2025 ஜூலை 19, சனிக்கிழமை

கமல் - ரஜினி - விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?

எம். காசிநாதன்   / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் - 7, தமிழக அரசியலில் புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கு ஒரு தொடக்க தினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் இரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார்.  

திரையுலகினர் அரசியலுக்கு வருவது, தமிழகத்துக்குப் புதிதல்ல என்றாலும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மூன்று திரையுலக பிரபலங்கள் தமிழக அரசியல் களத்துக்குள் நுழைவதற்கு தலைப்பாகை கட்டி நிற்பது, கவர்ச்சி அரசியலை நோக்கி, மீண்டும் ஒரு பெரும் போருக்கு களம் தயாராகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  

யார் அந்த மூன்று திரையுலகப் பிரபலங்கள். “அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன்” என்று வெளிப்படையாகவே அறிவித்து, தன் இரசிகர்களைச் சந்தித்து வந்த ரஜினியின் பிறந்த நாள், டிசெம்பர் 12 ஆம் திகதி வருகிறது. அவர் அரசியலுக்காகத் தயாராகி வருகிறார் என்றாலும், “கமல் தனக்குத் துணைக்கு வர வேண்டும்” என்பது போல், சிவாஜி சிலை திறப்பு விழாவில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  

டிசெம்பர் மாதம், தனது பிறந்த நாளில், “அரசியல் கட்சியை தொடங்குவார்” என்று அவரது இரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். ரஜினியின் அரசியல் பிரவேச பரபரப்புத் தொடங்கியவுடன், களத்துக்கு வந்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், இப்போது தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் திகதியை “அரசியல் கட்சி தொடங்கும் திகதியாக” மாற்றப் போகிறார் என்று பேச்சு அடிபடத் தொடங்கி விட்டது.   

இந்த இரு திரையுலகப் பிரபலங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற பிரசாரத்தைச் சூடுபிடிக்க வைத்துள்ளது. 

ஆகவே, ரஜினி - கமல் - விஜய் என்ற மூன்று கதாநாயகர்களுக்கு இடையில், கடும் போட்டி நிலவுகிறது. மூவரில் யார் அரசியலுக்கு வரப் போகிறார்கள் என்பதை விட, மூவருமே அரசியலுக்கு வந்து விடுவார்களோ என்ற எண்ணம், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.  

ஆனால், இந்த மூவருக்கும் உள்ள இரசிகர் பட்டாளம், ஏறக்குறைய ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாதவர்கள் போல் தெரிந்தாலும், ஒருவர் கட்சி தொடங்கினால், இன்னொருவருக்குப் பாதிப்பு வரும் என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.   

கமலின் தீவிர அரசியல் கருத்துகள், ரஜினி புதுக் கட்சி தொடங்குவதற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. கமல், தி.மு.கவின் ‘முரசொலி’ விழாவில் கலந்து கொண்டு, ரஜினியைச் சாடியமை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டியதுக்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டமை, அ.தி.மு.க அமைச்சர்களைக் காரசாரமாக விமர்சித்தமை எல்லாம், கமலின் நற்பெயரை, விம்பத்தை மக்கள் மத்தியில் உயர்த்திப் பிடித்திருக்கிறது.   

அதேநேரத்தில், அவருக்கு அரசியல் நெளிவு சுளிவுகள் தெரியவில்லை என்பது, டெங்குக்கு நிலவேம்பு கொடுப்பதில் கமல் எழுப்பிய சர்ச்சை, காட்டிக் கொடுத்து விட்டது. 

இன்று, அந்தக் கருத்துக்காக வழக்கைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை, கமலுக்கு ஏற்பட்டு விட்டது. கமலின் தைரியமான இந்த கருத்துகள், அவருக்காக அ.தி.மு.க அரசாங்கம் செயல்படவில்லை என்று நினைக்கும் மக்கள் மத்தியில், ஓர் ஆதரவுத் தளத்தைத் திரட்டிக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை.  

அதைவிட, ‘திராவிடம்’ பற்றிய கமலின் பாராட்டும், ‘தமிழன்’, ‘கடவுள் மறுப்பு கொள்கை’யும் கமலுக்குத் திராவிட இயக்க உணர்வுள்ளவர்களைக் கூட ஆதரவு கொடுக்க வைக்கும் என்று தெரிகிறது. இன்றைய திகதியில் கமல், மத்தியில் உள்ள பா.ஜ.கவையும் எதிர்க்கிறார்; மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியையும் எதிர்க்கிறார். இதனால் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசன் செயல்படுகிறார் என்ற எண்ணவோட்டத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.  

இந்த எதிர்பார்ப்பு, சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் மத்தியில் ஏற்கெனவே இருந்த செல்வாக்கைக் கேள்வி கேட்க வைத்துள்ளது. ஏனென்றால், அவர் மாநிலத்தில் உள்ள ஆட்சி பற்றி, இன்னும் தொடர் விமர்சனங்களில் ஈடுபடவில்லை. தமிழகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளிலும் அழுத்தம் திருத்தமாகக் கருத்துச் சொல்லவில்லை. மத்திய பா.ஜ.க அரசாங்கம் பற்றி எந்த விமர்சனத்தையும் முன் வைக்க அவர் இதுவரை முயலவில்லை. குறிப்பாக, ‘மெர்சல்’ பட விவகாரத்திலும், நடிகர் விஷால் தொழிற்சாலை வருமான வரித்துறைச் சோதனைக்குள்ளான போதும், ரஜினியிடமிருந்து கண்டனக்குரல் ஏதும் எழவில்லை என்ற வருத்தம், திரைத்துறைக்கு இருக்கிறது. அதுவே, ‘ரஜினி பா.ஜ.கவின் சார்பில் அரசியலுக்கு வருகிறார்’ என்ற செய்தியை, மக்களிடம் கொண்டு சென்றும் சேர்த்துள்ளது.   

ஆகவே, கமலின் வருகையும் மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு எதிரான அவரது கருத்தும், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனால் டிசெம்பர் 12 ஆம் திகதி, ரஜினி அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை எடுப்பாரா அல்லது தள்ளி வைப்பாரா என்ற கேள்வி பிறந்திருக்கிறது.  

கமல், ரஜினி பிரச்சினை இப்படியிருக்க, நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் வந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி பிறந்திருக்கிறது. விஜய், தன் படத்துக்காக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்ததும், பா.ஜ.கவினரின் அழுத்தத்தில், ‘மெர்சல்’ சினிமாவில் பிரச்சினையில் குரல் கொடுக்காமல் விஜய் அடக்கி வாசித்ததும், அவரும் மத்திய பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளையோ, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சி பற்றிய விமர்சனங்களையோ முன்வைக்க இப்போது தயாராக இல்லை என்ற உணர்வு வெளிப்படுகிறது.   

சமூக நலப்பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபடுவார் என்றாலும், ‘ஜி.எஸ்.டி வரிப் பிரச்சினை’ பற்றிப் படத்தில் சொன்னதை, பத்திரிகைப் பேட்டியில் கூறத் தயங்குகிறார். பா.ஜ.கவினர் எழுப்பிய ‘ஜோசப் விஜய்’ குற்றச்சாட்டுக்குக் கூட, அவர் பதில் சொல்லவில்லை.   

விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பா.ஜ.கவினர் வெளியிடலாம் என்று நடிகை சின்மயி கேட்டதைக் கூட, நடிகர் விஜய் கேட்கவில்லை. ஏன் ‘மெர்சல்’ சினிமாவை இணையத் தளத்தில் பார்த்தேன் என்று பா.ஜ.க சிரேஷ்ட உறுப்பினர் எச். ராஜா பேசியமைக்கு, நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டன அறிக்கை வெளியிட்டாரே தவிர, நடிகர் விஜய் வாய் திறக்கவில்லை.   

இப்படி எது பற்றியும் கருத்துச் சொல்லாமல் இருக்கும் நடிகர் விஜய், திடீரென்று அரசியலுக்கு வந்தால், அதுவும் சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிக்கலாகவே அமையும்.

ஏனென்றால், ரஜினியின் ஸ்டைலை, தன் திரைப்படங்களில் கடைப்பிடிக்கும் விஜய்க்கு, ரஜினியின் இளம் இரசிகர்களிடமும் ஆதரவு இருக்கிறது என்பதை மறந்து விட முடியாது.  
ஆகவே, இன்றைய நிலையில், ‘கமல் - ரஜினி - விஜய்’ மூன்று பேரில், நடிகர் கமலுக்கு மட்டுமே தமிழக அரசியல் களத்தில் வரவேற்பு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.   

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு உள்ள எதிர்ப்பும், மாநில 
அ.தி.மு.க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியுமே கமலின் இப்போதைய ‘ரெடிமேட் மூலதனமாக’ இருக்கிறது. இந்த மூலதனத்தோடு, திராவிட இயக்க உணர்வாளர்களின் ஆதரவையும் தன்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை, கமலுக்கு இருக்கிறது.   

தி.மு.கவுடன் நேரடியாக மோதிக் கொள்ளாமல் கமல் இருப்பதற்கு, அதுவும் ஒரு காரணம். இன்னும் சொல்லப் போனால், கமல்ஹாசன் “தமிழைக் கலைஞரின் வசனங்களில் இருந்து கற்றுக் கொண்டேன்” என்ற ரீதியில், தி.மு.க தலைவர் கருணாநிதியை அடிக்கடி பாராட்டிப் பேசி வருவதும் தி.மு.கவினருக்கு ஆதரவளிக்கும் தமிழ் உணர்வாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் போன்றோரின் ஆதரவைப் பெறுவதற்காகவே என்று யாரும் நினைத்தால், அது தவறு என்று கூறிவிட முடியாது.  

கமலின் ‘தி.மு.க நெருக்கம்’, ‘அ.தி.மு.க மீது வெறுப்பு’ ஆகிய இரண்டும், அவருடைய எதிர்கால அரசியல் வியூகம் என்றே கருதப்படுகிறது.  

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா இல்லாததும், தி.மு.கவின் தலைவராக கருணாநிதி தீவிர அரசியலில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதை, ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.  

ஆனால், இந்த மூவரில் நடிகர் கமலுக்கே அரசியல் சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி, மாற்றுச் சக்தியாக உருவெடுக்க ரஜினியை முன்னிறுத்த விரும்பிய பா.ஜ.க மறுபரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.   

ஒருவேளை, ரஜினிக்குப் பதில் கமல் பக்கமாக பா.ஜ.க திரும்பும் என்றால், சினிமாவின் கடைசியில் வரும் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிபோல், தமிழக அரசியலில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறலாம்.   

ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுச் சக்தியாக உருவெடுக்க முயற்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், பா.ஜ.க பக்கம் போவது தனது ‘மூன்றாவது சக்தி’ முயற்சிக்கு ஆபத்தாகி விடும் என்பதை உணராமலிருப்பார் என்று நம்ப முடியவில்லை. ஆகவே, திரையுலக கதாநாயகர்களின் அரசியல் பிரவேசம் அவர்கள் நடித்த திரைப்படங்கள் போலவே, ஒரு தேர்தலை அவர்கள் சந்திக்கும் வரை ‘சஸ்பென்ஸாகவே’ இருக்கும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X