2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 29 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற  ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’  என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. 

சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்குப் பெருந்துணை செய்கிறது.  எந்தவொரு தகவலும், அதன் உண்மைத்தன்மை பற்றிய அலசல்கள் எதுவுமின்றி, சமூக ஊடகவௌியில் பதிவிடப்படுவதும், அதன் உண்மைத்தன்மை பற்றிய எதுவித கேள்விகளுமின்றி, அது தனிநபர் உணர்வுகளின்படி, ஏதோ ஒரு வகையில் உண்மை என நம்பப்படும் அடிப்படையில் மட்டும் பலராலும் பகிரப்படுவது, சமூக ஊடகங்களின் நியதியாக மாறியுள்ளது. 
தனிமனித உணர்வுகள், உண்மையைப் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு வினோத காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

“அரசியலில் பொய் என்பது, புதிய விடயமல்ல! அன்று அளித்த வாக்குறுதி என்பது, அன்றைய காலகட்டத்தின் தேவை; அந்த வாக்குறுதி, இன்று மீறப்பட்டமை, இன்றைய காலகட்டத்தின் தேவை” என்கிறார் நிக்கலோ மாக்கியவலி. அதிகார அரசியலின், அழுக்கான முகத்தின் ஒரு பகுதி இது. 

அரசியல், ஜனநாயக மயப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசியலில் பொய்யின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமது அதிகாரத்தை, பிறப்பால் அல்லது செல்வத்தால் மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில்,  வாக்குகளுக்காக மக்களைக் கவர வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, எப்பிரயத்தனப் பட்டேனும், எக்காரியத்தைச் செய்தேனும் மக்களின் வாக்குகளை வேட்டையாடிவிட வேண்டிய தேவையின் விளைவாக, வாக்காளர்களைத் திறமையாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தத்தை, அரசியல்வாதிகள் எதிர்கொள்கிறார்கள். 

“இயற்கையாகவே மனிதன், ஓர் அரசியல் விலங்கு” என்று அரிஸ்டோட்டில் கூறுகின்றார். ஆனால், மனிதன் அடிப்படையில் உணர்வுவயப்பட்ட விலங்கும் கூட! தனது சிந்தைனையாற்றல், பகுத்தறிவின் விளைவாக உணர்வுவயப்படுதலை, மனிதனால் கட்டுப்படுத்த முடிந்தாலும், இயற்கையான வடிவமைப்பை முற்றாகக் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே, மனிதனைக் கட்டுப்படுத்தக்கூடிய பெரும் ஆயுதமாக, மனித உணர்வுகள் இருக்கின்றன. இதை, மிகத்தௌிவாகப் புரிந்தவர்கள் அரசியல்வாதிகள். ஆகவே, மனிதனின் இந்த உணர்வுகளைக் கொண்டு, உண்மைகளைக் கூட மறைக்கும் செப்படி வித்தை, அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. 

அடல்ப் ஹிட்லர், ‘க்ரோஸ லூக’ (ஜேர்மன் மொழி, ‘பெரும் பொய்’)  எனும் பிரசார உத்தி பற்றித் தன்னுடைய ‘மெய்ன் கம்ப்ஃப்’  (எனது போராட்டம்) நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் சுருக்கம், ஒரு பொய்யைப் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்யும் போது, அது உண்மை என நம்பப்படும் என்பதாகும். இதை, ஹிட்லரின் வலக்கரமாக இருந்த, ‘நாஸிக்களின் பிரசார பீரங்கி’ என்று கருதப்பட்ட ஜோசப் கோபெல்ஸ், யூதர்கள் மீதான வெறுப்பை விதைக்கும் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருந்தார். 

யூதர்களைப் பற்றிய பல பொய்கள், கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை, மீண்டும் மீண்டும் அரசியல் மேடைகளில், பிரசுரங்களில் சொல்லப்பட்டபோது, அதன் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களைக் கடந்து, வெகுஜனங்களிடையே அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானது. அதுவும், அவை உணர்வு ரீதியில் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் பொய்யாக இருக்கும் போது, அவை மறுகேள்வியின்றி மக்களை ஆட்கொண்டுவிடுகின்றன. 

ஆனால், நாஸிக்களின் காலத்தில் இந்தப் ‘பெரிய பொய்’யைச் சாத்தியமாக்க, நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் பெரியளவில் நடத்தப்பட வேண்டிய அவசியமும், இதுதொடர்பான பிரசுரங்கள் வௌியிடப்படுவதும், அது மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டியதுமான தேவை இருந்தது. ஆனால், இன்றைய சூழல் இதனை இலகுவாக்கி இருக்கிறது. இணைய வசதியுள்ள ஒருவர், தான் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே, இத்தகைய பிரசாரத்தைச் சாதிக்கக்கூடிய வல்லமையை சமூக ஊடகங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. அதன் விளைவாக, மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் பொய்கள், பாதி உண்மைகள் என்பன பெரும் பிரசாரமாக, மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுகையில், அவை மறுகேள்வியின்றி அந்த மக்களை ஆட்கொண்டு விடுகின்றன.

உதாரணத்துக்கு, அபிவிருத்தியடைந்த நாடொன்று பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் காலகட்டத்தில், அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் பலரும் வேலைகளை இழக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதேவேளை, வளர்முக நாடுகளைச் சேர்ந்த பலர் அந்நாட்டில் குடியேறி, வேலைசெய்து வருகிறார்கள். சாதாரணமாக இவர்கள் செய்யும் வேலைகள், அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் செய்ய விரும்பாத வேலைகள். அதனால்தான், இந்த வேலைகளுக்கான கேள்வி அதிகரித்து, அதனை நிரப்ப, வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வரும் வாய்ப்பு எற்பட்டது. 

இந்த இடத்தில், பூர்வீகக் குடிகளின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விளையும் அரசியல்வாதிகள், “எங்களது நாட்டவர்களுக்கு, வேலையில்லை; எங்கள் நாட்டின் வேலைவாய்ப்புகளை அந்நியர்களும் வந்தேறு குடிகளும் தட்டிப்பறித்துக் கொள்கிறார்கள்” என்ற பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். இதில், இவர்கள் சொல்லும் இரண்டு கருத்துகளும் முற்று முழுதான பொய் அல்ல! பூர்வீகக் குடிகளாகக் கருதிக்கொள்பவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; அதேவேளை, பல வேலைகளை வௌிநாடுகளிலிருந்து வந்தோர் செய்கிறார்கள். இந்த இரண்டும் உண்மை. 

ஆனால், இந்த இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது போல, இந்த அரசியல்வாதிகள் அதைச் சித்திரிக்கிறார்கள்.  இங்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத்தான் வேலையிழப்பு ஏற்பட்டது. ஆனால், வேலை இழப்பால் அவதிப்பட்டுக் கொண்டிக்கும், தமது நாட்டில் குடியேறியவர்கள் மீது ஐயமும் அசூயையும் கொண்டிருக்கும் மக்களிடம், இந்தக் கருத்து உணர்வுரீதியிலான ஏற்புடைமையை ஏற்படுத்திவிடுகிறது. அதைத் தாண்டி, இதன் உண்மைத் தன்மையைப் பகுத்தறிபவர்கள் மிகக் குறைவே! 

இத்தகைய பிரசாரம், தினம் தினம் அம்மக்கள் பார்க்கும் சமூக ஊடகங்களில், அரசியல்வாதிகளால் மட்டுமன்றி, இந்த எண்ணத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட சாதாரணர்களாலும் பகிரப்படும் போது, இந்தப் பொய், அது பொய்யானாலும் கூட, உணர்வு முனைப்பால் வெகுஜனங்களிடம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.

இலங்கை அரசியலும், இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்கு விதிவிலக்கல்ல! தமிழர்கள் மீதான வெறுப்பு என்பது, இங்கு அரசியல் பிரசாரமாகவே உருவெடுத்தது. இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினை என்பது, அரசியலும் அதன்வழியான பொய்ப் பிரசாரங்களும் உருவாக்கிய ஒன்று! 

சிங்கள-பௌத்த தேசியவாதம் மட்டுமல்ல, தமிழ்த் தேசியவாதம் கூட, இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் உதாரணம் சொல்வதென்றால், அல்பிரட் துரையப்பாவை பலரும் ‘துரோகி’ என்கிறார்கள். காரணம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடும் வன்முறைத் தாக்குதலுக்கு, அவர்தான் காரணம் என்கிறார்கள். 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கு, சிறிமாவோ அரசாங்கம் தான் பொறுப்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், அதன் பின்னணியில் அல்பிரட் துரையப்பாதான் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைப்பற்றி மிக விரிவாக, ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன’ என்ற தொடரில் எழுதியிருந்தேன். 

வைரிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸூம், கூட்டணியாக ஒன்றிணைந்திருந்த வேளையில், யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டணிக்குப்  பலமான அரசியல் போட்டியாக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறைகளைத் தொடர்ந்து, ‘அல்பிரட் துரையப்பா துரோகி’ என்ற பிரசாரம், கூட்டணிக்காரர்களால்த்தான் முன்னெடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மை பற்றிய எந்தக் கேள்வியுமின்றி, அதுவே உண்மையென நம்பவைக்கப்பட்டது. இன்று மீண்டும் மீண்டும் அதுவே சொல்லப்பட்டு, அதுவே உண்மையெனக் கருதப்படும் நிலையில் நாம் நிற்கிறோம். 

வெகுஜனங்கள் ஒரு கணம், தமது உணர்வுவயப்பட்ட நிலையைத்தாண்டி பகுத்தறிவுக்கு இடம் கொடுத்து, ஏன், எதற்கு என்ற கேள்விகளையாவது கேட்டால், இந்தப் பிரசாரங்களின் போலி முகமூடி கழன்றுவிடும். ஆனால், பொய்களை உண்மையாக்கிய பிரசாரங்கள், பெரியளவில் நீண்டகாலத்தில் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, அந்தப் பொய்களே உண்மைகளாக நம்பப்பட்டன; அந்தப் பொய்களே வரலாறுமாயின. அதன் விளைவாக, அந்தப் பொய்களே, இன்று பலரின் அடையாளங்களாகவும் ஆகிவிட்டன. 

ஆனால்,  பொய்களை உண்மையாக்கும் இந்த உற்பத்தித் தொழிற்சாலைகள், இன்று சமூக ஊடகங்களின் உதவியால், இன்னும் வினைத்திறனுடன் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்றன. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு”  என்கிறான் வள்ளுவன். அறிவுள்ள சமுதாயமென்றால், பிரசாரங்களுக்கு எடுபடாமல், மெய்ப்பொருள் காண்பதற்கு முயலவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .