2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுய பாதுகாப்பு எனும் ஒற்றை வழி

Johnsan Bastiampillai   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில் 

 

 

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கட்டத்தில், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அல்லாடுகிறார்கள். 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவல் வேகம், சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. வீதியில் இறங்கினாலே, நாம் சந்திக்கும் நபர்களில் ஒருவராவது, கொரோனா தொற்றோடு இருப்பார் என்கிற அளவுக்கு அந்த நிலை இருக்கின்றது. 

உலக அளவில், கொவிட்-19 பெருந்தொற்றால் இறப்பவர்களின் வீதத்தில், இலங்கை முதலிடத்தில் இருக்கின்றது. வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன. ஒரு படுக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்துப் பராமரிக்கும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் நெருக்கடி நீடிக்கின்றது. 

‘1990’ என்கிற நோயாளர் காவு வண்டிகளுக்கான அழைப்பை ஏற்படுத்தினால், அது கிடைப்பதற்கே பல மணி நேரமாகிறது. அவ்வளவு நெருக்கடியான நிலையொன்றை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறான நிலையில்தான், சுகாதார அமைச்சராக இருந்த பவித்திரா வன்னியாராச்சி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கெஹலிய ரம்புக்வெல, புதிய அமைச்சராகி இருக்கிறார். 

ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தின் வைத்தியத்துறைசார் நிபுணர்கள் பலர், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதிலும், பவித்திரா வன்னியாராச்சிக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது. அவருக்கு அந்த அமைச்சு வழங்கப்பட்ட போதே, விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

அவரும், அந்த விமர்சனங்களுக்குத் தகுதியானவர் போலவே பல நேரங்களில் நடந்தும் இருந்தார். குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, மந்திரித்த பானையை ஆற்றில் விட்ட சம்பவம் எல்லாமும் நடந்தது. 

ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், சுகாதார அமைச்சரான அவரிடத்தில் இருந்த, முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதியிடமும் அவரால் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்புச் செயலணியிடமும் சென்றன. சுகாதார அமைச்சர் என்கிற ஓர் அடையாளத்தோடு மாத்திரமே, அவர் இருக்க நேர்ந்தது. 

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கி தொற்றாளர்கள், மரணிப்பவர்களின் விவரங்கள் வரையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய கொரோனா தடுப்புச் செயலணியின் அனுமதியோடு வெளிவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இன்றைக்கு புதிய சுகாதார அமைச்சர் பதவியேற்றுவிட்ட போதிலும், அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதும் இராணுவத்தினர் வெளியிடுவதுதான் தரவுகள்; சுகாதார துறையினரோ அமைச்சரோ அதுபற்றி எதுவித விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது.

இவ்வாறான நிலை நீடிக்கும் போதுதான், பவித்திரா வன்னியாராச்சியிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சரவைக்குள் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அமைச்சு மாற்றம் தொடர்பில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், பவித்திரா வன்னியாராச்சியிடம் இருந்து சுகாதார அமைச்சு மாற்றப்பட்டது. அதனை, அவர் வெளிப்படையாகப் பேசவும் செய்தார். 

அதாவது, சுகாதார அமைச்சக ஊழியர்களிடம் பிரியாவிடை பெற்றுச் செல்லும் போது, “...நான் ஜனாதிபதி செயலகம் செல்லும் வரையில், என்னுடைய அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படப் போகின்றது என்பதை அறியவில்லை...” என்றார். அத்தோடு, அரசனும் ஆலோசகரும் காட்டுவழியாக நடந்து செல்லும் கதையொன்றைக்கூறி, எது நடந்தாலும் நன்மைக்கே என்று சொல்லி, தன்னுடைய கவலையை மறைப்பதற்கு முனைந்தார்.

இன்னொரு பக்கம், புதிய சுகாதார அமைச்சராகப் பதவியேற்ற கெஹலிய ரம்புக்வெல, “மக்கள், பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதனைத் தவிர, இப்போது செய்வதற்கு ஏதுமில்லை. நாட்டினை மீண்டும் முடக்க முடியாது. அப்படிச் செய்தால் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படும்” என்றிருக்கின்றார். 

நாடு எதிர்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை, எவ்வாறு கடக்க வேண்டும் என்கிற எந்தவித சிந்தனையும் அரசாங்கத்திலுள்ள யாரிடத்திலும் இல்லை. ஆலோசனையைக் கூறக்கூடிய துறைசார் நிபுணர்களையும், அரசாங்கம் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. வெளியில் இருந்து சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. 

இப்படியான நிலையில்தான், இவ்வாறான அமைச்சரவை மாற்றம், பசில் ராஜபக்‌ஷவுக்கு நிதி அமைச்சு என்று ஊடகங்களில் கவனத்தைச் சிதறடிக்கிறார்கள். பசில் நிதியமைச்சரானதும் நாட்டின் டொலர் இருப்பு அதிகரித்துவிடும், பொருளாதார சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்பது மாதிரியான பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. 

ஆனால், திவாலடையும் நிலையில் இருக்கும் நாட்டை, ஒரே நாளில் மாற்றுவதற்கு யாராலும் முடியாது. பசிலும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர், நிதி அமைச்சரானதும் அத்தியாவசியப் பொருட்களில் விலைகளில் அதிகரிப்பும், சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடுமே ஏற்பட்டிருக்கின்றது.

திறைசேரியில் பணம் இல்லை; தங்கமும் இல்லை எனும் போது, நாட்டை மீண்டும் முடக்கும் அளவுக்கான தைரியம் அரசாங்கத்திடம் இல்லை. ஏனெனில், கடன்களை வழங்கவும் தற்போது சீனா பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை. அப்படிக் கடன்களை வழங்கினாலும் அந்தக் கடன் பெறுமதிகள் என்ன துறையில் முதலிடப்பட வேண்டும் அல்லது செலவழிக்கப்பட வேண்டும் என்கிற வரையறைகளை சீனா கடுமையாக விதித்திருக்கின்றது.

அப்படியான நிலையில், நாளாந்த அரச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குக் கூட அரசாங்கம் நிதி நெருக்கடிகளால் தள்ளாடுகின்றது. இந்நிலையில், மக்களின் மீது அக்கறை கொள்ளும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

கொரோனா வைரஸ் நெருடிக்கடி என்பது, நாட்டின் சாதாரண மக்களை மாத்திரமல்ல, இன்றைக்கு மேல் மத்தியதர வர்க்கத்தினரைக்கூட அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டது. 

எவ்வளவு பணம் இருந்தாலும்கூட, வைத்தியசாலைகளிலோ, அல்லது கொரோனா மையங்களிலோ அனுமதியைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. 
இன்றைக்கு நாட்டில் அரசியல் அதிகார உச்சமட்டங்களில் இருப்பவர்களுக்குத்தான் அனைத்துவிடயங்களும் இலகுவாக கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. வைத்தியசாலைகளில் அனுமதி தொடங்கி, மருந்துகள் வரையிலும் அத்தியாவசிய தேவைகள் முதல் சேவைகள் வரையிலும் அவர்களுக்குத்தான் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கப்பெறுகின்றன. அப்படியான நிலையில், அதிகார மட்டத்தில் உச்சபட்ச செல்வாக்கு இல்லாத யாருமே, பெரும் அச்சுறுத்தலுக்குள் இருப்பதாகவே கொள்ள முடியும்.

ஆடி அமாவாசை விரதத்துக்காக மாமாங்கப் பிள்ளையாரில் ஆயிரக்கணக்கில் கூடுவதோ, நல்லூர் கொடியேற்றத்துக்காக படையெடுத்துச் சென்று அனுமதி மறுக்கப்பட்டதும் வீதிகளில் நெருக்கமாக அமர்ந்து போராடும் தோரணையை வெளிப்படுத்துவதோ தற்போதையை சூழ்நிலையில் மிகவும் பொறுப்பற்ற செயலாகும். அது, எந்தவித மத மார்க்க நிறுவனங்களிலும் கூட, அவ்வாறாக மக்கள் கூட்டங்களை அனுமதி என்பது முட்டாள்தனமானது.

கையால் ஆகாத அரசாங்கமொன்று நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மக்கள், தாங்கள்தான் தங்களது பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டும். 

தனித்திருத்தல், சுத்தமாக இருத்தல் என்பது கொரோனா நெருக்கடிகளை தாண்டுவதற்கான முக்கிய விடயங்களாகும். அதைத் தவிர்க்கும் எந்தச் சிறிய சூழலும் மரணத்தின் பக்கத்தில் மக்களை நிறுத்தும் என்பது, நாளாந்தம் 150க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களைக் காணும் போது உணர்ந்து கொள்ள முடியும். 

ஏற்கெனவே, அரசாங்கம் வெளியிடும் எண்ணிக்கைகளைவிட தொற்றாளர்களினதும் மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை சில மடங்குகளாவது அதிகமாக இருக்கலாம் என்று, சுகாதார துறையினர்  எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், மக்கள் அலட்சியங்களைக் குறைத்துக் கொண்டு, தம்முடைய பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டும். 

தம்முடைய பாதுகாப்பு என்பது, சமூகப் பாதுகாப்பாகவும் நாட்டினது பாதுகாப்பாகவும் மாறும். ஆள்பவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக, மக்கள் மரணிக்க வேண்டியதில்லை. சுய கட்டுப்பாடு, பாதுகாப்போடு நெருக்கடியை கடக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X