2025 நவம்பர் 26, புதன்கிழமை

ஊடகங்களை அடக்கும் முயற்சி பலவீனத்தையே காட்டுகிறது

R.Tharaniya   / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமலும் ஜனாதிபதியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின்தும் சலுகைகளை இரத்துச் செய்தும் ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும், தாம் வேறுபட்டவர்கள் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் இது வரை காட்டியுள்ளது.

எனினும், அரசாங்கம் அநாவசியமாக எதிர்க் கட்சிகளுக்கு ஆயுதம் வழங்கியும் வருகிறது.முதலில், தே. ம.ச. அரசாங்கத்தின் முதலாவது சபாநாயகர் அசோக ரங்வல தமக்கு இல்லாத கலாநிதி பட்டத்தை தமது பெயரோடு சேர்த்துப் பாவித்துச் சிக்கிக் கொண்டார்.

அவருக்கு கலாநிதி பட்டம் இருப்பதோ இல்லாததோ பொதுமக்களை பாதிக்கப் போவதில்லை. எனினும், தூய்மையான கட்சி என்ற தேசிய மக்கள் சக்தியின் பிம்பத்தை அந்த விடயம் ஓரளவு பாதித்தது.

அவ்வளவு ஆங்கில மொழித்திறனற்ற கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆங்கிலப் புலமை அவசியமாகும் உலக பொருளாதார கூட்டத்தில் (world economic forum) கலந்து கொண்டு நகைப்புக்குள்ளானார். ஆங்கில அறிவு உள்ளவர்கள் தான் அரசியலில் ஈடுபட வேண்டும் அமைச்சர் பதவிகளை வகிக்க வேண்டும் என்ற நியதி எங்கும் இல்லை தான்.

ஆயினும், சர்வதேச அரங்கொன்றில் மற்றவர்களுடன் சமமாகப் பங்குபற்ற 
தம்மால் முடியாது என்பதை  அவர் அறிந்திருக்க வேண்டும்.தற்போது தேசிய பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்க இரகசிய பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரை இரகசிய பொலிஸார் அழைத்துள்ளமை சர்ச்சையாக மாறியுள்ளது.

அதற்கு முன்னர் இந்தச் செய்தியைப் பற்றி சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். எனவே, அவரது அமைச்சின் முறைப்பாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் பத்திரிகை ஆசிரியரை அழைத்திருக்க வேண்டும்.

மவுபிம ஜனதா பக்ஷய (தாயக மக்கள் கட்சி) என்ற கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட அருண என்ற சிங்கள பத்திரிகையின் அசிரியர் மஹிந்த இலேபெருமவையே பொலிஸார் 
இவ்வாறு அழைத்திருந்தனர். 

இதற்கு முன்னரும் இரகசிய பொலிஸார் மற்றொரு செய்தியைப் பற்றி விசாரணை செய்வதற்காக இலேபெருமவை அழைத்திருந்தனர். அவரும் சென்று வாக்குமூலம் அளித்துவிட்டு வந்திருந்தார்.

இம்முறை சம்பந்தப்பட்ட செய்தி பிழையானதல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் கூறினர். மூத்த ஊடகவியலாளர்கள் இரகசிய பெலிஸ் தலைமையகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று இலேபெருமவை அறிவுறுத்தினர். வேண்டுமென்றால் இரகசிய பொலிஸார் இலேபெருமவின் அலுவலகத்துக்கு வந்து வாக்குமூலம் பெறட்டும் என்றும் 
அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்கு ஒருவர் பிரதேச பாதுகாப்பு கமிட்டியிடம் கடிதம் பெற்று பொலிஸாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே சர்ச்சைக்குரிய செய்தியாகும்.

அவ்வாறு பாதுகாப்பு கமிட்டியிடம் கடிதம் பெற வேண்டும் என்று எவரும் கூறவில்லை என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சில எம்பிக்கள் மறுத்திருந்தனர்.

இது பொய்யான செய்தியாக இருந்தாலும், அது எவ்வகையிலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியல்ல. அரசாங்கத்தைப் பற்றி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் செய்தியுமல்ல. ஏனென்றால், ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் பொலிஸ் சான்றிதழ் அவசியமாகிறது.

இதன் காரணமாக இந்த செய்தியை எவரும் கணக்கிலெடுக்கவில்லை. எனவே, இதைப் பற்றி இரகசியப் பொலிஸில் முறைப்பாடு செய்வதன் மூலம் அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்த முயல்வதாக ஊடகவியலாளர் அமைப்புக்கள் கருதுகின்றன.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பிரதான ஊடகவியலாளர்கள் சங்கங்களான சுதந்திர ஊடக அமைப்பும் இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கமும் அறிக்கை வெளியிட்டு இருந்தன.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் (2021ஆம் ஆண்டு) சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழலொன்றை அம்பலப்படுத்தி செய்தியொன்றை வெளியிட்டமைக்காக இரகசிய பொலிஸார் லங்காதீப பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் சிறி ரணசிங்கவை விசாரிக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றனர்.

அந்த விடயம் தொடர்பாகவும் அப்போதைய அமைச்சர் ஒருவரே இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்ததாகக் கூறப்பட்டது. ஆயினும், அதற்கு எதிராக ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவ்விசாரணையை முன்னெடுத்துச் செல்வதைத் தடுத்தார்.

அரசாங்கங்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படுவது புதிய விடயமல்ல. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஊடக ஒழுக்க நெறிகளைப் பேணி நடக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்துவர்.

அவர்களே எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊடகவியலாளர்களின் உரிமைகளை வலியுறுத்துவதும் சகஜமான விடயமாகும்.அரசாங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இந்த மோதலுக்குச் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் தான் காரணம் என்று கூறுவது பிழையாகும். எந்த சாராரும் மோதலுக்குக் காரணமாகலாம்.

ஊடகவியலாளர்களே பதவியில் இருப்போர் பொதுச் சொத்தை அபகரிப்பதையும் வீண் விரயங்களில் ஈடுபடுவதையும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் அம்பலப்படுத்துகின்றனர். அப்போது ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பாவித்து ஊடகங்களைக் கட்டுப்படுத்த முற்படுவதே இந்த மோதலுக்கு பெரும்பாலும் காரணமாகிறது.

ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் காலத்தில் ஊடகவியலாளர்களான ரிச்சர்ட் டி சொய்ஸா, எச்.ஈ.தயாநந்த, விமல் சுரேந்திர ஆகியோர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் மைல்வாகனம் நிமலராஜன, தர்மரத்தினம் சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வீடு தாக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகிய பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றனர். ஊடகவியலாளர்களான லசந்த விகரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, அற்புதராஜா நடராஜா, ஐயாத்துறை நடராஜா போன்ற பலர் கொல்லப்பட்டனர். உதயன், சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.

இதனையடுத்து, பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியேரின் காலத்தில் அவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறாவிட்டாலும் அவர்கள் ஊடக சுதந்திரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற முயன்றனர். அதில் ஒன்றான நிகழ்நிலை காப்புச் சட்டம் ரணிலின் காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த அரசாங்கங்களின் அவ்வாறான நடவடிக்கைகளோடு ஒப்பிடும்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் குறைகூற முடியாது. ஆயினும், ஊடக சுதந்திரம் என்பது ஒப்பீட்டளவில் பெறக்கூடிய ஒன்றல்ல. அது நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைக்கேற்ப முடிந்த வரை கூடுதலாக மக்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் பொருட்படுத்தவே முடியாத ஒரு செய்திக்காக அமைச்சர்கள் இரகசிய பொலிஸை நாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

அரசாங்கங்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான மோதலை கருத்திற்கொள்ளும்போது, ஊடகங்களும் விமர்சனத்துக்குரியவையாகும். ஊடகங்களும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதை மறுக்க முடியாது. பெரும்பாலான ஊடகங்களும் ஆசிரியர்களும் ஊடக ஆசாரங்களை முடிந்த வரை பேணி நடந்துகொள்ள முயற்சி எடுக்கும் அதேவேளை, சில ஊடகங்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் படி செயற்படுவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. சில ஊடக நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கும்போது, உலகில் அனைத்தும் மோசமானதாகவே தெரிகிறது.

எவ்வாறாயினும், எந்தவொரு ஊடகத்திடமும் பூரண நடுநிலையை எதிர்பார்க்க முடியாது. உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகையின் ஸ்தாபகர் ஹென்றி லூஸிடம் ஒரு முறை ஊடக நடுநிலை பற்றி கேட்கப்பட்டது. “நான் ஒரு புரெஸ்தாந்து மதத்தவன், குடியரசு கட்சிக்காரன், சுதந்திர வியாபாரி. அதாவது நான் இறைவனின் பக்கமும் (ஜனாதிபதி) ஐசன்ஹவரின் பக்கமும் ‘டைம்’ நிறுவனத்தின் பங்குதாரர்களின் பக்கமும் சார்ந்தவன்” என்று அவர் பதிலளித்தார்.

இது சகல ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் பொருத்தமான கூற்றாகும்.அரசாங்கங்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான மோதலை கருத்திற்கொண்டு 1998ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஊடக மாநாடொன்றின்போது, கொழும்பு பிரகடனம் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஊடக நெறிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1990ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. அச்சங்கம் ஊடகவியலாளர்களுக்கான நடைமுறை கோவையொன்றைத் தயாரித்துள்ளது. ஆசிரியர்கள் சங்கமும் ஊடகவியலாளர்கள் சங்கங்களும் ஒன்றிணைந்து இலங்கை பத்திரிகை நிறுவனத்தை உருவாக்கின. அதன் கீழ் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் இதழியல் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊடகங்கள் தவறு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்கள் இரகசிய பொலிஸை நாடத் தேவையில்லை. பேசித் தீர்க்க இந்த முறைப்பாட்டு ஆணைக்குழு இருக்கிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X