Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தன்னுடைய விசாரணை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அந்த விசாரணை அறிக்கை, பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்புக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கை அரசாங்கத்துக்கும், தலையீட்டு அரசியல் செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பகுதி பகுதியாக சாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கொள்ளப்பட்டது. இவற்றைத் தாண்டி, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு சிறப்பு கலப்பு நீதிமன்றங்களி
னூடு (உள்ளக) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற தன்னுடைய பரிந்துரையை அந்த அறிக்கை முன்மொழிந்திருக்கின்றது.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தரப்பினாலும் குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. அப்படியான நிலையில், குற்றவியல் விசாரணைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை முன்நிற்கின்றது. எனினும், அவற்றின் செயற்பாட்டுத்திறன் அல்லது அதனை இலங்கை அரசாங்கம் எந்தளவு உள்வாங்கும் என்பது தொடர்பிலேயே அடுத்த கட்ட நகர்வு தங்கியிருக்கின்றது.
முறையான உள்ளக விசாரணையொன்றை நடத்துவது தொடர்பிலான தன்னுடைய அறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்ற போதிலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பே நீதியான விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வளவுக்கு இருக்கின்றது என்கிற விடயம் மேலெழுந்து நிற்கின்றது. வரும் ஆண்டு ஆரம்பிக்கும் உள்ளக விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் பதிலுரைத்திருக்கும் இலங்கையின் புதிய அரசாங்கம், சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டினை (கிட்டத்தட்ட) நிராகரித்துவிட்டது. ஆனால், சர்வதேச ரீதியிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசிப்பதாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. இதன்மூலம், சர்வதேச தலையீடு எனும் விடயத்தைத் தன் மீது பொய்யாகச் சுமத்திக் கொண்டு, சர்வதேச அழுத்தங்களிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது என்றும் கொள்ள முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையிலேயே கோடிடப்பட்டிருக்கின்றது. அது, இலங்கை தொடர்பிலான நெகிழ்வுப் போக்கை நீடிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தும் என்று கருதலாம். மறுபுறத்தில், உள்ளக விசாரணையொன்றை நடத்துவதற்கான சக்தி இலங்கையிடம் இல்லை என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகின்றது. அதுவும், கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு என்கிற ரீதியில் தமிழ் மக்களின் கோரிக்கைகளும் அதனை நோக்கிய நகர்வும் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பில் விரிவான உரையாடல்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்களின் பங்களிப்பின்றி உள்ளக விசாரணை என்பது கொஞ்சமாகவேனும் நீதியைப் பெற்றுத் தருவதற்கான வாய்ப்புக்களை மூடிவிடும்.
அப்படியான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மீதான பொறுப்புக் கூறும் கடப்பாடு போன்று சர்வதேசத்தின் மீதான பொறுப்புக் கூறும் கடப்பாட்டினையும் பலமாக வலியுறுத்த வேண்டியிருக்கின்றது. அது, தமிழ் மக்களின் குறிப்பிட்டளவான முன்னோக்கிய நகர்வாக இருக்கும்.
இறுதி மோதல்களின் போது 7,700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்று காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, இந்திய ஊடகமொன்றிடம் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் உள்ளக விசாரணையின் நியாயத்தன்மை எவ்வாறாக இருக்கும் என்பதற்கு மக்ஸ்வெல் பரணகமவின் மேற்கண்ட கூற்று சான்றாகும்.
இறுதி மோதல்களில் 40,000-க்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட கணக்கெடுப்புக்களிலும் தெரிய வந்திருக்கின்றது. ஆனால், மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு 7,700 என்கிற அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுருக்கி விட்டது.
சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள் மற்றும் விசாரணையாளர்களை உள்வாங்காத உள்ளக விசாரணை என்பது மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான 'தூங்கி வழியும்' ஆணைக்குழு போன்றதான முடிவினையே தரும். ஏனெனில், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, சாட்சியமளிக்க வந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் இலங்கை அரச படையினரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும், காணாமற்போனவர்களை மரணித்தவர்கள் என்று ஏற்றுக்கொண்டு மரணச்சான்றிதழ் பெறுமாறு வலியுறுத்தப்பட்ட சம்பவங்களும் ஏற்கெனவே பதிவாகியிருக்கின்றன.
அதுபோல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சியங்களை வழங்கியவர்களே குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது அதிகமாக உள்வாங்கப்பட்டமை மற்றும் சாட்சியமளிப்பவர்களின் சாட்சியங்கள் சரியான மொழிபெயர்ப்பின்றி ஏனோதானோ என்று கையாயப்பட்டமை தொடர்பிலும் உள்ளூர் மனித உரிமை அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் உள்ளக விசாரணை என்பதும் மற்றொரு தூங்கி வழியும் விசாரணையாக மாறும் வாய்ப்புக்களே காணப்படுகின்றன. அதனையும் தாண்டி, வடக்கு- கிழக்கில் இருக்கும் 80 சதவீதத்துக்கும் அதிகமான சாட்சியங்களைப் பாதுகாப்பது தொடர்பிலான உறுதிப்பாடு என்பது கேள்விக்குறியானது. ஏனெனில், ஆட்சி மாற்றமொன்று நடைபெற்றிருக்கின்ற போதிலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து தரப்புக்களும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இயங்கியமை போன்றதானதொரு நிலையிலேயே இன்னமும் இருக்கின்றன.
அப்படியான நிலையில், சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்ச்சியான அச்சுறுத்தல்லுக்குள்ளேயே இருக்கும். இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின் விடுதலையான முன்னாள் போராளிகள் இன்னமும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள், அடிக்கடி விசாரணைகளை எதிர்கொண்ட சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் இறுதி நாட்களில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள இலங்கை தொடர்பிலான தீர்மானம் இலங்கை மீது குறிப்பிட்டளவான தாக்கத்தினைச் செலுத்தும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நகல் அறிக்கை அதனை முன்வைப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த ஒன்பது மாதங்களில் வெளிப்படுத்திய நல்லெண்ண முயற்சிகள் தொடர்பில் தன்னுடைய வரவேற்பினை அமெரிக்கா மனப்பூர்வமாக, தொடர்ச்சியாக வெளியிட்டு வந்திருக்கின்றது என்பதுவும் கவனத்தில் கொள்ளப்படக் கூடியது.
எனினும், 2009இல் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணையொன்றுக்கான விடயங்களை முன்வைப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தலாம். அது, இலங்கை மீதான தன்னுடைய பிடியை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பதற்கான சூத்திரத்தின் போக்கில் நிகழலாம். அதனால், அமெரிக்காவின் புதிய தீர்மானத்தின் போது இலங்கை மீதான சில அழுத்தங்களுக்கான வாய்ப்புக்களும் உண்டு.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட குழுவுக்கும், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் உத்தியோகப்பற்றற்ற ரீதியிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை ஜெனீவாவில் நடைபெற்றிருக்கின்றது.
அதில், அமெரிக்கத் தீர்மானத்தின் நகல் வரைபு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அதன்போது, ரவிநாத ஆரியசிங்க அமெரிக்கத் தீர்மானத்தின் நகல் வரைபு தொடர்பில் கடும் விமர்சனத்தினை முன்வைத்திருக்கின்றார். அது, கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.
'அமெரிக்கா தயாரித்திருக்கும் நகல் வரைவானது கடந்த காலங்களில் கூறிய விடயங்களை மீண்டும் மீண்டும் சுட்டுகின்றது. தீர்ப்பைச் சொல்லும் வகையிலும், பரிந்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை. இது கூட்டு அணுகுமுறையொன்றுக்கு உதவியாக இருக்கிறது. இருந்தபோதும், நகல்வரைபிலுள்ள பல பந்திகள் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், நல்லிணக்கத்தை நோக்கி கவனமாக அடியெடுத்துவைக்கும் செயற்பாடுகளைப் பாழடிக்கும் வகையிலும், கலந்துரையாடல்கள் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்குக் காணப்படும் இடைவெளியைக் குறைப்பதாகவும் உள்ளன. இந்த அணுகுமுறையானது எதிர்மறையான அர்த்தம் கற்பித்தலுக்கு இடமளிப்பதுடன், செயற்பாடுகளைக் குலைப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கே உதவியாக அமையும்'.
ரவிநாத ஆரியசிங்கவின் மேற்கண்ட கருத்தானது, அமெரிக்காவை நோக்கி இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டாலும், அதனை அங்கிகரிக்காமல் சர்வதேச தலையீடு ஒன்றினை இலங்கை மீது ஏற்படுத்தினால், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பது மாதிரியான எச்சரிக்கையாக இருக்கின்றது. அது, தென்னிலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால், அமெரிக்கா விரும்பிய ஆட்சிக்கான அச்சுறுத்தல் இலங்கையில் எழும் என்றும் அவர் மறைமுகமாகக் கூறியிருக்கலாம் என்று கொள்ளலாம். ஆக, இலங்கையின் புதிய அரசாங்கத்தை அதனுடைய போக்கில் நகர்வதற்கான அனுமதியை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இப்படியான நிலையில்தான், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் ஆற்றப்போகும் அரங்காற்றுகை முக்கியமானது. ஏனெனில், அது நீதிக்கான எமது தேடலின் பக்கத்தைத் தொடர்ச்சியாக தக்க வைப்பதுடன், நியாயமான நீதியொன்றைப் பெறுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த உதவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
2 hours ago
4 hours ago