2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உலக ஆர்ப்பாட்டங்களும் அனுபவங்களும்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. சிவலிங்கம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்கப் பொலிஸ் அதிகாரி ஒருவர், கறுப்பின அமெரிக்கப் பிரஜை ஒருவரைத் தனது முழங்காலால் அமுக்கி, கொலை செய்த சம்பவம், உலகம் முழுவதிலும் வாழும் மனிதர்களை இனம், மதம், நிறம், சாதி, மொழி போன்றவற்றால் பாகுபடுத்தி நடத்தப்படும் போக்குகளுக்கு எதிரான, பாரிய மாற்றமாக மாறியுள்ளது. 

அமெரிக்காவில் கறுப்பினக் குடிமகன், பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், இதுதான் முதல் தடவை அல்ல. ஆனால், ஜோர்ஜ் புளொய்ட் என்ற அவரின் படுகொலையை அடுத்து, மக்களின் வெளிப்பாடு வரலாறு காணாத ஒன்றாக இருந்தது.

தன்நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸ் பிரிவினரே, கொடுமையான கொலையைப் புரிந்துள்ள நிலையில், தத்தமது நாடுகளிலும் அவ்வாறான கொடுமைகள் நிகழ்வதை உணர்த்தும் விதத்தில், அமெரிக்கா முதல் தென்னாபிரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா, இலங்கை வரை, பல ஆயிரம் மக்கள், தொற்றுநோய் ஆபத்துக் காணப்பட்ட போதிலும், அதையும் கருத்தில் கொள்ளாது, எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர். 

கடந்த மே மாதம் 16ஆம் திகதி, ஜோர்ஜ் புளொய்ட் கொல்லப்பட்டார். இதன் எதிர்ப்பு அலைகள், இன்னமும் தொடர்கின்றன. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, பிரேஸில், இந்தியா போன்ற நாடுகளில், பலரின் உயிர்களைக் காவு கொண்டுள்ளது. இம்மரணத்தில் பலியாகியவர்களில் பலர், குறிப்பாக, உலகத்தின் பணக்கார நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வாழும் கறுப்பு, இலத்தின் அமெரிக்க, ஆசிய நாட்டவர்களாவர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில், மரணமடைந்தவர்களில் அதிக தொகையினர், பங்களாதேஷ் நாட்டின் பரம்பரையினரே எனவும்;, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் வெளிநாட்டுப் பரம்பரையினரின் வாழ்க்கைத் தரங்கள் குறிப்பாக, வருமானம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, சுகாதாரம் என்பன மிக மோசமாக உள்ளதன் விளைவே, இம் மரணங்கள் எனக் கூறப்படுகிறது. இந்நாடுகளில் காணப்படும் இன, மொழி, நிற, மதப் பாகுபாடுகள், அங்கு நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவே என்பதாகும். 

அது மட்டுமல்ல, இந்த நாடுகளின் பொதுச் சுகாதார நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், இந்த வம்சாவளியினர் என்பதால் அவர்களே, அதிக அளவில் இத்தொற்றுநோய்க்குப் பலியாகின்றனர்; பலியாக்கப்படுகின்றனர். வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிகள் போன்றோருக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை, மரணமடைந்தவர்களை உறவினர்கள் எவரும் சென்று, கவனிக்க முடிவதில்லை. இந்நோய், பலர் மத்தியில் இனம் தெரியாத அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தினமும் மரணத்தை தழுவுபவர்கள் தொகை, பலர் மத்தியிலும் இனம் தெரியாத பீதியை உருவாக்கியுள்ளது.

இந்நோயின் தாக்கத்தால், பாதிக்கப்படுபவர்களில் பலர், ஏற்கெனவே மன உழைச்சல்களாலும் தமது எதிர்கால வாழ்வின் நிச்சயமற்ற அச்சத்தாலும் மன அழுத்தங்களுக்குள் சிக்கியவர்களே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஒருபுறத்தில் மரணம் என்பது, அருகில் நெருங்குவது போலவும், கொரோனா வைரஸ் தொற்று எந்நேரத்திலும் ஏற்படலாம் என்ற செய்திகளின் தாக்கங்களாலும் பலரின் உளவியல், அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் காணப்படுகின்றனர். அதாவது, உடலில் இயல்பாக எழக்கூடிய, நோய் எதிர்ப்புப்  பாதுகாப்புப் பொறிமுறை, புறச்சூழலில் காணப்படும் தேசியவாதம், இறை நம்பிக்கைகள் போன்றவை, நோய்குறித்த பயங்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பை வழங்குகின்றன. இன்னொரு வகையில் கூறுவதானால், மனித நடவடிக்கைகள் அதன் அறத்தை விட்டு விலகாமல் தடுக்க, இவை துணை புரிகின்றன. ஏற்கெனவே, குறிப்பிட்ட மத நம்பிக்கைகளும், தேசியவாத சிந்தனைகளும் அப்பாதுகாப்பை வழங்கத் தவறும்போது, பரந்த சமூகத்துடன் இணையக்கூடிய மாற்று ஏற்பாடுகளை நோக்கி, அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுவே இன்று, ஜோர்ஜ் புளொய்ட் மரணத்திலிருந்து வெளிப்படும் மாற்றங்களாகும். அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதி, நிறவாதம் கலந்த இனவாதமாகும். குறிப்பாக, பொலிஸாரின் தொடர்ச்சியான தாக்குதல்கள், அதன் எல்லையை அடைந்துள்ள நிலைமைகளே தற்போதைய அடையாளங்களாகும். 

