Thipaan / 2016 மே 11 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்புக்கான வட மாகாண சபையின் ஆலோசனையாக, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அம்மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மலையகத் தமிழ் மக்களுக்காக நிறுவப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட பிராந்திய சபையை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான
பி. திகாம்பரம் நிராகரித்துள்ளார்.
அதிகாரப் பரவலாக்கலுக்காக, மலையகத்துக்குத் தனி அலகு தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். ஏனைய மலையகத் தமிழ்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மலையக அலகு தொடர்பான ஆலோசனையை நிராகரிப்பதாகக் கூறாவிட்டாலும், அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, சகலரும் அறிந்த விடயமாகும்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணை மூலம், கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்காகவும் ஒரு பிராந்திய சபை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணங்கள், 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாண முஸ்லிம்கள், தமது தனி அலகுக் கோரிக்கையை ஏறத்தாழ கைவிட்டார்கள் என்றே தெரிகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி போன்றோர் அந்தக் கோரிக்கையை அடிக்கடி முன்வைத்த போதிலும், அதில் முன்னர் போல் அழுத்தம் இருப்பதாகத் தெரியவில்லை. வடக்கு - கிழக்கு இணையும் பட்சத்தில் மட்டுமே, முஸ்லிம் நிர்வாக அலகு அவசியமாகிறது என முஸ்லிம் தலைவர்கள் பலர் இப்போது கூறுகின்றனர்.
எனவே, மலையகத் தமிழர்களும் கிழக்கு மாகாண முஸ்லிம்களும் கேட்காத ஒன்றைத் தான், வட மாகாண சபையின் பிரேரணையின் மூலம் அம்மக்கள் மீது திணிக்கப்படப் போகிறது. குறிப்பாக, மலையகத் தமிழர்கள், ஒருபோதும் தமக்கென தனியான நிர்வாக அலகொன்றைக் கேட்கவில்லை. அவர்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் தமது மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கின்றனர். அவற்றில், அவர்களது போராட்டங்கள் பலமாக நடத்தப்படுகின்றவா என்பது வேறு விடயம். வட மாகாண சபை, மலையகத் தமிழர்களுக்காகவும் முஸ்லிம்களுக்காகவும் தனிப் பிராந்தியம் கோருவது, தமிழ் நாட்டுத் தலைவர்கள், இலங்கைத் தமிழர்களுக்காக தமிழீழத்தைக் கோருவதற்குச் சமமாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள், தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை முற்றாகக் கைவிட்டுவிட்டன.
அக்கட்சிகளில் செயற்படும் சில தீவிரவாதிகள், சிலவேளைகளில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையைப் போன்ற கருத்துக்களை வெளியிட்ட போதிலும், உத்தியோகபூர்வமாக எந்தவொரு கட்சியும் இப்போது பிரிவினைவாதத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. தீவிரவாதப் போக்குடைய சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.
ஆனால், தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட பலர், இன்னமும் அடிக்கடி தமிழீழம் உருவாக வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழக சட்ட சபைக்கோ அல்லது இந்திய லோக் சபாவுக்கோ தேர்தல் நடைபெறும் காலத்திலேயே, தமிழகத் தலைவர்களிடம் இந்தத் தமிழ் உணர்வு கொதித்தெழுகிறது.
இப்போது, தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அவர்கள் சில வாரங்களாக ஆவேசத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழீழத்தைப் பெற்றுத் தர முயற்சிக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோரிக்கைகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நேர்மை இல்லை என்று, இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பலமுறை கூறியிருக்கின்றனர்.
2013ஆம் ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், சென்னையிலிருந்து வெளியிடப்படும் இந்து நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, விக்னேஸ்வரன், அதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
தமிழகத் தலைவர்கள், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தமது அரசியல் நலனுக்காகப் பாவிப்பதாக, வட மாகாண சபைத் தேர்தல் காலத்தின் போது, இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
தமிழகத் தலைவர்கள் தமது பிரச்சினையைப் பந்தாடுவதாகவும் அவர்கள் அங்கு பந்துக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியும் தம்மை வந்து தாக்குவதாகவும் தமிழகத் தலைவர்கள், இலங்கையின் பிரிவினையைப் பற்றிப் பேசும் போது, சிங்கள மக்கள் தம்மைச் சந்தேகிப்பதாகவும் கூறிய அவர் 'நாம் சண்டை பிடிப்போம், மீண்டும் ஒன்று சேர்வோம், இதில் அயல் வீட்டுக்காரர் தலையிட்டு, பிரிந்து விடுங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறத் தேவையில்லை, அது அவர்களுக்குரிய வேலையல்ல' என்றும் கூறினார்.
விந்தை என்னவென்றால், நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொள்ளுங்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று, விக்னேஸ்வரன் அன்று தமிழகத் தலைவர்களுக்குக் கூறியதை, திகாம்பரம், அதே விக்னேஸ்வரனுக்கு இன்று கூறுவதே.
எம்மை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை, அண்மையில், அமைச்சர் மனோ கணேசனும் தமிழகத் தலைவர்களுக்கு விடுத்திருந்தார். அவர் தமது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, 'வேண்டும் என்றால், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் தமிழகத் தலைவர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம்' எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, தமிழகத் தலைவர்களால் பந்தாடப்படுகிறது என்று, விக்னேஸ்வரனும் மனோ கணேசனும் கூறுவது உண்மை. தமிழகத் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காலத்துக்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 1980களில், இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு யார் ஆதரவு வழங்குவது என்ற விடயத்தில், தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே போட்டி நிலவியது. பின்னர், புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். பின்னர் மீண்டும் தமிழ்க் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதில் போட்டி. பின்னர் மீண்டும் அதற்காகவே ஒருவரையொருவர் குறை கூறுதல். இவ்வாறு இந்த நாடகம் நீடிக்கிறது.
1980களில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு - முன்னாள் நடிகரும் அப்போதைய அ.தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான காலஞ்சென்ற எம்.ஜி.இராமச்சந்திரனும், டெலோ அமைப்புக்கு - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.கருணாநிதியும் ஆதரவு வழங்கினர். புலிகள் அமைப்புக்கு எம்.ஜி.ஆர், ஒருமுறை நான்கு கோடி இந்திய ரூபாய் வழங்கியிருந்தார்.
எம்.ஜி.ஆரின் மறைவை அடுத்து, சில காலத்துக்குப் பின்னர் கருணாநிதி பதவிக்கு வந்தார். அதன் பின்னர், புலிகள் அமைப்பு அவருடன் நெருக்கமாகச் செயற்பட்டது. 1990ஆம் ஆண்டு சென்னை அருகே கோடம்பாக்கத்தில் வைத்து,
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வியக்கத்தின் தலைவர்கள் 14 பேர், புலிகளால் கொல்லப்பட்ட போது, அப்படுகொலைகளைச் செய்தவர்கள் தப்பிச் செல்வதற்கு கருணாநிதியின் அரசாங்கம் உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேகாலத்தில், தமிழகத்தில் சோதனைச் சாவடியொன்றில் கடமை புரிந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் புலி உறுப்பினர்கள் கொலை செய்து தப்பிச் சென்றிருந்தனர்.
ஆனால், 1991ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை புலிகள் கொலை செய்ததையடுத்து நிலைமை மாறியது. இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு உதவி செய்வதில் போட்டி போட்டுக் கொண்டிருந்த தமிழக கட்சிகள், திடீரென தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, புலிகளுக்கு உதவி செய்வதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பின்னர் போட்டி அதில்தான் இருந்தது.
ஆனால், இலங்கையில் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், 2008ஆம் ஆண்டு தமிழகக் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை மீண்டும் மாற்றிக் கொண்டு போரை உடன் நிறுத்துமாறு கோஷம் எழுப்பத் தொடங்கின. தமிழீழத்துக்கான ஆதரவையும் பகிரங்கமாகத் தெரிவித்தன. புலிகளுக்கு ஆதரவு அறிவிக்கப்பட்டது.
போர் நிறுத்தம் உட்பட ஆறு கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க, அவற்றை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசாங்கத்தை ஆதரிக்கும் தமது உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலிருந்து இராஜினாமாச் செய்வதாக 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி அறிவித்தது. கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட சில எம்.பிக்கள், அடையாளமாக தமது இராஜினாமாக் கடிதங்களை கருணாநிதியிடம் கையளித்தனர்.
ஆனால், ஜனாதிபதி ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ஷ, புது டெல்லிக்குச் சென்று, வழமைபோல் அரசியல் தீர்வொன்றைத் தருகிறோம் எனக் கூறியதோடு, தி.மு.கவின் போராட்டம் கைவிடப்பட்டது. அவ்வாறு செய்வதற்கு பசில், போர் நிறுத்தம் பற்றிய வாக்குறுதி அளிக்கவுமில்லை.
2009ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அரச படையினர், கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன், இலங்கை பற்றிய தமிழக தலைவர்களின் நிலைப்பாடு மீண்டும் தலைகீழாக மாறியது. அதுவரை போர் நிறுத்தம் வேண்டும், இலங்கையில் அரச படையினர் இனப் படுகொலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தவர்கள், திடீரென புலிகளைச் சாடத் தொடங்கினர். முந்திய ஆண்டு, தமிழர் இனப்படுகொலைகளைப் பற்றிப் பேசியவர்கள், இலங்கைப் படையினரின் செயற்பாடுகளையும் நியாயப்படுத்த முற்பட்டனர். பின்னர், 2012ஆம் ஆண்டளவில் மீண்டும் தமிழீழத்தையும் புலிகளையும் ஆதரிக்கத் தொடங்கினர்.
எனவே, இலங்கைத் தமிழர்களே இப்போது முன்வைக்காத தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழகத் தலைவர்கள் நடத்தும் அரசியல் நேர்மையானது அல்ல. அவர்களைப் பற்றி விக்னேஸ்வரனும் மனோ கணேசனும் கூறுவது உண்மையே.
கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றும் வரை, இலங்கை அரசாங்கம், இனச் சம்ஹாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி வந்த எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மக்களை வெளியேற இடமளித்தால், போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கலாம் எனக் கூறியிருந்தார்.
அவர், அத்தோடு நின்றுவிடவில்லை. இலங்கைப் படையினரின் நோக்கம், அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்வதல்ல என்றும் அந்த மாநாட்டின் போது ஜெயலலிதா கூறினார். மேலும் உரையாற்றிய அவர், போரொன்றின் போது சாதாரண மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் இந்த விடயத்தில் எந்தவொரு நாடும் விதிவிலக்கல்ல என்றும் கூறினார்.
ஆச்சரியமான முறையில், இந்த மன மாற்றமானது, தொற்று நோய் போல் தி.மு.கவிடமும் தாவியது. இரண்டு வாரங்களில், அதாவது பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தமது கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய கருணாநிதி, 1987ஆம் ஆண்டளவில், தமிழீழத்தில் சர்வாதிகார ஆட்சியை நிறுவும் தமது விருப்பத்தைப் பிரபாகரன் தெரிவித்ததையடுத்து, புலிகள் தமது கட்சியின் ஆதரவை இழந்துவிட்டனர் என்றும் அதன்பின்னர் தாம், புலிகளை வெறுத்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், பத்மநாபா குழுவினர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர், அதன் பின்னர், அவரது ஆட்சியினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புக்களினாலேயே கொல்லப்பட்டனர் என்பது உலகம் அறிந்த உண்மை.
2008ஆம் ஆண்டு இந்தத் தலைவர்களின் பேச்சுக்களால் உணர்ச்சிவசப்பட்டு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துமாறு கோரி, தமிழகத்தில் 11 பேர் தீக்குளித்தனர். ஆனால், அவர்களது மன மாற்றத்தையடுத்து, பிரபாகரன் உட்பட பல்லாயிரக் கணக்கானவர்கள், 2009ஆம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் தீக்குளிப்பது ஒரு புறமிருக்க, ஒரு கறுப்புக் கொடியாவது போடப்படவில்லை.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025