Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மப்றூக்
தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது, நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி என்று பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு, இந்தத் தேசிய அரசாங்கத்திலாவது நியாயங்கள் கிடைக்குமா என்பது குறித்தும் பேச வேண்டியுள்ளது.
ஆரம்பிக்கும் போதே, இப்படி 'அபசகுனமாக' யோசிக்கலாமா என்று உங்களில் யாரேனும் கேட்கக் கூடும். நமது 'சகுனங்கள்' பிழைத்து விடக்கூடாது என்பதற்காகவே, இப்படி 'அபசகுனமாக' யோசிக்க வேண்டி இருக்கிறது.
தேசிய அரசாங்கம் என்பது, கிட்டத்தட்ட எல்லோரும் சேர்ந்து அமைத்திருக்கும் ஆட்சி என்பது ஒருபக்க உண்மையாகும். இதேவேளை, இன்னொருபுறம் சிங்களப் பேரினமானது, ஒட்டுமொத்தமாக இணைந்து, கைகோர்க்கும் அபாயமும் தேசிய அரசாங்கத்தில் உள்ளமையினையும் நாம் மறந்து விட முடியாது.
தேசிய அரசாங்கம் என்பதற்காக, அதன் ஆட்சியாளர்கள், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, தங்கத் தட்டில் வைத்துத் தந்து விடுவார்களென்று, அப்பிராணித்தனமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. அமைந்துள்ள தேசிய அரசாங்கத்துக்குள், மிக மோசமான சிங்களப் பேரினவாதிகள் மிகப் பலம் வாய்ந்தவர்களாக உலவிக் கொண்டிருக்கின்றனர் என்கின்ற உண்மையினையும், அடிக்கடி நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
தேசிய அரசாங்கம் என்கிற 'பொதுமை'க்குள், சிறுபான்மை சமூகங்களின் அடையாளங்கள் தொலைந்து போகக் கூடிய பேரபாயங்கள் உள்ளமை குறித்தும், நாம் பேசியே ஆகவேண்டும்.
தேசிய அரசாங்கத்தில், சிறுபான்மைக் கட்சிகள் தமது பேரம் பேசும் வலுவினை இழந்து நிற்கின்றன. முன்புபோல், 'ஆட்சியிலிருந்து விலகி விடுவோம்' என்று பயங்காட்டி, தேசிய அரசாங்கத்தில் காரியம் சாதிக்க முடியாது. இந்த இடத்திலிருந்து யோசிக்கும் போது, தேசிய அரசாங்கத்தை விடவும் தனிக்கட்சி அரசாங்கம் மேலானதாகத் தெரியும்.
இனப்பிரச்சினை முதல் - உள்ளூர் காணிப் பிரச்சினைகள் வரை, சிறுபான்மை சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வுகள் ஏராளமுள்ளன. ஆனாலும், சிறுபான்மையினரின் 'சின்ன சின்ன'ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பதே, கடந்த காலங்களில் பெரிய பிரச்சினைகளாகிப் போயிருந்தன. இருந்தபோதும், தேசிய அரசாங்கத்தில் தமக்கான தீர்வுகள் கிட்டும் என்று, சிறுபான்மை சமூகங்கள் அளவுக்கு மீறிய நம்பிக்கையினைக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, தமிழ் - முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முக்கியமானதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'பிடித்து' வைக்கப்பட்டிருந்த, கணிசமானளவு தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை இங்கு மகிழ்ச்சியோடு குறிப்பிடக் கூடிய விடயமாகும்.
இதேபோல், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், 'புனித பூமி' எனும் பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள, முஸ்லிம் மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே, அந்த மக்களின் விருப்பமாகும். ஆனால், அத்தனை லேசாக - அது நிறைவேறுமா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.
வடக்கில், 'பாதுகாப்புத் தேவை' எனும் பெயரில், தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் பிடித்தது. அந்தக் காணிகளில் சில நூறு ஏக்கர்களை ஜனாதிபதி மைத்திரி விடுவித்தார். இதன்போது, அரசாங்கத்துக்குள் யாரும் எதிர்ப்பினை வெளியிடவில்லை. ஆனால், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள கணிசமான முஸ்லிம்களின் காணிகள், பௌத்த மதத்தின் பெயரால், 'புனித பூமி' எனும் போர்வையில் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளை ஆட்சியாளர்கள் நேர்மையுடன் விடுவிக்க முன்வந்தாலும், அரசாங்கத்துக்குள்ளிருக்கும் பேரினவாதிகள் அனுமதிக்கப் போவதில்லை.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, அரசிமலை பிரதேசத்திலுள்ள காணிகளும் அம்பாறை மாவட்டம் அஷ்ரப் நகர் கிராமத்திலுள்ள காணிகளும் 'புனித பூமி' எனும் பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உதாரணங்களாகும்.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு பிடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு, சிலவேளை ஆட்சியாளர்கள் முன்வந்தாலும் கூட, அதனை - அரசாங்கத்துக்குள்ளிருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்ற பேரினவாதிகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்தும் பொருட்டு, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினைக் கொண்டு வருவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தபோது நடந்தவற்றினை நினைவுபடுத்திப் பாருங்கள்.
மேற்படி புதிய தேர்தல் முறைமையை உருவாக்கும் பொருட்டு, உத்தேச திருத்தச் சட்டமொன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதிலுள்ள சில ஏற்பாடுகள், சிறுபான்மை இனங்களுக்கு பாதகமாக இருந்தன. எனவே, அவற்றினை நீக்கி விட்டு, தாம் பரிந்துரைக்கும் ஏற்பாடுகளை சேர்க்குமாறு, தமிழ் - முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக, இரட்டை வாக்குச் சீட்டினைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாட்டினை, உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தில் உள்வாங்குமாறு சிறுபான்மைக் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இதனை அரசாங்கத்துக்குள்ளிருந்த சம்பிக்க ரணவக்க மிகக் கடுமையாக எதிர்த்தார். இவ் விவகாரம் குறித்து உரத்துக் குரல் கொடுத்த மு.காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமோடு அமைச்சரவைக் கூட்டங்களிலேயே, மோசமான வார்த்தைகளால் சம்பிக்க ரணவக்க சண்டையிடத் துவங்கினார் என்பதெல்லாம் நாம் அறிந்த கதைகளாகும்.
நல்லாட்சி என்று எல்லோராலும் அடைமொழி கொண்டு அழைக்கப்பட்ட அரசாங்கமொன்றின் காலத்திலேயே, இப்படி நடந்து கொண்ட சம்பிக்க ரணவக்கவும் அவரைப் போன்றவர்களும், தேசிய அரசாங்கத்தில் கச்சை கட்டி ஆடாமல் இருந்து விடப் போவதில்லை.
ஆனாலும், தேசிய அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 'நம்பிக்கை நட்சத்திரங்களாக'த் தெரிகின்றனர். இவர்கள் பேரினவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையோடு, சிறுபான்மை சமூகங்கள் உள்ளமையினை அவதானிக்க முடிகிறது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதும், கப்பலேற்றுவதும், அவர்களைப் பொறுத்தது.
வரலாறுகள் முழுக்க பாடங்கள் உள்ளன. பேரினவாதிகளைத் தாண்டி அரசியல் தீர்மானங்களை எடுப்பதென்பது, அத்தனை இலகுவான காரியமல்ல. பேரினவாதத்தின் கூச்சலுக்குப் பயந்து, பண்டா- செல்வா ஒப்பந்தம் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்ட சரித்திரங்களையெல்லாம் நாம் அறிவோம்.
இன்னொருபுறம், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, இந்த அரசாங்கத்திலாவது பெற்றுக்கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மும்முரமாகச் செயற்பட வேண்டும். இனியும், வெறும் வாய்ப்பேச்சில் மட்டும் வீரர்களாக இருக்க முடியாது. கடந்த ஆட்சியாளர்களோடு ஒப்பிடுகையில், தற்போதுள்ள ஜனாதிபதியும் பிரதமரும் நல்லவர்களாக உள்ளனர். இவர்களைக் கொண்டு, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடினமாக உழைக்க வேண்டும்.
தற்போது அமைந்துள்ள தேசிய அரசாங்கமானது, நமது அரசியலுக்குப் புதியதொன்றாகும். இந்த அரசாங்கத்தில், 'பழைய' அரசியல் நடத்தைகள் வெற்றியளிக்குமா என்று தெரியவில்லை. எனவே, 'புதிய' அரசியல் அணுகுமுறைகள் தேவையாக உள்ளன. இணக்க அரசியல் - பிணக்கு அரசியல் என்கின்ற இரண்டுக்கும் அப்பால், வேறொரு அரசியல் செயற்பாடு குறித்தும் சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
தேசிய அரசாங்கத்தில் கொண்டு வரப்படும் பிரேரணையொன்றினை, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன. எனவே, தேசிய அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகங்கள் பிணங்கி நின்று அரசியல் செய்வதால், ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. அதற்காக, அனைத்துக்கும் தலையசைத்துக் கொண்டு, தேசிய அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள், வெறும் பொம்மைகளாக இருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம்.
அதனால்தான், இந்த இரண்டுக்கும் அப்பாலான ஓர் அரசியல் செயற்பாட்டு முறைமையினை, சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் - கண்டுகொள்ள வேண்டிய தேவை உள்ளதாக, மேலே குறிப்பிட்டுள்ளோம்.
தேசிய அரசாங்கம் என்பது, சிறுபான்மை அரசியல் கட்சிகளை, மரபு ரீதியான அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் நின்று, சிந்திப்பதற்கானதொரு நிலையினை உருவாக்கி விட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தில், புதிய அரசியல் அணுகு முறைகளைக் கண்டடைய முடியாத சிறுபான்மைக் கட்சிகள் தோற்றுப் போய் விடுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக தெரிகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
2 hours ago
4 hours ago