இந்த எதிர்ப்பில், உலக நாடுகளில் வாழும் மக்கள், மிக அதிகளவில் இணைந்துள்ளமைக்குக் காரணம், அந்தந்த நாடுகளிலும் இதேபோன்ற அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் காணப்படுவதால் ஆகும். அவற்றுக்கு, ஒன்றிணைந்தே முகம் கொடுக்க வேண்டுமென்ற, இணைப்புச் செயற்பாடு தானாகவே எழுந்துள்ளது. இதன் விளைவே, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இப்பாகுபாடுகளின் பாதிப்புகள், மிக அதிகம் என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. இதுவே, உலக மக்கள் அனைவரையும் ஒரே தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள முதலாளித்துவ பொருளாதார சமூக ஒழுங்குமுறை, மனிதர்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ள போதிலும், கொரோனா வைரஸின் காரணமாக, தம்மைத் தாமே வீட்டுக்குள் மாதக் கணக்கில் முடக்கி வைத்தமைக்குக் காரணம், தம்மால் அடுத்தவர் பாதிக்கப்படக்கூடாது என்ற உயரிய சிந்தனையின் விளைவாகும். இவ்வாறு, தம்மை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்த மக்கள், அவற்றை உதறி எறிந்துவிட்டு, ஒன்றிணைவது என்பது, மக்கள் தமது வாழ்வின் அர்த்தங்களை, அதன் அறத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதன் வெளிப்பாடாகும்.

அமெரிக்க அரசியலில், குடியரசுக் கட்சி நிற வேறுபாடுகளை ஆதரிக்கும் கட்சியாகக் காணப்பட்ட போதிலும், இந்த மரணத்தின் பின்னர், அக்கட்சிக்குள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிற் ரொம்னி, ஆர்ப்பாட்டங்களில் நேரடியாகக் கலந்து கொண்டமை, சமீபத்தில், அமெரிக்க உயர்நீதிமன்றம் மாற்றுத் திறனாளிகளின் உரிமை தொடர்பாகச் சாதகமான தீர்ப்பை வழங்கியமை என்பன, மாற்றங்களை நோக்கிய பாதைகளாக உள்ளன.

ஜோர்ஜ் புளொய்ட்டின் கோர மரணம், உலக மக்களின் கவனத்தை, அதாவது மனிதனை மனிதன், அவனது நிறம், மொழி, மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகள், முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற கூட்டு முயற்சியில், உலக மக்கள் இணைந்துள்ளனர்.

மக்கள் மத்தியிலான இத்தகைய எழுச்சியை, கொரோனா வைரஸ் பற்றிய அனுபவங்களின் பின்னணியில் எம்மால் காணமுடிகிறது. உலகத்தில் காணப்படும், இத்தகைய கொடுமை நிறைந்த பாகுபாட்டுச் செயற்பாடுகளை, அனைவரும் இணைந்து மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, தற்போது எழுந்துள்ளது.

இத்தகைய உலக எழுச்சியின் பின்னணியில், இலங்கைச் சம்பவங்கள் மிகவும் பிற்போக்கு நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக, அங்கு எழுந்துள்ள அரசியல் வாதங்கள், ஜோர்ஜ் புளொய்ட்டின் மரணத்தின் பின்னணியில், உலகம் முழுவதிலும் எழுந்துள்ள நிலைமைகளுக்கு எதிராகவே, அவை செல்வதாகத் தெரிகிறது.

இலங்கை, பல்லின மக்கள் வாழும் பன்மைத்துவ நாடு என்பதை, நிராகரித்துச் செல்லும் அரசியல் நடைமுறை, பௌத்தத்தின் பெயரால் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவரின் ஜனநாயக உரிமைகளை, எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் மறுத்துச் செல்வதும், அவற்றை நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் அரச கட்டுமானங்களை மாற்றுவதும் நாடாளுமன்ற ஜனநாயக, அரசமைப்பு அடிப்படையிலான ஆட்சியை பலவீனப்படுத்திச் செல்வதும் உலக அளவில் ஏற்பட்டுள்ள எழுச்சிகளின் பின்னணியில் அவதானிக்க வேண்டியுள்ளது.

நாட்டு மக்களை மொழி, மத அடிப்படையில் கூறுபோட்டு, பிளவுபடுத்திப் பாதுகாப்பு என்ற பெயரில், இராணுவக் கூறுகளை இணைத்துச் செல்வது, மிகவும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். உலக மனித உரிமை அமைப்புகள், தமது இராணுவத்துக்கு எதிராகச் செயற்படுமானால், தாம் அதிலிருந்து விலகத் தயங்க மாட்டோம் என அச்சுறுத்துவது, இலங்கையை உலக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடாகும். 

இங்கு, இலங்கையில் வாழும் மனிதர்களை மொழி, மதம் என்ற பிற்போக்கு நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவதாகும். இதற்கு எதிராகவே, ஜோர்ஜ் புளொய்ட் மரணத்தின் எழுச்சிகள், உணர்த்துகின்றன. 

சிங்கள இராணுவம், சிங்கள பொலிஸ், சிங்கள ஆட்சி என்ற வர்ணனைகள் கடந்தகால அடிமை வியாபாரத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க விளையும் பிற்போக்காளர்களின் சிந்தனைகளை ஒத்ததாகும்.

அமெரிக்காவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் எழுந்துள்ள எழுச்சிகள், மாற்றங்களைக் கோரும் அதேவேளை, கடந்தகால மனித விரோத அடையாளச் சின்னங்களை அகற்றுவதாகவும் மாறியுள்ளன. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் ஆபிரிக்க மக்களை அடிமைகளாக்கி, அவர்களை வர்த்தகப் பொருள்களாக மாற்றி, இலாபம் சம்பாதித்த பலரின் சிலைகளை அகற்றும் போராட்டங்கள், தற்போது ஆரம்பித்துள்ளன. உதாரணமாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னால் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சிலின் சிலை தாக்கப்பட்டுள்ளது. 

வின்சன்ட் சேர்ச்சில், இரண்டாம் உலக மகா யுத்தத்தை வெற்றிக்கு எடுத்துச் சென்றார் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் மனிதர்களை அடிமைகளாக்கி, நடத்திய வியாபாரங்களில் தொடர்புடையவர் என்பதால், அகற்றும்படி போராட்டங்கள் எழுந்துள்ளன. பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் அமைந்துள்ள அவரின் சிலை, தாக்கப்படாமல் மரப் பலகைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சுற்றி அமைக்கப்பட்டுள்ள அப்பலகைகளில், 'இதைத் திறக்காதீர்கள்ளூ இனவாதி உள்ளே உள்ளார்' என வெளியே எழுதப்பட்டுள்ளது. அந்தளவுக்கு, இனவாதத்துக்கு எதிரான உணர்வுகள், உலகெங்கும் அதிகரித்துள்ளன. எனவே, இலங்கை ஆட்சியாளர், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்ற போர்வையில், இராணுவ, இனவாத சக்திகளுக்கு உசுப்பேத்துவது, உலக மாற்றங்களை உணர்ந்து கொள்ள மறுப்பதாகும்.

உலகில் வாழும் மக்களில் பலர், மனிதன் மீதான வேறுபாடுகளை மூலதனமாக்கி நடத்தும் அரசியலுக்கு, எதிராக விழித்தெழுந்துள்ளனர் என்பதை, நினைவூட்டுவது அவசியம். மனித வாழ்வின் அர்த்தங்களை, மக்கள் ஆழமாகப் புரிந்துள்ளமையால், கொடுமையான நோயின் மத்தியிலும் திரண்டுள்ளனர். 

மனித வாழ்வு என்பது, தொற்றுநோயைப் பின்புலமாக்கிய சமூக இடைவெளி பேணல், கைகளை அடிக்கடி கழுவுதல், வீட்டுக்குள் முடங்கியிருத்தல் என்பவைகளால் நிர்ணயிக்கப்படுவதல்ல. நாம் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளை எதிர்த்து, ஓரணியில் இணைந்து இச்சமூக அநீதிக்கும் இராணுவம், பொலிஸ் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கான பொறிமுறைகளை, உலகெங்கும் உருவாக்குவதாகும். நோயின் அச்சத்தால், தனித்து விடப்பட்ட மக்கள், தம் வாழ்வின் அர்த்தங்களை, இக்கால வெளியில் உணர்ந்துள்ளார்கள். அதனால் மாற்றத்தை நோக்கிச் செல்ல விழைகிறார்கள்.           

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .