2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் குறித்து டொக்டர் ஐ. பிரபாத் விளக்குகிறார்

பெரிய கற்களைவிட, சிறு கற்கள் அதிக வலியைக் கொடுக்கும்.  வலி, ஊமை வலிபோல இருக்கலாம். அல்லது, திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தாலும், வாகனங்களில் போகும்போதும் ஏற்படும் அசைவுகளாலும்  வலி ஏற்படலாம். வலி ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும்; அதன் பின் வலி நின்று விடலாம்.

சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும். எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றியும் அந்த வலி இருக்கும்.

சிறுநீர்ப் பையிலிருக்கும் கல் அடிவயிற்றில் வலியைக் கொடுக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும். பெரும்பாலும் இது ஆண்குறியின் நுனியில் ஏற்படும். திடீரென்று மிக அசாதாரண அடி வயிற்று வலியை அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார்  மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றும் டொக்டர் ஐ. பிரபாத் பத்திரன MBBS, MD, MRCS. சிறுநீரகக் கல் தொடர்பான இவருடனான உரையாலை கேள்வி-பதில் வடிவத்தில் கீழே தருகின்றோம்.

கேள்வி -  சிறுநீரகக் கற்கள் உண்டாகும் சந்தர்ப்பங்கள் எவை?

பதில்: சிறுநீரகக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீர் அருந்தாத தன்மையால் உடலில் ஏற்படுகின்ற வறட்சியின் காரணமாக கல் உருவாகின்றது. நாம் அருந்தும் தண்ணீரைப் பொறுத்தும் கற்கள் உருவாகக் காரணமாக அமைகின்றது. அதாவது, அந்தத் தண்ணீரில் கல்சியம் கூடுதலாக இருப்பதால் கற்கள் உருவாகின்றன. வெப்பம் அதிகமான பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்தக் கற்கள் உருவாகக் காரணமாகிறது.

சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப் பையில் தேங்கி நிற்கின்ற சிறுநீராலும்  கற்கள் உருவாகின்றன. சிறுநீர் வருகின்ற பாதையில் ஏற்படுகின்ற தடையால் கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற நீண்டகால கிருமித் தொற்றுக்களாலும் கற்கள் உருவாகக்கூடிய தன்மையுள்ளது. விசேடமாக பரம்பரையாக இருப்பவர்களுக்கும் வம்சாவழியாக இது வரலாம்.

மேலும் உணவு, மாமிசத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஓக்ஸலேட் அதிகமாக இருந்தாலோ, நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ, பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களை உண்ணாமல் இருந்தாலோ கற்கள் உருவாகும். ஆண்களுக்கு பொதுவாக 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும், பருமனாக இருப்பவர்களுக்கும் மிகவும் எளிதாகக் கற்கள் உருவாகலாம். நீண்ட நாள்களுக்கு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தாலும் கற்கள் உருவாகலாம்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஒட்டக இறைச்சி, மான் இறைச்சி, மரை இறைச்சி, பன்றி இறைச்சி போன்ற பல இறைச்சி வகைகளை மிக அதிகமாக உண்ணுவதன் மூலம் யூரிக் அசிட்  என்ற கற்கள்  உருவாகின்றன. மேலும், தக்காளிப்பழம் அதிகமாக சாப்பிடுகின்றவர்களுக்கு (ஓக்ஸலேட்) என்ற கற்கள் உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றது.

கேள்வி - சிறுநீரகக் கற்கள் எங்கே உருவாகின்றன?

பதில்: கற்களின் உருவம், அளவு, வளரும் இடம் போன்றவற்றைப் பொறுத்தே அதன் அறிகுறிகளும், வலிகளும் காணப்படும். அதாவது, சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள், சிறுநீர்க் குழாயில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் என நான்கு இடங்களில் இந்தக் கற்கள் உருவாகின்றன.

மிகக் கூடுதலாக சிறுநீரகத்தில்தான் கற்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் கற்கள் சிறுநீர்க் குழாயில், சிறுநீர்ப் பையில், சிறுநீர்ப் பாதையில் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பெரியளவிலான வலியை ஏற்படுத்துவதில்லை. இந்த வலி கூர்மையான வலி இல்லாமல், ஒரு மழுக்கமான வலியாகக் காணப்படும். இந்த வலி மிக நீண்டகாலமாக இருக்கும். இதை தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றபடியால் அதனை அவர்கள் கணக்கில் எடுக்காமல் உதாசீனப்படுத்தியவர்களாக தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வார்கள்.

இவ்வாறு உதாசீனப்படுத்திச் செல்லச் செல்ல சிறுநீரகத்தில் இருக்கின்ற கல் வளர்ந்துகொண்டே செல்லும். இதனால் கிருமித் தொற்று ஏற்படத் தொடங்கி, அது சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்துவிடும்.

இது இரண்டு பக்கமும் உள்ள சிறுநீரகத்தை கல் அடைக்குமாக இருந்தால் இரு சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்துவிடுவது. அது மாத்திரமல்லாமல் நீண்டகால சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். (சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாவிட்டால்) சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கற்கள் தங்களால் தாங்க முடியாதளவு வலியை ஏற்படுத்திவிடும். இதைத் தாங்க முடியாதவர்கள்தான் வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தருகின்றார்கள்.

இந்த வலியை யாரும் தாங்க மாட்டார்கள். இந்த வயிற்று வலி ஆணுறுப்பை அல்லது பெண்ணுறுப்பை நோக்கி பரவி வருவதுபோல் காணப்படும். அது மாத்திரமல்லாமல் வாந்தி வருவதுபோல் இருக்கும், சலத்துடன் இரத்தம் வெளியேறும், காய்ச்சல் வரும், காய்ச்சல் வருகின்ற சந்தர்ப்பமாக இருக்குமாக இருந்தால், இது சிறுநீரகத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும்.

சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்களால் சிறுநீர் தடைப்பட்டு சிறுநீர் வெளியேற்றுவதைத் தடுக்கும். இதனால் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறும். எமது சிறுநீர்ப் பையின் கீழாக ப்ரெஸ்றேட் என்ற சுரப்பி ஆண்களுக்கு காணப்படும். இது வயது செல்லச் செல்ல விரிவடையத் தொடங்கிவிடும். அதனால் சிறுநீர் வெளியேறும் பாதையை தடைசெய்துவிடுகின்றபோது சிறுநீர் சொட்டுச் சொட்டாகத்தான் வெளியேறும். மீதமானவை தேங்கி நிற்கின்றது. இதனாலும் கற்கள் உருவாகின்றன. இதற்குக் காரணம் ப்ரெஸ்றேட் வீங்குவதேயாகும். இது வயதானவர்களுக்கு மட்டும்தான் உருவாகும்.

ப்ரெஸ்றேட் வீக்கமானவர்கள் வைத்தியர்களை நாடிச் செல்வார்கள் அவர்களின் முறைப்பாடு எவ்வாறு இருக்கும் என்றால், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகின்றது, ஒரு எரிவுத்தன்மையும் உருவாகின்றது, இடையிடையே அடைப்பும் ஏற்படுகின்றது என்று கூறுவார்கள்.     

சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் ஆணுறுப்பின் பாதையிலும், பெண்ணுறுப்பின் பாதையிலும் அடைத்துவிடும். அவ்வாறு அடைத்துவிட்டால் சிறுநீரை வெளியேற்ற முடியாது. யுரீத்ராவில் கற்கள் தடையாக உருவாகி விட்டாலோ அல்லது சிறுநீர் போய்க் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று நின்று விட்டாலோ சிறுநீர்ப் பையில் கற்கள் இருப்பதற்கான அடையாளங்களாகும்.

இவ்வாறு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வழக்கமாக உடலைப் பரிசோதிக்கும்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக உடலை பரிசோதிக்கும்போதும் கண்டுபிடிக்கப்படலாம்.

சிறுநீரகத்தில் சிறிய கற்கள் இருக்குமாக இருந்தால் மருந்துகள் மூலம் அதனை வெளியேற்றக் கூடியதாக இருக்கும். பெரிய கற்களை அகற்றுவதாக இருந்தால் அதற்கு பல வகையான முறைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் எங்களின் சிகிச்சைகளை முன்னெடுப்போம்.

மருத்துவ உலகுக்கு மிக மிக அண்மையில் அறிமுகமான திறன்மிக்க இன்னும் ஒருமுறை இருக்கின்றது. அதன் மூலம் வெட்டுவதுமில்லை, துளையிடுவதுமில்லை. அது எவ்வாறென்றால், ESWL (Extra Coporeal Shock Wave Lithotripsy) என்ற கருவி மூலமாக கதிர்களை உட்செலுத்தி அதிர்வலைகள் ஊடாக கற்களை உடைத்து சிறுநீருடன் வெளியேற்றச் செய்யும் முறையாகும். இதன் மூலம் மிகப்பெரிய கற்களையோ அல்லது மிகச் சிறிய கற்களையோ உடைக்க முடியாது. ஓரளவான 1.5 சென்றி மீற்றருக்கும் குறைவான அளவுள்ள கற்களை மட்டுமே அகற்றலாம்.

தொழிநுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் உடலை அறுத்து செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் மிக மிகக் குறைந்து விட்டன. இப்போதெல்லாம் மிக அரிதாகவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மிகவும் சிக்கலான தருணங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

கேள்வி - சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் வழி முறைகள் என்ன?

பதில்: ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 3 லீற்றர் தண்ணீரை குடித்து வரவேண்டும், சிறுநீரை அடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், உரிய நேரத்துக்கு சிறுநீரை கழித்துவிடவேண்டும். இதை முறையாக நாம் செய்து வருவோமாக இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் விளைவதை தடுத்துக்கொள்வதுடன் எமது சிறுநீரகத்தையும் பாதுகாத்து க்கொள்ளலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .