Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 மே 16 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முகம்மது தம்பி மரைக்கார்
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மிகவும் முட்டாள்தனமாக செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கை அடைய முடியாது.
தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் - நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும்.
தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு என்பது, பிட்டும் தேங்காய்ப்பூவும் போலானவை என்று சொல்வதில் உண்மையில்லை என்பது நமக்குத் தெரியாததல்ல. ஆனாலும், திரும்பத் திரும்ப அவ்வாறான பொய்களை நாம் சொல்லி மகிழ்கின்றோம்.
இலங்கை வரலாற்றில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவுமாக வாழ்ந்த காலம் இல்லாமலில்லை. ஆனால், இப்போது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாய் ஒரு பகைமை இருந்து கொண்டிருக்கிறது. சில சமயம் அந்த நெருப்பு, கொழுந்து விட்டு எரியும் நிலையும் அவ்வப்போது ஏற்பட்டுத் தொலைகின்றது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று சர்ச்சையைக் கிளப்பி விட்டிருந்தது. ஐயூப் அஸ்மின், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்தவர். வட மாகாண சபைக்கான தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்குக் கிடைத்த போனஸ் ஆசனமொன்றை , நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கியது. அந்த ஆசனத்துக்கு அஸ்மின் நியமிக்கப்பட்டார்.
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். அந்த இணைவு இயற்கையானது. மேலும், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்குவதற்கு எதிராக, தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என, வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு எதிராக முஸ்லிம் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஒருபடி மேலே சென்று, ஐயூப் அஸ்மினையும் அவர் சார்ந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியையும் கடுமையாகச் சாடினார்.
“முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது எனக் கூறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்” எனவும் ஹிஸ்புல்லா கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் எனவும், அது இயற்கையானது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.
இதனையடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. ‘வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் வகையில், அதிகாரப் பகர்வை மேற்கொள்வதே நடைமுறைச் சாத்தியமான, நீதியான தீர்வாக அமையும்’ என்று, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராட்டுத் தெரிவித்ததோடு, “இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்” எனவும், அவர் வலியுறுத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாடாகும்.
இன்னொருபுறம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினுடையது அல்ல என்பதை, அந்த முன்னணியின் அறிக்கை மூலம் விளங்கிக் கொள்ள முடிந்தது.
அதேவேளை, ஐயூப் அஸ்மினுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான உறவில் ஏதோ சிக்கல்கள் உள்ளன என்பதையும், மேற்படி சர்ச்சையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைவு குறித்துப் பேசப்படும் ஒவ்வொரு தருணத்திலும், முஸ்லிம்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிக்கிளம்புகின்றமையைக் காண முடிகிறது. முஸ்லிம்களின் இந்த எதிர்ப்பு எதைச் சொல்கிறது? ‘தமிழர்களுடன் அரசியல் ரீதியாக இணைந்து வாழ, எங்களுக்கு விருப்பமில்லை’ எனும் மனநிலையை அது வெளிப்படுத்துகிறது.
இந்த நிலைவரம் கவலைக்குரியதாகும். பிட்டும் தேங்காய்ப்பூவுமாக வாழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு மிக மோசமானதாகும்.
ஆனாலும், அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு சமூகங்களில் ஒன்று, மற்றையதைப் பார்த்து, “அரசியல் ரீதியாக உன்னுடன் ஒன்றிணைந்து வாழ எனக்கு விருப்பமில்லை” என்று சொல்வதற்குப் பின்னாலுள்ள காரண, காரியங்கள், அடையாளம் காணப்படுதல் அவசியமாகும். பிரச்சினைகளை இனங்காணாமல், தீர்வைப் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
“வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும்” என்பது தமிழர் தரப்பின் கோரிக்கையாகும். ஆனால், மேற்படி “இரண்டு மாகாணங்களும் பிரிந்திருப்பதையே நாங்கள் விரும்புகின்றோம்” என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் கூறுகின்றனர்.
ஒவ்வொரு தரப்பினருக்கும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கான முழு உரிமையும் உள்ளது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு முஸ்லிம்களிடம் தமிழர் தரப்பு கோரலாம். ஆனால், இரண்டு சமூகங்களுக்கும் இடையில் அதற்கான நல்லுறவு இருக்க வேண்டும். இல்லாத நல்லுறவை வைத்துக் கொண்டு, மேற்சொன்ன இலக்கை அடைய முடியாது.
தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் நீறு பூத்துக் கிடக்கும் பகை நெருப்பு, எந்தளவு மோசமானது என்பதை அண்மையில் கூட அடையாளம் காண முடிந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக ஹர்த்தால் போராட்டமொன்று இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில், அவர்களின் உறவினர்கள் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம்கள் இந்த ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்றன. சாதாரணமாகப் பார்த்தால், இது கவலைக்குரிய விடயமாகும்.
ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு சிறுபான்மை சமூகங்கள், ஒன்றை இன்னொன்று மறுத்தும், எதிர்த்தும் நடத்தல் மகிழ்ச்சிக்குரியதல்ல. ஆனாலும், முஸ்லிம்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பது குறித்தும் தமிழர் சமூகம் யோசிக்க வேண்டும். அதற்கான காரண, காரியங்கள் குறித்தும் ஆராய வேண்டும். அதை விடுத்து, ‘ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்காமை கவலையளிக்கிறது’ என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போல், தமிழர் சமூகம் பேசுமாக இருந்தால், அது ஆரோக்கியமாக அமையாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போது, அப்போதைய தமிழர் நிருவாகத்தின் கீழ், முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு முஸ்லிம்களிடம் இன்னுமுள்ளது.
புலிகளின் காலத்தில், முஸ்லிம்கள் மீது அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, அவர்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டமையையும் அந்தச் சமூகம் இன்னும் மறக்காமல் உள்ளது. இதுபோன்ற கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாகத்தான், வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்று, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியிருப்பதைக் கூடப் பார்க்க வேண்டியிருக்கிறது.
வடமாகாண சபைக்கான ‘போனஸ்’ ஆசனமொன்றை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றெடுத்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக, வடக்கு, கிழக்கு விவகாரத்தில் கருத்துச் சொல்லியிருப்பதை, மேற்சொன்ன கோணத்தில் நின்றுதான் ஆராய வேண்டியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவை தமிழர் சமூகம் கோருவதாக இருந்தால், அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற கேள்வியும் இங்கு உள்ளது. முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை ப் பெற்று விடலாம் என, தமிழர் தரப்பு நினைக்குமானால், அந்த முயற்சி தோற்றுவிடும்.
ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி, தமிழர் தரப்பு மேற்கொண்ட ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தரப்புகள் ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தன. இதனால், ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம்களின் ஆதரவும் கிடைத்து விடுமென்று தமிழர் தரப்பும் நம்பியது.
ஆனால், ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை. “ஹர்த்தால் ஏற்பாட்டாளர்கள் எவரும், எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை. அதனால்தான், நாங்கள் கடையடைப்புச் செய்யவில்லை” என்று, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சில வர்த்தக சங்கங்கள் தெரிவித்திருந்தமை அவதானத்துக்குரியது.
இந்த நிகழ்வு நல்லதொரு படிப்பினையுமாகும். எல்லா விடயங்களிலும், அரசியல் கட்சிகளின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதற்கு மக்கள் தயாரில்லை என்பதை, மேற்படி சம்பவம் நிரூபித்திருக்கிறது. மேலும், மக்களுடன் நேரடியாகப் பேசுவதுதான் சில தீர்வுகளைக் கிட்டச் செய்யும் என்பதையும் இந்த நிகழ்வு, மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களா? இல்லையா? என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரும் வகையில், தமிழர் தரப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள ஆரோக்கியமான விடயங்கள் எவை என்பதனை மீளாய்வு செய்தல் அவசியமாகும்.
சம்பந்தனும் ஹக்கீமும் மூடிய அறைகளுக்குள்ளிருந்து பேசுவதன் மூலம், தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வெறுப்பையும் கசப்பையும் அகற்றி விட முடியாது. இரண்டு சமூகங்களுக்குமிடையில் ஆழமானதொரு பகைமை இருப்பதனை இரண்டு தரப்பினரும் முதலில் ஏற்றுக் கொள்தல் வேண்டும். அந்தப் பகைமையை நினைத்தாற்போல் கழற்றி விட முடியாது. அவை, கறைகளல்ல; காயங்களாகும்.
முதலில், தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான வெறுப்புணர்வுக்கு முடிவு காணப்படுதல் வேண்டும். அதனை முந்திக் கொண்டு மேற்கொள்ளப்படும், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.
இன்னொருபுறம் ‘சுடுகிறது மடியைப்பிடி’ என்பது போல், அவசரமாகவும் இதனை நிறைவேற்ற முடியாது. இதற்கு நீண்ட காலம் தேவையாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கு சமாந்தரமாக, தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இதுவரையில் அது நடைபெறவில்லை.
மாறாக, “வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கினால், இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்குவோம்” என்று, தமிழர் தரப்பின் பழுத்த அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது, குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்துப் பராக்குக் காட்டுவதற்கு ஒப்பானதாகும்.
இவ்வாறான கூற்றுகள் ஒன்றுக்கும் உதவாதவை. சிந்தனைத் தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உணர்வு ரீதியாகக் கையாளப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை, ஒரு மோசடிக்கார வியாபாரியின் மன நிலையுடன் அணுக நினைப்பது பெருந் தவறாகும்.
தற்போதைய அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு சற்று அதிகமாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு ஒரு தீர்வு கிடைப்பது சந்தோசமான விடயம்தான்.
ஆனால், தமக்கான சித்திரம் பற்றி சிந்திப்பவர்கள் அதனைத் தீட்டுவதற்கான சுவர்கள் விடயத்தில் அசட்டையாக இருக்கக் கூடாது. சுவர்கள் என்று இங்கு நாம் குறிப்பிடுவது, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லுறவாகும்.
தமிழர் - முஸ்லிம் நல்லுறவென்பது சம்பந்தனுக்கும், ஹக்கீமுக்கும் இடையிலான தனிநபர் நட்பல்ல; அது ஆழமானது; பரந்து பட்டது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முன்னர், இரு சாராருக்கும் இடையிலுள்ள பகைமை களையப்படுதல் வேண்டும்.
பிறகுதான் நல்லுறவு பற்றிய பேச்சுகளுக்குச் செல்ல வேண்டும். சில கசப்பான உண்மைகளை ஏற்பதற்கும், சொல்லி மகிழும் பொய்களைத் துறப்பதற்கும் நாம் தயாராக இல்லாத வரை, அதனை நம்மால் அடைந்து கொள்ள முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago