங்கை சர்வதேச ரீதியாக ஓரங்கட்டப்பட்டது. இப்போது அதன் விளைவாக சர்வதேச மற்றும் உள்நாட்டு என இரண்டு விசாரணைகளை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பது இந்த வார இறுதியில் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். தமிழர் தரப்பும் அதன் பின்னரே அடுத்த நகர்வை தீர்மானிpக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
2 hours ago
4 hours ago