2025 மே 01, வியாழக்கிழமை

தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும்

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி. அருள்நேசன், கல்வியியல் துறை,  
கிழக்குப் பல்கலைக்கழகம்
 

இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி?

திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது.  

 உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய வருமானமுள்ள சமூக அந்தஸ்துடன் கூடிய வேலை வாய்ப்புகளுடன் நெருக்கமான தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது. 

இலவசக் கல்வியின் பரவலாக்கலும், தாய் மொழிக் கல்வியும் உயர்கல்விக்குத் தகுதியுடையவர்களது எண்ணிக்கையைக் குறுகிய காலத்துக்குள் பன்மடங்காகக் கூட்டியது. எனினும், உயர்கல்வி மூலம் பெறக்கூடிய உத்தியோகங்களின் தொகை, அதே வேகத்தில் கூடவில்லை. 

இதன் விளைவுகளில், கலைப்பாடங்களில் பட்டம் பெற்றவர்களது வேலையின்மையும் பின்னர் விஞ்ஞானப்பட்டதாரிகளின் வேலையின்மையும் உள்ளடங்கும்.

தொழில்வாய்ப்புள்ள பட்டப்படிப்புக்கான விருப்பம் கூடியதன் விளைவாகவே, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளை மாணவர்கள் பெரிதும் நாடினர்.  

இன்று நாட்டில் யதார்த்தம் என்னவெனில், பட்டதாரிகள் உருவாகும் அளவுடன் ஒப்பிட்டால், அவர்களது படிப்புக்கேற்ற தொழில் வாய்ப்புகள் போதிய வேகத்தில் வளரவில்லை. நாட்டின் தேசிய பொருளாதாரம்,தூரநோக்கற்க முறையில் செயற்படுத்தப்பட்டு, திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டதன் விளைவாக, இன்று பொறியியல், மருத்துவப் பட்டதாரிகளில் பலர் வெளிநாடுகளுக்குப் போகின்ற காரணத்தால் மட்டுமே அந்தத் துறைகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாக இல்லை. 

எனினும், இங்கே பொறியியல் உட்பட்ட, பல வேறுதுறைகளில் அவர்களது பணிகள், அவர்கள் பெற்ற பயிற்சியின் மிகச் சிறு அளவே நாட்டுக்குள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் உண்மை.  

இலங்கையின் தேசிய கல்வியின் நெருக்கடிக்குத் தேசிய பொருளாதாரத்தின் சிதைவுக்கு அப்பாலான பிரச்சினைகள் கொலனிய யுகத்திலிருந்து தொடர்கின்றன. அடிப்படையான சமூக மாற்றம் ஒன்றில்லாமல் தீர்க்க முடியாத பிரச்சினைகளைப் பற்றி இங்கு மேலும் எழுதவிரும்பவில்லை. எனினும், உயர் கல்வி என்பது பதவி, மூலம் ஒருவர் சமூக மேன்நிலையை அடைவதற்கான ஒரு கருவியாகவே இருந்து வந்துள்ளது.   

சமூக மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் உழைத்த அறிஞர்களும் தொழில் வல்லுநர்களும் இருந்துள்ளனர். எனினும், கல்வி என்பது சமூக மேம்பாட்டுக்கும் மனித விடுதலைக்குமான கருவியாக அமைவதற்கான சூழ்நிலை இல்லாத போது, கல்வி பற்றிய பார்வை, தனிப்பட்டவரின் நலன்களை முதன்மைப்படுத்துவது இயல்பானதே.  

கொலனித்துவ ஆட்சி நீக்கத்தின் பின்பு, தேசிய விழிப்புணர்வின் உந்துதலால், கல்வியின் பரவலாக்கம், தேசியக்கல்வி, தாய்மொழியில் கல்வி போன்ற முற்போக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் கல்வித் தரம், முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது.  

 கிராமியப் பகுதிகளில் இருந்த நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர், 1990 களின் பிற்பகுதியில் பல்கலைக்கழக கல்வி மூலம் சமூகமேம்பாடு கண்டனர். தரமான பாடசாலைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டதன் விளைவாக, 1950 கள் வரை பொதுவாக பெருநகரம் சார்ந்த ஆங்கில மொழியாற்றல் உள்ள குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்களின் ஆதிக்கத்துக்குட்டிருந்த தொழிசார் பட்டப் படிப்பு துறைகள் சிறுநகரம் சார்ந்தவர்களுக்கும் பிற்பட்ட நிலையிலிருந்தவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கும் எட்டக்கூடியதாயிற்று. 

அதேவேளை, உயர்கல்விக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் தொகை விரிவடைந்த வேகத்தில், பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளோ, பட்டதாரிகளுக்குரிய வேலை வாய்ப்புகளோ விருத்தி பெறவில்லை.   

இது ஒருபுறம், கல்வித்துறையில் அரச நிதி முதலீடு போதாமையாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி போதாமையாலும் ஏற்பட்டது. இன்னொருபுறம், நாட்டின் தொழில் வளர்ச்சியோ, கல்வி முறையோ ஒரு தூர நோக்கத்துடன் திட்டமிடப்படாததன் விளைவெனலாம். இதன் துணை விளைவாகவே பேரினவாதம் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடம் ஆழமாக வேரூன்றியது. தமிழ், முஸ்லிம் தேசியவாதமும் பிரதேச வாதமும் கல்வி, தொழில்வாய்ப்புகள் போதாமையைக் காரணம் கொண்டே முனைப்படைந்தன.  

 1970களில் ஏற்பட்ட நெருக்கடியான பொருளாதாரச் சூழல், வேலை வாய்ப்பையும் பட்டதாரிகள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைத் தேடிப்போகும் நிலையையும் உருவாக்கின. இந்நிலை காலத்துடன் வலுவடைந்து வந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஒரு புறம்; பட்டதாரிகளின் வேலையின்மையைத் தவிர்க்கவும் அந்நியச் செலவாணியைக் கொண்டுவரவும் உதவிய போதும், அவை நாட்டின் உயர்கல்வியின் தேவையையும் நோக்கத்தையும் விகாரப்படுத்தின.  

 1978 ஆம் ஆண்டு, திறந்த பொருளாதாரக் கொள்கை ஏற்கப்பட்ட பின்பு, தேசியத் தொழிற்றுறையும் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உற்பத்தியை விட, இறக்குமதி வணிகம் இலாபகரமானதாயிற்று. தனியார் துறையின் ஊக்குவிப்பு ஒரு புறமிருக்கத் திட்டமிட்ட முறையில், அரச நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டதன் காரணமாகவும் உயர்கல்வி பற்றி மாணவர்களது பார்வை வக்கிரமாது.  

கல்வி என்பது ஓர் ஓட்டப்பந்தயம் மாதிரியான பின்பு, பாடசாலைகள் தமது முக்கியத்துவத்தை இழந்து விட்டன. மாணவர்களைப் பரீட்சைகளுக்காக பயிற்றுவிக்கும் ரியூட்டரிகள் இன்று மாற்றுப் பாடசாலைகளாக இயங்குகின்றன.  

அடிப்படையான விடயங்கள் பற்றிய தெளிவோ, அறிவோ இல்லாமல் தகவல்களை மனனம் செய்தும் பயிற்றப்பட்ட முறைகளில் விடைகளை எழுதியும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் கற்கும் முறை பல்கலைக்கழகக் கல்வி முறைக்குப் பொருந்தாததாக உள்ளது. 

மொழியறிவு மிகவும் கீழான நிலையிலேயே உள்ளது. கணித அறிவு பலவீனமாகி வருகின்றது. இவற்றை மேலும் மோசமாக்கும் விதமாகவே பாடசாலைகளின் உயர் வகுப்புகளில் கல்வித்திட்டம் தொடர்ந்து மாற்றமடைந்து வந்துள்ளது.  

இந்தப் பின்னணியிலேயேதான் வசதிபடைத்த பெற்றோர் தமது பிள்ளைகளை அயல்நாடுகளுக்கு அனுப்பி, உயர்கல்வி கற்பிக்கின்றனர். அண்மைக் காலங்களில் உருவான ஒரு புதிய பணக்கார வர்க்கம், தனியார் பாடசாலைகளது பெருக்கத்துக்கு ஆதரமாக உள்ளது. ஆங்கில மூலம் பாடசாலைக் கல்வி கற்று, அயல்நாட்டுக்கு சென்று பட்டம் பெற்று வருவதைவிட, உள்நாட்டிலேயே பட்டம் பெறுவது செலவு குறைந்தது.   

எனவே, ஆங்கிலத்தில் தனியார் பாடசாலைக் கல்வி பெற்ற மாணவர்களதும் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறாத பிற வசதிபடைத்த குடும்பத்து மாணவர்களது நலன்கருதியே தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.   

இங்கே சமுதாய வர்க்க நலன்களையும் வர்க்கப் பார்வைகளையும் புறக்கணித்து, உயர் கல்வி பற்றிய விவாதங்களுக்கு செல்வதில் எவ்வித பயனுமில்லை. தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குச் சாதகமாக முன்வைக்கப்படும் வாதங்களுள் முக்கியமானவையாக பின்வருவன கூறப்படுகின்றன.   

 தனியார் பல்கலைக்கழங்கங்கள் மூலம் கூடுதலான பட்டதாரிகளை உருவாக்க இயலுமாதலால் உயர்கல்வி விரிவாக்கப்படும்.  

 அரசாங்கத்துக்கு மேலதிக பொருளாதாரச் சுமை இல்லாமலே கல்வித்துறை விருத்தியடைய இயலுமாகின்றது.   

 அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை விட, நெகிழ்வான முறையில் இயங்குவதால் சந்தையின் தேவைக்கமைய புதிய பாடநெறிகளைப் புகுத்தவும் அதிகம் வரவேற்பில்லாதவற்றை நீக்கவும் இயலும்.  

 தனியார் பல்கலைக்கழகங்களுடன் அரசாங்க பல்கலைக்கழகங்கள் நல்ல மாணவர்களுக்கிடையே போட்டியிட வேண்டிய ஒரு நிலை உருவாவதால் அரசாங்க பல்கலைக்கழகங்களும் கல்வி பற்றிய நவீன அணுகுமுறைகளைப் பயன்படுத்தவும், சந்தை நிலைவரங்களுக்கு ஏற்ப பாடநெறிகளை மாற்றியமைக்கவும் வேண்டி ஏற்படும்.  

 தனியார் பல்கலைக்கழகங்கள் வணிக நிறுவனங்களாகவே செயற்படும் என்பது பற்றி, எமக்கு மயக்கங்கள் தேவையில்லை. எனவே, அவை தரமான சேவையை வழங்க வேண்டுமானால் கூடுதலான கட்டணம் செலுத்தக் கூடிய மாணவர்களே இங்கு கற்க முடியும். எனவே, இதன் ஒட்டுமொத்த விளைவு வெளிநாட்டுப் பிள்ளைகளை அனுப்புகிறவர்களுக்கு ஒரு சிக்கனமான மாற்று வழியாகவும் சில நடுத்தர வகுப்பினரது பிள்ளைகளுக்கு அரச பல்கலைக்கழகங்களில் இடங்கிடையாத போது, தேவையான ஒரு மாற்று வழியாக அமையலாம். எனினும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் இவர்களில் பலருக்குத் பொருத்தமானவையல்ல.  

கல்வி, உடல்நலம், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை அடிப்படையான சமூகத் தேவைகளாகவே பல முன்னேறிய முதலாளிய நாடுகள் இன்னமும் கருதுகின்றன. அமெரிக்கா தவிர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெரும்பாலும் கல்வித்துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.   

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், போன்றவை பல்கலைக்கழகங்களை இன்னமும் குறிப்பிடத்தக்களவில் பாதிக்கப்பட்டாலும் பல்கலைக்கழக‍ங்களுக்கான நிதி ஒதுக்கிடு சில நாடுகளில் குறைக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்கள் நிதி திரட்டப் பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றன. எனினும் உயர்கல்வி, அரசாங்கத்தின் வழிநடத்தலுக்குட்பட்டே இன்னமும் நடைபெறுகின்றது.  

இலங்கையில் அரசாங்கங்கள் போருக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்த தொகையில், ஒரு சிறு பகுதியைக் கல்வித் துறைகளில் செலவிட்டிருந்தால் இன்று நமது கல்வித்துறை இவ்வளவு தூரம் நலிவடைந்திருக்காது. அரசாங்கத்தின் நிதித் தட்டுப்பாட்டுக்கான காரணம் நிதிப் பற்றாக்குறையல்ல; அரசாங்கத்தின் நிதி எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதே, முற்றிலும் சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுள்ள முதலாளிய நாடுகளே தனியார் பல்கலைக்கழகங்களைப் பெருமளவில் ஊக்குவிக்காத போது, சந்தை தொடர்பான உள்ளூர் வாதங்களை மிகுந்த ஐயத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. 

சந்தை பற்றிய வாதங்கள், எந்தச் சந்தையைப் பற்றிப் பேசுகின்றன என்ற கேள்வியும் எழுகின்றது.  

உயர்கல்வி என்பது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான ஒரு வசதி என்று எண்ணுகின்றவர்கள் நம்மிடையே கணிசமாக உள்ளனர். தனது குடிமக்களைப் பெருந்தொகையான அயல்நாடுகளில் கூலியுழைப்புக்கு அனுப்புகின்ற எந்த நாடும் உறுதியான பொருளாதார வளர்ச்சியைக் கண்டதாகக் கூறுவது கடினம்.   

இலங்கையோ, பிலிப்பைன்ஸோ, பங்களாதேஷோ தமது வேலையில்லாப் பிரச்சினையின் சுமையைக் குறைத்ததற்கும் நுகர்வுப் பொருளாதாரத்துக்கு, மேலும் உதவியதற்கும் மேலாக தேசிய அளவில் எந்த முன்னேற்றத்தையும் கண்டதாகக் கூறமுடியாது. மாறாகப் பயிற்றப்பட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதன் விளைவாகத் தேசிய பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும் நட்டப்பட்டுள்ளன.  

 உலக சந்தைக்காகப் பட்டதாரிகளை உற்பத்தி செய்வதன் மூலமோ, உலக சந்தையின் இடைக்காலத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவான உள்ளூர்த் தொழிற்துறைகளுக்கு வேண்டிய பயிற்சியை அளிப்பதன் மூலமோ, குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பு, அதிக வருமானமுள்ள தொழில்கள் போன்றன சமூகத்தில் ஒரு சிறு பகுதியினருக்குக் கிட்டுகின்றன. 

அதேவேளை அயல்நாடுகளில் பொருளாதார நெருக்கடியோ, ஒரு குறிப்பிட்ட துறையில் முடக்கமோ ஏற்படும்போது, இவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதை நான்கு ஆண்டுகள் முன்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட சரிவு இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து நாம் அறியலாம்.  

 தனியார் பல்கலைக்கழகங்கள், அரச பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடுவதனால் அடிப்படை வசதிகளுக்கும் மேலாக திறமை வாய்ந்த விரிவுரையாளர்களையும் பயிற்றுநர்களையும் கொண்டிருக்க வேண்டும். இது இயலாததல்ல. எனினும் ஏற்கெனவே திறமைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டுள்ள ஒருசூழலில் இது அரசாங்கப் பல்கலைக்கழகங்களை விட்டு, கூடிய ஊதியத்தை வழங்குவதன் மூலமோ பகுதிநேரப் பணிகளுக்கு அரசாங்க பல்கலைக்கழக ஊழியர்களை அமர்த்துவதன் மூலமோ தான் இயலுமாகும். ஏனெனில், வெளிநாடுகளிலிருந்து தகுதியானவர்களைப் பெருமளவில் வரவழைப்பது இயலாததாகும்.  

இவ்வாறான வணிகப் போட்டியில், தனியார் பல்கலைக்கழகங்கள் வெற்றி பெறுமானால், அது அரச பல்கலைக்கழகங்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஒருபுறம், தகுதிவாய்ந்த ஊழியர்களை இழத்தல், இவற்றுக்கும் மேலாக வசதிபடைத்த குடும்பச் சூழலிலிருந்து வருகிற மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு உள்ள வாய்ப்புகள் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு இல்லாமற் போதல் என்பன குறுகிய காலத்திலேயே அரச பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் தகுதியைக் குறைக்க வழி செய்யும்.  

இந்த நாட்டில், இன்று வணிகத்துறையிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேசும் ஆற்றல், தொழில் வல்லமையையும் கல்வித் தகுதியையும் விட விரும்பப்படுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய ஒரு பின்னணியில் போட்டி என்பது வசதிபடைத்த வர்க்கத்தினர்களின் நலன்களுக்கும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படக் கூடிய வசதி குறைந்த வர்க்கத்தினரது நலன்களுக்கும் இடையேயான போட்டியே நிகழ்கின்றன.  

ஆரோக்கியமான போட்டிக்குரிய ஒரு சமூக பொருளாதாரச் சூழலில் நமது நாடு இல்லை. தனியார் பாடசாலைகள், ஏற்கெனவே சர்வதேசப் பாடசாலைகள் என்ற பெயரில் நம் நாட்டில் நிலை கொண்டு விட்டன. இதன் கட்டமாகவே, தனியார் பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரத் திட்டமிடப்படுகின்றது. சில அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் முகவர் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டில் ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் படித்து, இலங்கையில் மிகுதியைப் படிக்கும் முறையில் திட்டங்கள் வகுத்து இயங்குகின்றன. இந்த விதமான உயர்கல்வி, மலேசியா உட்பட்ட தென்கிழக்கு, ஆசிய நாடுகளில் பிரித்தானிய, அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களால் வணிக நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  

பல்வேறு அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பட்டங்களை உள்ளூர் வேலை வாய்ப்புக்கு உகந்தவை என்று அங்கிகரிப்பதற்கான நெருக்குவாரங்கள் பல துறைகளிலும் உள்ளன. தனியார்மயமாக்கல் விரிவடையும் போது, தனியார் துறையே பெரும்பாலான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு சூழ்நிலையில், அயல்நாட்டுப் பல்கலைக்கழக முத்திரை கொண்ட பட்டதாரிகள், தகுதிக்கும் அப்பாற்பட்ட பல காரணங்களால் விரும்பப்படலாம்.  

 தனியார் பல்கலைக்கழகங்களுக்கான வற்புறுத்தல் உள்நாட்டில் உள்ள வசதி படைத்த ஒரு பகுதியினரிடமிருந்தும் வணிக நோக்கில் கல்வியை வழங்கும் அயல்நாட்டுப் பல்கலைக்கழக நிறுவனங்களிடமிருந்தும் தேசிய சமூக, பொருளாதார நோக்கு இல்லாத சில கல்விமான்களிடமிருந்தும் மட்டும் வரவில்லை. 

அதற்கான மிகப் பெரிய நெருக்குவாரம் இந்த நாட்டுக்கு கடன் வழங்கி இந்த நாட்டைத் தங்களது இறுக்கமான பிடியில் நெரித்து வைத்து கொண்டுள்ள உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து அவற்றின் ஆலோசனைகள்  மூலம் வழங்கப்படுகிறது.  

இந்த அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்த ஒவ்வொரு மூன்றாமுலக நாடும், மோசமான பின்விளைவுகளை அனுபவித்தமை  தற்செயலானதல்ல. தமது கல்வி முறை ஏகாதிபத்தியத்துக்கு ஏவலாட்களை உற்பத்தி செய்ய வேண்டுமேயொழிய, சுயாதீனமாகச் சிந்திக்கிற மனிதர்களையும் இந்த நாட்டின் உயர்வுக்குப் பணியாற்றக் கூடிய அறிஞர்களையும் தொழில் வல்லுநர்களையும் உருவாக்க வேண்டியதில்லை என இந்த அமைப்புகள் விரும்புவதற்குக் காரணங்களை ஊகிப்பது கடினமில்லை.  

 எனவேதான், எந்த அரசாங்கமாயினும் இதுவரை கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டுச் சீரழிந்துள்ள பாடசாலைக் கல்வியை மீள நிலைநிறுத்தவும் பல்கலைக்கழகங்களின் தரத்தை மீண்டும் முன்னைய தரத்துக்கு உயர்த்தவும் உயர் கல்வியை நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கமையத் திட்டமிட்டுச் செயற்படுத்தவும் வேண்டுமென்று வற்புறுத்துவது கல்வியியலாளர்கள் அனைவரதும் பொறுப்பும் கடமையாகும்.   

இலங்கை அரசாங்கம் தனது வருங்காலக் குடிமக்களது கல்விக்குச் செலவிடுகின்ற தொகை அறவே போதாது; நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற ஒரு துறையாகிய கல்வித் துறை பற்றிய முடிவுகள், நாட்டு மக்களின் விருப்பங்களை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டுமேயொழிய அயல் மூலதனத்தின் முகவர்கள் எத்தகைய நிபுணர்களாக இருப்பினும் அவர்களது பரிந்துரையின் வழிநடக்கக்கூடாது.  

எனவே, இலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் கல்வி முறை மற்றும் அரசாங்கக் கல்வி முறையில் பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகவே, எவ்வாறு இருந்தபோதிலும், உள்நாட்டுக் கல்வித் தகைமையைச் சிறந்த சொத்தாக மதித்து, அதை எவ்வித இடர்பாடுகளின்றி முறையாகக் கொண்டு செல்வதில் யாவரும் முன்னின்று செயற்படவேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .