Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
J.A. George / 2024 ஜூலை 31 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி சவால்கள் நிறைந்த பயணத்தைத் தொடங்குகின்றார்.
மரத்தால் ஆன பழைய படகு, நீண்ட காலமாக நீரில் கிடந்த தேய்ந்த நிலையில் சக ஆசிரியர்களையும் அந்த தீவினைச் சேர்ந்த மக்களையும் கடலின் நீரோட்டத்தில் சுமந்து கொண்டு, மோட்டார் சத்தம் காதினை கிழிக்க ஊர்ந்து செல்கின்றது.
காலையில் ஒரு தடவை மாலையில் ஒரு தடவை என ஒரு நாளில் இரண்டு தடவைகள் பயணில் பயணித்தே ஆகவேண்டும் என்ற நிலை. “இது வெயில் காலம் என்பதால் இப்போது பரவாயில்லை. ஆனால், மழை காலத்தில் நீங்கள் இந்தப் படகில் பயணம் செய்திருந்தால் உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் - இவ்வாறு கூறிக்கொண்டே ஜெயலக்ஷ்மி சிரிக்கிறார்.
எழுவைதீவு, இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு சிறிய தீவு. யாழ்ப்பாண நகரத்திலிருந்து மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட எழுவைதீவில் 555 பேர் வசிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சில தீவுகளை போல இல்லாமல், எழுவைதீவை அருகிலுள்ள பிற தீவுகளுடன் இணைக்கும் தரைவழிப்பாதை இல்லை. வேலனை மற்றும் ஊர்காவற்துறையில் இருந்து படகு சேவை மூலம் மட்டுமே எழுவை தீவுக்கு செல்ல முடியும்.
ஜெயலக்ஷ்மி, பாடசாலையை சென்றடைய ஒவ்வொரு நாளும் எழுவைதீவு தீவுக்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பயணிக்க வேண்டும். தீவு மற்றும் நிலப்பரப்புக்கு இடையேயான முக்கிய போக்குவரத்து முறையாக படகு சேவையே உள்ளது.
பயணிகளை மட்டுமல்ல, மோட்டார் சைக்கிள், பொருட்கள் மற்றும் விலங்குகளை கூட படகின் கூரையில் வைத்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை. மழை பெய்யும் போது படகுக்குள் தண்ணீர் மேலே உள்ள மர ஓட்டடைகள் வழியாகவும், பயணிகள் மீதும் கசியும் என்கிறார் ஜெயலக்ஷ்மி.
”மழை நாட்களில் நாங்கள் முழுவதுமாக நனைந்த நிலையிலேயே பாடசாலைக்கு செல்வோம். நாங்கள் எழுவைத்தீவு கரையை அடைந்ததும், தெரிந்த கிராமவாசியின் வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ நாங்கள் கொண்டு வரும் மாற்று ஆடைகளை மாற்றிக் கொள்கிறோம்.
பாடசாலை காலை 7.30 மணிக்கு தொடங்கும் அதே நேரத்தில்தான் தீவுக்கான முதல் படகு ஊர்காவற்துறையில் இருந்து புறப்படுகிறது, இதனால் பாடசாலைக்கு சரியான நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது, மழை நாளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகலாம். இந்தப் படகு இலவசம் அல்ல. ஒவ்வொரு பயணத்துக்கும் ஒவ்வொரு நாளும் நாம் பணம் செலுத்த வேண்டும். என்னுடைய சம்பளம் ரூ.50,000 மட்டுமே. அத்துடன், வெறும் 2,500 ரூபாய் மாத்திரமே போக்குவரத்து கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
நான் தினமும் யாழ்ப்பாணத்தில் இருந்து எழுவைத்தீவுக்கு வந்துசெல்ல போக்குவரத்துக்கு மட்டும் 10,000 செலவிட வேண்டிய நிலை உள்ளது. வாய்ப்பு கிடைத்தால், நான் எனது ஊருக்கு அருகில் உள்ள வேறு பாடசாலையில் கல்வி கற்பிப்பேன். ஆனால், நான் இடமாற்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்பு மூன்று வருடங்கள் இங்கு சேவையாற்ற வேண்டும்” என்று ஜெயலக்ஷ்மி கூறுகிறார்.
பெரும்பாலும் இந்தத் தீவில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் புதிய பட்டதாரிகளாகவோ அல்லது தண்டனையாக அனுப்பப்பட்ட ஆசிரியர்களே இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
யாழ். குடாநாட்டின் கரையோரத்தில் மக்கள் குடியேற்றங்களைக் கொண்ட பல தீவுகள் இருந்தாலும், உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் நயினாதீவு போன்ற புகழ் பெற்ற ஒன்று அல்லது இரண்டு தீவுகள் பற்றி பேசப்பட்டாலும் ஏனைய தீவுகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரத்தில் ஒரு டசனுக்கும் அதிகமான தீவுகள், மனிதக் குடியேற்றங்களைக் கொண்டவை என்பதை இக்கட்டுரையைப் படிப்பவர்கள் அறியும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
எழுவைத்தீவு, அனலத்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, நெடுந்தீவு போன்ற தீவுகள், பண்டைய காலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்களின் வசிப்பிடமாக இருந்து வருவதுடன், இந்தத் தீவுக்கூட்டத்தின் கடுமையான நிலப்பரப்பில் வசிப்பவர்கள் அந்த கடுமையான தீவு வாழ்க்கை முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.
அந்தத் தீவு மக்களுக்கான அடிப்படை கல்வியை பெற்றுக்கொடுக்க போராடும் ஜெயலக்ஷ்மி போன்ற ஆசிரியைகள் மற்றும் எழுவைதீவில் உள்ள மாணவர்களின் கதைகள் அதிகமாக வெளிச்சத்துக்கு வருவதில்லை. அந்த மக்களை பற்றிய அவர்களது கேள்விப்படாத பல போராட்டங்களை குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள நம்மில் பலர் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
எழுவைத் தீவில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் சுமார் 43 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்கள் உள்ளனர். இவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைய, பிரதான காரணம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே என அங்குள்ள ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 9,332 பிறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டு 8,496 பிறப்புகளும் 2021 ஆம் ஆண்டு 8,476 பிறப்புகளும் 2022 ஆம் ஆண்டு 8,676 பிறப்புகளும் 2023 ஆம் ஆண்டு 8,250 பிறப்புகளும் பதிவாகியுள்ளதுடன், பிறப்பு விகித்தில் வீழ்ச்சி நிலை பதிவாவதை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புள்ளி விவரத்தின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. இதன்படி, 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15.4 ஆக காணப்பட்ட பிறப்பு விகிதம் 2022 ஆண்டாகும் போது 14.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, அங்குள்ள பாடசாலையில் கற்பிக்கப்படும் பல பாடங்களுக்கு இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
“தேவையான பாடங்களைக் கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கப் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை நாம் ஒருபோதும் பெறுவதில்லை. இரண்டு பாடசாலைகளிலும் அழகியல் பாடங்களை கற்பிக்க ஆசிரியர் இல்லை. மேலும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகக் மேலதிக வகுப்புகளுக்கு யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்தப் பிள்ளைகளால் முடியாது.
நாட்டில் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன், அரசாங்கம் எமது பாடசாலைக்கு ஸ்மார்ட் பலகை வழங்கியது. ஓராண்டுக்கு முன் அது பழுதான நிலையில், அதனை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பவில்லை. இங்கு அதனை திருத்தும் வசதிகள் இல்லை. மேலும் மாணவர்கள் கற்க போதுமான கணினிகள் இல்லாதது போன்ற பல சிக்கல்கள் உள்ளன, ஸ்மார்ட் பலகையை விட ஒரு சில கணினிகளில் இருந்திருந்தால் அதன் ஊடாக எமது மாணவர்கள் அதிகம் பயனடைந்திருக்கலாம் ” என்று எழுவைதீவு முருகவேல் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் எமது தீவில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படுவதில்லை. பரீட்சை எழுத எமது மாணவர்கள் கடலில் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. பரீட்சை எழுதும் காலப்பகுதியில் எமது பிள்ளைகள் தினந்தோறும் படகில் பயணிப்பதால் சோர்வடைகின்றனர். அவர்களை பரீட்சை நிலையத்துக்கு அண்மைய பகுதியில் அந்தக் காலப்பகுதியில் தங்க வைத்தாலும், புதிய இடம் என்பதால் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அத்துடன், பிள்ளைகளை அங்கு சென்று தங்கவைக்க அதிக செலவும் ஏற்படுவதாக அங்குள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
“இந்தப் பிள்ளைகள் பரீட்சைக்குத் தயாராவது மட்டுமின்றி, பரீட்சைக்கு முன்னதாக ஒரு புதிய சூழலுக்கு ஏற்பவும் மாற வேண்டும். இந்த விடயம் மாணவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது” என்று கூறுகின்றார் எழுவைதீவு முருகவேல் வித்தியாலயத்தின் அதிபர். க.இராசை.
யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் தீவுகள் இரண்டிற்கும் சமமாகப் பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளிகள் மாணவர்களுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. தீவில் உள்ள பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாழ்ப்பாண நகரிலுள்ள பாடசாலைகள் எதிர்கொள்வதில்லை. மாணவர்களின் விருப்பப்படி பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான அணுகல் முதல் ஆசிரியர்கள் கிடைப்பது வரை அனைத்திலும் இங்கு வேறுபட்ட நிலை காணப்படுகின்றது. வெட்டுப்புள்ளிகள் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடாமல் குறைந்த பட்சம் இந்த தீவுகளின் விஷயத்திலாவது பாடசாலைகளுக்கு இடையில் மாறுபட வேண்டும்” என்கிறார் அவர்.
அனலைத்தீவு மாணவர்களின் போராட்டம்
பொதுவாக இந்தத் தீவுகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் கடல் அல்லது பனை மரத்தை சார்ந்துள்ளது, இந்தத் தீவுகளில் முதல் மனித குடியேற்றங்களின் பின்னர் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்ட தொழில்கள் இன்றும் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுவாக இந்தத் தீவுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஏனைய நிலப்பரப்பில் உள்ள மாணவர்கள் சந்தித்திருக்காத தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அனலைத் தீவில் இரண்டு ஆரம்பப் பாடசாலையும் ஒரு இடைநிலைப் பாடசாலையும் உள்ளது. அனலைதீவு, யாழ்ப்பாண நகருக்கு மேற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர்.
தீவில் பல இந்துக் கோவில்கள் மற்றும் ஒரு சில தேவாலயங்கள் உள்ளதுடன், இது தீவின் மாறுபட்ட கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. அனலைதீவை அருகிலுள்ள பிற தீவுகளுடன் இணைக்கும் தரைப்பாதை இல்லை. எவ்வாறாயினும், அண்டை தீவான வேலனைதீவு மற்றும் ஊர்காவற்துறையில் இருந்து படகு சேவையின் மூலம் இதை அணுக முடியும்.
அங்குள்ள மக்களில் பலர் புகையிலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவற்றை பணப்பயிராக வளர்க்கிறார்கள், அதேநேரத்தில் மீன்பிடித்தல் மற்றும் கள் இறக்குதல் ஆகியவற்றை தங்கள் இயல்புநிலை தொழிலாக கொண்டுள்ளனர். அதன் அருகில் உள்ள தீவான எழுவைத்தீவு எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் அனலைதீவில் அதிகமாக இருப்பதாகத் தோன்றினாலும், அங்கு கல்வித்துறை எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தம்மால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்ய முடியும் என அனலைதீவு கிராம மக்கள் கூறுகின்றனர்.
“தகவல் தொழில்நுட்பம், அழகியல் அல்லது ஆங்கிலம் கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இங்கு இல்லை. இந்தத் தீவில் உள்ள மாணவர்கள் நாடகம், இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். உயர்தர பாடசாலைகள் இங்கு இல்லை. உயர்தர வகுப்புகளுக்குச் செல்வதற்கு மாணவர்கள் ஊர்காவற்துறையில் உள்ள பாடசாலைகளுக்கு படகில் செல்ல வேண்டியுள்ளது” என அனலதீவைச் சேர்ந்த வசந்தன் (33) தெரிவித்தார்.
"தீவில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிரப்ப போதுமான மற்றும் தகுதியுள்ள உள்ளூர் பட்டதாரிகள் உள்ளபோதும், நியமனங்களை வழங்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று வசந்தன் கூறுகிறார்.
“இங்குள்ள பாடசாலையொன்றில் ஒரு வெறுமையான மஹிந்தோதய கட்டிடம் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆய்வகங்களில் அடிப்படை ஆய்வக உபகரணங்கள் கூட இல்லை. அடிப்படை பரிசோதனைகளைக்கூட ஆசிரியர்களால் கற்றுத்தர முடியாது’ என்றார் வசந்தன்.
அனலைத்தீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள மஹிந்தோதய ஆய்வகக் கட்டிடத்தை புனரமைத்து மாணவர்களின் பாவனைக்கு கொண்டு வருமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என வசந்தன் கூறுகிறார்.
அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை
“நயினாதீவு மகா வித்தியாலயத்துக்கு கடந்த வருடம் டிசெம்பர் மாதம் முதல் அதிபர் இல்லை, அடுத்த அதிபர் எப்போது வருவார் என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை” என அதே பாடசாலையின் ஆசிரியரும், நயினாதீவு தீவு நாகபூசணியம்மன் கோவில். பொருளாளருமான கே.ஜீவசீலன் (55) தெரிவித்தார்.
தமிழ் மற்றும் பௌத்தர்களின் முக்கிய இரண்டு வழிபாட்டுத் தலங்களுடன் சகவாழ்வின் அடையாளமாக இருக்கும் 4.2 சதுர கிலோமீட்டர் கொண்ட நைனாதீவில் உள்ள மூன்று பாடசாலைகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அங்கு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றாலும், அழகியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத பிரச்சினை மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக உள்ளது என்று ஜீவசீலன் கூறுகிறார்.
ஏனைய தீவுகளுடன் ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் இருந்து இலகுவில் அணுகக் கூடிய தீவான நயினாதீவுக்கு குறிக்கட்டுவானில் இருந்து முதல் படகு சேவை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
“ஆசிரியர்கள் காலை 7.50 மணிக்கு தீவுக்கு வருகிறார்கள். பின்னர் அவர்கள் பாடசாலைக்கு நடந்து செல்ல 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும். எனவே, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் காலை 7.30 மணிக்குத் தொடங்கும், நாங்கள் காலை 8.30 மணிக்கு தீவுகளில் பாடசாலைகளை ஆரம்பிக்கின்றோம்”என்கிறார் ஜீவசீலன்.
இது தீவில் வசிக்கும் மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இங்குள்ள மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதில்லை என்றும், வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு மிகச் சிலரே படகில் செல்வதாக ஜீவசிலன் மேலும் கூறினார்,
இந்தத் தீவில் உள்ள பாடசாலைகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், “நயினாதீவு மகா வித்தியாலயத்தில் ஒரு கட்டிடம் பாழடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். எந்தப் பதிலும் வரவில்லை'' என்றார் ஜீவசீலன்.
இந்தத் தீவில் உள்ள மாணவர்களின் நலனுக்காக அங்குள்ள கோவில், விகாரை மற்றும் தீவில் இருந்து புலம்பெயர்ந்தோர் உதவிகளை செய்து வருவதாக கூறிய அவர், அரசாங்கம் எதுவும் செய்யவில்லை” என்றார்.
புங்குடுதீவின் மாணவர்களின் நம்பிக்கை
எழுவைதீவு, அனலைத்தீவு, நயினாதீவு போன்ற தீவுகளுக்கு கடல் வழியாக மட்டுமே செல்ல முடியும் எனினும், 22.5 சதுர கிலோமீட்டர் தீவான புங்குடுதீவை நிலப்பரப்புடன் இணைக்கும் தரை வழிப்பாலம் இருக்கின்றது.
“எமது தீவு நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டிருந்தாலும், தீவில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையாக தண்ணீர் உள்ளது. எமது பாடசாலையில் உள்ள 260 மாணவர்களும் பாடசாலைக்கு தயாராவதற்கு அருகிலுள்ள பொது கிணற்றிற்கு செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது” என்கிறார் புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவியான நளினி (15).
அடுத்து நடக்கவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நளினி, தனது பாடசாலையில் ஆய்வகம் இருந்தாலும், உயிரியல் பாடத்துக்கான ஆசிரியர் இல்லாததால் தனது நண்பர்கள் பலர் அறிவியல் பாடங்களைத் தொடரும் கனவைக் கைவிட்டதாகவும் கூறினார்.
"நாங்கள் நிலப்பரப்புடன் இணைந்திருப்பது போல் உணரவில்லை. அவர்களுக்கு நல்ல வசதிகளும், பல பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் உள்ளனர். எங்கள் ஆங்கில ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். அடுத்த ஆசிரியர் எப்போது வருவார் என்று தெரியவில்லை. நான் பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன், அதனால் இப்போது என் பாடசாலையில் கற்பிக்காத பாடங்களை என்னால் கற்பிக்க முடியும்.” என்கிறார் நளினி.
பெருளாதார நெருக்கடிக்குள் பெண்கள்
வாழ்வாதாரத்துக்காக பெரும்பாலும் கடலையே நம்பியிருக்கின்ற இந்த தீவுகளில் வசிக்கும் பெண்கள் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்து வருவதுடன், பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்றனர். தமது கணவன் கடலுக்கு சென்று கொண்டுவரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காமையால் வருமானத்தை பெறுவதில் பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுகின்றனர்.
தான் சிறியளவில் முன்னெடுக்கும் விவசாயம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திகளுக்கு உரிய விலை மற்றும் சந்தைப்படுத்தல் கிடைப்பதில்லை என்கிறார் நெடுந்தீவினை சேர்ந்த பொன்னம்மாள்.
“நான் சிறியளவில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். எமக்கு பிரதான பிரச்சினையாக நீர் பற்றாக்குறை காணப்படுகின்றது. எமது நிலத்தடி நீரில் அதிக உவர்ப்புத்தன்மை காரணமாக எம்மால் சரியான விளைச்சலை பெற முடியாத நிலை உள்ளது. அத்துடன், எமது தயாரிப்புகளை நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இங்கு வந்து கொள்வனவு செய்பவர்கள் குறைந்த விலைக்கே வாங்கி செல்கின்றனர்” என்றார்.
நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளும் வாழ்வதற்காக நாங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திகளை மாத்திரமே நம்பியிருக்கின்றோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ஒடியலை எம்மால் யாழப்பாணத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியுமாக இருந்தால் எமது உற்பத்திக்கு அதிக விலையை பெற்றுக்கொள்ள முடியும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் விவசாயக் குடும்பங்கள்
இதேவேளை, நீர் பற்றாக்குறையால் உரிய விளைச்சலை பெறமுடியாமல், ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்க முடியாத நிலையில் விவசாயத்தை மூலாதாரமாக கொண்ட மக்கள் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்கிறார் நெடுந்தீவு தெற்கு கமக்கார கூட்டமைப்பின் தலைவர் கருணாகரன் பகீரதன்.
அத்துடன், இங்குள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கையில் ஈடுபட அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
பனைமரம் சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிக்க அரசாங்கத்தின் தரப்பில் இங்கு எந்தவித நடவடிக்கைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. எமக்கான தொழில்பயிற்சிகள் மற்றும் சுயதொழிலுக்கான உதவிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இங்குள்ள பெண்கள் தமது உழைப்பின் ஊடாக தமது குடும்பத்துக்கு சிறிதளவாவது வருமானத்தை ஈட்டிக்கொடுக்க முடியும் என, அனலதீவைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ரெஜினோல்ட் கூறுகின்றார்.
தீவகப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில்கூட அரசாங்கம் பின்னிற்பதாக கூறும் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, போக்குவரத்து, நீர் மற்றும் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்ககை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
“இங்குள்ள மக்கள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்தி கொள்ள வழிவகைகள் செய்து கொடுத்தால் மாத்திரம் போதும். இங்குள்ள மக்கள் கடுமையாக உழைப்பவர்கள். ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறுவதில்தான் இங்கு பிரச்சினை உள்ளது.” என அவர் குறிப்பிட்டார்.
தீவகத்தில் உள்ள போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் சமூக ஆர்வலரும், முன்னாள் கிராம சேவகரும், நைனாதீவில் நடத்தப்படும் அமுதசுரபி அன்னதான சபையின் உறுப்பினருமான மதியாபரணன் அம்பிகைபாகனிடம் பேசினோம்.
“தீவகத்தில் வசித்து வரும் மக்களின் பிரதான பிரச்சினையாக போக்குவரத்து காணப்படுகின்றது. இதனை தீர்க்குமாறு பல்வேறு தரப்பினரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே போக்குவரத்துக்கான படகு வசிகள் காணப்படுதால் மக்கள் அவசரமாக வேலைகளுக்கு கூடி விரைவாக செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தேவையென்றால், முதல் நாளோ அல்லது காலையில் சென்று யாழ்ப்பாணத்தில் தங்கிருந்து வேலைகளை முடித்துக்கொண்டு மறுநாளே தீவகத்துக்கு திருப்பிவரும் நிலைமையும் இங்கே உள்ளது.
குறிப்பாக, நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்வதாக இருந்தாலும், அதற்காக அம்பியுலன்ஸ் படகு சேவைக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இரண்டு மூன்று நோயாளர்களை ஒரே படகில் அழைத்து செல்ல வேண்டிய நிலைமையும் இங்கு உள்ளது.
எனவே மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை நாள் முழுவதும் இடம்பெறும் வகையில் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். இதன் ஊடாக மாணவர்களும் நகரங்களுக்கு சென்று மேலதிக கல்வியை கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும்” என்கிறார் மதியாபரணன் அம்பிகைபாகன்.
சந்தைப்படுத்தல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்
“வரலாற்று ரீதியாக இலங்கையின் பொருளாதாரத்தில் தீவக மக்களின் பங்களிப்பு காணப்பட்ட நிலையில், யுத்தக் காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் அங்கு சனத்தொகை குறைந்ததுடன், விவசாயம் மற்றும் கடற்றொழில் உற்பத்திகள் குறைந்துள்ளது” என கூறுகின்றார் பொருளாதார நிபுணர் கலாநிதி அகிலன் கதிர்காமர்.
இந்த விடயம் தொடர்பில் நாம் அவரிடம் பேசிய போது, “விவசாயம், கடற்றொழில் போன்றவற்றில் முன்னேற்றம் வந்தால்தான் அங்கு மக்கள் தொடர்ந்து வசிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அங்கு முன்னேற்ற நிலையை காணக்கூடியதாக இருக்கும்.
அங்கு கடல்வளங்கள் பெருமளவு உள்ளதால், மீன்பிடியை அதிகரித்து கருவாடு போன்ற உற்பத்திகளை முன்னெடுப்பது வெற்றியளிக்கும். ஆனால், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்தான் அதற்கு பிரதான பிரச்சினையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த விடயத்துக்கும் தீர்வொன்று வந்தால் தான் கடற்றெழிலை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்” என்றார்.
“அதுமட்டுமின்றி, தீவகப்பகுதிகளில் சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லை. உற்பத்தியினை அதிகரித்தாலும் பெறுமதியை அதிகரிக்கும் வாய்ப்புகள் இல்லை. அந்த மக்கள் புவியியல் ரீதியாக புறந்தள்ளப்பட்ட நிலையில் உள்ளனர். அங்கு தொடரான போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவதுடன், உற்பத்திகளை அங்கேயே செய்வதற்காக உதவிகள் அந்த மக்களுக்கு தேவைப்படுகின்றது” என்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி அகிலன் கதிர்காமர் சுட்டிக்காட்டுகின்றார்.
நிலப்பரப்பில் இருந்து தனித்து விடப்பட்ட இந்தத் தீவுகளில் வாழ்க்கை நடத்தும் மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றுவதற்கு பொறுப்புவாய்ந்த தரப்பினர் முன்வராதமை குறித்து இங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளதுடன், தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago