2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஊடகத் தணிக்கைக்கான முதற்படியா?

Thipaan   / 2016 மே 05 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலக ஊடக சுதந்திர தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. உலகமெங்கும், ஊடகவியலுக்கான சுதந்திரம் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை முக்கியமானது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும், உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியின் 2016ஆம் ஆண்டுக்கான வெளியீடு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இம்முறை உலகில், செய்திகளுக்கான சுதந்திரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேபோல், ஊடகத் தொழிலுக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தராக்கி சிவராமின் நினைவுதினம், கடந்த 29ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. ஊடக சுதந்திரம் பற்றியும் ஊடகத் தொழிலின் சவால்கள் குறித்தும் விளக்குவதற்கு, அவரின் மரணமே போதுமானது.

இந்நிலையில் தான், இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கான அல்லது கண்காணிப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான சுயாதீன அமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான செய்தியைப் பற்றி ஆராய்வது பொருத்தமானது.

இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு மூலமாக, இலங்கையின் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவ்வாறானதொரு விடயத்தால் நன்மை விளையுமா என்பதையும் அதனை ஆதரிக்க வேண்டுமா என்ற விடயத்தையும் ஆராய வேண்டியுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த அமைப்பானது சுயாதீனமாக இருக்குமெனவும், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராயுமெனவும் அறிவிக்கப்படுகிறது. இலங்கையில் பத்திரிகைகளுக்காகக் காணப்படும் பத்திரிகை முறைப்பாட்டு நிறுவகம் போன்ற ஒன்று என்ற யோசனை தோன்றினாலும், அந்நிறுவகத்தை விட வித்தியாசமாக, அமைக்கப்படவுள்ள அமைப்புக்கு, அதிகாரங்கள் காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பத்திரிகை முறைப்பாட்டு நிறுவகத்தால், பத்திரிகையொன்றில் மாற்றம் செய்யுமாறோ அல்லது ஒரு செய்தி குறித்து விளக்கமளிக்குமாறோ, கட்டாயப்படுத்த முடியாது. மாறாக, அவ்வாறு செய்யுமாறு கோரிக்கை மாத்திரமே விடுக்க முடியும். ஆனால், அமைக்கப்படச் சிந்திக்கப்படும் இலத்திரனியல் கட்டுப்பாட்டு அமைப்புக்கு, இலத்திரனியல் ஊடகமொன்றை, ஒரு விடயத்தை மேற்கொள்ளுமாறு கட்டளையிடும் அதிகாரம் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இது தான், சந்தேகங்களையும் கவலையையும் கவனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கான விளக்கமாக அல்லது காரணமாகச் சொல்லப்படுவது, இலங்கையிலுள்ள இலத்திரனியல் ஊடகங்கள், கட்டுப்பாடின்றி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுகின்றன என்பதோடு, அவை சாதாரண மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதுவும் தான். இந்தக் காரணம் நம்பக்கூடியதொன்றா என்பதைத் தாண்டி, அந்தக் காரணத்தையும் ஆராய்வது பொருத்தமானது. இலங்கை மாத்திரமன்றி உலகம் முழுவதிலும், இலத்திரனியல் ஊடகங்கள் மாத்திரமன்றி அச்சு ஊடகங்களும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் செய்திகளாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உலகில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வளவு அச்சுறுத்தல் காணப்படுகிறதோ, அவ்வளவுக்கு, தவறான ஊடகவியலும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் கூட, அனேகமான ஊடகங்கள், அரசியல் கட்சிகள் சார்பான அல்லது இனக்குழுமம் சார்பான/எதிரான செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளன. 'நடுநிலை' என்பது உண்மையில் சாத்தியமா என்பதைத் தாண்டி, வெளிப்படையாகவே பக்கச்சார்பான செய்திகளை வெளியிடுவதில், ஊடகங்களால் நிச்சயமாகத் தள்ளியிருக்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, கலைஞர் தொலைக்காட்சி, கே டி.வி, சிரிப்பொலி, சண் தொலைக்காட்சி என்றாலோ, தி.மு.க சார்பான செய்திகளே கிடைக்கும். ஜெயா டி.வியில், 'அம்மா' சார்பான செய்திகள். இவ்வாறு, ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்துக்கும் தனித்தனியான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன. இலங்கையில் அவ்வளவு தெளிவான, வெளிப்படையான நிலை இல்லாவிட்டாலும், ஊடகங்களின் பக்கச்சார்பு, நன்றாக அறியப்பட்டது தான்.

ஆனால், பக்கச்சார்பு நிலையை இல்லாது செய்வதற்கு அல்லது அந்நிலையைக் குறைப்பதற்கு, அரசாங்கத்தால் அமைக்கப்படும் 'சுயாதீன' ஊடகக் கண்காணிப்பு அமைப்பொன்று அவசியமானதா என்ற கேள்வி எழுகின்றது.

இதை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம், 'இது, ஐக்கிய இராச்சியத்திலுள்ள முறையை ஒத்தது. அங்கு இவ்வாறானதொரு அமைப்புக் காணப்படும்போது, அதை எதற்காக இலங்கையில் கொண்டுவர முடியாது?' என்பது தான். இவ்வாறானவர்கள் குறிப்பிடும் அமைப்பு, 'தொடர்பாடலுக்கான அலுவலகம்' என்ற பெயரிலுள்ள 'ஒஃப்கொம்' (Ofcom) என்ற சுருக்கிய பெயரில் பரவலாக அறியப்படும் அமைப்பே ஆகும்.  ஒளிபரப்பு, தபால் சேவைகள், தொடர்பாடல்கள், ரேடியோ கற்றைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக இவ்வமைப்புக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் காணப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஆணைக்குழு உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களின் இணைவாக, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. சுயாதீன தொலைக்காட்சி ஆணைக்குழு, 1991ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை காணப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு முதல் ஒஃப்கொம் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்புக்கு எதிரான குரல்கள் இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. 2009ஆம் ஆண்டு அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் டேவிட் கமரோன், ஒ‡ப்கொம் அமைப்பை இல்லாது செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

மறுபுறத்தில், ஐக்கிய இராச்சியத்தில் ஓர் அமைப்பு இருக்கின்ற காரணத்தால், அதை இங்கே நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற தேவை காணப்படவில்லை. இரண்டு நாடுகளினதும் சமூக, அரசியல் வேறுபாடுகள், மிக அதிகமானவை. இலங்கையில் காணப்படும் 'சுயாதீன ஆணைக்குழு'க்கள், அரசியல் தலையீடுகளால் சிக்கிச் சின்னாபின்னாமாகிய வரலாற்றையெல்லாம் அறிந்திருக்கிறோம். தற்போதுள்ள அரசாங்கம், உண்மையிலேயே நல்ல அரசாங்கம் எனவும் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தாக்கங்களைச் செலுத்தாது என்றும் ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அடுத்துவரும் அரசாங்கமும் அவ்வாறே இருக்குமென்பதற்கான உத்தரவாதங்கள் எவையும் உள்ளனவா?அடுத்துவரும் ஜனாதிபதி, தனது அதிகாரங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்துகின்ற ஒருவராக இருந்தால்?

இப்போதிருக்கின்ற அரசாங்கம்கூட, ஊடகங்களின் செயற்பாடுகளில் அவ்வப்போது தலையீடுகளை மேற்கொண்டுதான் வருகிறது. அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் அதனைக் கூற முடியும். ஊடக அமைச்சின் செயலாளரால், 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட 'பணிப்புரை', அடுத்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்படும் தொடர்ச்சியான கருத்துகள்.

அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல், தவறானதென பின்னர் அமைச்சர்கள் கூறிய போதிலும் கூட, அவருக்கெதிராகப் பகிரங்கமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் சார்பாக மன்னிப்புக் கூடக் கோரப்பட்டிருக்கவில்லை. அவரது அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஊடகங்களில் ஒருவிதமான பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தமையும் உண்மை. பிரதமர் மறுபுறத்தில், ஊடகங்கள் பொறுப்பாகச் செயற்படுவதில்லையெனவும், தாம் நினைத்தபடி ஊடகங்கள் செயற்படும் நிலையில், ஊடக சுதந்திரத்தை எவ்வாறு வலியுறுத்துவது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெளியில் அவர், ஊடக சுதந்திரத்துக்கான ஆதரவாளராகக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அண்மைக்கால அவரது கருத்துகள், தான் விரும்பியபடி ஊடகங்களின் செய்தியாக்கல் இடம்பெற வேண்டுமென்பதில் அவர் ஆர்வம் செலுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஊடகங்கள் மீதான இந்த அரசாங்கத்தின் ஒருவகை வெறுப்புணர்வு, சிறிது ஆச்சரியமளிக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்கடித்து, தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவியில் வருவதற்கு, ஊடகங்களைச் சரியாகக் கையாண்ட அவர்களது திறன், முக்கியமானது. மக்கள் தொடர்பாடலில் அவர்களது சிறப்பான திறமை காரணமாகவே, ஊடகங்களைச் சரியாகக் கையாண்டதோடு, அப்போதைய அரச ஊடகங்களில், பொது எதிரணி மீது காணப்பட்ட சேறுபூசல் நடவடிக்கைகளையும் தாண்டி, வெற்றிகொண்ட குழுவினர் இவர்கள்.

எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்துத் தரப்பினருமே, ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முயல்வது வழக்கமானது என்ற வகையில், இந்த அரசாங்கமும் அவ்வழியிலேயே சிந்திக்கிறதா என்ற கேள்வி தான் எழுகிறது. ஜனாதிபதி கூட, தனது மகன் சம்பந்தமான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாமென ஊடகங்களை வலியுறுத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையைப் பொறுத்தவரையில், இலத்திரனியல் ஊடகங்களில் காணப்படும் இனவாதத் தன்மை, இலகுவாகப் பிரிவினையைத் தூண்டும் தன்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவது தவறானதன்று. மாறாக, அவற்றைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில், முழு ஊடக சுதந்திரமுமே கட்டுப்படுத்தப்படும் ஆபத்து இருப்பது தான் கவனிக்க வேண்டியது. இலத்திரனியல் ஊடகங்களின் குறைகளைத் தீர்க்க விரும்பினால், அரசாங்கம் தலையிடுவதற்கு முன்பாக, பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு போன்றதொரு சுயாதீன அமைப்பை, இலத்திரனியல் ஊடகங்களே ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் மூலம் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவது தான் சாலப் பொருத்தமாக அமையும்.

உலக ஊடக சுதந்திரச் சுட்டியில், கடந்தாண்டில் மாத்திரம் இலங்கை, 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்துக்கு வந்துள்ள நிலையில், அதைத் திரும்பவும் பின்தள்ளுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாகும். மாறாக, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்படுதல், ஊடகத் தணிக்கைக்கான முதற்படியாகவே அமையுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .