2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 21 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. 

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.

இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி சுதந்திர சதுக்கத்தின் முன்னால் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ் மொழியில் சுலோக அட்டைகள் இருக்கவில்லை. இதற்கு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும், எதிர்ப்புத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து, கடந்த 17 ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான கரு ஜயசூரிய, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தொடர்பாகக் கலந்துரையாட, சகல எதிர்க்கட்சிகளையும் அழைத்து இருந்தார். அக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளைத் தவிர, ஏனைய சகல எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  

அந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்தல்; பொருளாதார முன்னேற்றம்; மனித உரிமைகளை நிலைநாட்டல்; நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்தல் ஆகியன நான்கு விடயங்களும் வலியுறுத்தப்பட்டு இருந்தன. 

கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், இவ்வாறு வலியுறுத்தப்பட்ட நான்கு விடயங்களில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளடக்கப்படவில்லை எனக் கூட்டத்தின் அமைப்பாளர்களை விமர்சித்தார். மனோ கணேசனும் அதே கருத்தைத் தெரிவித்தார். 

இந்த வாரம், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ​வெவ்வேறு அரசியல் கோணங்களில், 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடளாவிய ரீதியில், தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளையும், ஏனைய வன்செயல்களையும் நினைவு கூர்கின்றனர். அந்தக் கொடுமைக்கு, 38 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், நாட்டில் அரசியல் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை, இந்த இரு சம்பவங்களும் மிக அருமையாக எடுத்துரைக்கின்றன.

2000 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். அந்த ஆண்டின் இறுதியில், இரு பிரதான கட்சிகளும் தற்காலிகமாகவேனும் இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிப்பதை நிறுத்திக் கொண்டன. அதேபோல், தமிழ் அரசியலிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டது. ‘துரோகிகள்’ என, ஏனைய தமிழ்க் கட்சிகளை அழைத்த புலிகள், அக்கட்சிகளை அரவணைத்துச் செல்ல முன்வந்தது. அந்தத் தமிழ் கட்சிகளும், புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்று ஏற்றுக் கொண்டன. 

2000ஆம் ஆண்டு வரை, நாட்டில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக மாறி மாறி இனவாதத்தைத் தூண்டி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் உரிமைகளை வழங்க அரசாங்கங்கள் எடுத்த முயற்சியைத் தடுத்தன. ஆனால், 2000ஆம் ஆண்டு இறுதியில், இந்த நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே மத்தியஸ்தத்துடன் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுத்த முயற்சியை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கவில்லை. 

அதையடுத்து, அரசியலமைப்பின் படி பாதுகாப்புத்துறை ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டிய விடயமாக இருந்தும், அதை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்க, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இணங்கினார். அதேபோல், ஐ.தே.க அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அவர் எதிர்க்கவில்லை.

ரவி கருணாநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்கள், சந்திரிகாவை தனிப்பட்ட முறையில் ஆத்திரமூட்டியதை அடுத்தே, அவர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐ.தே.க அரசாங்கத்தைக் கலைத்தார்.

சந்திரிகாவின் காலத்துக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்திலிருந்தே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இனவாதத்தை மிக மோசமாகப் பாவித்து வருகிறது. எவ்வாறாயினும் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.தே.கவும் அதிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிக்கவில்லை. 

அவ்விரு கட்சிகளும், இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிக்காவிட்டாலும் அக்கட்சிகளும் இனங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டு இருப்பதாகவோ, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மீது, அக்கறை கொண்டவை என்றோ கூற முடியாது. ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அதையே எடுத்துரைக்கின்றன.

இனப்பிரச்சினையின் ஒரு திருப்பு முனையாகிய, 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரங்கள் இடம்பெற்று 38 ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும், நாட்டின் நிலைமை இதுவாகும். 

பெரும்பான்மைத் தலைவர்கள் மட்டுமன்றி, சிறுபான்மை அரசியல்வாதிகளிலும் பெரும்பாலானோர் இன்னமும் 1983ஆம் ஆண்டிலேயே வாழ்கின்றனர். 1983ஆம் ஆண்டளவில், உலகில் அமெரிக்கா தலைமையிலும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலும், இரண்டு பிரதான அரசியல் அணிகள் இருந்தன. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, அமெரிக்க அணியையும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் ஒன்றியத்தையும் ஆதரித்தனர். 

இலங்கையில் தமிழ் இயக்கங்கள் சோஷலிஸத்தை ஆதரித்தன. அவற்றின் தலைவர்கள் முன்னாள் சோவியத் ஜனாதிபதியான ஜோசப் ஸ்டாலினின் வழியிலேயே சுயநிர்ணய உரிமையை விளக்கினர். ஜே. ஆரின் அமெரிக்க ஆதரவுக் கொள்கையால் ஆத்திரமடைந்து இருந்த இந்திராவுக்கு, தமிழ் இயக்கங்களுக்கு பணத்தால் ஆயுதத்தால் உதவிகள் வழங்கி, ஜே ஆரை அசௌகரியத்துக்கு உள்ளாக்க அந்த நிலைமை வசதியாகியது.

உண்மையிலேயே, அன்றும் இந்தியா இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதை விரும்பவில்லை. 1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.கே சிங், “இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவானால் அது, தமிழ் நாட்டிலும் பிரிவினைவாதத்தை மீண்டும் தூண்டிவிடும். எனவே, இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதற்கு இந்தியா இடமளிக்காது” என்று கூறியிருந்தார். 

அன்றைய பூகோள அரசியல் நிலைமை காரணமாக, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே, தமிழ் இயக்கங்களுக்கு பணத்தாலும் ஆயுதத்தாலும் பயிற்சியாலும் இந்திரா உதவி வழங்கினார். 

1983ஆம் ஆண்டு ஜூலையில் உலகிலும் பிராந்தியத்திலும் இலங்கையிலும் இருந்த நிலைமை இன்று இல்லை. இன்று இந்தியா, அமெரிக்க அணியிலேயே இருக்கிறது. இன்றும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான அணியொன்றை (சீன அணி) ஆதரித்த போதிலும் இந்தியா, இலங்கைக்கு எதிராகப் பழைய பிரிவினைவாத ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயாராக இல்லை. 

இதைத்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயமென்றை மேற்கொண்டு இருந்தபோது, 1987ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதற்குப் பின்னர் நிலைமைகள் மாறியுள்ளன. (Much water has flowed under the bridge since 1987 ) என, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கூறியிருந்தார். 

“தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, புதிதாக உருவாகியுள்ள நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் பாவிக்க வேண்டும்” எனவும் அவர் அறிவுரை வழங்கி இருந்தார். “வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும்” என்று பிரேமசந்திரன் கூறிய போதே, அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று, தமிழ்த் தலைவர்கள் கூறும் போது, தமிழர்கள் எதைக் கேட்கிறார்கள் என்று வினவும் பலர், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இனவாதிகள் அல்லர்; அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று, தமிழர்கள் தனித் தமிழ் நாட்டையே கேட்கிறார்கள் என நினைப்போரும் உள்ளனர். 

அதாவது, 30 வருடத்துக்கு மேலாக ஆயுதப் போர் நடத்தி, பல்லாயிரக் கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து, தமிழர்கள் வழங்கிய செய்தி, போதியளவில் தெற்கே சென்றடையவில்லை என்பதே, இதன் யதார்த்தம் ஆகும். அந்த மக்களும், இன்னமும் 1983ஆம் ஆண்டில் நினைத்ததைப் போலவே நினைக்கிறார்கள். 

பெரும்பான்மையினத் தலைவர்களும் மாறவில்லை; பெரும்பான்மை மக்களது வாக்குகளால் பதவிக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர்களும் விடுபடவில்லை. 

தற்போது தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களின் போது, தமிழ் மொழியையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் மறந்து விட்டனர் என்றால், 30 ஆண்டு காலப் போருக்கு முன்னர் அதாவது, 1983ஆம் ஆண்டு இருந்த நிலையிலேயே அவர்களும் செயற்பட்டு வருகிறார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது. 

அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் என்ன உத்தி இருக்கிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X