2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தமிழர் ஐக்கிய முன்னணி உருவானது

Thipaan   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 36)

அரசியலமைப்புப் பேரவையில், இனியும் பங்குபற்றுவதில்லை என்ற தமிழரசுக் கட்சித் தலைமையின் முடிவு, கட்சியின் இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. கட்சித் தலைமையின் விட்டுக்கொடுப்புப் போக்கானது, இளையோருக்குப் பெரிதும் மகிழ்வைத் தந்திருக்கவில்லை.

1971 காலப்பகுதியிலேதான், தமிழர் பிரதேசங்களில் இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் பிரசவிக்கத் தொடங்கின. அன்று நடந்துகொண்டிருந்த கிழக்கு - மேற்கு பாகிஸ்தான் யுத்தமும் கிழக்குப் பாகிஸ்தான் 'பங்களாதேஷ்' என்ற சுதந்திர நாடாகப் பிரபடனப்படுத்தப்பட்டமையும் அதற்கு கெரில்லா யுத்தம் உதவியமையும், தமிழ் இளைஞர்களுக்குப் புதியதோர் ஆதர்சத்தை வழங்கியிருக்கலாம்.

காந்தி, காந்தியம், அஹிம்சை என்ற பாதையினால் ஒன்றரைத் தசாப்தத்துக்கும் மேலாக எப்பயனும் விளையாததன் காரணத்தால், ஆயுதம் கொண்டு விடுதலையைப் பெறும் ஆர்வம், இளைஞர்களிடையே முளைவிட்டிருக்கலாம். அன்றைய இளைஞர்களான மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், கோவை மகேசன், வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மகேஸ்வரன், செட்டி தனபாலசிங்கம், குட்டிமணி போன்றவர்கள், இந்த விடுதலை உணர்வுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சமஷ்டி என்ற எண்ணக்கருவிலிருந்து தமிழ் மக்களினுடைய அரசியலை, பிரிவினை என்ற நிலைக்கு இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். வடபுலமெங்கும் ஆங்காங்கே இளைஞர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களிலும், கலந்துரையாடல்களிலும் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. தமிழர்களின் நலன்களைக் கருத்திற்கொள்ளாத அரசியலமைப்பை, அவர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், பிரிவினையே இனித் தீர்வாக முடியும் என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தனர்.

அடங்காத தமிழன் அடங்காத் தமிழன்

இந்நிலையில், 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், தனது அடங்காத முயற்சியின் அடுத்தபடியாக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அப்போது நடைமுறையிலிருந்து 'சோல்பரி' அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதொரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கெதிரான தடையுத்தரவொன்றைப் பெறுவதற்காக, வழக்குத்தாக்கல் செய்திருந்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்ணான்டோ, நீதியரசர் ஜி.பி.ஏ.சில்வா, நீதியரசர் அலஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட குறித்த மனுவானது, தள்ளுபடிசெய்யப்பட்டது. 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கத்தினது முயற்சி பற்றி தனது நூலில் கருத்துரைத்த வி.நவரட்ணம், 'ஒரு தனி நபராக, சி.சுந்தலிங்கம் போராடியதைப் போல, நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் உயர் நீதிமன்றத்தின் முன் சென்று, இந்த அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கும் அரசியலமைப்புக்கும் வெளியிலாகச் செயற்படுவதற்கெதிராக தடையுத்தரவைக் கோரியிருக்கலாம். அது, இன்னும் வலுவானதொன்றாக அமைந்திருக்கும், அதைச் செய்யும் வல்லமையும் அவர்களிடமிருந்தது. ஆனால், அவர்கள் செய்யவில்லை' என்றார்.

அரசியலமைப்புப் பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சி

அரசியலமைப்புப் பேரவையில், ஐக்கிய தேசியக் கட்சி, சில முன்மொழிவுகளைச் செய்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துமாறு முன்மொழிந்தார். இந்த முன்மொழிவு, அவரது கட்சியின் முக்கியஸ்தராக அன்றிருந்த ரணசிங்க பிரேமதாசவினால் வழிமொழியப்பட்டது. ஆனால், ஆளும் ஐக்கிய முன்னணியோ நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நிராகரித்தது. தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

இதேவேளை, அரசியலமைப்புப் பேரவையானது, புதிய அரசியலமைப்பின் கீழான சட்டவாக்க சபையான தேசிய அரச சபையின் பதவிக்காலமானது, ஆறு வருடங்களையுடையது எனத் தீர்மானித்தது. இதன் விளைவாக, 1972இல் புதிய யாப்பு நடைமுறைக்கு வருமாயின், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் 1978 வரை பதவி வகிக்கத்தக்கதாக இருக்கும், இது, 1970இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு 8 ஆண்டுகள் ஆட்சியதிகாரத்தை வழங்கும். எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தன. இதன் விளைவாக, முதலாவது தேசிய அரச சபையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, 1977ஆம் ஆண்டு வரை ஐக்கிய முன்னணி ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டது. இது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் குறித்த அரசியலமைப்புக்கெதிரான அரசியலமைப்புப் பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்து வாக்களிக்கவும் முக்கிய காரணமானது.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவானது

தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துக்களும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும் உருவாகிய இந்த புதிய அரசியலமைப்பை சிறுபான்மையினர் மீதான பெரும்பான்மை அதிகாரத்தின் திணிப்பு அல்லது அடக்குமுறை எனக் கருதாமல் வேறு எப்படிக் கருத முடியும்?

இந்நிலையில், தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக்கான தேவை, தமிழ் அரசியல் தலைகளால் தீவிரமாக உணரப்பட்டது. தாம் பிரிந்து நிற்பது, தமது நலன்களுக்கே கேடாக அமைகிறது என்பதை தமிழ்த் தலைமைகள் காலங்கடந்தேனும் உணர்ந்து கொண்டன. அதன் விளைவாக தமக்கிடையேயான ஐக்கிய மேடையொன்றை உருவாக்கத் துணிந்தன. 1972 மே 14ஆம் திகதி ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புக்கள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக்கின. இதன் தலைவராக சா.ஜே.வே.செல்வநாயகம் தெரிவு செய்யப்பட்டார்.

வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள், இதுவரைகாலமும் முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். இந்தத் தலைவர்களிடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவர்களது சித்தாந்தம், இலட்சியம், அணுகுமுறை என்பவை நிறையவே வேறுபட்டிருந்தன. ஆனால், தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டபோது இந்த ஒற்றுமை அவசியமானதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே இந்தக் கூட்டணி உருவாகியது. 1976இல், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (தமிழர் விடுதலைக் கூட்டணி) தனித் தமிழீழக் கொள்கையை முன்னெடுத்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். தமிழீழமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என்று அவர் கருதினார். அத்தோடு, இலங்கைத் தமிழர்களின் முரண்பாட்டு அரசியலை அவர் விமர்சித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் கலை தெரியாது என்று அவர் சொன்னார்.

'பேச்சுவார்த்தைக் கலையானது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தல், அதில் ஒன்றை முழுமையாக வெற்றி கொள்ளுதல், இரண்டைப் பகுதியளவில் வெற்றி கொள்ளுதல், இரண்டைத் தற்காலிகமாக வேறொருநாளுக்குக் கிடப்பில் வைத்தல்' என்று தொண்டமான் சொன்னார். தாங்கள் தொழிற்சங்கவாதிகள், ஆதலால் தமக்கு இந்தப் பேச்சுவார்த்தைக் கலை தெரியும் என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் என்றும் தங்களது வழக்கை மிகச் சிறப்பாக வாதாடத் தெரியுமே அன்றி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தெரியாது என்றும் சொன்னார்.

1972ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி, திருகோணமலையில் தமிழர் ஐக்கிய முன்னணி உதயமானது. இக்கூட்டத்திலேயே, 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி நடைபெறவிருந்த புதிய அரசியலமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வை தமிழ் மக்கள் பகிஷ்கரிப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை உள்ளீர்க்க இந்த புதிய அரசியலமைப்பு தவறிவிட்டது.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தோ, குறைந்த பட்சம் கல்வி, நிர்வாகம், நீதி ஆகியன தொடர்பில் அரசியலமைப்பு அந்தஸ்தோ வழங்காதுவிட்டதனூடாக, தமிழ் மக்களை தமது நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜைகள் போல ஆக்கிவிட்டதே இந்தப் பகிஷ்கரிப்புக்கு காரணம் என தமிழர் ஐக்கிய முன்னணி சொன்னது. அத்தோடு, இன்னும் சில தீர்மானங்களையும் தமிழர் ஐக்கிய முன்னணி இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றியது.

அவற்றுள் இலங்கை மக்களில் ஏறத்தாழ 10 இலட்சம் அளவினரான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியலமைப்பு பேரவையில் வழங்காததால், இந்த அரசியலமைப்பு இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற தீர்மானமும், 35 இலட்சம் அளவிலான தமிழ் பேசும் மக்களின் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிராகரித்ததுடன், அவர்களது பங்களிப்பின்றியே இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆகவே, ஜனநாயக மரபுகளைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற தீர்மானமும் குறிப்பிடத்தக்கவை. இந்தத் தீர்மானங்களுடன் இந்நாட்டின் தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைள் முன்வைக்கப்பட்டன. இவை புதிய அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழர் ஐக்கிய முன்னணி கோரியது.

01. தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு சமனான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

02. இலங்கையை தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும், எந்தவித பாகுபாடுமற்ற குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் எந்தக் குடிமகனதும் குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கக்கூடாது.

03. அரசானது, மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதுடன், எல்லா மதங்களுக்கு சம அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

04. சகல மக்களுடையதும், இனத்தவர்களுடையதுமான அடிப்படை உரிமைகள் அங்கிகரிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

05. சாதீயம், தீண்டாக்கெதிராக அரசியலமைப்பு பாதுகாப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.

06. ஜனநாயக சோசலிஸ சமூகமொன்றில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட அரசாங்கக் கட்டமைப்புத்தான் மக்களதிகாரம் கொண்ட பங்குபற்றல்மிகு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும் என்ற ஆறு கோரிக்கைகளை தமிழர் ஐக்கிய முன்னணி முன்வைத்தது.

முதலாவது குடியரசு யாப்புக்கான எதிர்ப்பு

1972 மே 22ஆம் திகதி முதலாவது குடியரசு அரசியல்யாப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது, மொத்தமாக இருந்த 20 தமிழ் பிரதிநிதிகளில் 15 பேர் குறித்த நிகழ்வைப் புறக்கணித்திருந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் தமிழ்

காங்கிரஸிலிருந்து அதிகார ஆசை காட்டி பிரித்தெடுக்கப்பட்ட நல்லூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம், வட்டுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா ஆகியோரும், தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சி.எக்ஸ்.மாட்டீனும் நியமன உறுப்பினர்களான எம்.சி.சுப்ரமணியமும் சி.குமாரசூரியரும் (செனட் சபை இல்லாதொழிக்கப்பட்ட பின்பு, நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்) ஆகிய ஐவருமே, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தமிழ்ப் பிரதிநிதிகள், மொத்தமாக இதனைப் புறக்கணிக்கவில்லை.

தமிழர்களிடையேயும் மாற்றுக்கருத்துண்டு என்று அரசாங்கம் சுட்டிக்காட்ட இது வாய்ப்பாக அமைந்தது. வடக்கு - கிழக்கு எங்கு புதிய அரசியலமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நாள் துக்க நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால் போராட்டம் வெற்றிகராமாக நடைபெற்றது. ஊர்வலங்களுக்கும் பொதுக்கூட்டத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ் தலைவர்களினால் எதிர்ப்புக் கூட்டமொன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தில் நடத்தப்பட்டது. தமிழ் இளைஞர்கள், புதிய அரசியலமைப்பின் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆங்காங்கே கறுப்புக் கொடிகள் பறந்தன. வடக்கு கிழக்கில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு வலுவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த யாப்பின் உள்ளடக்கம் எவ்வாறானதாக இருந்தது?

(அடுத்த வாரம் தொடரும்...)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .