2025 மே 14, புதன்கிழமை

ஜெனீவாவைக் கண்டுகொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

Administrator   / 2017 மார்ச் 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹமட் பாதுஷா 

முஸ்லிம்களின் அரசியலானது பெருவளர்ச்சி பெற்று பக்குவப்பட்டிருக்கின்றது என்றும் அதிலுள்ள அரசியல்வாதிகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

ஆனால், சில செயற்பாடுகளைப் உற்றுநோக்குகின்றபோது, இன்னும் சிறுபிள்ளைத்தனமான அரசியலிலேயே அவர்கள் மூழ்கியிருப்பதைக் காண முடிகின்றது.  

 ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று வரலாற்றினூடு அறிந்திருக்கின்றோம். ஆனால், இல்லாத இராச்சியத்துக்காக உரிமை கொண்டாடிக் கொண்டு, முஸ்லிம்களிடையே அளவுக்கதிகமான ‘நீரோ’க்கள் இருக்கின்றார்கள்.   

முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையிலும் அரசியல்வாதிகள் என்ற வகையிலும் தமக்குக் கிடைக்கப் பெறுகின்ற வரப்பிரசாதங்களைச் சுகிக்கின்ற இவர்கள், தமது மக்களின் அடிப்படை உரிமைகள், அபிலாஷைகள், மனித உரிமைகள் பற்றித் தேசிய ரீதியில் பேசி, அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் அது முடியாத சந்தர்ப்பத்தில், சர்வதேசத்தின் உதவியை நாடவும் அக்கறை காட்டுவதில்லை என்பது முஸ்லிம்களின் கசப்பான அனுபவம் ஆகும்.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி, இன்று மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.   

இந்தக் கூட்டத் தொடரின் பிரதான அமர்வுகளிலும் உப குழுக் கூட்டங்களிலும் வழக்கம்போல, உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்ற மனித உரிமை, மனிதநலன் சார்ந்த பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டிருக்கின்றன.  

 வளர்ந்த நாடொன்றில் சிறுபான்மையாக வாழும் மக்கள் தொடக்கம், வளர்ச்சியடைந்து வரும் நாடொன்றில் உள்ள விழிம்புநிலை சமூகத்தின் விவகாரங்கள் வரை, பலதரப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டிருக்கின்றன.  
இதில் இலங்கையின் விவகாரமும் வழக்கம் போல முக்கிய இடம்பிடித்திருந்தது.

இலங்கையின் இனப்பிரச்சினை, யுத்தம், மனிதஉரிமை மீறல்கள், தீர்வுத்திட்டம் போன்ற பல விடயங்கள் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இவ்விடயங்களில் தமிழர்களுக்குரிய பங்கைச் சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர் சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் குழுமி இருந்தனர்.   

அதுமாத்திரமன்றி, இலங்கையின் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருசில அரசியல்வாதிகளும் குழுக்களும் அங்கு பிரசன்னமாகி இருந்ததாக அறிய முடிகின்றது.   

ஆனால், எந்தப் பிரச்சினையை முன்னிறுத்தி ஜெனீவாவில் இலங்கை விவகாரம் பேசப்படுகின்றதோ அதனோடு மிகவும் தொடர்புபட்ட இலங்கை முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் யாரும் ஜெனீவா சென்றதாக எந்தத் தகவலும் இல்லை.   

முஸ்லிம்களுக்குள் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா என எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்கள். அதுபோதாது என்று, அடுத்த தலைவர்களாக வருவோம் என்ற பகற்கனவோடு ஏராளம் இரண்டாம்நிலைத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல் பெருவெளியில் உலவித் திரிகின்றார்கள்.   

ஆனால், ஜெனீவா கூட்டத் தொடரில் ஒரு பார்வையாளராகவேனும் இவர்கள் யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.   
முஸ்லிம்களின் தேசியத் தலைவர்கள் என்ற மோகத்தில் இருக்கின்றவர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்ற மாயைக்குள் இருக்கின்றவர்களும் செய்ய வேண்டிய இப்பணியை முஸ்லிம் சிவில் அமைப்புகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும்தான் இன்று செய்து கொண்டிருக்கின்றார்கள்.  

உலக அளவில் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடர் என்பது மிகவும் முக்கியமானது. தமிழர்களைப் பிரதானமாகக் கொண்டதென கூறக் கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு, இன்று இந்தளவுக்கு சர்வதேச முக்கியத்துவமும் அதனைத் தீர்த்து வைப்பதற்கு அழுத்தமும் கொடுக்கப்படுகின்றது என்றால், அதில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் பங்கும் ஜெனீவா கூட்டத் தொடர்களின் பங்கும் அளப்பரியது என்றுதான் சொல்ல வேண்டும்.   

அப்படிப் பார்த்தால், இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை இனமாக இருக்கின்ற சமகாலத்தில் பெரும்பான்மை சக்திகளின் இனவாத, மதவாத ஒடுக்குமுறைகளாலும் முதலாவது சிறுபான்மை இனத்தின் பெயரில் முன்கையெடுத்திருந்த ஆயுதப் போராட்டத்தாலும் அதேபோன்று படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மனக்கிடக்கைகள், கவலைகள், எண்ணங்கள், அபிலாஷைகள் இவ்வுயரிய சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் மேற்கொண்டிருக்க வேண்டும்.   

ஐ.நா பிரதிநிதியோ அறிக்கையாளரோ இலங்கைக்கு வரும்போது, அவர்களைப் பிரத்தியேகமாகச் சந்தித்து, ஆவணங்களை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ளாமல், கடைசித் தருணத்தில் ‘நேரம் ஒதுக்கப்படவில்லை’ என்று காரணம்கூற விளைகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை, சர்வதேச மயப்படுத்துவதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்ற நிலைமைகள்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.   

சரி, அரசாங்கத்திடமாவது கட்டமைக்கப்பட்ட ரீதியில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் முன்வைக்கப்படுகின்றதா என்று பார்த்தால், அதனையும் காண முடிவதில்லை. ‘இலங்கை முஸ்லிம்களுக்கு, சர்வதேசத்திடம் சொல்லுமளவுக்கு தலையாய பிரச்சினைகள் பெரிதாக இல்லை. சொன்னாலும் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்’ என்பது போலவே, பிரதான முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.   

இலங்கை முஸ்லிம்கள், 1915 ஆம் ஆண்டில் முதலாவது இனக்கலவரத்தைச் சந்தித்தார்கள். அதற்குப்பிறகு, ஏற்பட்ட சிறுசிறு கலவரங்களாலும் 1983 இன் ஜூலைக் கலவரத்தாலும் தமிழர்களைப்போல முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.   
1980 களின் பிற்பகுதியில் இருந்து தமிழ் ஆயுதக் குழுக்களாலும் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தாலும், களையெடுப்பு என்ற கோதாவில் பாதுகாப்பு தரப்பாலும், பின்னர் சிங்களக் கடும்போக்குவாதத்தாலும் முஸ்லிம்கள் சந்தித்த சவால்களும் இழப்புகளும் கடுமையானவை.  

 அதிலும், குறிப்பாக விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கு மாகாணத்தின் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வயல்நிலங்களில், தொழிலுக்கு செல்கையில், பயண வழியில் மேற்கொள்ளப்பட்ட உயிர்ப்பறிப்புகள் போன்றவை இனமோதல்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் முதலிடம் பிடிக்கின்றன எனலாம். இவ்வாறான இழப்புகளுக்கு இன்னும் நீதி நியாயமோ பிராயச்சித்தமோ தேடப்படவில்லை.   

இதேநேரத்தில், யுத்தம் முடிவடைந்த பிறகு முஸ்லிம்கள் மீது, வேறுவிதமான ஓர் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது. தமிழர்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கியாள நினைத்ததுபோல, அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களை இனவாதம் எனும் ஆயுதத்தின் மூலம் அடக்குவதற்கு கடும்போக்கு மூளைகள் கடுமையாக வேலை செய்தன; இன்னும் வேலை செய்து கொண்டிருக்கின்றன.   

இலங்கையில் 2015 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரமும் அதன் பின்னரான அளுத்கமை மற்றும் பேருவளை கலவரங்களுமே பிரதான காரணம் என்று இப்போது கூறப்படுகின்றது.   

அதாவது, ஒருநாட்டின் ஆட்சியை புரட்டிப்போடும் அளவுக்கு பாரதூரமான சம்பவங்களாக இவை காணப்படுகின்றன. ஆனால், இப்பிரச்சினையால் ஏற்பட்ட காயத்துக்கு, இனவாதத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு இன்னும் மருந்தும் நியாயமும் கிடைக்கவில்லை.   

இவ்விடயத்தை மிகவும் கவனமாக உற்று நோக்குங்கள்! முஸ்லிம்கள் தனிநாட்டுக்காக போராடியவர்கள் அல்லர். ஆனால், மேலே பட்டியலிடப்பட்டவாறு, யுத்தத்தால் அவர்கள் பல இழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர்.   

யுத்தம் முடிவடையும் வரை, வெவ்வேறு வழிகளில் இழப்புகளைச் சந்தித்துக் கொண்டேயிருந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதேகாலப்பகுதியில் தமிழர்களுக்கு அரசாங்கத்தாலும் படையினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற அநியாயங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்குமாறே தமிழர்கள் இன்று சர்வதேசத்திடம் கோருகின்றனர்.  

இதன் அடிப்படையில், தங்களுடைய அபிலாஷைகளை, இனப்பிரச்சினைக்கான தீர்வை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். ஆனால், இதே யுத்த காலப்பகுதியில் புலிகளாலும் வேறு தரப்பினராலும் பல்வேறு விதமான மீறல்களைச் சந்தித்த முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள், தமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள், மீறல்கள் குறித்து சர்வதேசத்திடம் முன்வைப்பதில் பொடுபோக்குத்தனத்தை காட்டுகின்றனர்.   

மிகக் குறிப்பாக, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் முடிவடைந்து விட்டன. ஆனால், இன்று வரைக்கும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூரணமாகவில்லை. இதற்காக புலிகளும் பின்னர், தமிழ் அரசியல்வாதிகளும் வருத்தம் தெரிவித்திருந்த போதிலும், முழுமையாக அம்மக்களை மீளக் குடியேற்றுவதில் பாரிய நடைமுறைச் சிக்கல்களும் தடைகளும் உள்ளன.   

இது குறித்து, சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஜெனீவா கூட்டத்தொடர் போன்ற ஒரு நிகழ்வில் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைவர் யாரும் கலந்து கொண்டு, இதுபற்றிப் பேசியதாகச் செய்தி வெளியாகவில்லை. 

மாறாக, இப்பணியைச் சிவில் அமைப்புகளும், மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம் நலன்விரும்பிகளுமே செய்திருக்கின்றார்கள்.   

இது ஒருபுறமிருக்க, மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் முடிவுறும் வேளையில் இனவாதத்தால் முஸ்லிம்கள் எந்தளவுக்கு நெருக்குவாரப்படுத்தப்பட்டனர் என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது.   

அதை வைத்துத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் செய்தார்கள். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தம்புள்ளையையும் இனவாத அடக்குமுறையையுமே தேர்தல் மேடைகளில் பிரசாரப்படுத்தி வாக்குத் தேடியது.   

ஆனால், இன்று அக்கட்சியும் மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதிகாரத்துடன் அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள். தேசிய காங்கிரஸும் அரசோடு உறவு கொண்டாடுகின்றது. ஏகப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்களும் மக்களின் பெயரால் பதவிகளையும் அதன்மூலம் கிடைக்கும் வசதிவாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.   

ஆனால், இவர்கள் யாரும் இனவாதத்தால், பள்ளிகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கண்டு கொடுக்கவில்லை; அளுத்கமைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; இனவாதிகள் தண்டிக்கப்படவில்லை.   

எதற்காக முஸ்லிம்கள் கடந்த ஆட்சியை வெறுத்தார்களோ இந்த ஆட்சியிலும் அதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. இந்தச் செய்தியை, ஜெனீவா கூட்டத்தொடரில் பிரஸ்தாபிப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் யாரும் முன்வந்திருக்கவில்லை.   

பொதுவாக முஸ்லிம்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் சொல்கின்ற விடயம் என்னவென்றால், “இது எமது உள்நாட்டுப் பிரச்சினை; எனவே இதனை நாம் சர்வதேசத்திடம் போய்ச் சொல்ல வேண்டியதில்லை. உள்நாட்டிலேயே அரசாங்கத்துடன் பேசி முடிவு காண்போம்” என்பதாகும்.   

உண்மைதான். ஆனால், இதுவரை முஸ்லிம் கட்சிகளோ அன்றேல் அரசியல்வாதிகளோ அவ்வாறு அரசாங்கத்துடன் கலந்து பேசி, முஸ்லிம்களுக்கு ஏதாவது முக்கிய விடயங்களில் நியாயத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா?   

அப்படிச் சொல்வதற்கான ஆதாரங்கள் அரிதாகும். மாறாக, “இந்த அரசாங்கமும் நாங்கள் சொல்வதற்கு செவி மடுப்பதில்லை” என்று கையை விரிக்கின்ற நிலைமைகளே தொடர்கின்றன.  

 இதுபோலவே, விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட வன்கொடுமைகள், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்தும் உள்நாட்டில் எவ்வித நியாயத்தையும் பெறமுடியாத நிலையில் முஸ்லிம் அரசியல் காணப்படுகின்றது.   

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை முதலில் அரசாங்கத்திடம் முன்வைக்கவும், பின்னர் சர்வதேசத்திடம் சமர்ப்பிக்கவும் முஸ்லிம் தலைமைகள் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.   
இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு, சாதாரண அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது.

சர்வதேசத்தின் முன்னே நமது பிரச்சினைகளைக் கொண்டு செல்வது என்பது அரசாங்கத்துக்கு சவால்விடுவதோ, அறைகூவல் விடுவதோ இல்லை என்பதையும் மாறாக, இலங்கை முஸ்லிம்களும் மனித உரிமைசார் இழப்புகளை சந்தித்திருக்கின்றார்கள் என்பதை உலகறியச் செய்து, உலகின் பங்களிப்புடன் முன்வைக்கப்படும் தீர்வுகள், எடுக்கப்படும் தீர்மானங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம் என்பதையும் மறந்து விடக்கூடாது.   
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் ஐ.நாவுக்கு ஓரிரு கடிதங்கள், ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டனவெனச் சொல்லப்படுகின்றது.   

ஒருமுறை முன்னாள் செயலாளர் நாயகம் தலைமையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஐ.நா பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சம்பந்தமாக, அமைச்சரவையில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த, ரவூப் ஹக்கீமிடம் கோபப்பட்டபோது, அது செயலாளரின் நடவடிக்கை எனக் கூறியதாகக் கட்சிக்கு வெளியில் பேசப்படுகின்றது.  

அதேபோல், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஐ.நாவுக்கோ மனித உரிமை ஆணையாளருக்கோ முறையாக இவ்விடயத்தை அக்கட்சி முன்னிலைப்படுத்தியதாகச் சொல்ல முடியாது. இதேநேரம் தேசிய காங்கிரஸ் கட்சி சர்வதேசமயப்படுத்தல் பற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்தமாதிரித் தெரியவில்லை.   

இவ்வாறு, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டிய பணிகளைச் சிவில் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் ஆர்வலர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.   

இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெற்றபோது, இவ்வாறு பல ஆவணங்கள் அவர்களின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சிலர், உபகுழு அறைக் கூட்டங்களில் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து பேசியிருக்கின்றார்கள். இவர்களது பணி முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.   

முஸ்லிம் அரசியல்கட்சிகள் எல்லாம் செய்ய வேண்டியதைச் சில ‘செயற்பாட்டாளர்கள்’ செய்திருக்கின்றார்கள். ஆக, ஒரு சிவில் அமைப்பின் அளவுக்கேனும், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X