2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன்

காரை துர்க்கா   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் (03) இரவு ஏழு மணியளவில், வவுனியா செல்லும் பொருட்டு யாழிலிருந்து வரும் புகைவண்டியை எதிர்பார்த்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் காத்திருந்தோம். எமக்கு அருகில் இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.   

“முன்னால் அமைந்திருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது” என ஒருவர் வினாவினார். 

“நாளைக்கு (நேற்றைய தினம்) சுதந்திர தினமாம்” என மற்றையவர் விடை பகிர்ந்தார். 
“தமிழ் மக்களுக்கு, அது கிடைத்து விட்டதே?” எனத் தொடர்ந்து மற்றையவர் கேட்டார். 

தனது இரு கைகளையும் விரித்தார், அவருடன் உரையாடியவர்.    

எங்களுடைய எண்ணங்களை ஒழித்தாலும், அதற்கு இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் எமது செயற்பாடுகள், எமது எண்ணங்களைத் துல்லிமாகக் வெளிக்காட்டி விடும்.   

அதைப் போலவே, நல்லிணக்கம், உத்தேச அரசமைப்பு யோசனைகள், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு எனப் பல கோஷங்களைத் ‘தெற்கு’ போடுகின்றது. 

ஆனால், மெய்யாக வடக்கு, கிழக்கில் இன்று நடப்பதோ, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளாகும்.  தீவிரப்படுத்தப்பட்ட சட்டவிரோத விகாரைகள் அமைப்பு, அதனையொட்டித் தொடரும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவருக்கான பெருமளவிலான வேலைவாய்ப்புகள் எனத் தொடரும் நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு ஆகியவற்றுக்கு விரோதமான செயற்பாடுகளே உள்ளவாறாக நடக்கின்றன.   

தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை வைத்து, அதனைத் தூக்கிப் பிடித்து தெற்கு அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையாடுவார்கள். அதன் பின்னர் தேர்தல் மேடைகளில் என்ன சொன்னோம் எனச் சொன்னவர்களே அறவே மறந்து விடுவார்கள். இதுவே, கடந்த 70 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற பழுதடைந்த பண்பாடு ஆகும்.   

தெற்கு அரசதலைவர்கள், 1948ஆம் ஆண்டு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம் தொடங்கி, இன்று வரை பெரும்பான்மை மக்களுக்கு அழகிய முகத்தையும் சிறுபான்மை மக்களுக்கு அக்கிரமமான முகத்தையும் காண்பித்து வந்துள்ளனர்; வருகின்றனர்.   

நாம் அனைவரும் இலங்கை மாதாவின் குழந்தைகள் எனப்பார்க்காது, இனம்,  மதம் அடிப்படையில் வேறுபாடுகளை மனங்களில் ஆழமாக விதைத்து விட்டார்கள். இன்று, நம்நாட்டில் இனங்களில் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் கூட இயங்குகின்றன.   

சுதந்திரம் கிடைத்த (1948) காலத்திலிருந்து, இன்று வரையான 70 ஆண்டு காலப்பகுதியில், ஏறக்குறைய அரைவாசி ஆண்டு (30 ஆண்டுகளுக்கு மேலாக) காலப்பகுதி, கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.   

இந்த யுத்தத்தில் தமிழ்ப் போராளிகள் (ஈழத்தமிழ் இளைஞர்கள்) இலங்கைப் படையினர் (சிங்கள இளைஞர்கள்) முட்டி மோதினர். இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். 

ஒரு நாட்டின் ஊழியப்படையில் முக்கிய பங்கு வகித்து, மொத்தத் தேசிய வருமானத்துக்கு பெரும் பங்கு வகித்து, அதனூடாக அந்நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்தக் கூடிய பெரும்படை (இளைஞர்கள்) போர்ப்படையாக, வீணாகக் கொல்லப்பட்டனர். பலர் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர்.  

மேலும், போரின் நடுவே, இலட்சக்கணக்கில் பொதுமக்கள் சிக்கி மாண்டனர். இவர்களில் தமிழ் மக்களது எண்ணிக்கையே மிகமிக உச்சம். இதை விடப் பல இலட்சம் தமிழ் மக்கள், இந்நாட்டை விட்டு, நிரந்தரமாகக் குடி பெயர்ந்தனர். 

மிகப் பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. தேவையற்ற யுத்தத்தை நடத்த, தேவையற்ற கடனை பல தேசங்களிலிருந்தும் நாடு வேண்டியது. இவ்வாறாக, இன்று ஒட்டுமொத்த நாடும் கவலையிலும் கடனிலும் மூழ்கி உள்ளது.   

உள்ளூரில் சொந்தச் சகோதரங்களுடன் வேண்டப்படாத கொடும் யுத்தம் புரிந்து கொண்டு, உள்ளூரிலும் வெளியூரிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனக் கோசம் போட்டு கொண்டு, வெற்றியையும் பெற்றார்கள்; வெற்றிகரமாகக் கொண்டாடினார்கள்.   

இவ்வாறானவர்களால், போர் ஓய்ந்த மண்ணில், மகிழ்ச்சி கொண்டு வரப்பட்டதா? அதற்காக ஏதேனும் முயற்சிகளாவது, விசுவாசமாக மேற்கொள்ளப்பட்டதா?   

நிலைமைகள் இவ்வாறாக கவலைக்கிடமாக இருக்கையில், நேற்றைய சுதந்திரதின (பெப்ரவரி 4) நிகழ்வுகளில், எவ்வாறு தமிழர்களால் சுதந்திர உணர்வோடு, ஆனந்தமாகக் கலந்து கொள்ள முடியும்?   

“எங்களுக்கு, எமது அரசாங்கம் குறையொன்றும் இல்லாது, நிறைவாகக் கவனித்து வருகின்றார்கள்” என, எவ்வாறு கூறிக் கொள்ள முடியும்? “நாங்களும் இந்நாட்டின் சுதந்திரப் பிரஷைகள்” என, எவ்வாறு பெருமிதம் கொள்ள முடியும்?   

இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றதும் நாட்டின் பிறிதொரு சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முக்கியமான தருணத்தில், தெளிவான கருத்தை உலகத்துக்குத் தெரிவித்துள்ளார்.   

அதாவது, “இந்த அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின் தலைவர், பிரதம மந்திரி ஆகியோர், எமது மக்களுக்குத் தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, எனக்கு அறவே இல்லை” என்று வவுனியாவில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு ஒன்றில், கருத்து வெளியிட்டு உள்ளார்.   

இந்த அரசாங்கமோ, அரசாங்கத்தின் தலைவரோ, பிரதம மந்திரியோ அல்ல, எந்த அரசாங்கமோ எவருமே தீர்வுத் திட்டத்தைத் தரமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் தொடர்ந்தும் உள்ளனர்.   

அமைச்சரின் கருத்தை மறுவளமாகத் திருப்பினால், தீர்வை வழங்காத, வழங்க விருப்பமற்ற, வழங்க முடியாத இந்த அரசாங்கத்திலேயே அவர் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார்; இருப்பார்.    

இதேவேளை, இலங்கை அரசாங்கங்களில் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அங்கம் வகித்த, தற்போதும் அங்கம் வகிக்கின்ற வடக்கு, கிழக்கு தமிழ் உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது; என்ன செய்ய முடியும்?   

ஆங்காங்கே சில அரச நியமனங்கள் வழங்கல், சிபாரிசுக் கடிதங்கள் வழங்கல், சில வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இவற்றைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?   

எமது சமுதாயத்தையும் நாட்டையும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து, போதையற்ற நாட்டை உருவாக்க, எதிர்கால இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு கைகோர்க்குமாறு, முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்து உள்ளார்.   

இதேவேளை, கொட்டும் மழையிலும் நடுங்கும் பனியிலும் எரிக்கும் வெயிலுக்கும் மத்தியில், எமது நிலம் எமக்கு வேண்டும் எனக் கோப்பாப்புலவு மக்கள் போராடுகின்றார்கள். இவர்களுக்கான தண்ணீர், மின்சாரத்தைக் கூட, படையினர் தடை செய்துள்ளனர்.   

படையினரின் முகாமிலிருந்து 75 மீற்றருக்கு அப்பால் கொட்டில் அமைத்து, இரவு வேளைகளில் தீப்பந்தங்களை ஏற்றியும் விளக்குகளின் உதவியோடும் கைக்குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை, பல நூறு நாள்களாகப் போராடுகின்றனர். மேலும், இராணுவத்துக்கு ஆத்திரமூட்டும் வகையில், போராடக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.   

இவர்களின் இலட்சியப் போராட்டப் பயணங்களில், அறைகூவல் விடுபவர்களால் ஏன் கைகோர்க்க முடியவில்லை? இவர்களால், தங்களது தலைவருடன் (ஜனாதிபதி) பேசி, இம்மக்களது அபகரிக்கப்பட்ட 171 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடியுமா? அப்படி முடியாவிட்டால், அவர்களது அணியில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன பயன்?   

இதற்கிடையில், அண்மையில் தமிழரசுக் கட்சியின் மய்யச் செயற்குழுக் கூட்டம், கொழும்பில் நடைபெற்றது. “கூட்டாட்சிப் பண்புகளுடனேயே புதிய அரசமைப்பு வருகின்றது. தெற்கில் உள்ள மக்களைச் சமாளிப்பதற்காக, அரசாங்கத் தரப்பினர் சொல்லாடல்களைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகின்றார்கள். இதை நாம் தூக்கிப் பிடித்தல் கூடாது” எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்து உள்ளார்.   

தெற்கில் உள்ள பெரும்பான்மை மக்களைச் சமாளித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு வழங்குவதற்கு, இது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல.   

அவர்கள் (தெற்கு) விட்டுக் கொடுக்கவும் இவர்கள் (வடக்கு, கிழக்கு) விட்டு விடவும் இது ஒரு பணக்கொடுக்கல் வாங்கல் அல்ல. மனிதனின் பிறப்புரிமையோடு தொடர்புடைய சுதந்திரம். ஆகவே, இதைப் புரிய வேண்டியவர்கள் புரியாத வரை, அமைதி அற்ற குழப்பங்களின் கூடாரமாகவே, நம்நாடு பயணிக்கப் போகின்றது.  

இந்நிலையில், கூட்டாட்சிப் பண்புகளுடனேயே தீர்வு வருகின்றது என, மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் கூறி, தாங்களும் ஏமாந்து, தம்மக்களையும் ஏமாற்ற முயலும் இந்த அரசாங்கமும் அரசியல்வாதிகள் மத்தியில், “எமது மக்களுக்குத் தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை அறவே இல்லை” எனத் திடமாக, உறைக்க உரைத்த ரிஷாட் பதியுதீன் கருத்து, உயர்வானது; உண்மையானது; நிதர்சனமானது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X