2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிவில் அமைப்புகளும் இலங்கையின் சமகாலமும்

Thipaan   / 2016 மே 24 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருணாகரன்

சிவில் சமூகத்தைப் பற்றியும் சிவில் அமைப்புகளின் முக்கியத்துவத்தைப்பற்றியும் அவற்றின் பங்களிப்புகளைக் குறித்தும், இப்பொழுது அதிகமாகப் பேசப்படுகிறது. 'சிவில்' (Cvil) என்ற சொல்லின் மீது, அப்படியென்ன, திடீரென்று இப்படிக் கவர்ச்சியும் கரிசனையும் கவனமும், இந்தக் கரிசனையும் கவனமும் இயல்பாகவே உருவாகியதா அல்லது வெளியிலிருந்து இவை உருவாக்கப்பட்டிருக்கின்றனவா?

முதலில், ஏன் இந்தக் கவர்ச்சியும் கரிசனையும் என்று பார்க்கலாம்.

ஒரு காலகட்டத்தில், ஒரு சூழலுக்கு எது தேவையாக உள்ளதோ, அதைப்பற்றிய உரையாடல்களும் கவனமும் கரிசனைகளும் ஏற்படுவது வழமை. இன்றைய இலங்கைச் சூழலில், 'சிவில்' என்ற சொல்லின் மீதும் தன்மையின் மீதும் அப்படியான கவனமும் கரிசனையும் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், யுத்தத்தினால் காணாமற்போன சிவில் அடையாளத்தையும் சிவில் தன்மையையும் மீள உருவாக்க வேண்டும் என்பதே. இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால், இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் இனமுரண்பாடுகளை நீக்கி, சமாதானத்தை உருவாக்குவதற்கும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்று கருதப்படுகிறது.

அரசுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கின்ற பொறுப்புகளை உணர்த்துவதற்கும் அந்தப் பொறுப்புகளைப் பற்றிய பொதுசன விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் சிவில் சமூகத்தின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. அந்தப் பொறுப்புகளை அரசாங்கம் சரியாகச் செய்யாதபோது, அவற்றைச் சுட்டிக்காட்டித் தட்டிக் கேட்பதற்கும் போராட்டங்களை உருவாக்குவதற்கும் சிவில் சமூகம் முன்வரும், முன்வரவேண்டும். அரசாங்கத்துக்கு எதிர் நிலையில் இருக்கும் அரசியற் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்றவை, அடக்குமுறைகளுக்கு உட்பட்டால் அல்லது அவை செயலற்றவையாக இருந்தால், அந்த இடத்தில் மாற்றுக்குரல்களாக ஒலிப்பவை சிவில் அமைப்புகளும் சிவில் சமூகமுமே. அப்படியான சந்தர்ப்பத்தில் சிவில் சமூகத்துக்கே கூடிய பொறுப்புமுண்டு. கூடவே அரசாங்கத்துக்கு எதிர்நிலையிலோ பிறத்தியிலோ இருக்கும் பிற சக்திகளையும் நிதானப்படுத்துவதற்கான அழுத்தங்களையும் சிவில் சமூகமே வழங்க முடியும்.

எனவேதான் சிவில் அமைப்புகளைப்பற்றியும் சிவில் சமூகத்தைப்பற்றியும் அதிகமாகச் சிந்திக்கப்படுகிறது.

இதை இன்னும் சற்று விரிவாக்கி, நமது சூழலுடன் பொருத்திச் சொல்வதென்றால், இன்றைய இலங்கையின் அரசியற் சூழலானது, இனவாதமயப்பட்டது. இதற்குப் பிரதான காரணம், வாக்குவங்கி அரசியலே. வாக்குகளை அதிகமாகப் பெறவேண்டும் என்பதற்காக இனவாதத்தை ஒவ்வொரு தரப்பும் பேசுகின்றன. இதில் உச்சகட்டப்போட்டி ஏற்படும்போது, அந்த அளவுக்கு இனவாதம் உச்சநிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இலங்கையின் இன்றைய அரசியலும் சமூகங்களும் முற்றாக இனவாத மயப்பட்டுள்ளது.

இதிலிருந்து இலங்கையை விடுவிக்க வேண்டுமானால், இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகளுக்கும் தீர்வுகாண வேண்டுமாக இருந்தால், சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் அவசியப்படுகின்றன. தீர்வைப்பற்றிப் பேசும்போதெல்லாம், இனவாதச் சக்திகள் தீவிர நிலைப்பாட்டை எடுத்து மிக உச்சமாக இனவாதத்தைப் பேசி, அதைக் குழப்புகின்றன. இதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு அரசாங்கமும் ஏனைய அரசியற் தரப்புகளும் தீர்வு முயற்சிகளைக் கைவிடுகின்றன.

எனவே, இனவாதத்தின் விளைவாக ஏற்பட்ட யுத்தத்தையும் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையும் மக்களிடம் நினைவூட்டி, இணக்கப்பாட்டுடன் கூடிய புதிய தொடக்கத்தைப் பற்றிப் பேச வேண்டிய தரப்புகள் - சிவில் அமைப்புகள் தேவையாகவுள்ளது. அதைச் செய்வதற்கு அரசியற் தரப்புகள் முன்வராது. இனவாதமயப்பட்டிருக்கும் கட்சிகளுக்கே இன அடையாளத்தைக் கொடுத்திருக்கும் அரசியற்தரப்புகள் இதற்கு எப்படி முன்வரும். ஆகவே, சிவில் அமைப்புகள்தான் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இனவாதத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பும் ஜனநாயகத்தை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கடமையும் சிவில் சமூகத்துக்கே உண்டு.

என்பதால், சிவில் அமைப்புகளைப் பற்றியும் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றியும் ஆழமாகப் பேசப்படுகிறது. இவற்றுக்கான கூடுதல் அழுத்தமும் வரவேற்பும் இதனாலேயே ஏற்பட்டுள்ளன.

அப்படியென்றால், சிவில் சமூகம் பற்றிய அல்லது சிவில் அமைப்புகளைப் பற்றிய கரிசனையும் கவனமும் இயல்பாகவே உருவாகியதா?

இந்தக் கரிசனையும் கவனமும் இயல்பாகவும் உருவாகியுள்ளது. அதேவேளை, பிறத்தியிலிருந்தும் இந்தக் கரிசனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இனவாதத்தை நிராகரிக்கும் சக்திகளும் மாற்றத்தைக் கோருவோரும் இயல்பாகவே சிவில் சமூகத்தைப் பலமாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். இதனால் இயல்பாகவே இதைக்குறித்த அக்கறைகள் ஒரு மட்டத்தில் உருவாகியுள்ளன. ஆனால், இது போதாது. ஒரு மெல்லிய கோடாகவே இதனுடைய அடையாளம் உள்ளது.

எனவே, பிறத்தியிலிருந்து இதை வலுப்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதன்படி, இவை உள்ளூரிலுள்ள மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், மதகுருமார், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டார்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை இணைத்து, சிவில் அமைப்புகளை உருவாக்குகின்றன. கூடவே இந்த அமைப்புகள் இயங்குவதற்கான நிதி ஊட்டத்தையும் வழங்குகின்றன. அத்துடன் இந்த அமைப்புகளின் செயற்றிட்டங்களை வரைந்தும் கொடுக்கின்றன. கூடவே இவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

போருக்குப் பின்னரான சூழலை உருவாக்குதல், மீள்கட்டுமானம், புனரமைப்பு போன்றவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பின் தொடர்ச்சியாக, சிவில் சமூக உருவாக்கத்திலும் மீள்நிலைப்படுத்தலிலும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கு நாடுகளும் பங்கெடுக்கின்றன. இதன் வளர்ச்சியிலேயே பகைமறப்பு, நல்லெண்ணத்தை உண்டாக்குதல், மீளிணக்கம், அமைதி, சமாதானம், நிரந்தரத்தீர்வு என ஒரு தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று சிந்திக்கப்படுகிறது. ஆகவே, இலங்கைத்தீவின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் நிரந்தரத்தீர்வுக்குமான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற அக்கறை இலங்கைச் சக்திகளை விடவும் வெளித்தரப்புகளுக்கே அதிமாக உள்ளன எனலாம். இதற்கான ஒரு தள உருவாக்க முயற்சியாகவே ஆட்சி மாற்றத்தையும் இவை ஊக்குவித்தன. இப்பொழுது அடுத்த கட்டமாகச் சிவில் சமூகத்தைப்பற்றிய கவனங்களும் சிவில் அமைப்புகளை முன்னிலைப்படுத்தும் போக்கும் தற்போது அழுத்தம் பெற்றிருக்கின்றன.

தமக்கு வழங்கப்படும் நிதியூட்டத்துக்கு அமையவே 'சம்பிரதாய நிகழ்ச்சிகளை' பெரும்பாலான சிவில் அமைப்புகள் நிரற்படுத்துகின்றன. 'கணக்குக் காட்டினால் சரி' என்ற மனப்பாங்கின் விளைவு இது. இப்படிச் செயற்படும் அமைப்புகளால் நல்லிணக்கத்தையும் உண்டாக்க முடியாது. தீர்வுக்குப் பொருத்தமான விதத்தில் பொறிமுறைகளை உருவாக்கவும் முடியாது. மக்களை விழிப்புணர்வடைய வைக்கவும் இயலாது. அப்படியென்றால் இவற்றின் பயன் என்ன என்பது முக்கியமான கேள்வி.

இவற்றில் உள்ளவர்களின் உணர்வுத்தளமும் இல்லை. ஆகவே பின்னூட்டம் இருக்கும்வரையிலுமே இவற்றின் ஆட்டமெல்லாம். பிறகு எல்லாமே படுத்து விடும். இதற்கு சில உதாரணங்களைச் சொல்ல முடியும். போர்க்காலத்திலும் இத்தகைய 'சிவில்' ஊட்டத்துக்கான முயற்சிகள் அல்லது சமாதானத்துக்கான முனைவுகள் வெளிச்சக்திகளால் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அவை பலவழிகளிலும் முயற்சித்திருந்தன. மக்களை விழிப்புணர்வடைய வைக்கும் வகையில் செயலமர்வுகள், கருத்தரங்குகள், ஒன்று கூடல்கள், கலை நிகழ்ச்சிகள், சமாதானப் பயணங்கள், ஊடகச் செயற்பாடுகள், வெளியீடுகள் என்று பலவகையிலான முயற்சிகள்.

ஆனால், இவை எல்லாம் இவற்றுக்கான நிதியூட்டம் இருக்கும்வரையிலுமே நடந்தன. அது முடிய, எல்லாம் அப்படியே செயலிழந்து விட்டன. இதைப்போல பால்நிலைச் சமத்துவத்துக்கு, சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கு, சூழலியற் பேணுகைக்கு என முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் அவற்றின் நிதியூட்டம் நின்று போக, அவற்றின் கரிசனைகளும் முயற்சிகளும் நின்று விட்டன. இந்த முயற்சிகளில் செயற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எங்கே சென்றார்கள், என்னவானார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக வேறு செயற்களங்களில் இணைந்து செயற்படுகின்றனர்.

இப்பொழுது முன்னெடுக்கப்படும் சிவில் அமைப்புகளைப் பலப்படுத்தும் முயற்சிகளும் அவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம், மீளிணைவு, சமாதானம் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கும் இதே கதிதான் நடக்கும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் அதுதான். இல்லையென்றால், கடந்த ஏழு ஆண்டுகளில் பெருமளவுக்கு இனமுரண்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வும் சமாதானத்தின் மீதான ஈடுபாடும் உருவாகியிருக்க வேண்டுமே. ஒப்புக்கு நடக்கும் காரியங்களும் லாபத்தைக் குறி வைத்த செயற்பாடுகளும் பயனுடையவையாக அமைவதில்லை.

இதற்குக்காரணம், இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் நிதிப்பலமுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டமை. அல்லது அவர்களுடைய ஆதாரப் பின்னணியில் இயங்குவது. இன்னொரு தரப்பினருக்கு, இவற்றின் மூலம் கிடைக்கின்ற தொடர்பாடலும் அறிமுகங்களும் தேவை என்பது. இன்னொரு சாராருக்கு இவை தாம் சார்ந்த அரசியலுக்கு வாய்ப்பாக இருக்கும் என்பது. மிகக்குறைந்தளவானவர்களே இவற்றின் ஊடாக நல்ல காரியங்களைச் செய்யலாம் என்ற நம்பிக்கையோடும் நல்லெண்ணத்தோடும் செயற்படுகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த அமைப்புகளில் இருக்கும் ஏனையவர்கள் பெருந்தடையாக இருந்து விடுகின்றனர்.

இப்பொழுது இலங்கையில் சிங்களச் சமூகத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் மலையகச் சமூகத்திலும் ஏராளமான சிவில் சார்ந்த அல்லது சிவில் அடையாளமுடைய அமைப்புகள் உள்ளன. இவை பல இடங்களிலும் சிறிய சிறிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. ஆனால், இன்னும் பரந்த அளவில் ஒரு கருத்து நிலையோ, இந்தச் செயற்பாடுகள் பற்றிய அறிமுகமோ மாற்றத்துக்கான எழுச்சியோ, அலையோ உருவாகவில்லை. ஆட்சி மாற்றம் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவுதானே என்று சிலர் சொல்லக்கூடும். அது அரசியற் கட்சிகள் மட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அதற்குப் பின்னணியாகச் சில ஊட்டங்கள் இருந்தமை உண்மை. அதற்காக ஆட்சி மாற்றத்தை இந்த ஊட்டங்களே நிகழ்த்தின என்று கருத முடியாது.

இந்த நிலையில், இந்தச் சிவில் அமைப்புகள், சிவில் சமூகம், சிவில் செயற்பாடுகள் என்பவற்றின் பெறுமதி என்னவாக உள்ளது? என்ற கேள்வியை நேரடியான இங்கே முன்வைக்கலாம். எதிர்பார்க்கின்ற விளைவுகளை இவை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கான திடசங்கற்பமும் அர்ப்பணிப்பும் இவற்றில் இல்லை. மக்களுடன் கலந்திருக்கும் தன்மை கிடையாது. சமூகமட்டத்திலான ஊடாட்ட அனுபவங்கள் இவற்றில் உள்ளோருக்குப் போதாது. அரசியற் சக்திகளையும் விட ஆளுமைமிக்கவர்களாகவும் நுண்மதியுடையோராகவும் இவற்றில் இருப்போர் இருப்பதில்லை. முக்கியமாகத் தொண்டாற்றும் மனநிலை போதாது.

வடக்கு, கிழக்கில் ‡பவ்ரல், மனித உரிமைகள் அமைப்பு, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், பிரஜைகள் குழு, கபே போன்ற அமைப்புகளில் செயற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், அரசியற்கட்சிகளின் உறுப்பினர்களே. இவர்களால் எப்படித் தாம் சார்ந்த அரசியலுக்கு அப்பால் நகர்ந்து, சிவில் என்ற பொதுத்தளத்தில், அதற்கான உணர்வோட்டத்துடன் இயங்க முடியும்? இதுபோலவே, சாதி, மதம், பிரதேசம், இனம் என்ற வேறுபாட்டுணர்வுள்ளவர்கள் பலரும் இந்த அமைப்புகளில் இயங்குகின்றனர். இப்படியான எண்ணங்களோடு செயற்படுவோரால் எப்படி மாற்றங்களைக் குறித்தும் புதிய சூழலைக்குறித்தும் நம்பிக்கையைத் தர இயலும்?

மெய்யான சிவில் அமைப்புகள், மக்களின் நலனைக்குறித்தே அதிகமாகச் சிந்திக்கும். அதற்காகத் தம்மை அர்ப்பணித்து உழைக்கும் மனப்பாங்கையும் உத்வேகத்தையும் கொண்டிருக்கும்.

சிவில் சமூகம் என்பதும் சிவில் அமைப்பு என்பதும் நேரடி அரசியற் சார்பில்லாத  பொதுத்தன்மையுடையவை. மக்களிடம் இருந்து தோன்றியது. மக்களுக்கு நெருக்கமானது. அரசியல் அபிலாஷையற்றது. இதுவே அதனுடைய பலம். பக்கம் சாராதிருந்து செயற்படும் பண்பே அதனை வலுவுட்டுகிறது.  மக்களின் உரிமைகளில் அக்கறையுள்ள, பொதுநலன் சார்ந்த, அரசியல் கட்சிகளைச் சாராத புத்திஜீவிகள், புலமையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் போன்றோர்  இதில் உள்ளடங்குவர். அடிப்படையில் சிவில் சமூகம் என்பது அரசாங்கத்துக்கும் அதனுடன் முரண்படுகின்ற அரசியல் அமைப்புகளுக்கிடையில் தரகராகவன்றி மக்களின் நலன் சார்ந்து மக்களின் பக்கம் நின்று செயற்படுவதாகும்.

இலங்கையில் ஏற்கெனவே உருவாகிருந்த சிவில் சமூகத்தின் அடிப்படைகளை நீடித்த இன ஒடுக்குமுறையும் அதன் விளைவான யுத்தமும் சிவில் அடையாளங்களை அழித்திருந்தன. அல்லது 'சிவில்' என்ற அடையாளத்தின் பெறுமானங்களைக் குறைத்திருந்தது. யுத்தத்தில் பலியிடப்படும் பல அடிப்படைகளில் சிவில் அடையாள இழப்பும் ஒன்று. ஆயுதம் எப்போதும் சிவில் தன்மைக்கு எதிரானது. இதை எளிதாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால், அப்படியான சூழலில், சிவில் உடையை, ஆயுதம் தாங்கிய சீருடை கட்டுப்படுத்தியதை அல்லது சிவில் உடையாளரைச் சீருடையாளர் ஆதிக்கம் செய்ததை நினைவிற்கொள்ளலாம். இதனால் சிவில் சமூகத்தன்மை இழந்திருந்தது.

யுத்தம் முடிந்த பிறகு, யுத்தச் சூழலிலிருந்து மீள்நிலைப்படவேண்டுமானால் சிவில் தன்மையை - ஜனநாயக மீளெழுச்சியை - மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். சீருடையாளருக்குப் பதிலாக சிவில் உடையாளரை முன்னரணுக்குக் கொண்டு வரவேண்டும். இது இலகுவான காரியமல்ல. யுத்தத்தின்போது இடிந்தும் சிதைந்தும் போவது கட்டடங்களும் பாலங்களும் பிற சொத்துகளும் மட்டுமல்ல. சமூகத்தன்மையும் அதன் பெறுமானங்களும் வாழ்வின் அடிப்படைகளும் நம்பிக்கையும் சிவில் அடையாளமும்தான்.

வீடு, மின்சாரம், பாடசாலை, வைத்தியசாலை, வீதி எனப் பௌதிக வளங்களை மீளக் கட்டியெழுப்பி விடலாம். ஆனால், சிவில் சமூகமொன்றை அதன் ஜனநாயக அடிப்படைத்தன்மைகளோடு மீள்நிர்மாணம் செய்வதென்பது இலகுவானதல்ல. அதற்குக்கடுமையான அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். ஏனென்றால், ஒரு சமூகத்தின் சிவில் தன்மை என்பது நீண்ட காலமாக உருவாகி வருவது. அதற்குப் பல்வேறு மூலக்கூறுகள் பங்களிப்பை வழங்கியிருக்கும்.

மீண்டும் சிவில் தன்மையை வலுப்பெறச் செய்வதற்கான முயற்சிகள் தற்போது பல முனைகளிலும் நடக்கின்றன. அதிலும் போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென சிவில் அமைப்புகளை மீளுருவாக்கம் செய்தல், அவற்றைப் பலப்படுத்துதல், அதற்கான பயிலரங்குகளை நடத்துதல், ஊடகச் செயற்பாடுகளின் ஊடாக சிவில் அமைப்புகளின் தேவையை உணர்த்துதல் என்று பல காரியங்கள் நடக்கின்றன. இது ஒரு வளர்ச்சிநிலைக்குப் போகவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிவில் சமூகத்தின் மீள் நிலையில் அல்லது அதனுடைய சுயாதீன இயங்கு நிலையில்தான் வாழ்வின் அடிப்படைகளும் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் உண்டாகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .