Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 07 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.
ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. பிரதேச மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான வாழ்வு பற்றி கூடிய கரிசனம் செலுத்தியுள்ள துறைசார் அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அத்தோடு, சோதடைந்துள்ள வாழ்விடங்களை முழுமையாக சீரமைத்துக் கொடுப்பதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரச தரப்புக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இயற்கை மற்றும் மனித செயற்பாடுகள் சார்ந்து ஏற்படும் அனர்த்தங்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்து நிலைமைகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும். அந்த வகையில் அரசாங்கம், கொஸ்கம- சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் எந்தவித தாமதமும் இன்றி செயற்பட்டிருக்கின்றது. அது வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் பத்தியாளரும் அதனை மனதாரப் பாராட்டுகின்றார். ஆனால், இந்தச் செயற்பாட்டு வேகம் அல்லது பொறுப்பு பற்றிய உறுதிப்பாட்டினை அரசாங்கம் ஏனைய விடயங்களிலும் செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இந்த இடத்திலும் எழுகின்றது. அதைச் சுட்டிக்காட்டவும் வேண்டியிருக்கின்றது. அதுவும், தொடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தரப்பொன்றின் எதிர்பார்ப்புச் சார்ந்து. அரசாங்கம், தன்னுடைய கூட்டுப் பொறுப்பினை புறந்தள்ளுகின்றபோது அதனை சுட்டிக்காட்டுதல் என்பதும் நீதி கோரலின் வடிவங்களில் ஒன்றுதான்.
ஆயுதக் களஞ்சியசாலையொன்றின் வெடிப்பு ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சுகாதார குறைபாடுகள் தொடர்பில் இவ்வளவு கவனம் செலுத்தும் அரசாங்கம், முப்பது ஆண்டுகளுக்குப் மேலாக ஆயுத மோதல்கள் நீடித்த வடக்கு-கிழக்கின் மீள் சீராக்கம் தொடர்பில் போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் காலம் கடத்துவதன் போக்கு எவ்வகையிலானது என்கிற எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக காணக்கூடியதாக இருந்தது. இந்த எதிர்வினைகள், கொஸ்கம- சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளையும், ஏற்பாடுகளையும் புறந்தள்ளவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட தரப்பொன்றின் எதிர்பார்ப்பாகவும் ஏக்கமாகவும் எரிச்சலாகவும் நீடித்து நிற்கின்றது.
வடக்கு-கிழக்கில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த ஆயுத மோதல்கள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பாரதூரமானவை. மக்களின் வாழ்க்கை முறையையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் முற்றாக மாற்றிவிட்டிருக்கின்றது. அவற்றை அவசரமாக மீள் சீராக்கம் செய்வதோடு, மீண்டும் அப்படியான சூழ்நிலை ஏற்படாதவாறான உறுதிப்பாட்டினை அனைத்துத் தரப்புக்குள்ளிருந்தும் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், அந்த முயற்சிகளில் பெரும் பங்காற்ற வேண்டிய அரசாங்கம் அதிலிருந்து நழுவிக்கொண்டு செல்வதுதான் இங்கு பிரச்சினையை அணையா நெருப்பாக வைத்துக் கொண்டிருக்கின்றது.
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் (மற்றும் போர்க்குற்றங்கள்) தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற அரசாங்கம், அந்தப் பங்கினை எந்தவொரு பக்கத்திலும் மனப்பூர்வமாக நிறைவேற்றி வருவதைக் காண முடியவில்லை. மாறாக, சர்வதேச ரீதியில் எழுந்திருக்கின்ற அழுத்தங்களைக் குறைப்பதற்கான மேம்போக்கான சில
நடவடிக்கைகளினூடு, விடயங்களினை முற்றாகக் கடக்க எத்தனிக்கின்றது. இது, உண்மையான செயற்பாட்டு தளத்தின் விரிவாக்கம் அல்ல.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வுகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. கடந்த ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த அமர்வுகளின் போது முக்கிய கவனம் பெறும். குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் சார்ந்து இலங்கையின் செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழலாம். குறிப்பாக, இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிப்பார். இதனைத் தொடர்ந்து. இலங்கை தன்னுடைய பதில்களையும் விளக்கங்களையும் அளிக்கும்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையொன்றை கண்ணியமாகவும் சுயாதீனமாகவும் ஸ்தாபிப்பது தொடர்பில், இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த ஓராண்டில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றதா என்று நோக்கினால், அது ஏனோதானோ என்கிற பதில்களையே தருகின்றது. குறிப்பாக, காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகம் அமைக்கப்படுவது தொடர்பிலான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ள போதிலும் அங்கு சுயாதீனத் தரப்புக்கள் உள்வாங்கப்படாமல் அரச தரப்பு மாத்திரமே உள்வாங்கப்பட்டிருப்பது சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. இன்னொரு பக்கம், நல்லிணக்கத்துக்கான செயலகம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அடிப்படைகளைச் சரியாக்காமல் அந்தச் செயலகத்தினூடு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ள முடியுமா, அது சாத்தியப்படாத பட்சத்தில் அந்தச் செயலகத்தினால் என்ன பயன்?
ஜெனீவா அமர்வுகளை வெற்றிகொள்வதற்கு அல்லது சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்காக மாத்திரம் இவ்வாறான பணியகங்களை எந்தவித உறுதிப்பாடுமின்றி அமைத்துவிட்டு, அவற்றினால் சாத்தியமான வழிகள் திறக்கும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினரை நம்பச் சொல்வது எவ்வாறானது. கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களையும் இழப்புக்களையும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பணித்துள்ள அரசாங்கம், நாட்டின் அரசியல் குளறுபடிகளை சரிசெய்வதற்கான விடயங்களில் ஒன்றாக இருக்கும், பொறுப்புக் கூறும் விடயத்தினை புறந்தள்ளுவது எவ்வாறானது. சிறிய அனர்த்தமொன்றை கையாளும் அளவுக்கான விடயமாக, வடக்கு- கிழக்கின் பிரச்சினை இல்லையென்கின்ற போதிலும் விடயங்களைக் கையாளுவதற்கான அர்ப்பணிப்புக்கள் என்பது இரண்டு இடங்களிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும்.
இன்னொரு விடயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியிருக்கின்றது. அதாவது, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்புக்களின் இராணுவம் தொடர்பிலான உணர்நிலை மற்றும் வெளிப்பாடு சார்ந்தது அது. பொதுமக்களின் வாழ்க்கைக்குள் இராணுவத்தின் தலையீடு அல்லது அண்மித்த நடவடிக்கைகள் தேவையற்றது. தேசிய பாதுகாப்பு என்பது இயல்பு வாழ்வினை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றல்ல. இந்த விடயங்களை தென்னிலங்கை தொடர்ச்சியாக கவனத்தில் எடுக்காமல் வந்திருக்கின்றது. ஆனால், கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அது பற்றி பேசுதற்கு தென்னிலங்கை முயல்கின்றது.
கொஸ்கம - சாலாவ இராணுவ முகாம், யுத்த காலத்தில் இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியசாலைகளில் ஒன்றாகச் செயற்பட்டது. வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் கொழும்பில் வந்திறங்கியதும், கொஸ்கம - சாலாவ முகாமிலும் களஞ்சியப்படுத்தப்பட்டு, யுத்த முனைகளுக்கு பகிரப்பட்டிருந்தது. இந்த முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் கடந்த காலத்தில் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாகப் பதிலுரைக்கின்றார். ஆயுதக் களஞ்சியத்தில் 10 சதவீதமான ஆயுதங்களே மீதமிருந்ததாக இராணுவம் கூறுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியோ பொதுமக்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத் தளங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கோருகின்றது.
ஆனால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து நீண்ட காலமாகின்ற போதிலும்
வடக்கு- கிழக்கில் பொதுமக்களின் வாழ்விடங்களுக்குள், கனரக ஆயுதங்களுடனும் ஆயுதக் களஞ்சியங்களுடனும் இராணுவத் தளங்களின் இருப்பினை தென்னிலங்கை என்றைக்குமே எதிர்த்துப் பேசவில்லை. ஆயுதங்களினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த வடுவையும் தாங்கி நிற்கின்ற வடக்கு- கிழக்கில், அவற்றை இன்னமும் அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்திறனையே தென்னிலங்கை வெளிப்படுத்தி வந்தது. இராணுவத்தினை பொதுமக்களின் வாழ்விடங்களிலிருந்தும் இயல்பு வாழ்விலிருந்தும் விலக்குமாறு கோரும் கோரிக்கைகளை பயங்கரவாதமாக காட்டிக் கொள்வதில் தென்னிலங்கை கடந்த காலங்களில் கரிசனை கொண்டிருந்தது.
பொதுமக்களின் காணிகளையும் சொத்துக்களையும் அபகரித்து அங்கு பாரிய இராணுவத் தளங்களை அமைத்துள்ள விடயமானது, பொது வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் மாத்திரமின்றி, பாதுகாப்புச் சார்ந்த குறைபாடுமாகும். அது, அரசியல் ரீதியான தீர்வொன்றையும் புறந்தள்ளும் காரணிகளில் ஒன்றாகும். பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிப்பது தொடர்பில் உணர்ச்சிகரமான செவ்வியொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வழங்கியிருந்தார். ஆனால், அந்த உணர்ச்சிகரமான செல்விக்கு அப்பால், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான நடைமுறைச் சிக்கல்களைச் சரி செய்வதற்கு அரசாங்கம் உண்மையிலேயே முயல்கின்றதா என்பதுவும், அதனை தென்னிலங்கையிடம் எடுத்துச் செல்வதில் அக்கறையோடு இருக்கின்றதா என்பதுவும்தான் சமாதானத்தை நோக்கிய உண்மையாக பயணத்தை இறுதி செய்யும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago