2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

இலங்கைத் தேசிய அரசும் தமிழ்த் தேசமும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 மே 21 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

  
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 144)

தோற்றுப்போன தேசிய அரசுப் புனைவு  

சுதந்திரத்தின் பின்னர், மேற்கத்தேய தேசிய அரசுகளின் அடிப்படையிலான ஓர் இலங்கைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் முனைப்புகளுக்கு, பெரும் சவாலாக அமைந்தது ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம்.  

 1956இன் பின்னர், ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதம், இலங்கைத் தேசியத்தை முழுமையாகத் தனது மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரத் தொடங்கி, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், அது அரசமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.  
 ‘ஒரு நாடு, ஒரு தேசம்’ என்ற ஒற்றைத் தேசியப் புனைவுக்கு,  1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசமைப்புடன், உத்தியோகபூர்வமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. 

19ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்ற, நவீன சிங்கள-பௌத்த தேசியவாதப் புனைவின் சிற்பியாக அநகாரிக தர்மபாலவை பலரும் அடையாளப்படுத்தும் அதேவேளை, அவரின் சமகால எதிரிணையாக ஆறுமுக நாவலரை அடையாளப்படுத்துவர். இந்த அடையளாப்படுத்தல், மிக மேலோட்டமான பார்வையின் விளைவானதாகும்.   

அநகாரிக தர்மபாலவால் முன்னெடுக்கப்பட்டது, ஒரு மாபெரும் அரசியல் முன்னெடுப்பு. அவர் வெறுமனே, கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான பௌத்தர்களின் எழுச்சியாக, தனது முன்னெடுப்புகளைச் செய்யவில்லை.   மாறாக, சிங்கள-பௌத்த தேசியவாதம் என்ற பலம்மிக்க அரசியல் புனைவைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தார். 

சிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, வரலாற்றுக் காலத்திலிருந்து தொடர்ந்து வந்ததொரு பலம்மிக்க அடையாளம் என்ற கற்பிதத்தை, வரலாற்றாய்வாளர்கள் பலரும் மறுக்கிறார்கள். சமகாலத்தில் மேலோங்கியிருக்கும், சிங்கள-பௌத்த தேசிய அடையாளமானது, 19ஆம் நூற்றாண்டின் பின்னர், ஏற்பட்டதொன்று என்பது அவர்களது கருத்தாகும். 

அதற்கு முன்னர், ஒருமித்த சிங்கள-பௌத்த தேசிய கட்டமைப்போ, உணர்வோ இலங்கை என்ற நிலப்பரப்பில் இருக்கவில்லை என்பது அவர்களது வாதமாகும்.   

மறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவின் எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான சைவத்தமிழ் மறுமலர்ச்சி சார்ந்ததாக இருப்பினும் அது, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்கு ஒப்பான சைவத்தமிழ் தேசியவாதத்தையோ, தமிழ்த் தேசியவாதத்தையோ முன்னெடுக்கும் அரசியல் முகத்தைக் கொண்டிருக்கவில்லை.  

 மேலும், ஆறுமுக நாவலரின் செயற்பாடுகள் பெரும்பாலும், யாழ்ப்பாண, சைவ, தமிழ், வேளாளர்களை (அல்லது வௌ்ளாளர்களை) மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.   

ஆகவே, தமிழ்த் தேசிய உணர்வு, அல்லது சமகாலத்திலுள்ளது போன்றதொரு தனித்த தமிழ்த் தேசம் என்ற அரசியல் கட்டமைப்பு பற்றி 1956 வரையிலும், அதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்படும் வரையிலும், தமிழ்த் தலைவர்கள் பேசவில்லை என்றும், அவர்கள் தமிழ் மக்களின் அல்லது தமிழ்ச் சமூகத்தின் சிறுபான்மையினர் உரிமைகள் பற்றித்தான் பேசினார்களேயன்றி, தமிழ்த் தேசம் என்ற கற்பிதத்தை முன்வைக்கவில்லை என்ற விமர்சனத்தை சிலர் முன்வைப்பார்கள்.   

ஜீ.ஜீ.பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள், ‘சிறுபான்மையினர் உரிமை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையே பயன்படுத்தியிருந்தாலும், அது பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையமைவை, நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியமானதாகும்.   

இலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசைக் கட்டியெழுப்பும் சூழலமைவில்தான் அவை முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கை ஒற்றைத் தேசிய அரசாக உருவாக வேண்டுமானால், சிறுபான்மைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால், உருவாகும் இலங்கை என்ற ஒற்றைத் தேசிய அரசானது, பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கத்துக்குள்  கொண்டுவரப்படுவதுடன், இலங்கைத் தேசியம் என்பது, மேலாதிக்க சமூகத்தின் தேசியத்துக்குள் ஐக்கியமாகி விடக்கூடும் என்ற அச்சத்தின் வௌிப்பாடாகவே அது அமைந்திருந்தது.   

சுருங்கக் கூறின், சுதந்திரத்துக்கு முன்னதாக, டீ.எஸ்.சேனாநாயக்க அறைகூவல் விடுத்திருந்த இலங்கை என்ற ஒற்றைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துழைக்க, தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருந்தன.   

ஆனால், அந்த ஒற்றைத் தேச முயற்சி, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத் தேசியத்தால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, அந்த ஒற்றைத் தேச எடுகோளுக்குள் இருந்து வௌிவர வேண்டிய நிர்ப்பந்தம், தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டது.   

ஆகவே, 1956க்கு முன்னர், தமிழ்த் தலைமைகள், தமிழ்த் தேசம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளாமை, தமிழ் மக்கள் தாம், தனித்த ஒரு தேசம் என்ற உணர்வற்றிருந்தமை காரணமல்ல,  
 மாறாக, டீ.எஸ்.சேனாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அமைப்பதாகச் சொன்ன, மேற்கத்தேய பாணியிலான தேசிய அரசை ஸ்தாபிக்க, தமிழ்த் தலைமைகள் ஒத்துழைக்கத் தயாராக இருந்தமையே ஆகும்.   

ஆனால், இலங்கைத் தேசம் என்ற புனைவு, சிங்கள-பௌத்த பெரும்பான்மைத் தேசியத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, மேற்கத்தேய பாணியிலான இலங்கை தேசிய அரசொன்று ஸ்தாபிக்கப்படுவது சாத்தியமில்லை என்று உணர்ந்த பிறகு, தமிழ்த் தலைமைகள் அதிலிருந்து வௌிவந்து, தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்வைத்தன. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய வாதம் கூட, தௌிவான வரையறைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் விமர்சிப்பதுண்டு. 

தமிழ் மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் என வரையறைகள் மாறிக் கொண்டிருந்ததை நாம் அவதானிக்கலாம்.   

மொழி என்ற ஒற்றையம்சம் பலரை ஒன்றிணைத்தாலும், ஒரு தேசம் என்று கருதப்படுவதற்கு அது போதாது. இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்ந்த, சிங்கள-பௌத்தர்களை ஒரு தேசிய அடையாளத்துக்குள் ஒன்றிணைக்கும் அரசியல் நகர்வு, 19ஆம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டிருந்தது.   

தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசிய உணர்வு இருந்திருந்தாலும், அது அரசியல் ரீதியில் ஒழுங்குபடுத்தப்படவில்லை.  

 1956இல் அரசியல் ரீதியில் உருப்பெறத் தொடங்கிய தமிழ்த் தேசியவாதம், 1972இன் பின்னர் பலம்பெறத்தொடங்கி, 1983இன் பின்னர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ்த் தேசத்துக்குத் தத்துவார்த்த ரீதியில் செய்த பங்களிப்பைவிட, அதன் நடைமுறை யதார்த்தத்துக்குச் செய்த பங்களிப்பு அதிகம்.   

வன்முறை நிறைந்த 1984 ஓகஸ்ட்  

1984 ஓகஸ்ட் மாதம், வன்முறைத் தாக்குதல்கள் நிறைந்த மாதமாக அமைந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வடக்கில் அரச படைகள் மற்றும் பொலிஸாரின் மீது தாக்குதல் நடத்துவதும், அரச படைகள் பதில் தாக்குதல் நடத்துவதுமென இரத்தக் கறை படிந்த காலப்பகுதி இதுவாகும்.   

கெரில்லா போர் உத்தியை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கையாண்டு தாக்குதல்களை நடத்தியபோது, பாரம்பரிய போர்ப் பயிற்சி பெற்ற அரச படைகளுக்கு, அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. இது பற்றி இலங்கை மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.   

ஆனால், ஆயுததாரிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகப் பொதுமக்களைப் பழிவாங்குதல் என்பது, எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றல்ல என்பதைவிட, காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மையானதாகும்.  

 1984 ஓகஸ்ட் எட்டாம் திகதி, குறித்ததொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களால், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பொலிஸார், குறித்த பொலிஸ் நிலையத்தைக் கைவிட்டுச் செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து வௌியேறும்போது, குறித்த நேரத்தில் வெடிக்கத்தக்கதான வெடிகுண்டை வைத்துவிட்டு வௌியேறியதாகவும், சிறிது நேரத்தில், அந்தப் பொலிஸ் நிலையம் வெடித்துச் சிதறியதில், ஏறத்தாழ 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.  

 பொதுமக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் தாமே குண்டுவைத்துவிட்டுப் போவது என்ன நியாயம்? ஓர் ஆயுதக் குழுவைப் போல அல்லது அரசாங்கம் குறிப்பிடுவது போல, பயங்கரவாதிகளைப் போல அரசாங்கமும் அரசபடைகளும் நடந்துகொண்டால், இரண்டுக்கும்  வித்தியாசம் என்ன? 

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும், அரசபடைகள் பதில் தாக்குதல் நடத்தவதும், பொதுமக்களைத் தாக்குவதுமென, 1984 ஓகஸ்ட் மாதமே, வடக்கைப் பொறுத்தவரை மிகப் பயங்கரமான மாதமாக அமைந்ததென, பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள்.   

இந்த வன்முறைத் தீயைப் பார்த்துக் கொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? வழக்கம் போல அவர்கள் இந்தியாவிடம், அதாவது இந்திராவிடம் முறையிட்டார்கள்.  

 இந்தியாவிடமிருந்து வழக்கம் போலவே, தாக்குதல் தொடர்பான கண்டனம் வந்தது. இந்திரா காந்தி, சர்வகட்சி மாநாடு மூலம் தீர்வு காண அழுத்தம் வழங்கினார். இந்தியாவின் விருப்பின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தது.   

ஜே.ஆரும் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டை நடத்திக் கொண்டேயிருந்தார். ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும், எதுவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி சர்வகட்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது.  

தொடர்ந்த சர்வகட்சி மாநாடு  

1984 ஓகஸ்ட் 17ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அரசாங்க முறைமை தொடர்பில் ஆராய்ந்த குழு, தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  

 அதில் அதிகாரப் பகிர்வுக் கூறு தொடர்பில், எந்தத் தௌிவான முன்மொழிவும் குறிப்பிடப்படவில்லை. இது அதிகாரப் பகிர்வுக் கூறு எதுவாகவும் இருக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையைப் பிரதிபலித்தது.   

இந்தச் சர்வகட்சி மாநாட்டின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்ததே அதிகாரப் பகிர்வுக் கூறுதான். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர், அதிகாரப் பகிர்வுக் கூறாக பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்று கோரினர்.   
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும், மகாசங்கத்தினரதும் நிலைப்பாடு, மாவட்ட சபைகள் என்பதிலிருந்தது. பிரேமதாஸ தலைமையிலான குழு, இந்த முடிவைச் சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்விடம் தீர்மானிக்க விட்டிருந்தது.   

பிரேமதாஸ குழுவின் அறிக்கையை, ஏறத்தாழ நான்கு நாட்கள் சர்வகட்சி மாநாடு ஆராய்ந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொறுமையிழந்திருந்தார் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.  

 1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வுக் கூறாகப் பிராந்திய சபைகள் அமைய வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை என்று உணர்த்தியதுடன், மாவட்ட சபைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை நிராகரித்தார்.  

 தமிழர் தாயகத்தில், தமிழ்ப் பொதுமக்கள் மீது நடைபெற்று வந்த வன்முறைத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், தமிழ் மக்களின் தாயகத்தின் ஒற்றுமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை அடைவதன் மூலம் மட்டும்தான், தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டதுடன், தமிழ் மக்கள் தமது தாயகத்தில் உள்ளகப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, காணித் தீர்வு உள்ளிட்ட அரசியல் அதிகாரங்களைப் பிரயோகிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  

 குறித்த அதிகாரப் பகிர்வுச் சட்டகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வகட்சி மாநாட்டுக்குச்  சமர்ப்பித்த முன்மொழிவுகளில் (அதாவது, சௌமியமூர்த்தி தொண்டமானால் தத்தெடுக்கப்பட்டு, தனது முன்மொழிவுகளாக முன்வைக்கப்பட்ட ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளில்) இருக்கிறது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், இந்த முன்மொழிவுகளிலுள்ள விடயங்களை, உள்ளடக்காத எந்தத் தீர்வும், ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .