2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 19 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் வரலாற்றில், மிகப்பெரிய சூழலியல் அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. வழமைபோல, அதை ஒரு செய்தியாக எம்மால் கடந்து போக முடிந்திருக்கிறது. இதை நினைக்கின்ற போது, ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டேன். இந்த அனர்த்தத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும், இந்த உணர்வு நிச்சயம் வந்திருக்கும். 

கப்பல் அனர்த்தத்தின் ஆபத்து அத்தகையது; அதை எளிமையாக, இன்னொரு செய்தி போல நோக்கிய, இன்னமும் நோக்குகின்ற எமது சமூகத்தை என்னவென்று சொல்வது. பேச வேண்டிய இரண்டு முக்கியமான விடயங்களை, ஊடகங்களும் மக்களும் அமைதியாகக் கடந்து போகிறார்கள். 

முதலாவது, இந்தப் பெருந்தொற்றைக் கையாளும் அரசாங்கத்தின் செயன்முறையும் தடுப்பூசி போடுவதில் நடக்கும் தகிடுதித்தங்களும் ஆகும். இரண்டாவது, எமது கடல்வளத்தையும் வாழ்வையும் சீரழித்துள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள்  அனர்த்தம் ஆகும். 

இந்தப் பெருந்தொற்றில் இருந்து, இன்னும் சிலகாலத்தில் மீண்டுவிடலாம். ஆனால், எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. இது சார்ந்த நெருக்கடிகள் ஆழமானவை. இவை வெறுமனே, இந்தக் கப்பல் அனர்த்தத்துடன் மட்டும் முடிவடைந்து விடுவதில்லை. இதை நாம் உணராதவரை, எமக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்  ஆபத்துகள் காத்துக் கிடக்கின்றன. 

இந்த அனர்த்தம் குறித்து உரையாடிய வேளையில், பலரின் கவலை “கொஞ்ச நாளைக்கு மீன் தின்னமுடியாது” என்றவாறாக இருந்தது. இன்னும் கொஞ்சப்பேர், “இது நடந்தது, கொழும்புக் கடலில்; அதனால், யாழ்ப்பாணத்தில் பிடிக்கின்ற மீன்களைச் சாப்பிடலாம்” என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள். 

ஒருபுறம், இந்த அனர்த்தத்தை வெறுமனே மீன் தின்னும் பிரச்சினையாக மட்டும் பார்க்கப் பழகியிருக்கிறோம். இலங்கையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தபட்ட இரண்டு தசாப்தங்களில், இலங்கையர்கள் நுகர்வு மனநிலைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். அனைத்தையும் நுகர்வு நோக்கில், தன்னலப் பார்வையில் அவதானிக்கும், முடிவெடுக்கும் ஒரு சமூகமாக மாற்றமடைந்து விட்டார்கள். இதன் மோசமான விளைவுகளில் ஒன்றுதான், இந்த அனர்த்தத்தை அலட்சியமாகக் கடந்து செல்லும் மனநிலை.  

இப்போது அக்கறை, இந்த அனர்த்தத்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பது பற்றியது. யாருக்குக் கிடைக்கும், எவ்வாறு கிடைக்கும், என்ன வகையான இலாபம் என்பன, நீண்ட உரையாடலுக்கு உரியன. ஆனால், இந்த இலாபம் தொடர்பான சிந்தனைகள் எதுவும், அனர்த்தத்தின் பாதிப்புகள் பற்றியதாவோ, நீண்டகாலச் சூழலியல் விளைவுகள் பற்றியதாகவோ இல்லை.  

இதன் பின்னணியில், நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், என்றென்றைக்கும் எமக்குக் கிடைக்கப் போவதில்லை. சூழலியல் சார்ந்து அக்கறையற்ற எங்களது சமூகம், இதற்கான பதில்களை வேண்டப்போவதுமில்லை; அதற்காகப் போராடப் போவதுமில்லை. 

அனர்த்தம் நிகழ்ந்து சில நாள்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூகவலைத்தளப் பதிவுகளை இட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கும் சமூகத்திடம் எதிர்பார்க்க அதிகம் இல்லை. இந்த அனர்த்தம் குறித்த அனைத்துத் தரப்புகளின் மௌனம், ஒரு மிகப்பெரிய சமூகக் குறிகாட்டி. 

அரசியல்ரீதியாகக் குறித்த நிகழ்வுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், பழியை இன்னொருவர் தலையில் கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கும் ஓர்  ஆணைக்குழுவை உருவாக்கிக் காலம் கடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அரசாங்கமும் அரச அதிகாரிகளும் குறித்த விடயத்தைத் திசைதிருப்புவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். எதிர்கட்சிகளில் ஜே.வி.பி தவிர்ந்த ஏனையவற்றின் அமைதி வியப்பளிக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

அவர்களின் மௌனம் குறித்து, இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த விடயத்தைப் பேசாமல் விடுவது, எல்லோருக்கும் வாய்ப்பானது. ஒருபுறம் ‘இதைப் பேசி அரசை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்' என்று அவர்கள் நினைக்கக்கூடும். மறுபுறம், ‘இது நடந்தது, எங்கள் வடக்குக் கிழக்கில் அல்ல; எனவே, நாங்கள் ஏன் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' என்ற கருத்துகள் வேறு. 

முதலில், இனத்துவ அடையாளங்களுக்குள் நின்றுகொண்டு, சூழலியல் பிரச்சினைகளை அணுகுவதை நிறுத்த வேண்டும். சூழலியல் சவால்கள், நம் அனைவருக்குமானவை. அதை, வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரித்து நோக்குவதில் பயனேதும் இல்லை. 

வானிலை மாற்றம் பிரதேசம் பார்ப்பதில்லை; சாதி பார்ப்பதில்லை; தமிழனா, சிங்களவனா, முஸ்லிமா என்று பார்ப்பதில்லை. இலங்கையை சுனாமி தாக்கிய காலத்தை நினைத்துப் பாருங்கள். இப்போது நாம் எதிர்நோக்கும் சூழலியல் நெருக்கடிகள், முழு இலங்கையருக்குமானது. 

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம், சூழலியல் குறித்த எமது அக்கறையின்மையையும் பொறுப்பின்மையையும் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. ‘இது ஒரு சூழலியல் அனர்த்தம்’ என்ற பரிமாணத்தைத் தாண்டி, இதுவோர் அரசியல் அனர்த்தம், சமூக அனர்த்தம். இது குறித்து, நாம் பேசியாக வேண்டும். 

முதலில், இந்த அனர்த்தம் தவிர்த்திருக்கக் கூடியதா என்ற வினாவுக்கு வருவோம். இந்த அனர்த்தம், நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடியது. இந்தக் கப்பலின் இறுதி இரண்டு வாரச் செயற்பாடுகள் பற்றித் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், இதை நாம் உறுதியாகச் சொல்லவியலும். 

எனவே, இதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் பலர். ஆனால், இதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. பழியை இலகுவாக இயற்கையின் மீதும் ‘எதிர்பாராத விபத்து' என்ற சொற்பதத்தின் மீதும் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். 

கப்பல் தீப்பற்றி எரிந்த ஆரம்ப கட்டங்களில், அத்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அது பரவுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இடமளித்தனர் என்ற குற்றச்சாட்டை, கப்பலின் தலைமை மாலுமி நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். 

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்த இலங்கை, இந்தியாவின் உதவியைக் கோரியிருக்கிறது. கப்பல் போக்குவரத்தில், தென்னாசியாவின் மையமாக விளங்க எதிர்பார்த்திருக்கின்ற கொழும்புத் துறைமுகத்தால், இவ்வாறான கப்பல்கள் தீப்பிடிக்கும் போது, தீயைக் கட்டுப்படுத்தும் வசதிகள் இல்லை என்பது புலனாகிறது. 

கொழும்புத் துறைமுகத்தில் தரிப்பதற்காகக் கப்பல் நங்கூரமிட்டிருந்த பகுதி, நீர்கொழும்புக் கடற்பரப்பில் உள்ள ஆழமற்ற கண்டமேடைப்பகுதி. இது வேகமான கடல்நீரோட்டங்களைக் கொண்ட பகுதியும் கூட. இப்பகுதி, மீன்வளங்களின் முக்கியமான புள்ளி. இப்பகுதி 21 மீற்றர் மட்டுமே ஆழமான கடற்பரப்பு. கப்பல் 21 மீற்றரை விட அதிகமானது. இதனாலேயே கப்பல் மூழ்காமல் இருக்கிறது. கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருக்கின்ற கப்பலில் ஏற்கெனவே ஒருமுறை தீப்பிடித்திருக்கின்றது என்பதை அறிந்தும் அதிகாரிகள், இவ்வாறு கடல்வளத்துக்கு முக்கியமான பகுதியில் கப்பலை நங்கூரமிட அனுமதித்து இருக்கிறார்கள். 

குறித்த கப்பலில் 78 மெற்றிக் தொன் அளவிலான பிளாஸ்டிக் தட்டுகள் (plastic pallets) இருந்திருக்கின்றன. பிளாஸ்ரிக் உயிரியல் ரீதியாக அழிவடையாதவை (Non-bio-degradable). இவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு கடலில் இருக்கும். நீண்ட காலம் நீரில் இருக்கும் போது, இவை நச்சுப்பொருட்களை உறிஞ்சி வைத்திருக்கும். கப்பலில் இருந்து வெளியாகியுள்ள ஏனைய நச்சுப் பதார்தங்களையும் இவை உறிஞ்சியிருக்கும். இதை மீன்கள் உட்கொண்டு, உணவுச்சங்கியிலில் இந்தப் பிளாஸ்டிக்கையும் அது உறிஞ்சி வைத்திருக்கும் நச்சுப் பொருட்களையும் சேர்க்கும். இதனால், இதன் ஆபத்துகளை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நாம் அனுபவிக்க நேரும். 

இந்தப் பிளாஸ்டிக்குகள் இலங்கைக்கு மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள ஏனைய நாடுகளையும் சென்றடையும். கடலின் நீரோட்டங்கள் இதனை இலகுவாகச் சாத்தியப்படுத்தும். இப்போது, இலங்கைக் கடற்பரப்பில் இறந்து கரையொதிங்கியுள்ள ஆமைகள், மீன்கள், டொல்பின்கள் உட்பட்ட பல கடல்வாழ் உயிரினங்கள், பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மையால் உயிரிழக்கவில்லை. மாறாக, இந்தப் பிளாஸ்டிக்குகள் அவ்வுயிரினங்களின் உணவுக்கால்வாயை அடைத்தமையால் உயிரிழந்துள்ளன. அல்லது கப்பலில் இருந்து வெளியான இரசாயன திரவியங்களிகன் பாதிப்பால் இறந்துள்ளன.  

பிளாஸ்டிக் தட்டுகள், இக்கப்பலால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமே. இக்கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனத் திரவங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. இவ்விடத்தில், இலங்கையர்களின் சாதனையை நினைவுகூறல் வேண்டும். சிறிய தீவாகஇருக்கின்ற போதும், உலகிலேயே ஐந்தாவது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்களைத் தன் கடலிலே கொண்ட நாடென்ற பெருமை எமக்குரியது?

இவையனைத்தும் ஒரே திசையில், ஒரே கேள்வியையே எழுப்புகின்றன. இலங்கையர்களாகிய நாம், நமது சூழல் குறித்து எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறோம். சாதாரண மனிதர் தொட்டு, நிர்வாகிகள், அரச அலுவலர்கள், அரசியல்வாதிகள் வரை நம் அனைவரதும் அக்கறை இன்மைக்கு, நாம் கொடுத்த மிகப்பெரிய விலை இது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X