2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நொபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புகள்?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவாரம் நொபெல் பரிசு வாரம். நொபெல் பரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு.   
பல்வேறு துறைசார்ந்து வழங்கப்படுவதாலும் இலக்கியமும் அரசியலும் அதன் பகுதியாய் இருப்பதும் அப்பரிசுகளுக்கு ஒரு முக்கிய இடத்தை வழங்கியுள்ளன. இன்று இலக்கியத்துக்கான பரிசும் நாளை சமாதானத்துக்கான பரிசும் வழங்கப்படவுள்ளன.  இம்முறை, இவ்விரண்டு பரிசுகளும் சில காரணிகளால் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கியத்துக்கான நொபெல் பரிசைத் தெரிவு செய்யும் ‘சுவீடிஸ் அக்கடமி’யின் உறுப்பினர்களில் ஒருவரின் கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்க, கடந்தாண்டு இலக்கியத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்படவில்லை. எனவே, இம்முறை 2018, 2019ஆம் ஆண்டுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.   

உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டு, போரின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈரான் மீதான நெருக்குவாரங்கள்; அமெரிக்காவின் வர்த்தகப் போர்; மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள்; அகதிகள் நெருக்கடி எனப் பலபத்துப் பிரச்சினைகள் உள்ளன. இதன் பின்னணியிலேயே நாளை சமாதானத்துக்கான நொபெல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது.   

இலக்கியத்துக்கான நொபெல் பரிசுகள்   

மருத்துவம், பௌதீகவியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் என ஐந்து துறைகளுக்கு நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டாலும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பவை இலக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் வழங்கப்படும் பரிசுகளேயாகும்.   

இலக்கியத்துக்கான நொபெல் பரிசின் வரலாறும் மிகவும் சுவையானது. இதுவரை 114பேர், இப்பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அதில் 14 பெண்களே உள்ளடங்குகிறார்கள். இந்தப் 14 பேரில் எட்டுப் பேர், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பரிசைப் பெற்றவர்களாவர்.   
அவ்வகையில், இப்பரிசுக்குப் பெரும்பாலும் ஆண்களே தெரிவு செய்யப்படுகிறார்கள். பால்ரீதியான வேறுபாடு, ‘சுவீடிஸ் அக்கடமி’யால் காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.   

இப்பரிசு பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளில் எழுதுபவர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இலக்கியத்துக்கான நொபெல் பரிசின் 119 ஆண்டு கால வரலாற்றில், வெறும் எட்டுப் பேர் மட்டுமே, ஐரோப்பா அல்லாத மொழிகளில் எழுதிப் பரிசைப் பெற்றவர்கள் ஆவார். இதில் வங்காளி மொழியில் எழுதிய ரவீந்திரநாத் தாகூர் முதன்மையானவர்.   

இதைத் தொடர்ந்து ஜப்பான், சீன மொழிகளில் தலா இருவர்; அராபி, ஹிப்ரு, துருக்கி மொழிகளில் தலா ஒருவர் உட்பட,  இப்பரிவை இறுதியாக வென்ற, ஐரோப்பிய மொழிகளில் எழுதாதவர் துருக்கியின் ஓமன் பாமுக் ஆவார். இவர், 2006ஆம் ஆண்டு இப்பரிசை வென்றார். 

இப்பரிசை வென்றவர்களின் சராசரி வயது 65 ஆகும். எனவே, வயதானவர்களுக்கே இப்பரிசு கிடைக்கிறது. இப்பரிசை இளம் வயதில் வென்றவர், ருடியாட் கிப்பிலிங். இவர் தனது ‘The Jungle Book’ நூலுக்காகத் தனது 41ஆவது வயதில், இப்பரிசை வென்றிருக்கிறார்.   

இப்பரிசுக்குப் பலதடவைகள் பரிந்துரைக்கப்பட்டு, பரிசு கிடைக்காமல் போனவர்கள் பலர். உலகின் முக்கியமான பல படைப்பாளிகளுக்கு, இவ்விருது கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக, ஆங்கில கவிதையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ரொபெர்ட் புரொஸ்ட், 20ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் தவிர்க்கவியலாத ஆளுமையான பிரான்ஸ் கஃகா, ‘பொம்மை வீடு’ உட்பட ஏராளமான முற்போக்கான நாடகங்களைத் தந்த நோர்வேயின் ஹென்ரின் இப்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான லியோ டோல்ட்ரோய், மார்க்சிம் கோர்க்கி ஆகியோருக்கும் இப்பரிசு வழங்கப்படவில்லை.   

இந்தப் பின்புலத்திலேயே, இவ்வாண்டுக்குரிய பரிசுகளை நோக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் இரண்டு பரிசுகளில் ஒன்று, பெண் ஒருவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.   

அவ்வகையில், ஐரோப்பியரில்லாத பெண் ஒருவருக்கும் இன்னோர் ஐரோப்பியருக்கும் இப்பரிசு கிடைக்கலாம். அல்லது, ஐரோப்பியப் பெண் ஒருவருக்கும் ஐரோப்பியரல்லாத ஆண் ஒருவருக்கும் இப்பரிசு கிடைக்கலாம்.   

கடந்தாண்டு தனது நன்மதிப்பை ‘சுவீடிஸ் அக்கடமி’ இழந்ததன் விளைவால், இம்முறை தெரிவு செய்யப்படுபவர்கள், அதைக் காரணம் காட்டி, பரிசை ஏற்க மறுக்கக்கூடாது என்பதில், பரிசுக்குழு மிகுந்த கவனமாக இருக்கும்.   

அதேவேளை, 2018 ஆம் ஆண்டு நிகழ்வுகளின் விளைவால், மாற்று நொபெல் இலக்கியப் பரிசொன்று, கடந்தாண்டு தனியாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்பரிசை வென்றவர், கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாட்டலூப்பைச் சேர்ந்த மரீஸ் கொண்டே ஆவார். அவருக்கு, இவ்வாண்டுக்கான பரிசு கிடைக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசை அவர் பெற்றமையால், அவருக்கு இப்பரிசு வழங்கப்படாது என எதிர்பார்க்கலாம்.  

 அதேபோல, கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசுத் தெரிவில், முன்னிலையில் இருந்தவர் ஹருக்கி முரகாமி. இவர் கடந்தாண்டு தன்னைப் பரிசுக்குத் தெரிவுசெய்ய வேண்டாம் எனக் கோரியிருந்தார். இதனால், அவருக்கு இம்முறை பரிசுக்கு வாய்ப்புண்டு.   

இம்முறை இப்பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுபவர்களில் கனடியப் பெண் கவிஞர் ஆன் காஸன், சீனப் பெண் நாவலாசிரியர் கான் சூ, ரஷ்யப் பெண் நாவலாசிரியர் லுட்மீலா உலிட்ஸ்கயா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

கடந்த பத்தாண்டுகளாக, இப்பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு பெயர்கள் உண்டு. அவர்களில் ஒருவருக்கேனும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி. இருவரும் ஐரோப்பியர்களுமல்ல; ஐரோப்பிய மொழிகளில் எழுதுபவர்களும் அல்ல. 

அதில் ஒருவர் கென்யா நாட்டு எழுத்தாளரான நூகி வா தியாங்கோ. மற்றவர், சிரிய நாட்டுக் கவிஞரான அடோனிஸ்.   

சமாதானத்துக்கான நொபெல் பரிசு 

இவ்வாண்டு, சமாதானத்துக்கான நொபெல் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு, இப்போது அதிகரித்துள்ளது. இவ்வாண்டு, பரிசை அநேகமாக வெல்வார் எனப் பலரும் எதிர்பார்க்கும் நபர், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்துப் பல மேற்குலக நாடுகளில், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 16 வயது நிரம்பிய கிரேத்தா துன்பேர்க் ஆவார். இன்று, ஊடகங்களால் பரபரப்பாகப் பேசப்படும் ஒருவராக, இச்சிறுமி மாறியுள்ளார்.   

இவரது தொடர்ச்சியான போராட்டத்தின் முக்கியத்துவமும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவர் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் முக்கியமானவை. அடுத்த தலைமுறையினருக்கு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துச் செல்கின்ற மகத்தான பணியை இவர் ஆற்றுகிறார். “எங்களது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்ற அவரது கேள்வி, இன்று ஆட்சியில் இருப்போரினதும் மற்றையோரினதும் முகத்தில் அறைகிறது. அவரது சங்கடமான கேள்விகள் அதிகாரத்தில் இருப்போரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன; இது மறுக்கவியலாதது.   

பெரும்பாலும் இவ்வாண்டுக்கான நொபெல் பரிசு, கிரேத்தா துன்பேர்க்குக்குக் கிடைக்காது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், அவரது வயது; 16 வயதுடைய ஒருவருக்கு இவ்விருதை வழங்கப் பரிசுக்குழு தயாராக இராது.   

சில வருடங்களுக்கு முன், இதேபோல மலாலா யூசுவ்சாயுக்கு இப்பரிசை வழங்க முடிவுசெய்தபோதும், அதைத் தனியே அவருக்கு வழங்காமல், இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தியாத்திரிக்கும் சேர்த்தே வழங்கி, இந்தியா-பாகிஸ்தான் என்று கதைவிட்டது குழு.  

இனி, இவ்வாண்டுக்குரிய பரிசு யாருக்குக் கிடைக்கலாம் என்ற எதிர்வுகூறலுக்கு வருவோம். இவ்வாண்டுப் பரிசுக்கு 301 பரிந்துரைகள் கிடைத்துள்ளன. இதில் 223 தனிநபர்களும் 78 அமைப்புகளும் அடங்கும்.   

இவ்வாண்டுப் பரிசு மீது எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பை உருவாக்கியோர் இருவர். ஒருவர் கிரேத்தா துன்பேர்க்; இன்னொருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்ப் இவ்வாண்டு பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தமைக்கு அவருக்கு இப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.  

 வலதுசாரி வட்டங்களில் இருந்து ட்ரம்ப் ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக, நோர்வேயில் வீசுகின்ற வலதுசாரி அலை, அவருக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே பரிசுக்கான ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை நொபெல் பரிசுக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.   

இந்நிலையில், இரண்டு வழிகளில் ஒன்றைப் பரிசுக் குழு தெரிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். முதலாவது, நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஏதாவதோர் அமைப்புக்கு விருதை வழங்கித் தப்பித்துக் கொள்கிற வழமை உண்டு. ஏனெனில் அமைப்புகள் பாதுகாப்பான தெரிவு. விமர்சனங்கள், கண்டனங்கள் இல்லாமல் கடந்து செல்லக்கூடிய தெரிவு அது.   

குறிப்பாக, கடந்த தசாப்தத்தில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது (2017, 2015, 2013, 2012) அமைப்பு ஒன்றுக்கு இப்பரிசு சென்றுள்ளது. எனவே, அவ்வகையில் அமைப்பொன்றுக்கு இப்பரிசு அறிவிக்கப்படலாம்.   

அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அப்பரிசை வெல்லக்கூடியவர்கள் என, எதிர்பார்க்கக் கூடியவை இரண்டு வகைப்பட்ட அமைப்புகள் ஆகும். 

முதலாவது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு. ஊடக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இதுவரை நொபெல் சமாதானப் பரிசின் கவனம் பெற்றதாக இல்லை. ஆனால், இதன் முக்கியத்துவம் இன்று உணரப்படுகிறது.   

அதேவேளை, உலகளாவிய ரீதியில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கிறார்கள். எனவே அவர்களது பணி, அங்கிகாரத்தை வேண்டி நிற்கிறது. அதேவேளை, தற்போதைய நோர்வே அரசாங்கமும் இதில் கவனத்தைக் குவிக்கிறது. 

இப்பின்னணியில், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்புக்குப் பரிசு வழங்கப்படக்கூடும். அல்லது, ஊடகத்துறை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவுக்கு (Committee to Protect Journalists CPJ) கிடைக்கலாம்.   

இரண்டாவது வகை அமைப்புகள், அகதிகளுக்காகப் பணியாற்றுபவை ஆகும். உலகளாவிய ரீதியில், அகதிகள் பிரச்சினை பாரிய பிரச்சினையாகி உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மை (United Nations High Commissioner for Refugees-UNHCR), சர்வதேச மீட்புக் குழு (International Rescue Committee) என்பன முன்னிலையில் இருக்கின்றன.   

இறுதியாக, இப்பரிசை வெல்லக்கூடிய தனிமனிதர்கள் யார் என்று நோக்கினால், முன்னிலையில் இருப்பவர் எதியோப்பிய ஜனாதிபதி அபி அஹமட் ஆவார். அவர் பதவியேற்றவுடன், எரிட்ரியாவுடன் இருந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, சமாதானத்தை ஏற்படுத்தினார். 

அதேவேளை, எதியோப்பியாவில் முன்னேற்றகரமான கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். எனவே, அவருக்குப் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்குக் குறிப்பாக, மூன்று காரணிகள் உண்டு. முதலாவது, அவருக்கு வழங்கப்படும் பரிசு, நேரடியாகவே சமாதானத்துடன் தொடர்புபட்டது.

எனவே சர்ச்சைகள் அற்றது.  இரண்டாவது, இவ்விரு நாடுகளுக்கு இடையில், சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வே முக்கிய பங்காற்றியுள்ளது. அவ்வாறு பங்காற்றி, சமாதானம் எட்டப்பட்ட நாடுகளுக்கு, சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இஸ்‌ரேல்-பாலஸ்தீனம் (1994), மார்த்தி அர்த்தசாரி (2008), மனுவல் சந்தோஸ் (2016) என்பவை சிலவாகும்.   

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், 2016ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்துக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட சமாதானத்தை அடுத்து, சமாதானத்துக்கான பரிசு, கொலம்பிய ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறே, இம்முறையும் நிகழுமா? அல்லது, சமாதானத்தை எட்டிய எரிட்ரிய ஜனாதிபதி இசைஸ் அவ்வேர்க்கியுக்கும் சேர்த்தே பரிசு வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .