2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.எம்.எவ் கடன்: நம்பிக்கையைக் கழுவேற்றல்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒருவழி, ‘ஐ.எம்.எவ்’ என்று அறியப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவதே என்று, எல்லோரும் கூறுகிறார்கள். அரசியல்வாதிகள் முதற்கொண்டு பொருளியல் அறிஞர்கள் வரை, அனைவரினதும் இறுதிப் போக்கிடமாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே வழியாக இருக்கிறது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வேர்கள் ஆழமானவை. அது இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. அது குறித்து யாரும் பேசுவதில்லை. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வகையான தாக்கங்களை மூன்றாமுலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் யாரும் பேசுவதில்லை. இவை இரண்டும் பேசப்பட வேண்டியவை. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஐ.எம்.எவ் கடன், ஒரு தற்காலிகத் தீர்வேயன்றி நீண்டகாலத் தீர்வல்ல. அதேவேளை, அந்தக் குறுகியகாலத் தீர்வும், எஞ்சியுள்ள சமூகப் பாதுகாப்புகளையும் முற்றாகப் பறிக்க வல்லது. இது குறித்து யாரும் வாய் திறப்பதில்லை. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, ஒரு சமூக நெருக்கடியும் கூட! அதன் சமூகப் பெறுமானங்கள் பேசப்படுவதில்லை. மாறாக, அமெரிக்க டொலரின் விலையே, இலங்கையின் பொருளாதாரத்தின் குறிகாட்டி என்றவாறாகப் பார்வைகள் சுருங்கியுள்ளன. 

இலங்கையின் பொருளாதாரம் தன்னிறைவான தேசிய பொருளாதாரமல்ல என்பது, அதன் பெரிய கோளாறு. ஏற்றுமதியை நோக்கி அதை நகர்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1978ஆம் ஆண்டு முதல், நாட்டின் உழைப்புச் சக்தியில் கணிசமான பகுதி, நேரடியாக (முக்கியமாக மத்திய கிழக்குக்கு) ஏற்றுமதியாகிறது. அல்லது, சுதந்திர வர்த்தக வலயங்கள் மூலம், அந்நிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலைபோகிறது. அதனால் நாட்டின் தொழில் உற்பத்திகள் நலிந்துள்ளன. 

உழைப்பின் ஏற்றுமதி வருமானம், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பலதையும் அவசியம் குறைந்த பல நுகர்வுப் பண்டங்களையும் இறக்குமதி செய்ய உதவுகிறது. நீண்ட காலத்தில், இறக்குமதிக்கு ஈடு செய்ய உறுதியான சந்தைப் பெறுமானமுள்ள ஏற்றுமதிகள் தேவை. ஆனால், முற்றிலும் அல்லது பெரும்பாலும் ஏற்றுமதியில் தங்கியுள்ள சிறிய பொருளாதாரங்கள் உறுதி குறைந்தவையும் அந்நிய நெருக்குவாரங்களுக்கு எளிதில் உட்படக் கூடியனவுமாகும். 

பிரித்தானிய கொலனித்துவம், இலங்கையை ஒரு தோட்டப் பயிர்ப் பொருளாதாரமாக விருத்தி செய்தது. தோட்டப் பயிர்ச் செய்கையைச் சார்ந்து தொடங்கிய இலங்கையின் தொழிற்றுறை தொடர்ந்தும் அதைச் சார்ந்தே வளர்ந்தது. 

பின்னர், நுகர்வுப் பொருள் உற்பத்தி சிறிது வளர்ந்தாலும் பொருளாதாரச் சுயாதீனம் பற்றிய நோக்கு பலவீனமானது. தோட்டப் பயிர்களின் உலகச் சந்தை விலைகள் போல, சகல மூலவளங்களினதும் முன்னாள் கொலனிகளின் உற்பத்திகளான அடிப்படைப் பண்டங்களினதும் விலைகள் அடிப்படையில், ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. 

இலங்கையின் தோட்டப் பயிர் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பகுதி, தரகர்களிடம் போனது. எனவே, தேசியமயம் மட்டுமே தோட்டத் துறையை அந்நியக் கிடுக்கிப் பிடியிலிருந்து மீட்கப் போதவில்லை. எனினும், இலங்கையில் 1956க்குப் பின்னர், குறிப்பாக 1960க்குப் பின், இலங்கை தொழிற்றுறையில் ஏற்பட்ட சில முக்கிய வளர்ச்சிகள், முழுமையானதொரு தேசிய பொருளாதாரத் திட்டத்தின் பகுதிகளாகவில்லை. எனவே, 1970களில் உலகச் சந்தையில் எண்ணெய் விலையின் கடும் உயர்வும் அக்காலத்தில் வரட்சி காரணமான உணவுத் தட்டுப்பாடும் மக்களின் (குறிப்பாக நகர மக்களின்) வாழ்க்கையைக் கடினமாக்கின.

அந்த விரக்தியைப் பயன்படுத்தி, பண்டங்களின் தட்டுப்பாட்டைப் போக்குவதாக (வாரத்துக்கு எட்டு கிலோகிராம் தானியம் வழங்குவதாக) உறுதியளித்து, எக்கச்சக்கமான பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்தன அரசாங்கம், திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிவித்து, கட்டுப்பாடற்ற இறக்குமதியையும் அந்நிய முதலீட்டையும் இயலுமாக்கி, நாட்டைப் பெரும் கடனாளியாக்கியது. 

1978ஆம் ஆண்டு, நடைமுறைக்கு வந்த திறந்த பொருளாதாரத்தின் முக்கிய தாக்கங்களில் ஒன்று, நுகர்வுப் பொருளாதாரம். மக்களின் நுகர்வு மட்டம், வெகுவாக வளர்ந்ததோடு நுகர்வின் தன்மையும் மிக மாறியது.

 உணவு, உடை, பொழுதுபோக்கு, போக்குவரத்து, அன்றாடப் பாவனைப் பொருட்கள் என எதை நோக்கினும், அத்தியாவசியத்தின் இடத்தை ஆடம்பர நுகர்வு பற்றியுள்ளது. ஆடம்பர நுகர்பொருட்களில் பெரும் பகுதி இறக்குமதியாவன. அதைவிட, மின்சாரப் பாவனை, போக்குவரத்து, எரிபொருள் பாவனை என்பன, கடந்த மூன்று தசாப்தங்களில் 10 மடங்குக்கும் மேல் பெருகின. இவற்றுக்கு வேண்டிய அந்நியச் செலவாணி எங்கிருந்து வருகிறது? 

நாட்டின் பொருளாதாரத்துக்கும் சமூக நலனுக்கும் பயன்படவேண்டிய உழைப்பின் கணிசமான பகுதி, நேரடி உழைப்பாகப் புலம்பெயருகிறது. இன்னொரு பகுதி, திறந்த பொருளாதார வலயங்களில், மலிவான கூலிக்கு அந்நியக் கம்பனிகளுக்கு விலைபோகிறது. இவ்வாறு, கூலி உழைப்பை ஏற்றுமதிசெய்த சில நாடுகள், தமது சொந்த உற்பத்தித் தளங்களையும் கட்டியெழுப்பின. இங்கு அவ்வாறும் நிகழவில்லை. 

திறந்த பொருளாதாரமும் உழைப்பின் ஏற்றுமதியால் கிட்டிய பணப் புழக்கமும் நாட்டில் நுகர்வுப் பழக்கத்தை வலுப்படுத்தின. நுகர்வோடு ஒட்டிய கழிவுப்பொருள் பெருக்கம், சுற்றாடலை மாசுபடுத்தி அதன் பயனான மேலதிக நுகர்வுக்கு வழிகோலியது. எந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், உள்நாட்டில் வளங்களைத் தேடிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அந்நிய முதலீடுகளையும் கடனையும் நாடும் நிலையில் இலங்கை உள்ளது.  

பொருளாதார விருத்தி பற்றிய நமது பார்வை தவறானது. வானுயரும் கட்டடங்களும் விசாலமான விரைவு நெடுஞ்சாலைகளும் பொருளாதாரச் சுமைகளாகும் அளவுக்குப் பொருளாதார விருத்தியை வழங்க மாட்டா. தனியார் மருத்துவத் துறையின் வீக்கமும் தனியார் கல்வியின் கட்டுப்பாடற்ற பரவலும் பொருளாதார வளர்ச்சியாகா; அவை, உண்மையில் சமூகக் கேடானவை. 

நுகர்வு, நமது சூழலை மாசுபடுத்தி, மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்களால், இளவயதிலேயே சுவாச, இருதய நோய்கள், நீரிழிவு போன்றன வருகின்றன. இன்று, கொரோனா மிகப்பெரிய வியாபாரமாகி உள்ளது. நோய் குறித்த அச்சம், அதை மிக இலகுவில் சாத்தியமாக்குகிறது. 

நாணயச் சந்தையில் இலங்கை ரூபாயின் பெறுமதி, தொடர்ச்சியாக இறங்கி வருகிறது. அதன் பெறுமதியை மீட்க இயலாவிடினும், சரிவையாவது தடுக்க என்ன செய்வதெனத் தெரியவில்லை. எனவே, பலரும் ஐ.எம்.எவ்விடம் கடன் வாங்கலாம் என்கிறார்கள். ஆட்சியாளர்களோ, தத்தமது தலைகளை விட, மற்ற எவர் தலைமீது பழியைச் சுமத்தலாமென்று பார்க்கிறார்கள். 

இலங்கையின் நாணய நெருக்கடிக்கு, உடனடிப் புறக் காரணங்கள் வலுவானவை. ஆனால், அகக் காரணங்கள் அடிப்படையானவை. இருந்தபோதிலும்,  புறக்காரணிகள் பேசப்படும் அளவுக்கு, அகக் காரணிகள் பேசப்படுவதில்லை.  

மத்திய வங்கி குறுக்கிட்டு சரிவைத் தடுக்க, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து கணிசமான தொகையை, நாணயச் சந்தைக்குள் அனுப்ப வேண்டும். எதிர்பாராத நாணய நெருக்கடியின் போதோ, குறுகியகாலப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கவோ அது உதவும். 

பல நாடுகளில், பல்வேறு சூழல்களில் அவ்வாறு நடந்துள்ளது. அது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வல்ல. அந்நியச் செலவாணிக் கையிருப்பைப் பேண, ஏற்றுமதிகள் உயர்வதும் இறக்குமதிகள் தாழ்வதும் தேவை. இருக்கும் அந்நியச் செலவாணிக் கையிருப்பில் பெரும் பகுதி, அந்நியக் கடன்களால் கிடைத்தது. கடன்களில் பெரும் பகுதி, மேற்குலக நிதி நிறுவனங்களுக்கு உட்பட்டவை. 

கடனின் அளவு குறையாவிடின், அதன் வட்டியும் அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் குறைக்கும். அதைச் சமாளிக்க அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் நாட்டின் ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’க்குப் பகையானவை. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அதற்கு உடன்படா. 

அத்துடன், இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை வகுப்பதிலும் வரவுசெலவுத் திட்டத்தை வரைவதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு வலியது. இதுவே, நாட்டின் உண்மையான கடன் பொறி. இதன் பின்னணியிலேயே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம், ஓர் உதவி அமைப்போ, மனிதாபிமான அமைப்போ அல்ல. ஒரு நாட்டை அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து காக்கும் ‘நல்ல நோக்கத்துக்காக’ அவ்வமைப்பு கடன் வழங்குவதில்லை. இந்த உண்மையை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 

அவ்வமைப்பிடம் கடன்பெற்று, மேலும் கடனாளியாகிய நாடுகளின் பட்டியல் மிகவும் நீண்டது. இங்கு நாம் இரண்டு விடயங்களை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. 

முதலாவது, கடன் என்றால் என்ன? இரண்டாவது, சர்வதேச நாணய நிதியம் ஏன் கடன் வழங்குகிறது? இவ்விரு வினாக்களுக்கான பதில்கள் ஐ.எம்.எவ் கடனின் ஆபத்துகளை விளக்கப் போதுமானவை. இவை குறித்து, அடுத்த வாரம் பார்க்கலாம்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .