2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தீபாவளியில் பலியான தமிழக ஒற்றுமை உணர்வு?

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகை முடிந்தாலும், தமிழகத்தின் “காவிரிப் பிரச்சினை” தீர்ந்த பாடில்லை. தமிழக விவசாயிகள் தங்களின் எதிர்காலம் எங்கே பூச்சியமாகி விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில், இப்பிரச்சினையில் ஓர் ஒற்றுமை கூட ஏற்படவில்லையே என்ற விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தவிக்கிறார்கள். எத்தனை போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தினாலும், விவசாயிகளின் வேதனையை மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறதே என்ற கோபம், அவர்களுக்கு கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அசாதாரண சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதற்கு இப்போது தூபம் போட்டுள்ள பிரச்சினை காவிரிப் பிரச்சினை. காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, முதன் முதலில் 1968 ஆம் ஆண்டு “ஹோமாவதி” அணை கட்டப் போகிறோம் என்று, அண்டை மாநிலமான கர்நாடகா அறிவித்தது. அன்று தொடங்கிய பிரச்சினை, இன்றைக்கும் நிறைவு பெறவில்லை. “எங்களைச் செத்துப் போவதற்கு அனுமதியுங்கள்” என்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னால் விவசாயிகள் மாத்திரைகளுடன் போய் நின்று போராடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

காவிரிக்கு என்று ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டவுடன், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விடும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தார்கள்; ஆனால் ஏமாந்தார்கள். அந்த நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்தவுடன், தங்கள் வாழ்வில் வசந்தம் உருவாகி விடும் என்று கனவு கண்டார்கள் விவசாயிகள். அந்தக் கனவும் கலைந்து போய் இன்று, கதி கலங்கி நிற்கிறார்கள்.

“நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து விட்டது. இனித் தமிழக விவசாயிகளுக்கு பொற்காலம்” என்று தஞ்சாவூரிலேயே ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தி, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “பொன்னியின் செல்வி” என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள். இறுதித் தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்பட்ட மகிழ்ச்சியில், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இப்படி விருது வழங்கினாலும், இன்றளவும் காவிரி இறுதித் தீர்ப்பின்படி, தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும் “ஆஹா! நம் பிரச்சினை இனித் தீர்ந்தது. காவிரி டெல்டாவுக்குத் தண்ணீர் கிடைத்து விடும்” என்று, ஒட்டுமொத்த விவசாயிகளும் இனம்புரியாத மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால் மத்திய அரசாங்கம், இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்துக்கும் முட்டுக்கட்டை போட்டபோது, விவசாயிகள் முடங்கிப் போனார்கள்.

இன்றைக்குத் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சையில், குறுவை சாகுபடியும் இல்லை; சம்பா சாகுபடியும் இல்லை; கடைக்கோடி காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீரும் இல்லை. மேட்டூர் அணைக்குள் இருக்கும் நந்தி கூட வெளியே தெரியும் அளவுக்கு அணை வறண்டு காட்சியளிக்கிறது. தமிழகத்துக்குத் திறந்து விட தண்ணீர் இல்லை என்று கூறும் கர்நாடக அரசாங்கம், தங்கள் மாநில விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முதல் நாள் கூட தண்ணீர் திறந்து விடுகிறது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிலிருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடுவோம் என்று சட்டமன்றத்தைக் கூட்டி முடிவு எடுத்த கர்நாடக மாநிலம், இன்றைக்கு தங்கள் மாநில விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்க தண்ணீரை விவசாயத்துக்கே திறந்து விடுகிறது.

ஆனால், தமிழக விவசாயி கேட்டால், “எங்களிடம் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை” என்கிறது. அதற்கு அங்கே அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன. “மத்தியில் உள்ள பா.ஜ.க அமைச்சர்களும், வரிந்து கட்டிக் கொண்டு கர்நாடகத்துக்குக் கை  கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு குரல் கொடுக்க யாரும் ஒற்றுமையுடன் முன்வரவில்லையே” என்பதுதான், அப்பாவி தமிழக விவசாயிகளின் அபயக்குரலாக இருக்கிறது.

ஆம்! தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று, ஆளுங்கட்சிக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தார்கள். “அ.தி.மு.க, தி.மு.க, தமக்குள் உள்ள பகைகளை எல்லாம் பார்க்காமல், மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளில் இரு கட்சிகளும் போராட வேண்டும்” என்று,
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறினார். “ஆளும் அ.தி.மு.க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை என்றால் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க, அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார் வைகோ. தி.மு.க நடத்திய விவசாயிகள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. ஏன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுத்த அழைப்பை ஏற்று, தி.மு.கவே கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற காவிரிப் போராட்டத்தில் பங்கேற்றது. இந்தச் சூழ்நிலையில், அக்டோபர் 25 ஆம் திகதி காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க.

இந்தக் கூட்டத்தின் அழைப்பிதழையே பெற, அ.தி.மு.க மறுத்து விட்டது. “அரவாக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் சமயத்தில் நாங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டால், தேர்தல் கூட்டணி என்றாகிவிடும்” எனக் கூறி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அக்கூட்டத்தைப் புறக்கணித்தன. “தி.மு.க, காவிரியில் துரோகம் செய்து விட்டது” என்று கூறி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்தார். “மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்த போது, காவேரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தி.மு.க நடத்தும் நாடகம்” என்று குற்றஞ்சாட்டி, தமிழக பா.ஜ.கவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க கூட்ட வேண்டும்” என்று முதன்முதலில் கோரிக்கை வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இக்கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணியைப் பங்கேற்க வைக்க, இறுதி வரை போராடி தோற்றுப் போனார். அதனால் “மக்கள் நலக்கூட்டணியின் மெஜாரிட்டி கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், நானும் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது” என்று அறிவித்தார். அதே நேரத்தில் கூட்டத்தை கூட்டிய தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி, “நான் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால், கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன்” என்று, தன் புறக்கணிப்புக்குக் காரணம் சொன்னார். இப்படி தமிழகத்தில் உள்ள கட்சிகள் மத்தியில் காவிரிப் பிரச்சினையில் கூட ஒற்றுமையில்லை என்பது, கர்நாடக மாநிலத்துக்கு மட்டுமல்ல - அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவுக்கும் செய்தி சொல்லி விட்டார்கள், தமிழக அரசியல் தலைவர்கள்.

காவிரிப் பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க கூட்டினாலும், அக்கூட்டத்தில் வைக்கப்பட்ட விவாதம், அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்புடையதுதான். இந்தப் பிரச்சினையில், மத்திய அரசாங்கத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசாங்கத்தைக் கண்டித்துத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆளும் அ.தி.மு.கவுக்கு, “சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைக்கின்றன. தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டமும், அதே கோரிக்கையை முன் வைத்துத்தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் தி.மு.கவின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த மறுத்தது, மாபெரும் வரலாற்றுப் பிழையைப் பதிவு செய்து விட்டது.

இந்தத் தீபாவளி, தமிழக உணர்வுகளுக்கு நெருக்கடியான தருணமாக அமைந்து விட்டது. சென்னையில் உள்ள “சிப்பெட்” என்ற பொதுத் துறை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை, புதுடெல்லிக்கு மாற்ற, மத்திய அரசாங்கம் முயற்சி செய்கிறது. “சரக்கு வரி சட்டத்தை அமுல்படுத்தினால், தமிழகத்துக்கு  9,000 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு வருவாய் இழப்பு” என்றும், “உதய் திட்டத்தில் கையெழுத்திட்டால் மூன்று மாதத்துக்கு, ஒரு முனை மின் கட்டணத்தை ஏற்ற வேண்டும். அத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறினார் முதலமைச்சர். “புதிய கல்விக் கொள்கையை புகுத்த அனுமதிக்க முடியாது” என்றும் எதிர்த்தார். ஆனால், மருத்துமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், “உதய் திட்டத்தில் தமிழக அரசாங்கம் இணையும்” என்று, மத்திய மின் துறை அமைச்சர் புதுடெல்லியில் அறிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த, தமிழக அமைச்சரவை முடிவு எடுக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் “உப்புக்குச் சப்பாணி” என்று கருத்துச் சொல்லி நிற்கிறது. இப்படித் தமிழகத்தின் நிலை - அந்தோ பரிதாபமாக இருக்கிறது. தமிழக நலனைக் காப்பாற்ற, மாநிலத்தில் உள்ள கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. மத்திய அரசாங்கத்துடன் மாநில உரிமைக்காகப் போராட, ஆளுங்கட்சியை வழி நடத்தும் முதலமைச்சரும் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்கு எதிரான திட்டங்கள் அவசர கதியில் அமுலுக்கு வருகின்றன. தமிழக ஒற்றுமை உணர்வு பலியாகி விட்டது. விடை பெற்ற தீபாவளியின் ஸ்பெஷல் இதுதான்!b

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X