2021 மே 06, வியாழக்கிழமை

ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 09 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி - 03]

எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தெரிவு, வேட்புமனுத் தாக்கல் என்பவற்றுக்குக் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பமாகத் தொடங்கி இருக்கின்றன.   

தமிழர்களைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தல் முக்கியமானதொன்றாக அமையவிருக்கிறது. 

தமிழ் மக்களின் வாக்குவங்கி, தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும் வரையறுக்கப்படப் போகிறது. தமிழரசுக் கட்சி மீதான, கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயும் வௌியேயும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தமிழர் வாக்குகளின் பெரும்பங்கை தமிழரசுக் கட்சி பெற்றிருக்கிறது.  

இதுவே, தமிழரசுக் கட்சியினர் தமக்கெதிரான அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கப் பயன்படுத்தும் ஆயுதமாகும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான கொள்கை, சித்தாந்த ரீதியிலான விமர்சனங்கள் எவ்வாறு அமைந்தாலும், இறுதியில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு, அவர்களுக்குக் கிடைக்கும் போது, அந்த விமர்சனங்கள், அவை எவ்வளவு உண்மையாக இருந்தாலும், யதார்த்தத்தில் வலுவற்றதாகி விடுகின்றன.   

“எம்மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் எமக்கே வாக்களித்து இருக்கிறார்கள்; எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் அங்கிகாரம் உண்டு” என்று, தமிழரசுக் கட்சி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்.   

ஆகவே, தமிழ் மக்களின் வாக்குகளில் பெருமளவைத் தமிழரசுக் கட்சி பெறும்வரை, தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காகத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்கள் அங்கிகாரம் அளித்ததாகவே யதார்த்தத்தில் அர்த்தப்படும்.  

ஆகவே, தாம் தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பான்மையளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வரை, எதுவித விமர்சனங்களையும் மாற்றுக் கட்சிகளின் சாடல்களையும் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்பது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பின், தாம் தமிழ் மக்களின் பெயரால் எதையும் செய்யலாம், அதைத் தாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் நியாயப்படுத்தலாம் என்பதையும் தமிழரசுக் கட்சியும் அதன் தலைமைகளும் நன்கே உணர்ந்துள்ளன.   

ஆகவேதான், இம்முறை வாக்கு வேட்டையை மய்யப்படுத்திய வேட்பாளர்களை, அவர்களது அரசியல் அனுபவம், தமிழ்த் தேசிய பற்று, உணர்வு, விசுவாசம் என்பவற்றைத் தாண்டி, அவர்கள் வாக்குகளைக் கட்சிக்குக் கொண்டுவருவார்களா என்ற நோக்கில் களமிறக்க இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், தமிழரசுக் கட்சி மீதும், அதன் தேர்தல்க் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும், கடுமையான விமர்சனங்களையும் சாடல்களையும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன்வைக்கும் தரப்புகளுக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும்.   

இதுவரை, அவர்கள் முன்வைத்த விமர்சனங்களின் நியாயத் தன்மை எவ்வாறு இருந்தாலும், அதை மக்கள் ஆதரவால் வலுப்படுத்த அவர்களால் முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களுக்கான மக்கள் ஆதரவு, தேர்தல் முடிவுகளின் படி மிகக் குறைவானதாகவே இருந்திருக்கிறது.   

ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்து இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரத்தைவிட, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிமுகம், இந்தத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.   

ஆனால், தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக வரவிளையும் இந்தத் தமிழ்த் தேசிய மாற்றுச் சக்திகளிடத்தில் காணப்படும் பெருங்குறைபாடு, அவர்களிடத்தில் ஒற்றுமை இன்மையாகும்.  

இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணிக்கு எதிராக, தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அமைப்புகளாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அமைகிறது.   

இந்த இருதரப்புகளும் தமிழரசுக் கட்சி மீது முன்வைக்கும் விமர்சனங்கள், ஒரே மாதிரியானவையே; இந்த இருதரப்பும் முன்வைக்கும் கொள்கையும், தமிழ்த் தேசியவாதமும் ஒரேமாதிரியானவை ஆகும்.   

ஆகவே, இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணைவதில் கொள்கை ரீதியிலான தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணையும் போது, அவர்களது வாக்குகள் பிளவடையாது. அதன் மூலம், தமிழரசுக் கட்சிக்கு எதிரான, வலுவான மாற்றாக உருவாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.   

ஆனால், இந்த இரண்டு தரப்பும் கூட, ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்டு நிற்பதுதான், தமிழ்த் தேசியத்தின் பெரும் துரதிர்ஷ்டம். தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கஜேந்திகுமார் பொன்னம்பலத்தாலும் நீதியரசர் விக்னேஸ்வரனாலும் ஏன் கைகோர்க்க முடியவில்லை என்ற கேள்வி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைவர் மனதிலும் எழுகின்ற நியாயமான கேள்வியாகும்.  

இதற்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் பதில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில், தமது கட்சி இணைவதை, இந்தியா விரும்பவில்லை... கூட்டு என்ற பெயரில், இந்திய பாதுகாப்புப் படை, இலங்கையில் இருந்தபோது, அதற்கு ஓர் ஒட்டுக்குழுவாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் ஓர் உறுப்பினராகத் தான் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார். இந்த முயற்சிகள் அனைத்துமே, வேறு தரப்பின் நலன்களைக் கருத்திற்கொண்டு இடம்பெறுகின்றன. இது மக்களின் நலன்களுக்கானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைக்கக்கூடிய வாக்கு வங்கியை உடைக்க, மக்களைக் குழப்பும் நோக்கத்துடன், அவர்கள் செயற்படுகின்றார்கள்” என்பதாக அமைகிறது.  

ஈ.பி.ஆர்.எல்.எப் வரலாற்றில், படுகொலைகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தது என்ற குற்றச்சாட்டு தற்போதும் காணப்படுகிறது. ‘மண்டையன் குழு’ கொலை செய்த தமிழ் இளைஞர்கள், எத்தனை என்றெல்லாம் யோசித்திருந்தால், தமிழ்த் தேசிய அரசியலில் எந்தவொரு ஜனநாயக வழி நின்ற கட்சியும் எந்தவொரு முன்னாள் ஆயுதக் குழுவுடனும் கூட்டணி அமைக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.   

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஜனநாயக வழி நிற்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களெல்லாம், ஆயுத வன்முறையில் ஈடுபட்டவைகள்தான். அதன் நியாய- அநியாயங்கள் ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் சேர, இன்று கஜேந்திரகுமார் மறுப்பதன் தாற்பரியம் புரிந்துகொள்ளச் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.   

ஆனால், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் தாம் இணைவதை, இந்தியா விரும்பவில்லை என்ற கஜேந்திரகுமாரின் கருத்து, இங்கு ஊன்றிக் கவனிக்கத்தக்கது.  

இந்தியாவுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான உறவு, இந்தியாவுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையிலான உறவைப் போன்றது எனலாம்.   இந்தியாவின் முக்கியத்துவத்தை மற்றையவரும், மற்றையவரின் முக்கியத்துவத்தை இந்தியாவும் அறிந்திருந்தாலும் இருதரப்புகளிடையே நம்பிக்கையீனமும் சந்தேகப் பார்வையும் தொடர்ந்து இருந்துகொண்டு வந்தது.   

இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத தமிழ் இளைஞர் விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் இருந்ததைப் போலவே, இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத அரசியல் தலைவராக கஜேந்திரகுமார் இருக்கிறார்.   

இலங்கையின் ஏனைய தமிழ்க் கட்சிகள், தலைமைகள் எல்லாம் ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இந்தியாவின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒத்திசைந்து செல்லும் போது, இந்தியாவின் சொல்கேட்கும் பிள்ளையாக கஜேந்திரகுமார் இருக்காதுபோனதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர் விலகுவதற்கும் வழிசமைத்தது.   

பத்மினி சிதம்பரநாதனுக்கும் செல்வராசா கஜேந்திரனுக்கும் ஆசனம் தரவில்லை என்பதால்த்தான் கஜேந்திரகுமார் வௌியேறினார் என்று கஜேந்திரகுமாரின் வௌியேற்றத்தை ஓர் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினையாக மட்டும் காட்டுபவர்கள், பத்மினியும் கஜேந்திரனும் ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (sitting MPs). அவர்களுக்குத் தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்க மறுத்தது ஏன் என்று சொல்வதில்லை.  

அதன் பின்னாலுள்ள சூழ்ச்சி, இந்தியாவினுடையதே என்பது, கடந்த ஒரு தசாப்த காலமாகக் கஜேந்திரகுமார் கூறி வருகின்ற கருத்து.  

மறுபுறத்தில், நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டவர் என்பது, அவரது இந்திய விஜயங்கள், இந்தியா பற்றிய அணுகுமுறை என்பவற்றினூடாகத் தௌிவாக உணரக்கூடியதாக உள்ளது. அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கான நியாயங்கள், நிறையவே இருந்தாலும் அதை அவர் தவிர்த்தமை, தமிழ் மக்கள் மனதில் பல கேள்விகளை நிச்சயம் எழுப்புவதாகவே இருக்கிறது.   

ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான கஜேந்திரகுமாரின் வெறுப்பு மட்டுமே, இந்த இருதரப்பும் இணைவதைத் தடுக்கிறது என்றால், அதைக் கஜேந்திரகுமார் விட்டுக்கொடுக்கலாம்; ஆனால், அதையும் தாண்டி, இந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்த, நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்பும் கஜேந்திரகுமார் தரப்பும் விரும்பவில்லை என்றால், அதற்கான காரணங்களை அவர்கள் தமிழ் மக்களுக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.  

மேலும், தமிழ்த் தலைமைகள் இனியும் தமிழ் மக்கள் முன் ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்காது, தமது நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கவும் மேலைத்தேய பாணியில் மாற்றுக் கருத்துடைய தலைமைகளுடன் நேரடியான விவாதத்தில் ஈடுபடவும் முன்வரவேண்டும்.   

அத்தகைய விவாதங்கள் இடம்பெறும்போதுதான், இன்று தமிழ் மக்கள் முன் நிற்கும் ஒவ்வொரு தரப்பின் கொள்கை நிலைப்பாடுகள் பற்றி, தமிழ் மக்களுக்குத் தௌிவானதொரு பார்வையும் விளக்கமும் கிடைக்கும்.   

அதை விடுத்துத் தமது மேடைகளில் மட்டும் ஏறி, மாற்றுத்தரப்பைத் தாக்குவதும் தமது அறிக்கைகளில் மட்டும், தமது அரசியலை முன்னெடுப்பதும் ஏற்புடையதொன்றல்ல. நேரடியான விவாதமொன்றுக்குத் தமிழ்த் தலைமைகள் வருமானால், அது இந்த நாட்டுக்குப் புதியதொரு பண்பட்ட அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவதாக அமையும்.   

அத்துடன், வெற்றுப் பகட்டாரவாரப் பேச்சுகளைத் தாண்டி, ஆரோக்கியமானதொரு கொள்கை நிலைப்பாடு சார்ந்த அரசியல் விவாதத்தையும் தமிழ் மக்கள் கேட்டுணர்ந்து, அதன்படி தமக்கான பொருத்தமான தெரிவை மேற்கொள்ள வழிசமைக்கும். ஆகவே, இம்முறை இத்தகையதொரு பொது விவாத மேடைக்கு தமிழ்த் தலைமைகள் வரவேண்டும்.  

தமிழ்த் தேசிய அரசியல் மிக முக்கியமானதொரு திருப்பு முனையைச் சந்தித்திருக்கிறது. 2015இல் இருந்த நிலைக்கு முற்றிலும் தலைகீழான நிலை இது. ஜனநாயக ரீதியில் புதியதோர் அணுகுமுறையைக் கையிலெடுக்க வேண்டிய அரசியல் தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது.

அந்தவகையில், தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க எண்ணும் தமிழ் மக்கள், வெறும் வார்த்தைப் பகட்டாரவாரத்துக்குள், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை இழுத்தெடுக்கும் கருவியாகத் தமிழ் தேசியத்தைப் பயன்படுத்துபவர்களை அடையாளங்கண்டு நிராகரிக்கவும் வேண்டும். 

அதேவேளை, வெறுமனே அறிக்கை அரசியல் மட்டுமே செய்கின்ற, விளைபலம் ஏதுமற்ற அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.

(முற்றும்)   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .