2025 மே 03, சனிக்கிழமை

சமூக ஒருங்கிணைப்பு: ஒரு கையால் தட்டினால் ஓசை வராது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 மே 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பெயர் கொண்ட பயங்க- -ரவாதிகள், உயிர்த்த ஞாயிறன்று சுமார் 300 கிறிஸ்தவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் கொன்று குவித்தனர்.   

கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது, கொலைக் கும்பலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை, அத்தாக்குதலுக்கு வழிநடத்திய ஐ.எஸ் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு’ (Islamic State in Iraq and Syria) என்ற அமைப்பின் தலைவன் அபூ பக்ர் அல் பக்தாதி ஆற்றிய ஓர் உரையின் மூலம் தெரிகிறது. கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட பக்தாதி, இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எட்டு நாள்களுக்குப் பின்னர், ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட தொலைக் காட்சி உரையொன்றின் போது, அத்தாக்குதலைத் தமது அமைப்பே மேற்கொண்டதாகக் கூறுவது கேட்கக்கூடியதாக இருந்தது.   

அண்மையில், ஐ.எஸ் அமைப்பு ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் அரச படைகள் மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுவினரிடம் படுதோல்வியடைந்தது. கிழக்கு சிரியாவில் அவ்வமைப்பின் இறுதிக் கோட்டையான பாகூஸ் நகரிலிருந்தும் அவ்வமைப்பின் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.   

இதனைக் குறிப்பிட்ட பக்தாதி, இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலானது பாகூஸ் நகரத் தோல்விக்குப் பழி வாங்குவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்ததன் மூலமாகவே, இலங்கைத் தாக்குதலுக்கான காரணம், முதன் முதலாக வெளிவந்தது.   

இந்த அமைப்பு, எத்தகைய பைத்தியக்கார அமைப்பு என்பது, இந்த உரையின் மூலம் தெரிகிறது. அவர்களது பாகூஸ் நகரத் தோல்விக்கும் இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்தப் படுகொலைகளால் அந்தத் தோல்வி ஈடுசெய்யப்படுமா?   

அந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று 21 நாள்களுக்குப் பின்னர், பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில், முஸ்லிம்கள் மீது, குண்டர்கள் தாக்குதல்களை நடத்தி, 400க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும்  பள்ளிவாசல்களைத் தாக்கி, தீயிட்டுக் கொழுத்தினர்.   

உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் மீது, முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் காரணமாகவே, முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் என்றதோர் அபிப்பிராயத்தை உருவாக்கிவிட்டே, அவர்கள் முஸ்லிம்களைத் தாக்கினார்கள்.   

ஆனால், பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையே தாக்கினர். அந்தக் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருக்க, ஒரு பௌத்த கும்பலே முஸ்லிம்களைத் தாக்கியது.   

முஸ்லிம் பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்களை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே படுகொலை செய்தனர். அதேபோல், இந்தப் பேரினவாதக் கும்பல், முஸ்லிம்களை அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அழிக்க வந்தனர்.   

இரு சாராரினதும் நோக்கம் ஒன்று தான். அதாவது, நாமல்லாதவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதே, இரு சாராரினதும் நோக்கமாகும். எனவே இரு சாராரும் பயங்கரவாதிகள் தான்.  

ஐ.எஸ் அமைப்பின் ஆதரவுடன் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பயங்கரவாத அமைப்பினர், முஸ்லிம்களின் பெயரிலும் இஸ்லாத்தின் பெயரிலுமே படுகொலைகளைச் செய்தனர். எனவே, முஸ்லிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியேற்பட்டது.   

இந்த நிலையில், தம்மிடையே ஒரு பயங்கரவாத அமைப்பு எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி, முஸ்லிம்கள் சிந்திக்கலாயினர். அதன் பிரகாரம், கடந்த காலங்களில் தம்மிடையே ஏற்பட்ட சித்தாந்த மாற்றங்களை மீளாய்வு செய்யப் பலர் முற்பட்டனர். இந்தச் சித்தாந்த மாற்றங்கள் காரணமாக, முஸ்லிம்கள் மத்தியில் பல குழுக்கள் தோன்றின. அவர்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டனர். போதாக்குறைக்கு உடைகளாலும் அவர்களில் பலர் வேறுபட்டனர்.   

இவற்றைக் கருத்தில் கொண்டு, ஏனைய சமூகங்களோடு சங்கமிக்க வேண்டும் என்ற கருத்து முஸ்லிம்களாலும் சிங்களத் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டது.   

அத்தோடு, முஸ்லிம்கள் தனி அரசியல் கட்சிகளை நடத்துவது, சமய அடிப்படையிலான பாடசாலைகளில் கல்வி கற்பது, முஸ்லிம்களின் பாரம்பரிய சமயப் பாடசாலைகளான மத்ரஸாக்களை நடத்துவது ஆகியவற்றுக்கு, சிங்களத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   அவர்களது இக்கருத்துகளில் முஸ்லிம்கள் பற்றிய அவர்களது அறிவின்மை காணப்படுவதோடு, பல உண்மைகளும் அவற்றில் உள்ளன.   
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், அச்சமூகங்களின் தலைவர்களால், அச்சமூகங்கள் மீது, பலாத்காரமாக திணிக்கப்பட்டவை அல்ல. மாறாக, அவை தோன்றுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் இருந்தன.   

தமிழ், முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளின் போது, தேசிய கட்சிகளின் தலைவர்கள் அவற்றுக்குத் தீர்வு காண முற்படாவிட்டால், அச்சமூகங்கள், அரசியல் ரீதியாகத் தனியாக ஒழுங்கமைவதைத் தடுக்க முடியாது; அதாவது ஒரு கையால் தட்டி ஓசை வராது.  

உதாரணமாக, இன்று பல முஸ்லிம்களின் அரபு, தமிழ் சமயப் புத்தகங்களைச் சோதனையிடும் பாதுகாப்புப் பிரிவினர், அவற்றைக் கைப்பற்றிச் செல்கின்றனர். அவற்றை வைத்திருப்போரையும் சிலவேளை கைது செய்கின்றனர். தேசிய கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், அவற்றையும் நியாயப்படுத்துகின்றன.   

பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, புர்கா, நிக்காப் போன்ற முகத்திரைகள் தடைசெய்யப்பட்டன. ஆனால், சில அரச, தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள், தமது தலையை மறைக்கும் துணியை கழற்றுமாறும் அபாயா என்ற உடைக்குப் பதிலாக வேறு உடை அணிந்து வருமாறும் பணிக்கப்படுகிறார்கள்.   

இது அச்சமடைந்து இருக்கும் முஸ்லிம் மக்களை, அடிபணிய வைக்கும் மிக மோசமான இம்சையாகும். இதனைத் தேசிய அரசியல் கட்சிகள் கண்டு கொள்வதில்லை. முஸ்லிம் கட்சிகளே இதை எதிர்ததுக் குரல் எழுப்புகின்றன.   

அடிக்கடி முஸ்லிம்கள் மீது, காடையர்களின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் போது, பாதுகாப்புத் துறையினர் பார்வையாளர்களாக இருப்பதும் வழமையாகிவிட்டன.   தாக்குதல் நடத்தியோர் கைது செய்யப்பட்டாலும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில், தேசிய கட்சிகள் உண்மையை ஏற்று, நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கத் தயார் இல்லை. அதை முஸ்லிம் தலைவர்களே, அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.   

‘சமய அடிப்படையிலான பாடசாலைகள் வேண்டாம்’ என்போரின் கருத்தை, பாராட்டத்தான் வேண்டும். ஆனால், அவர்கள் சிங்களப் பாடசாலைகளில், தமிழ், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்களா? அதற்கு வழிவகைகளைச் செய்வார்களா? அது முடியாது என்றால், முஸ்லிம்கள் முஸ்லிம் பாடசாலைகளிலும் இந்துக்கள் இந்துப் பாடசாலைகளிலும் தமது பிள்ளைகளைச் சேர்க்காமல் வேறு என்ன செய்வது? சமூக ஒருங்கிணைப்பு அத்தியாவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமும் இல்லை. ஆனால் அது, ஒரு சமூகத்தின் தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மட்டும் அடையக்கூடிய இலக்கல்ல.  

கவனமாக கையாள வேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணை

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, தமிழ், சிங்கள மக்கள் முஸ்லிம்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டனர். பலர் முஸ்லிம்கள் மீது, அச்சம் கொண்டு இருந்தனர். ஊடகங்களும் அந்த நிலையை உரமிட்டு வளர்த்தன. இதனால் நாட்டில் ஒருவித பதற்ற நிலை காணப்பட்டது.   

அதன் விளைவே குருநாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீதான, பேரினவாதிகளின் தாக்குதல்களாகும்.   

ஆயினும், அந்தத் தாக்குதல்களை அடுத்து, தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டதா? அல்லது தாக்குதல்கள் மூலம் அந்தப் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டனரா?  

எனவே, அந்த அச்சம் நியாயமானதா அல்லது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ‘பூதமா’ என்ற கேள்வி எழுகிறது.   

அது ஒரு வித விசித்திரமான அச்சமாகவும் தென்பட்டது. ஏனைய பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும், கத்தோலிக்க பாடசாலைகள் திறக்கப்படாமல் மாணவர்கள் வரவில்லாமல் காணப்பட்டன. ஏனைய பாடசாலைகளிலும் மாணவர் வருகை மிகவும் குறைவாக இருந்தன.  புதிய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றைத் திரையிடும் சினிமாக் கொட்டகைகளும் நிரம்பி வழிகின்றன. பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்களும் கடந்த வெசாக் தினத்தன்று பிரதான விகாரைகளில் ஆயிரக் கணக்கில் குழுமியிருந்தனர். ஆனால், அதற்குப் பின்னரும் இராணுவத் தளபதி மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கேட்க வேண்டியேற்பட்டது.  

பொதுவாக, நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியிருக்கிறது என்பதே உண்மை. எதிர்க்கட்சிகளே, நிலைமை பயங்கரமானதாக இருப்பதாகக் கூற முயற்சிக்கின்றனர். இந்த நிலையில், நாட்டில் மீண்டும் பதற்ற நிலை உருவாகும் அபாயமும் இருக்கிறது.   

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, எதிர்க் கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையே அதற்குக் காரணமாகும். ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமக்கு எதிரான அமைச்சர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டத்தில் உரிமை இருக்கிறது. அதேவேளை, ஓர் அமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ, பயங்கரவாதத்துக்கு உதவியதாகவோ, ஊழலில் ஈடுபட்டதாகவோ ஆதாரம் இருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மட்டுமல்லாது கடமையுமாகும்.  
இங்கே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவையாகும்.   

அவர் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்பதே அக்குற்றச்சாட்டுகளின் சாராம்சமாகும். தம்மோடு தொடர்புள்ளவர்கள், பயங்கரவாதிகளோடு தொடர்புள்ள சிலரோடு வர்த்தக ரீதியல் தொடர்பு வைத்திருந்ததை அமைச்சரும் மறுக்கவில்லை. ஆனால், அவை வெறுமனே வர்த்தகத் தொடர்புகள் என்பதே அமைச்சரின் வாதமாகும்.  

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. அமைச்சர் ரிஷாட், பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்ததாகத் தெளிவான ஆதாரம் இருந்தால், நாடாளுமன்றத்தில் எவரும் அவருக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை.   

இந்த விடயத்தில், எதிர்க்கட்சியினரே “அவர் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தார்” என்கின்றனர். ஆளும் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப் பிரேரணையை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.   

கடந்த ஒக்டோபர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட போது, ரிஷாட் அவருக்கு ஆதரவளிக்காததே, இந்தப் பிரேரணைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.  

கட்சி ரீதியாக மட்டுமன்றி, இன மத ரீதியாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை அணுகுவதாகத் தெரிகிறது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரேரணையை ஆதரிக்க முற்படுவதன் மூலமும் முஸ்லிம் உறுப்பினர்கள் அதனை எதிர்க்க முற்படுவதன் மூலமும் அது தெளிவாகிறது. இது மிகவும் பயங்கரமானதொரு நிலைமையாகும்.   

இந்தநிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன் மூலம் குண்டர்கள், மீண்டும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தும் நிலையை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.   

ஏற்கெனவே குருநாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த 12, 13 ஆம் திகதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் திட்டமிடப் பட்டவை என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனானாநாயக்கவே கூறியிருந்தார்.  

இத்தாக்குதல்கள், அரசியல்வாதிகள்  பின்னால் இருந்து இயக்கியவை என்று வேறு பலரும் கூறுகின்றனர். எனவே, அந்தச் சக்திகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.  

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரிடம் ரிஷாட் பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்பதற்குப் போதிய ஆதாரம் இருந்தால், அவர்கள் ஊடகங்கள் மூலமும் நாடாளுமன்றத்திலும் அவற்றைக் கூறி, பேரினவாதிகளை உசுப்பேற்றிவிடாமல், அந்த ஆதாரங்களை இரகசியப் பொலிஸாருக்கு வழங்கி, அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்த முறையாகும்.   
பொலிஸார் அந்தத் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகி, பொலிஸாரை இயங்கச் செய்ய முடியும். அதற்குச் சட்டப் பிரமானங்கள் உள்ளன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X