2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19உம் தடுப்பூசிகளும் சில சிந்தனைகள்

Editorial   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே. அஷோக்பரன்

https://www.twitter.com/nkashokbharan

 

 

 

இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நோய்த் தொற்றாளர்கள் உத்தியோகபூர்வக் கணிப்புக்களின்படி ஐந்து இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையிலும், கொவிட்-19 மரணங்கள் பதினோராயிரத்தை தாண்டிய நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையானளவில் இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதத்தினருக்கு வழங்கிய மைல்கல்லை சில தினங்கள் முன்பு இலங்கை எட்டிப்பிடித்துள்ளது. 

செய்திக்குறிப்புக்களில் அறிக்கையிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மேற்குறித்த மைல்கல்லை இலங்கை எட்டிப்பிடித்த நாளவில், 8,973,670 பேர் சினோர்ஃபாம் தடுப்பூசிகளும், 949,105 பேர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளும், 758,282 பேர் மொடேர்னா தடுப்பூசிகளும், 243,685 பேர் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளும், 43,453 பேர் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் முழுமையானளவில் பெற்றுக்கொண்டுள்ளனர். 

இதே வேகத்தில் இலங்கை தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமானால் விரைவில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெறும் இலக்கை இலங்கை அடையும். தனது சனத்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்ற நிலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி, சகல கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் டென்மார்க் தளர்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அத்தியாவசியத் தேவையும், இன்றியமையாத சூழலும் இலங்கைக்கிருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நாடு திறக்கப்பட்டு, உற்பத்தி, வணிகத்துறைகள் முழுமூச்சுடன் இயங்கத்தொடங்குவதுடன், நாட்டிற்கு கணிசமான வருவாயைக் கொண்டுவரும் உல்லாசப்பிரயாணத்துறை விரைவில் மீளியங்காதுவிட்டால், பொருளாதார ரீதியில் இலங்கை மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும் எல்லையில் நிற்கிறது. 

ஆகவே எப்படியாவது தடுப்பூசிகள் பெறத்தக்க சனத்தொகையில் மற்றப்பாதியிலுள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது இலங்கையின் முன்னுரிமைத் திட்டமாக இருக்கவேண்டும் அதனடிப்படையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

இந்த நிலையில் கொவிட்-19 தடுப்பூசி சம்பந்தமான இன்னொரு சவால் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும், கொழும்பு நகரில், 20-29 வயதிற்கிடைப்பட்டோரில் 20 வீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துவௌியிட்ட கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர். றுவன் விஜேமுனி குறிப்பிட்டிருக்கிறார். 

இளைஞர்களிடையே கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முனைப்பு குறைவாக உள்ளதை இது சுட்டிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக சனநெருக்கடி கூடிய தலைநகர இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் அக்கறையற்றிருப்பது அவர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிப்பதோடு, இந்த சமூகத்திலிருந்து கொவிட்-19-ஐ இல்லாதொழிப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது.

ஒரு தொற்றுநோயை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதில் தடுப்பூசியின் வீரியம் என்பது அந்தத் தடுப்பூசியை அந்த சமூகத்தில்வாழும் அனைவரும் பெற்றுக்கொள்வதில் பெரிதும் தங்கியிருக்கிறது. சிலரேனும் அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் மூலம் அப்பெருந்தொற்று மீண்டும் தலைதூக்கும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. தடுப்பூசிகளின் வரத்தால், பல ஆண்டுகள் சமூகத்தில் மறைந்துபோன தொற்று நோய்களான measles, mumps போன்றவை, அமெரிக்காவிலுள்ள தடுப்பூசி-மறுப்பு கலாசாரவாதிகளின் தடுப்பூசி மறுப்பின் விளைவாக மீண்டும் அமெரிக்க நகரங்களில் பரவத்தொடங்கிய உதாரணங்களை நாம் காணலாம். ஆகவே தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமை என்பது அதனைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் மட்டுமல்லாது, அவரது குடும்பத்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அவர்கள் வாழும் சமூகத்தவர், நகரத்தவர், நாட்டவர் என அனைவரையும் பாதிக்கும்.

ஆனாலும், ஒருவருடைய விருப்பிற்கு மாறாக வற்புறுத்தியோ, திணித்தோ தடுப்பூசிகளை வழங்க முடியாது. அத்தகைய செயல் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் உவப்பானதல்ல என்பது ஒருபுறமிருக்கு, அது மருத்துவ விழுமியங்களுக்கு முரணாணது. ஆகவே தடுப்பூசிகள் பற்றிய நம்பிக்கையை மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான பொருத்தமான தந்திரோபாயமாக அமையும். 

இதுவரை 11,000-த்துக்கும் அதிகமான உயிர்களை இலங்கையில் மட்டும் காவு வாங்கியுள்ள இந்த கொவிட்-19 பெருந்தொற்றிடமிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கெஞ்சாத குறையாக வேண்டிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான், இளைஞர்களிடையே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுனைப்பு குறைவாக இருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது.

இத்தகைய இளைஞர்களிடையே, அமெரிக்க பாணியிலான தடுப்பூசி மறுப்பாளர்கள் ஒரு கொஞ்ச அளவில் இருந்தாலும், பொதுப்பார்வைக்கு, பெரும்பாலான இந்த இளைஞர்களிடையெ தடுப்பூசி மறுப்புச் சிந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக தாம் விரும்பும் தடுப்பூசி வகையைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கும் இளைஞர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். இது தடுப்பூசி அரசியல் பற்றி பேச வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது. இதுவரை இலங்கையில் முழுமையான கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களில் அண்ணளவாக 90 இலட்சம் பேர் சீனத்தயாரிப்பான சீனோர்ஃபாம் தடுப்பூசியையும், அண்ணளவாக 20 இலட்சம் பேர் ஏனைய தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

இலங்கைக்கு முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தனது “வக்சின் மைத்ரீ” திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கியிருந்தாலும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து குறித்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தமையினால், முதலாவது அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது ஊசியைப் பெற்றுக்கொள்ள பலமாதகாலம் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கடைசியில், ஜப்பானின் கருணைப் பார்வையினால், பலருக்கும் அஸ்ட்ராசெனகாவின் இரண்டாவது ஊசி கிடைத்தது. அமெரிக்கா மிகக் குறைந்தளவில் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை உலகளவிலான கோவக்ஸின் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தாலும், சீனாதான் தனது தயாரிப்பான சினோஃபாம் தடுப்பூசியை அன்பளிப்பாகவும், பின்னர் விலைக்கும் இலங்கைக்கு வழங்கியிருந்தது. 

கிட்டத்தட்ட 90 இலட்சம் இலங்கையர்கள் இந்த சினோஃபாம் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொண்டிருந்தாலும், சிலர், குறிப்பாக இளைஞர்கள் மேலைத்தேய தடுப்பூசி கிடைக்கும் வரை தடுப்பூசியைப் பெறாது காத்தக்கொண்டிருக்கிறார்கள். இதனை வெறும் மேலைத்தேய மோகமென்றும், அறியாமையென்றும் சாடுவதால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. ஆகவே சீன தடுப்பூசிகள் மீது எவருக்காவது நம்பிக்கையீனமிருந்தால், அதனைக் களைய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நிபுணர்களுக்கும் இருக்கிறது.

“சீனப்பொருள்” என்றால் இரண்டாந்தரமான, தரமற்ற பொருட்கள் என்ற விம்பம் பல காலமாக இருந்துவருகிறது. அந்த நிலையைத்தாண்டி சீனா வளர்ந்து பலவருடங்களாகியும், அந்த விம்பம் முழுமையாகத் தளரவில்லை. சீனாவின் அந்த நிலை மாறிவிட்டது என்பதற்கு, உலகின் மிகத்தரமான வணிகநாமங்களான அமெரிக்க மற்றும் ஜப்பான் வணிகநாமங்கள் கூட சீனாவிலேயே தமது உற்பத்தியை முன்னெடுப்பது, உற்பத்தித்துறையில் சீனா கண்டுள்ள வளர்ச்சியை வௌிக்காட்டி நிற்கிறது. தனது தேவைக்கான தடுப்பூசி உற்பத்தியைச் செய்யவே இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கிற சூழலில், தன்னாட்டிற்கும், உலகத்திற்கும் என பெருமளிவல் தடுப்பூசிகளை உற்பத்திசெய்து வெற்றிகரமாக தொடர்ந்து அதனை வழங்கிக்கொண்டிருக்கிறது சீனா. 

ஆகவே “சீனப்பொருள்” பற்றிய விம்பத்தை மாற்றியமைப்பது சீனாவின் பொறுப்பாக இருந்தாலும், இன்றைய சூழலில் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில், வெற்றிகரமாக 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் இலக்கை இலங்கை அடைவதற்கு, சீன தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் அவநம்பிக்கை மக்களிடமிருக்குமானால், அதனை முறையாக அணுகி, சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும், மருத்துவ சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X