2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்

Editorial   / 2023 மே 24 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும்  நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்  சீனாவிடம் இருந்து   $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது,  2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம்  மேலும் 600 மெகாவாட் மின்சாரம் இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பிற்கு சேர்க்கப்பட்டது. 

900 மெகாவாட் திறன் கொண்ட இந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத் திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரர் சீனாவின்  சைனா மெஷினரி இன்ஜினியரிங் கோர்ப்பரேஷன்  (China Machinery Engineering Corporation -CMEC)  ஆகும்.

நுரைச்சோலை அனல்மின் நிலைய  திட்டத்திற்கு சீனாவின் எக்ஸிம் வங்கியே கடனுதவி அளித்துள்ளது. இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை இலங்கை மின்சார சபை ஏற்காமல், திறைசேரியே ஏற்றிருக்கிறது. அதாவது திறைசேரிக்கு மேலும் ஒரு சுமையாக மாறிய ஒரு திட்டமாக இந்த நுரைச்சோலை அனல் மின் நிலைய திட்டம் உள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கொள்வனவு கடன் உடன்படிக்கையின் கீழ், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை  நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட கடனை அரசாங்க திறைசேரியிலிருந்து செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலம் 15 வருடங்களாகவும், வருடத்திற்கு இரண்டு தடவை கடன் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மின் தேவையின் ஐம்பது சத விகிதத்தை இந்த அனல்மின் நிலையம் பூா்த்தி செய்வதாக கூறப்படும் நிலையில்,  அதன் மின்சார உற்பத்தியில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளும், இலங்கைக்கு தாக்குப் பிடிக்காத அதன் உற்பத்தி செலவினங்களும் இலங்கைக்கு ஒரு நெருக்கடியை தொற்றுவித்திருக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தால் ஈடு கொடுக்க முடியாத, தொழில் நுட்ப கோளாறுகள் அதிகம் கொண்ட, பராமாிக்க முடியாத,  ஒரு “வெள்ளை யானையாக” சீனா உருவாக்கித் தந்த இந்த அனல் மின் நிலையம் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். 

இது தவிர பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ், செர்பியா, கென்யா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் அதன் “பெல்ட் எண்ட் றோட்” முயற்சியின் ஒரு பகுதியாக சீனா பல நிலக்கரி அனல் மின் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இலங்கையில் சீன முதலீடுகளால் கட்டமைக்கப்பட்ட ஏனைய திட்டங்களைப் போலவே இந்த அனல் மின் நிலைய திட்டமும் ஒரு சுமையாகவும், சர்ச்சையாகவும், மாறி இருக்கிறது.

இந்த அனல் மின் நிலையம்  உருவாக்கப்பட்டதில் இருந்தே, அதன்  தொழில் நுட்ப செயற்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன.

நிலக்கரியால் இயக்கப்படும் இந்த அனல்மின் நிலையம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல், சூழலுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை வழங்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.  நிலக்கரி பல நூற்றாண்டுகளாக எரிசக்தி மூலமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் பயன்பாடு சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

நிலக்கரி எரியூட்டப்படும் போது வெளியேறும் பசுமைக் குடில் வாயு உமிழ்வுகள் சூழலுக்கு அதிகம் பாதிப்புகளை கொடுக்கின்றன. இந்த உமிழ்வுகள் காலநிலை மாற்றத்திற்கும் அதனால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கும் பங்களிக்கின்றன.  இது கடல் மட்டம் உயர்வதற்கும்,  தீவிர காலநிலை  மாற்றம்  உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கையும்  ஒரு தரப்பாக கையெழுத்திட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தில் நிலக்கரியின் மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர்பான பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பின்னணியில்தான் இலங்கையில் நிலக்கரியில் இயங்கும் நுரைச்சோலை மின் நிலையத்தை உருவாக்கும் பணிகளை சீனாவின் உதவியுடன் இலங்கை ஆரம்பித்தது.

பாரிஸ் ஒப்பந்தம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும். புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவும், வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாக மட்டுப்படுத்தும் செயல் திட்டத்தை இந்த ஒப்பந்தம் முன்வைத்துள்ளது.

உலகின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்கள் உலகில் பாரிய அழிவுகளை நிகழ்த்தி வருகின்றன. அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள அனா்த்தம் இதற்கு சிறந்த சான்றாகும். நிலக்காியை எாிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகப்பொிய இயற்கை அனா்த்தங்களுக்கு காரணிகளாக அமைகின்றன.

'ஐக்கிய நாடுகள் சபையின்  சுற்றுச்சூழல் திட்டம்'  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை முற்றாக  குறைக்க வேண்டும் என்று அது உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி அனல் மின் நிலையங்களை இனி எந்த நாடுகளிலும் அமைக்கப்போவதில்லை என்று சீனா அண்மையில் அறிவித்திருந்தது. என்றாலும் இலங்கை போன்ற பல நாடுகளில் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கும் அனல் மின் நிலையங்கள் அந்தந்த நாடுகளின் மண்ணையும், காற்றையும், நீரையும் மாசு படுத்தி வருகிறது. அந்தந்த நாட்டு மக்களை  பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுத்தி வருகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து மீள்வதற்காக உலகம் மாற்று வழிகளான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  ஆற்றலைத் தேடி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது, இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியுடன் மண்ணையும், காற்றையும், கடலையும், நீரையும் மாசு படுத்தும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்க முன்வந்தது. 

இலங்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்வதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகளைக் கொண்ட நாடாகும். இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஆண்டு முழுவதும் நல்ல சூரிய ஒளியைப் பெறுகின்றன. மேலும், நீர் மின்சாரம் மற்றும் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை இலங்கை கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்  சூழலை மாசு படுத்தும்  நிலக்கரி மின் உற்பத்தி நிலையமொன்றை உருவாக்கியதன் விளைவாக  எமது நாட்டுக்கு  அரசியல், பொருளாதார, சூழலியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

தற்போது ஏற்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும்,  நிலக்கரியின் எதிர்மறையான விளைவுகள் காரணமாகவும்  பல நாடுகள் நிலக்கரியின் பயன்பாட்டை தவிர்த்து வருகின்றன. கந்தகம், நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட் ஆகியவை நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களாகும்.

இவை சுற்றுச்சூழல் மாசு படுத்துவதோடு, மனித ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்து மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நச்சு வாயுக்கள் மனித சுவாச அமைப்பு தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன.

எரியூட்டப்படும் நிலக்கரியினால் வெளியாகும்  சாம்பல் கழிவுகள் மிகவும் ஆபத்தானவையாகும்.   இதில் பாதரசம் போன்ற கன உலோகங்கள் அடங்கியுள்ளன, எனவே இவை மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழல் இருப்புக்கும் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின்  நிர்மாணப் பணிகள் ஆரம்பமான போது,  காணி இழப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கியப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பல போராட்டங்கள் இப்பிரதேச வாசிகளால் நடாத்தப்பட்டன.

மக்களின் இந்த ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமலேயே அதிகார வர்க்கம் இந்த அனல் மின் நிலையத்தின  நிர்மாணப் பணியை ஆரம்பித்தது. தற்போது,  இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் பாரிய சுற்றாடல் பிரச்சினைகளுக்கும்  சுகாதார பிரச்சினைகளுக்கும் இப்பிரதேசம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்த நிலக்கரி மின் நிலையத்தினால் வெளியேற்றப்படும் சுடுநீர் கல்பிட்டி கடற்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதாக அவ்வப்போது புகார் எழுந்ததுடன், முறையாக அப்புறப்படுத்தப்படாத சாம்பலால் காற்று மாசடைந்துள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படகின்றன.

இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​நிலக்கரி எரிப்பிலிருந்து வெளியேறும் சாம்பல் அப்பகுதி முழுவதும் விவசாய நிலங்கள் மற்றும் திறந்த நீர் நிலைகளில் படிந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி ஒரு முக்கிய ஆற்றல் சக்தியின் ஆதாரமாக இருந்தபோதிலும், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும், மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும்,  நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றீடாக,   நாம் தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகர்வது அவசர, அவசிய தேவையாக இருக்கிறது.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .