2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இஸ்ரேல் - பலஸ்தீன நூற்றாண்டுக்கான சமாதனத் திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் கடந்தவாரம் வெளியிட்டிருந்த "நூற்றாண்டு சமாதானத் திட்டத்தின்" மீதான அடிப்படையான கேள்வி என்னவென்றால், குறித்த சமாதானத் திட்டம் உண்மையிலேயே உலகின் மிகவும் சிக்கலான மோதல்களில் ஒன்றான இஸ்ரேலிய-பலஸ்தீனிய முரண்பாடுகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளதா எனின் அதற்கான விடை - இல்லை என்பதே ஆகும்.

சர்வதேசச் சட்டத்தை மீறும் வகையில், இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக பலஸ்தீன எல்லைக்குள் ஆக்கிரமித்த பிரதேசத்தை இஸ்ரேலுடன் இணைக்க அதிகாரம் அளிக்கும் குறித்த சமாதானத் திட்டமானது, பலஸ்தீனிய மக்கள் தொகையில் கணிசமான பகுதியை இத்திட்டம் கருத்தில் எடுப்பதை தவிர்ப்பதன் மூலம் பலஸ்தீன அரசின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாட்டை செய்வதாகவுமே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

குறித்த திட்டமானது நான்காவது ஜெனிவா உடன்படிக்கையை இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களை இணைப்பதை உறுதிசெய்தல் மற்றும் மக்கள் மக்கள் இடமாற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் மீறும் செயலாக அமையும். எவ்வாறாயினும் இது, இஸ்ரேலை நாகரிகவாதத் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தும் வளர்ந்துவரும் புதிய உலக ஒழுங்கின் வெட்டு விளிம்பில் கொண்டுசெல்லும் என்பதே ஜனாதிபதி ட்ரம்ப் – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் எதிர்பார்ப்பாகும்.

குறித்த இரண்டு தலைவர்களையும் பொறுத்தவரை, சர்வதேசச் சட்டத்தை பின்பற்றுவதை விட இராணுவ வல்லமை மூலம் அங்கிகாரம் பெறுவது நிலைத்து நிற்கும் ஒன்றும் எனக் கருதுகின்றனர். இருவரும், சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட எல்லைகள், மக்கள் தொகை மற்றும் மொழி ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படும் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தின் அடிப்படையில் தங்களையும் தங்களின் அரசியல் சார்ந்த நிலைமைகளையும் பேணுதல் இயைபான ஒன்று எனக் கருதுகின்றனர். இவர்கள் மட்டுமே தான் இவ்வாறான அரசியல் ரீதியாக தமக்கு நன்மை தரும் கொள்கைகளை வரித்தவர்கள் அல்ல. இவர்களை தவிரவும், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் மியான்மாரின் வின் மைன்ட் உள்ளிட்ட பல நாகரிகவாதத் தலைவர்கள், சிறுபான்மையினரை ஓரங்கட்டவும், விலக்கிக் கொள்ளவும், சமூக ஒற்றுமையை குறைமதிப்புக்கு உட்படுத்தவும் பாரபட்சமான கொள்கைகளை பின்பற்றுகின்றார். வெகுஜன இடப்பெயர்வு, தீவிரமயமாக்கல் மற்றும் அதிகரித்த அரசியல் வன்முறை ஆகியவை இன்றுள்ளதை விட எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என அறிந்தும், குறித்த தலைவர்கள் - குறிப்பாக மத்திய கிழக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்திய சமாதானத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு அவர்களின் தீர்மானங்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிந்திருந்தும், அவர்கள் தமது அரசியல் நன்மைகளுக்காக அவ்வாறான ஒரு குறுகிய - தமக்கு அரசியல் ரீதியில் நன்மை பயக்கும் தீர்மானங்களையே எடுக்க முற்படுகிறார்கள்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்தை செயற்படுத்துவதில் இஸ்ரேல் உண்மையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், சர்வதேச சட்டத்தில் தொகுக்கப்பட்டுள்ள மனித மற்றும் சிறுபான்மை உரிமைகளுக்கு சிறிதும் கவனஞ் செலுத்தாத ஒரு புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதற்கான நாகரிகவாத முயற்சியில் இஸ்ரேல் இறங்குவதாகவே அமையும். அது ஒரு புதிய உலகத்தின் வடிவத்துக்கான போராட்டத்தில் ஒரு தெறிப்பு புள்ளியாக மாறுவது இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பையே கேள்விக்குட்படுத்தும்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்துக்கு பதிலளித்த வளைகுடா நாடுகள் அமைதியை அடைவதற்கான ஐக்கிய அமெரிக்க முயற்சிகளைப் பாராட்டி - பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், கவனமாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் சமாதானத் திட்ட வரைபடத்தை ஆதரிக்கவில்லை. மறுபுறம், அனைத்து அரபு நாடுகளையும் குழுவாகக் கொண்ட அரபு லீக் இந்த திட்டத்தை அடிப்படையில் நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி ட்ரம்ப் சமாதானத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்ட போதிலும், குறித்த திட்டத்தின் அமுலாக்கம், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அமெரிக்காவவுக்கும் மட்டுமல்ல பலஸ்தீன அதிகாரசபைக்கும் எதிராக பரவலான எதிர்ப்பைத் தூண்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

1967ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போருக்கு முன்னர் இஸ்ரேலிய எல்லைகளுக்குள் வசிக்கும் இஸ்ரேலிய பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்புகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதுடன் அது இஸ்ரேலின் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசசேலத்தின் பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்தும் என்பதும் குறிப்பிடத்த்தக்கது.

மறுபுறம், குறித்த உடன்படிக்கையை பலஸ்தீன இணக்கப்பாடு இன்றி இஸ்ரேல் செயற்படுத்தமுனையுமாயின், அது இஸ்ரேலை ஒரு ஜனநாயகம் அல்லது ஒரு யூத அரசு என்ற தேர்வில் ஒன்றை தெரிவுசெய்ய கட்டாயப்படுத்தும். இந்நிலைமை மேலும் இஸ்ரேலை ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பிலிருந்து தனிமைப்படுத்தும் என்பதும் - குறித்த திட்டம் உண்மையிலேயே நீண்ட கால அளவில் இஸ்ரேலுக்கு ஒரு நன்மை பயக்கும் திட்டமாக இருக்கப்போவதில்லை என்பதையே காட்டுவதாய் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .