Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகம்மது தம்பி மரைக்கார்
புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று, நல்லாட்சியாளர்கள் கூறிவருகின்றனர். அதற்கு முன்னதாக, புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டனர். அதன்பொருட்டு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நிபுணர்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டுவந்தனர். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நிபுணர்கள் குழு தமது அறிக்கையினை ஆட்சியாளர்களிடம் ஆவணமாகச் சமர்ப்பித்திருக்கின்றார்கள். இந்த ஆவணத்துக்கு 'அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 05 ஆயிரம் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதான், மேற்படி நிபுணர் குழுவினர், தமது அறிக்கையினை உருவாக்கியுள்ளனர். இந்த அறிக்கையில் பொதுமக்களின் கருத்துக்களோடு, நிபுணர் குழுவின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
340 பக்கங்களைக் கொண்ட மேற்படி ஆவணமானது, 22 உள்ளடக்கத் தலைப்புகளை அல்லது அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது. இவற்றில் அரசின் தன்மை எனத் தலைப்பிடப்பட்டுள்ள அத்தியாயம் 05, அதிகாரப் பகிர்வு எனத் தலைப்பிடப்பட்டுள்ள அத்தியாம் 08 மற்றும் அதிகாரப் பேரளிப்பு எனும் தலைப்பில் அமைந்த அத்தியாயம் 09 ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும்.
நாட்டில் பல தசாப்தங்களாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை, புதிய அரசியல் யாப்பொன்றின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற அவா, சிறுபான்மை சமூகத்தவர்களிடமும் உள்ளது. அனைத்து சமூகங்களுக்கிடையிலும், அரசியல் அதிகாரங்களை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதன் மூலம், இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டிவிட முடியும் என்பது, பொதுவானதொரு கருத்தாக உள்ளது.
எவ்வாறாயினும், அரசியல் அதிகாரம் பகிரப்படுவதற்கு முன்னதாக, சில அடிப்படை நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பது, தமிழர் தரப்பின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான நிபந்தனைகள் நிறைவு செய்யப்படும் புள்ளியிலிருந்துதான், அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச முடியும் என்று, அவர்கள் வாதிட்டு வருகின்றனர்.
உதாரணமாக, ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு குறித்து பேச முடியாது என, தமிழர் தரப்பு கூறுகின்றது. அல்லது சமஷ்டி ஆட்சியின் கீழ், அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என்றும், அந்த மாகாணங்கள் இரண்டும் நிரந்தரமாக இணைக்கப்படுதல் வேண்டும் எனவும் தமிழர் தரப்பு கோரி வருகின்றது. இவ்வாறான நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகள் நிறைவுசெய்யப்படாத நிலையில், அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசுவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழர் தரப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பான - பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையும், அந்தக் குழுவிலுள்ள நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகள் அல்லது சிபாரிசுகளும் மேற்கூறப்பட்ட தமிழர் தரப்பு நிபந்தனைகளை சில இடங்களில் நிறைவு செய்ய முடியாதவையாக உள்ளன.
அரசின் தன்மை
மேற்படி நிபுணர்கள் குழு அறிக்கையின் 05 ஆவது அத்தியாயத்தில், அரசின் தன்மை குறித்து மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நிபுணர்களின் சிபாரிசுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அரசின் தன்மை குறித்து, மூன்று வகையான சிபாரிசுகளை நிபுணர்கள் இங்கு முன்வைத்துள்ளனர். இவற்றில், இரண்டு சிபாரிசுகள், இலங்கையானது தற்போதைய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று, ஒற்றையாட்சியுடைய ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்பதை நேரடியாக வலியுறுத்துகின்றன. அதேவேளை, சமஷ்டி ஆட்சிபற்றி நிபுணர்கள் தமது விதப்புரைகளில் எந்தவொரு இடத்திலும் நேரடியாக வலியுறுத்தவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் சமூகத்தைச் சார்ந்தோர் முன்வைத்த கருத்துக்கள், தமிழ் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் சமஷ்டி அரசு என்ற இலட்சியத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்தன என்று, நிபுணர்கள் குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து ஓர் ஒற்றையாட்சிக்கான விருப்பத்தினை உறுதியாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சமஷ்டியினை எதிர்ப்போர் - சமஷ்டி அரசு தொடர்பான எண்ணங்களை பிரிவினைவாதத்தோடு தொடர்புபடுத்துகின்றார்கள். அதேவேளை, ஒற்றையாட்சி அரசினை பிரிபட முடியாத ஒரு நாட்டுக்கு அவர்கள் ஒப்பிடுகின்றனர். சமஷ்டி அரசானது, இறுதியில் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்லும் என்று சிங்களவர்களிடம் அச்சம் உள்ளது' என்று நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்னொருபுறம், 'ஒற்றையாட்சி என்பது ஜனநாயகமற்ற மற்றும் மத்தியப்படுத்தப்பட்ட முறைமையிலான அரசுக் கட்டுப்பாடு என்று, சமஷ்டி ஆட்சிமுறைமைக்கு சார்பானோர் கருதுகின்றனர். ஒற்றையாட்சியானது பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும், அதிகாரத்தை மத்தியில் குவிப்பதற்கும் இட்டுச்செல்லும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்' என நிபுணர்கள் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு இணைப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் - நிபுணர்கள் குழுவிடம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது குறித்து வினாவெழுப்பியதாக குழுவின் அறிக்கையில் கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, விதிக்கப்பட்டதொரு நிபந்தனையாக இருந்ததாக, கருத்துக்களை முன்வைத்த மேற்படி மக்கள் வாதிட்டனர். இந்த நிலையில், இலங்கை - இந்திய உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பொதுமக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின்றி, அந்த உடன்பாட்டிலிருந்து விலகிச் செல்வது பின்னோக்கிய ஒரு படிமுறையென்றும், அவ்வாறு நடந்து கொள்வது, மேற்படி உடன்படிக்கையினை மீறுகின்ற ஒரு செயலாகும் எனவும் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் கருத்துரைத்ததாக, தமது அறிக்கையில் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும், சமஷ்டி ஆட்சி என்கிற வாதத்துக்கும் எதிராக, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருத்துக்களை முன்வைத்தனர் என்று நிபுணர்கள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு அதிகளவில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்வதனை, கிழக்கு முஸ்லிம்கள் வரவேற்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களச் சமுதாயத்தினரும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டதாகவும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவது கவனத்திற்கொள்ளப்பட்டால், முஸ்லிம்களுக்கு தனிவேறான தென்கிழக்கு அலகொன்று, கிழக்கு மகாண முஸ்லிம்களுக்கு ஏற்புடைய விருப்பத் தெரிவாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக நிபுணர்கள் குழு கூறுகிறது. மேற்படி தென்கிழக்கு அலகானது பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை மற்றும் புவியியல் ரீதியல் தொடர்பற்ற காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
'வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரம் மிகவும் கருத்து வேறுபாடுள்ள ஒன்றாகவிருந்தது. தற்போதுள்ள அரசியலமைப்பில் நிர்வாக நோக்கங்களுக்காக மாகாணங்கள் இணையக்கூடிய ஏற்பாடுகள் உள்ளனவென்பதை அநேகமான மக்கள் அறிந்துகொள்ளாதிருப்பது தெளிவாகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் ஆகிய பலரும் இதைத் தவறாகவே விளங்கிக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைவை, ஓர் அரசியல் இணைவாகவன்றி, நிர்வாக நோக்கங்களுக்கான இணைவாக மக்கள் நோக்கவில்லை. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தாம் சிறுபான்னையினராக மாற்றப்படுவோம் என்பதால், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறே, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வடக்கு - கிழக்கு இணைப்பானது, தமிழ் மக்களுக்கு தனியரசு ஒன்றினை ஸ்தாபிக்கக் கோரும் உரிமையை வழங்குவதாக அமைந்துவிடும் என்று, சிங்கள மக்கள் எண்ணுகின்றார்கள்' என, நிபுணர்கள் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாதென நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களும் தொடர்ந்தும் அவ்வாறே இருத்தல் வேண்டும் என்றும் நிபுணர்கள் குழு கூறியுள்ளது.
மேற்படி விடயங்களை, அதிகாரப் பேரளிப்பு எனும் தலைப்பில், தனது அறிக்கையின் 09 ஆவது அத்தியாயத்தில் நிபுணர்கள் குழு பதிவுசெய்துள்ளது.
முரண்படும் நிபந்தனைகள்
புதிய அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்துக்கள் மற்றும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மனதிற்கொண்டு - அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுமானால், அதில் இலங்கை ஒற்றையாட்சியினைக் கொண்ட ஒரு நாடாகவே அடையாளப்படுத்தப்படும். அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அரசியலமைப்பின் ஊடாக இணைக்கப்படவும் மாட்டாது. அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதற்கு தமிழர் தரப்பு இணங்காது.
சிலவேளை வடக்கு - கிழக்கினை இணைப்பதற்கு ஆட்சியாளர்கள் இணங்கிப் போக முடிவு செய்தாலும், இணைந்த வடக்கு - கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கான தனியலகுக் கோரிக்கை தொடர்பிலும் ஒரு தீர்வினை எட்ட வேண்டியுள்ளது.
ஆயினும், சாதி, இனத்துவ, மத அல்லது மொழிசார் சிந்தனைகளின் அடிப்படையில் அதிகார அலகுகள் பிரிக்கப்படுதல் ஆகாது என்கிற பரிந்துரையொன்றினை தமது அறிக்கையின் 09 ஆவது அத்தியாயத்தில் நிபுணர்கள் குழு முன்வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், தமிழர்களின் அபிலாஷைப்படி, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதனுள் முஸ்லிம்களுக்கான ஒரு தனியலகினையும் வழங்குவதற்கு புதிய அரசியல் யாப்பினூடாக ஆட்சியாளர்கள் முன்வந்தாலும், அதனை சிங்களப் பேரினவாதம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்கிற கோசத்தோடு சிங்களப் பேரினவாதம் கச்சை கட்டிக் கொண்டு கிளம்பும். அதனை எதிர்கொள்வதும், சமாளிப்பதும் இலகுவான காரியமல்ல.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ள பல விடயங்கள் - அதிகாரப் பரவலாக்கத்துக்கும், அதனூடாக இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கும் ஏற்றவையாக உள்ளன. ஆனால், சில விடயங்கள், தமிழர் தரப்பின் அடிப்படை கோரிக்கைகளோடும், நிபந்தனைகளோடும் முரண்படுகின்றவையாகவும் இருக்கின்றன.
முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பதுதான் மிகப் பெரும் இராஜதந்திரமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago