Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான்.
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் பாதையை சீராகக் கட்டமைப்பது தொடர்பிலான அக்கறையை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், வட மாகாண முதலமைச்சரை முன்னிறுத்திய பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை காலம் காலமாக தமிழ் மக்களை நோக்கியும் அவர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களை நோக்கியும் நகர்த்தப்பட்டு வந்திருக்கின்றது. அதன்போக்கிலேயே, இந்த விடயத்தையும் கவனத்தில் கொண்டு களமாற்ற வேண்டியிருக்கின்றது.
வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இரண்டு பிரதான தரப்புக்கள் இருக்கின்றன. முதலாவது தரப்பு, (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம். மற்றைய தரப்பு, தமிழ்த் தேசிய அரசியலரங்கில் தம்முடைய ஆளுகையை நிகழ்த்துவதற்கான முனைப்புக்களோடு இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி 'தீர்மானங்களின் (பிரேரணைகளின்) நாயகன்ஃ மனிதன்' என்று தொனிப்படும் ஆங்கில வாசகமொன்றை, சமூக ஊடகமொன்றில் இளம் அரசியல் நோக்கர் ஒருவர் எழுதியிருந்தார். இரசிக்கும் படியாக இருந்தது. 'தீர்மானங்களின் நாயகன்' எனும் கோடிடலுக்குப் பின்னால் கொஞ்சமாக எள்ளல் இருந்தாலும் சி.வி.விக்னேஸ்வரனும், வட மாகாண சபையும் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் பல தமிழ் மக்களின் எதிர்ப்பரசியல் சார்ந்த அரசியல் குறியீடாக கொள்ளப்பட வேண்டியவை. ஆக, தீர்மானங்களின் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் இருப்பதில் பிரச்சினையில்லை. அது, அவசியமானதொன்று. (தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அப்பால் மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் எவ்வகையானவை?, என்கிற கேள்வி இயல்பாக எழும். அது, தொடர்பிலான விமர்சனம் மக்களுக்கும் அதிகளவில் இருக்கின்றது.)
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டது திட்டமிட்ட இன அழிப்பே' என்கிற தீர்மானமும், 'இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று முன்வைக்கப்பட வேண்டும்' என்கிற தீர்மானமும் முக்கியமானவை. அவை, மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்கள். அந்தத் தீர்மானங்களை உள்- வெளி அழுத்தங்களைத் தாண்டி சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்ற முடிந்திருக்கின்றது. அப்படியான அரசியல் போக்கு அவசியமானது.
ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னரான இலங்கையின் புதிய ஆட்சியாளர்களுக்கு சர்வதேசம் பெரும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவுள்ள நிலையில், உள்ளரங்கில் சி.வி.விக்னேஸ்வரனையும், வட மாகாண சபையையும் குறிப்பிட்டளவு அச்சுறுத்தலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்கின்றார். குறிப்பாக, இறுதி மோதல்களில் அரச படைகளினால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு வெள்ளையடிக்கும் வேலைகளை முனைப்போடு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு நடவடிக்கைகள் எரிச்சலூட்டக் கூடியதுதான். அதுதான், சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி சீண்டும் அரசியல் போக்கினை ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கக் காரணம். அதுதான், சி.வி.விக்னேஸ்வரன் அகற்றப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் பின்னாலும் இருப்பது.
இணக்க அரசியல் என்பதை சில தமிழ்த் தலைவர்கள்(?) சரணாகதி அரசியல் என்கிற தோரணையில் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அப்படியான சரணாகதி அரசியல் தலைவர் ஒருவர், வட மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்கப்படுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். அதற்கான இரகசிய முனைப்புக்களையும் அவர் மேற்கொண்டிருக்கின்றார் என்று கொள்ள முடியும். ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் என்பது தமிழ் மக்களைப் புறந்தள்ளி எடுக்கப்பட வேண்டியது. அது, அந்த முயற்சிகளில் ஈடுபடும் தரப்புக்களை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து ஒட்டுமொத்தமாக அகற்றும் என்பது வெளிப்படையானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவது வெளிப்படையானது. ஜனநாயக அரசியலுக்குள் அது வழமையானதுதான். கருத்து வேறுபாடுகளும், அது சார்பிலான விவாதமும் இன்றி முறையான அரசியல் தோற்றம் பெறாது. அப்படியான நிலையில், அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பொது வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைத்து வரப்பட்ட காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடையில் சில வேறுபாடுகள் உண்டு.
அதுபோல, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனின் அன்றைய உணர்நிலைக்கும் இன்றைய உணர்நிலைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்படியான நிலையில், ஆரம்பத்தில் புரிபடாத சூத்திரமொன்றுக்குள் சிக்கிய முதலமைச்சருக்கு, ஒரு வருடத்துக்குள் வடக்கு மக்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கின்றார்கள். அதுதான், அவரின் அதிருப்தி அரசியல் வெளிப்பாடுகளில் அதிகம் தெரிவது.
இலங்கை அரசியலரங்கு விடயங்களை மிக கவனமாக உள்வாங்கி சிந்தித்து பிரதிபலிப்பதற்கான களமாகவே இருக்கின்றது. மாறாக, உடனடியாக பிரதிபலித்து பதற்றமாவது என்பது ஆளுமையற்ற அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்கிற விடயத்தை முன்வைக்கின்றது. அப்படியான நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அரசியல் சார்பில் நிறைய இயலாமைகளையும், ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்த ஆரம்பித்தார். அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை கோபம் கொள்ளச் செய்தது. அதன் உச்சத்தை, கடந்த மே மாதம் கனேடிய தமிழ் சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காட்டமாகவே வெளியிட்டிருந்தார். அந்த செவ்வியின் வீடியோக் காட்சிகளை கடந்த பொதுத் தேர்தலின் போது வெட்டி ஒட்டும் இணையத்தளங்களும், சமூக ஊடகவெளியும் அதிகமாக பகிர்ந்து கொண்டிருந்தது. (அதில், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளடங்கியிருந்தது)
கடந்த பொதுத் தேர்தலின் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரின் மேல் அதிருப்தியுண்டு. அதாவது, பொதுத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டு, அவர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கும் அளவுக்கான கோடிடல்களைக் கொண்டிருந்தமை தொடர்பிலானது. 'வீட்டை விட்டு வெளியில் வந்து வாக்களியுங்கள்' என்கிற அவரின் அறிக்கையின் பகுதியொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினரால் தேர்தல் காலத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோருவது இயல்பானது. அது உட்கட்சி ஜனநாயகம் சார்ந்தது. அதனை, முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடும் என்று நம்புவது அடி முட்டாள்தனமானது. சி.வி.விக்னேஸவரனின் பொதுத் தேர்தல் நிலைப்பாட்டோடு தமிழ் மக்கள் இணங்கவில்லை என்பது வெளிப்படையானது. அதற்காக, அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஆணையை வழங்குவார்கள் என்று கொள்ள முடியாது. அதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து, மக்களின் எதிர்ப்பையும் வேண்டிக் கொள்ளத் தயாராக இல்லை.
அத்தோடு, பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனும் பெரும் பாடத்தினைக் கற்றிருக்கின்றார். ஏனெனில், அவர் (மறைமுகமாக) முன்மொழிந்த தரப்பினை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அது, அவரை மக்களின் எதிர்பார்ப்பு சார்ந்து இயங்கி ஆக வேண்டும் என்கிற அழுத்தத்தினையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அரசியல் ஆற்றுகை செய்ய வேண்டிய கடப்பாட்டையும் அவர் மீது விடுத்திருக்கின்றது. அதற்கான முனைப்புக்களை அவரும் மேற்கொண்டிருக்கின்றார். அதுதான், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் சிறு முரண்பாடுகளில் குளிர்காய்வதற்கு வெளித்தரப்புக்கள் காத்திருக்கின்றன' என்று அவர் குறிப்பிடுவதற்கும் காரணம். உள்ளக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டது மாதிரியான தோற்றப்படை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தற்போது வெளியிட்டுவிட்டார்கள்.
இவ்வாறான நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் அகற்றத்துக்காக காத்திருந்த (தமிழ்த் தேசியத்துள் இருக்கும்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பும் அதுசார் ஊடக தளமும் இப்போது கொட்டாவி விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலுக்குள் பலமான எதிர்ச் சக்திகள் உருவாக்க வேண்டும். அது அவசியமானது. அதற்காக, குறைப்பிரசவங்களை கொண்டாட வேண்டிய தேவையேதுமில்லை. அதனை, சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கும் செய்திகளிலும் அதுதான் பிரதிபலித்து வந்திருக்கின்றது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள்ளும், தமிழ்த் தேசிய அரசியலரங்கிலும் தொடர்ந்தும் ஆற்ற வேண்டி செயற்பாடுகள் நிறையவே இருக்கின்றன. அது, இளைஞர்களின் அரசியல் பிரவேசத்துக்கான தோற்றுவாய்களை ஏற்படுத்துவது மற்றும் பதற்றமில்லாத அரசியல் தீர்வொன்றை அடைவது நோக்கியதாக இருக்க வேண்டும். அத்தோடு, முரண்பாடுகளைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், சி.வி.விக்னேஸ்வரனும் மக்களின் மனங்களை உணர்ந்து செயற்பட வேண்டும். அதுதான் அவசியமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago