2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தலைமைக்கு இதுதான் தகுதியோ?

கே. சஞ்சயன்   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, “நான் அப்படிக் கூறினேனா” என்று கேட்பது, “அவ்வாறு கூறவேயில்லை” என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போன்றன, அரசியல்வாதிகளுக்குப் புதிதான விடயமல்ல. இது அரசியல்வாதிகளின் பொதுமையான குணவியல்பாக மாறியிருக்கிறது.   

மிகச்சமீபத்தில், இந்தக் குணவியல்புகளை, அப்பட்டமாகவே வெளிக்காட்டியிருப்பவர்கள் இருவர். ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; இன்னொருவர் மஹிந்த ராஜபக்‌ஷ.  

இரண்டு பேருமே, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதையடுத்த 51 நாள்கள் நீடித்த குழப்பங்களுக்கும் காரணமானவர்கள். இதனால் தான், இரண்டு பேரினதும் செல்வாக்கு, கடுமையாகச் சரிந்து போயிருக்கிறது.  

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின், இலங்கைக்கான மூத்த செய்தியாளராக இருக்கும் ஷிஹார் அனீஸ், தனது ருவிட்டர் பக்கத்தில், அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார்.  

அதில் அண்மைய, 51 நாள் அரசியல் குழப்பத்தால், அதிகம் இழப்பைச் சந்தித்தது யார் என்று ஒரு கேள்வியையும் அதற்கு நான்கு தெரிவுகளையும் கொடுத்திருந்தார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி, இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே அவர் கொடுத்திருந்த தெரிவுகள்.  

இந்தக் கருத்துக் கணிப்பில், 447 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில், 49 சதவீதமானவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரது கட்சியையுமே மோசமான இழப்பைச் சந்தித்தாக வாக்களித்தனர்.  

அடுத்து, அதிக இழப்பை எதிர்கொண்டவர்கள் என்று, மைத்திரிபால சிறிசேனவையும் அவரது கட்சியையும் 44 சதவீதமானோர் கருதியிருந்தனர்.  

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டதாக, ஆறு சதவீதமானோரும், இரா. சம்பந்தனுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு சதவீதமானோரும் கூறியிருந்தனர்.  

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியதால் தான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தச் சரிவு ஏற்பட்டது என்று கருதமுடியாது.  

அரசியலில் இது போன்ற நிலைமைகள் சகஜமானது. எந்தவோர் அரசாங்கமும், எந்தநேரத்திலும் கவிழக்கூடியது தான். அரசாங்கமொன்று பதவிக்கு வரும் போதே, ஆட்சியை இழப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே பொருத்தம்.அதுவும் ஜனநாயக அரசியலில், இதுபோன்ற கவிழ்ப்புகளை எதிர்பாராதிருக்க முடியாது.  

எனவே, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அரசியல் நெருக்கடியால் மட்டும்தான், ஹ ிந்த ராஜபக்‌ஷவினதும் மைத்திரிபால சிறிசேனவினதும் செல்வாக்குச் சரிந்துள்ளது என்று கருதுவதற்கில்லை. அதற்கு அப்பாற்பட்ட, சில தனிப்பட்ட காரணிகளையும் இங்கு புறமொதுக்கி விடமுடியாது.  

குறிப்பாக, மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும், அரசியல் குழப்பம் நிலவிய காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் வெளிப்படுத்திய கருத்துகளும், நடந்து கொண்ட முறைமைகளும், அவர்களின் தரப்புச் செல்வாக்கில் கணிசமான சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.  

தேர்தல் பலப்பரீட்சை ஒன்றில் தான், இதற்குத் தெளிவான பதில் கிடைக்கும் என்றாலும், இவர்கள் இருவரினதும் அரசியல் போக்கு, கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  

ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், பல வாரங்களாக ஊடகங்களாலும் மக்களாலும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான்.  

அவர் வெளியிட்ட கருத்துகளும், முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளும் அவரது மனநிலை பற்றிய சந்தேகங்களையும் கூட, பலருக்கு ஏற்படுத்தியது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனோநிலை பற்றி, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதனால் அமைச்சர் பதவியை இழந்துபோய் நிற்கிறார்.  

“மன்னிப்புக் கோரினால் தான், அமைச்சராக நியமிப்பேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, சரத் பொன்சேகாவே தெரிவித்துள்ளார்.  

சரி, தவறுகளுக்கு அப்பால், இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களாக இருந்து கொண்டு, தாம் செய்கின்ற தவறுகளை அடுத்தவர் தட்டிக் கேட்பதை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுக்கப்பட்ட விவகாரம், இதைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறது.  

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட, இந்த அரசியல் குழப்பத்தால் அதிகம் செல்வாக்கைத் தொலைத்திருப்பவர் மஹிந்த ராஜபக்‌ஷதான்.  

அவர் இந்த நிலைமைக்குள் தள்ளப்பட்டதற்குக் காரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் என்று, குமார வெல்கம போன்றவர்கள் குற்றம்சாட்டினாலும், மஹிந்த ராஜபக்‌ஷ தெரிந்து கொண்டே, குழிக்குள் விழுந்திருக்கிறார் என்றே தெரிகிறது.  

கடந்தவாரம், மஹிந்த ராஜபக்‌ஷ அளித்திருந்த பேட்டி ஒன்றில், நான்கு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியது பற்றியும் அவருடன் 15 நாள்கள் நடத்தப்பட்ட பேச்சுகளின் பின்னரே, தான் பிரதமராக நியமிக்கப்பட்டது குறித்தும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

எனினும், இருவருக்கும் இடையிலான சந்திப்புகள் எங்கே நடந்தன என்ற இரகசியத்தை மாத்திரம் அவர் வெளிப்படுத்த மறுத்துள்ளார்.  

முன்னதாக, இருவரும் சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது, அதை மஹிந்த ராஜபக்‌ஷவும் நிராகரித்திருந்தார்; மைத்திரிபால சி்றிசேனவும் மறுத்திருந்தார்.  

இப்போது, அதனை இரண்டு பேரும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஒருவேளை, இவ்வாறு இரகசியத்தைப் பேணுவதை, அவர்கள் இராஜதந்திரம் என்று கருதுகிறார்களோ தெரியவில்லை. அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷவின் அதிகபட்ச குத்துக்கரணத்தையும் நாட்டு மக்கள் அண்மையில் பார்த்து விட்டார்கள்.   

கடந்த நவம்பர் 12ஆம் திகதி, மஹிந்த ராஜபக்‌ஷ பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, உறுப்புரிமை பெறுகின்ற படங்களும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.  

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, செல்லுபடியற்றது என்று உயர்நீதிமன்றத்தால், அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது, அதிகம் சிக்கலில் மாட்டியிருப்பவர் மஹிந்த ராஜபக்‌ஷதான்.  

அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளதால், பொதுஜன பெரமுனவில் தான் இணையவில்லை என்று, அப்பட்டமாக முழுப் பூசினிக்காயை சோற்றுக்குள் மறைத்திருக்கிறார்.  

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு, மஹிந்த ராஜபக்ச தான் தலைமை தாங்குவார் என்றும், அவரே ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வார் என்றும், பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகவும் மஹிந்த தரப்பு அறிவித்திருந்தது.  

மஹிந்த ராஜபக்‌ஷவும் கூட இதனை சில சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உண்மையைப் புரட்டுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்.  

உண்மையை மறைத்தல் என்பது வேறு; உண்மையைப் புரட்டுதல் என்பது வேறு. கண்ணுக்கு முன்னே நடந்த ஒன்றை, பொய் என்று வாதிடுவது தான் உண்மையைப் புரட்டுதல்.  

தான் பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்று, மஹிந்த ராஜபக்‌ஷ கூறியது, எந்தளவுக்கு அப்பட்டமான பொய் என்பது, அனைவருக்கும் தெரியும். அவரது கட்சியினரும் கூட, அது பொய் என்பதை அறிவார்கள்.

இதற்குப் பின்னர், அவர் கடந்தவாரம் சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், தான் பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்றும் இணைவதற்கு விண்ணப்பம் கொடுத்தேன், அது இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். உறுப்புரிமை அட்டை கிடைத்தால் மாத்திரமே, கட்சியில் இணைந்து கொண்டதாக அர்த்தம் என்று, மக்களுக்கு விளக்கம் கொடுக்கிறார்.  

அதைவிட, தான் சுதந்திரக் கட்சியின் ஆயுள்கால உறுப்பினர் என்றும், அதன் போஷகராக இருப்பதாகவும், போஷகருக்கு வெளியேற்றம் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.  

சுதந்திரக் கட்சியின் வாழ்நாள் உறுப்பினர் என்று மார்தட்டும் மஹிந்த ராஜபக்‌ஷ எதற்காக பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதற்கு விண்ணப்பத்தைக் கொடுத்தார்? இந்தக் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாது.  

மஹிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் நாட்டு மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலவே தோன்றுகிறது.  

தாங்கள் விரும்பியபடி எதையும் செய்யலாம், எதையும் சொல்லலாம், பின்னர் அதனை மறுக்கவும் செய்யலாம் என்பதை, அவர்கள் இந்தக் காலகட்டத்தில் நிரூபித்திருக்கிறார்கள்.  

அரசமைப்பை மீறவில்லை என்று கூறிக்கொண்டே, அதனை மீறிச் செயற்பட்டவர்கள் தான் இவர்கள் இருவரும். இவர்கள் இருவரும், நாட்டு மக்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள், தமது எல்லாச் செயல்களையும் அவர்கள் மறந்து விடுவார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

ஆனால், அவர்கள் அரசியல்வாதிகளைப் போன்று மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களல்லர். சரியான நேரம் வரும் போது, சரியான முடிவை எடுக்கத் தயங்கமாட்டார்கள்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X