2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பக்தர்கள் போல மாறிவிட்ட தீவிர ஆதரவாளர்கள்

Administrator   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹமட் பாதுஷா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளை, தீவிர ஆதரவாளர்களும் ஒருதொகுதி மக்களும் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற ஒரு பிற்போக்குத்தனத்தை காணக்கூடியதாக இருக்கின்றது.   

அந்த அரசியல்வாதி என்னதான் தவறு செய்தாலும், அதுபற்றிய உண்மைகளைக் கண்டறியாமல் அவரில் சரிகாணும் போக்குகள் பரவலாக அவதானிக்கப்பட்டு வருகின்றன. 

அரசியல் ஒரு மதம் என்று எடுத்துக் கொண்டால், இவ்வாறான தலைவர்கள் ஒரு கண்கண்ட தெய்வத்தைப்போல கணிக்கப்படுகின்றார்கள் எனலாம்.  

இந்தியாவில் நடிகைகளின் சிலைகளுக்கு பாலூற்றும் தீவிர ரசிகர்களுக்கும் சாமியார்களிடம் சுயத்தை இழக்கும் பக்தகோடிகளுக்கும் இதற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.   

தெய்வ வழிபாடுகள் நடைமுறையில் உள்ள சமூகங்களில், மாற்றுத் தெய்வங்களைத் தரிசித்தல் அங்கிகரிக்கப்படுவதில்லை. அதுபோல, இன்னுமொரு மதக் கொள்கையை, நல்லுபதேசங்களை கேட்பது கூட தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று கருதப்படுவதுண்டு.   

சுருங்கக்கூறின், தெய்வத்தின் விடயத்தில் எல்லா விடயங்களையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புபவர்களாக இருக்க வேண்டும் என்பதும், எந்தச் சந்தேகத்துக்கும் கேள்வி கேட்டுக் குழப்பக்கூடாது என்பதும் அவ்வாறான வழிபடுநர்களின் நிலைப்பாடாக இருக்கும்.   

முஸ்லிம்களிடையே மத அடிப்படையில் இந்த நிலைமை இல்லை. அவர்கள் ஏகத்துவ கொள்கையின் கீழ், ஓர் இறைவனையே வழிபடுகின்றனர்.

 ஆனால், முஸ்லிம் அரசியல் என்பது இப்போது அரசியல் தலைவர்களை மையப்படுத்திய வழிபாடுகளால் நிரம்பிக் கிடக்கின்றது.   

இலங்கை முஸ்லிம் அரசியலின் கையறுநிலையை நாடே அறியும். சிங்கள பெருந்தேசியக் கட்சிகளோடு நேரடியாகச் சங்கமமாகி இருந்த முன்னைய முஸ்லிம் தலைவர்கள் செய்த பாரபட்சமற்ற சேவையைப் போலவோ, தனித்துவ அரசியலைத் தோற்றுவித்த எம்.எச்.எம்.அஷ்ரப் செய்த இமாலய சேவைகளைப் போலவோ, முஸ்லிம் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பணிகளை பிற்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எந்த அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் செய்து காட்டவில்லை என்பதே மக்களின் பட்டறிவாகும்.   

ஆயினும், மக்கள் இன்னும் தம்முடைய அரசியல் தலைமைகளை, அரசியல்வாதிகளை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைக்காலத்தில் சாதாரண மக்கள் மனங்களிலும் நடுவுநிலையோடு நின்று நிலைமைகளை நோக்குவோர் மத்தியிலும் மனநிலை மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.

என்றாலும், பெரும்பாலான தீவிரபோக்குடைய ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் இன்னும் இந்த மாயைக்குள் இருந்து வெளியில் வரவில்லை.   

அதன்படி, குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த இவ்வாறானவர்கள், தம்முடைய கட்சியின் கொள்கையை கண்மூடித்தனமாக நம்புகின்றனர். 

தமது கட்சி என்னதான் நிலைப்பாடு எடுத்தாலும், அதுவெல்லாம் மிகச் சரியான நிலைப்பாடாக இருக்கும் என்று கண்ணைப் பொத்திக் கொண்டு சொல்கின்றனர்.

அதிலுள்ள தலைவர் அல்லது அரசியல்வாதி எந்தப் பாதையில் போனாலும் அவரைப் பின்தொடரத் தயாராக இருக்கின்றனர்.   தம்முடைய கட்சித் தலைவனை, தாம் ஆதரவளிக்கும் அரசியல்வாதியை வேறு ஒருவரும் விமர்சிக்கக் கூடாது என்பதில் ஒருவித வெறியோடு இருக்கின்றனர்.

அந்த அரசியல்வாதிகள் என்ன செய்தாலும், அதுபற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றார்கள். இதுமிக மோசமான ஓர் அரசியல் கலாசாரமாகும்.  

முஸ்லிம் அரசியல்வாதிகள் தேசியத் தலைமை என்ற மாயைக்குள்ளும், பிராந்திய தலைமை என்ற வெறுமைக்குள்ளும், இல்லாத ராஜ்ஜியம் ஒன்றை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அவர்கள் தம்மை மிகையாக மதிப்பீடு செய்து வைத்திருக்கின்றனர். 

அரசியல்கட்சித் தலைவர்கள் தொடக்கம் இரண்டாம் நிலைத் தளபதிகள், சாதாரண சிப்பாய்கள் தொட்டு, உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் வரை எல்லோரும் தமக்குப் பின்னால் மந்திரித்து விடப்பட்ட பக்தர் கூட்டம் ஒன்றை வைத்திருக்கவே விரும்புகின்றனர்.   

அவர்களுக்கு தவறுகளும் இராஜதந்திரங்களாக காட்டப்படுகின்றன. ஆனால், அவர்களது குறைநிறைகள் என்னவென்பதும் அவர்களது கொள்திறன் என்னவென்பதும் புத்தியுள்ள மக்களுக்கு தெரியும்.   

ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குப் பின்னால், அரசியல்வாதிக்குப் பின்னால் மந்திரித்து விடப்பட்டிருக்கின்ற தீவிர தொண்டர்கள், ஆதரவாளர்கள், தேர்தல்கால ஆளணியினர் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றனர்.  

 அவர்கள் தங்களுடைய தலைவனை, அரசியல்வாதியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். அவ்வாறு ஒரு குற்றச்சாட்டு விமர்சனம் முன்வைக்கப்பட்டால் அது சரியா பிழையா எனக் கண்டறியாமல் நவீன ஊடகங்களில் வரிந்து கட்டிக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.   

அமெரிக்காவில், ஏனைய மேற்குலக நாடுகளில் ஜனாதிபதி தம்மைக் கடந்து போனாலும், ஆதரவாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி என்றே அவர்கள் பார்க்கின்றனர். கொடுக்க வேண்டிய மரியாதையை ஸ்மார்ட்டாக கொடுக்கின்றனர்.   

ஆனால், இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தீவிர ஆதரவாளர்கள் ஆரத்தழுவி முத்தமிடுவதற்கும் அவரோடு இணைந்து செல்பி எடுப்பதற்கும், அவரைத் தோழில் சுமப்பதற்கும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான ஒரு மனக்கிளர்ச்சியை ஆதரவாளர்களிடையே ஏற்படுத்தி விட்டு அவர்களை அறியாமடந்தைகளாக வைத்திருக்கும் தமது நோக்கத்தை இலகுவாக அடைந்து கொள்கின்றனர் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்.   

ஒரு குறிப்பிட்ட கட்சியின் கூட்டம் நடக்கின்றது என்றால் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமே அந்தக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே இருக்கின்றது. 

ஒரு தெய்வம் இருக்கின்ற இடத்துக்கு அதை வழிபடுபவர்கள் மாத்திரமே போக வேண்டுமென நினைப்பது மாதிரியானது இது. 

உண்மையில், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின், கட்சியின் கோஷம், கொள்கை என்ன என்பது அவருடைய கட்சிக்காரர்களுக்குத் தெரியும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியவன் மாற்றுக் கட்சிக்காரனே. அவனுக்குத்தான் உங்களது கொள்கை விளக்கமும் வாக்குறுதிகளும் அவசியமாகின்றது.  

ஆகவே,ஒரு வாக்காளன் எனப்படுபவன், எல்லாக் கட்சிகளின் கூட்டங்களுக்கும் செல்ல வேண்டும். எல்லா அரசியல் தலைவர்களின் பிரகடனங்களையும் அறிய வேண்டும். அதன் பிறகு, அவன் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஆனால், அது நடைபெறுவதில்லை.   

முஸ்லிம் அரசியல்வாதிகள்; எதிரணிக் காரர்களை போட்டுத் தாக்குவதையே தம்முடைய பிரசாரமாக ஆக்கியிருக்கின்றார்கள். எதிரணிக்காரன் ஒருவன் அந்தக் கூட்டத்தில் நுழைந்தால் அவன் உளவாளியாகவே நோக்கப்படுகின்றான்.   

இரண்டு கட்சிகளுக்குள் இவ்வாறான நிலை இருப்பது ஒருபுறமிருக்க, இன்று ஒரு கட்சிக்குள்ளேயே ஆயிரத்தெட்டு பிளவுகளும் குழுக்களும் உருவாவது புதிய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கின்றது. 

இது முதலாளித்துவ அரசியலின் பிரித்தாளும் தந்திரமாகும். இதற்கமைய, ஒவ்வொரு ஊரிலும் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலவாறாக கூறுபோடப்பட்டுள்ளனர். ‘இவர், அவருடைய ஆள; இவர், இவருடைய ஆள்’ என்று இரண்டு மதங்களைப் பின்பற்றும் ஆட்களைப் போல பிரித்து நோக்கப்படுகின்றனர்.   

இந்தப் பக்தி நிலை முற்றியதால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறு, யாரோ ஓர் அரசியல்வாதிக்காக சொந்தக் குடும்பத்துக்குள் சண்டை பிடித்துக் கொண்ட குடும்பங்கள், இன்னும் உறவின்றி இருக்கின்றன.  

உண்மையில் அரசியல்வாதியோ  தலைமையோ பிழை என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபர் கிடையாது. அதில் வாக்காளர்களாகிய நமது பங்கு பிரதானமானது.   

ஏனெனில், நாமே அவரைத் தெரிவு செய்திருக்கின்றோம். இந்நிலையில், அவர் மீதான விமர்சனங்களையும் தவறுகளையும் ஆராய்ந்து சுட்டிக்காட்டி, அவரைத் திருத்த முற்பட வேண்டும். 

இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் பாடம்புகட்ட வேண்டும். இதுதான் ஓர் உண்மையான பொதுமகனின் பணியாகும்.  
 ஆனால் அந்தப் பண்பு முஸ்லிம் அரசியலில் இல்லை.

எந்தவொரு அரசியல்வாதியையாவது ஓர் ஊடகம் விமர்சித்தால் அல்லது அவரது குறைகளைச் சுட்டிக் காட்டினால், அந்த அரசியல்வாதியின் தீவிர ஆதரவாளர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகின்றது.   

இதுவே, ஒரு பொதுமகனோ மாற்றுக் கட்சிக்காரனோ இவ்வாறான கணைகளைத் தொடுத்தால் எதிர்வினை கடுமையாகிவிடுகின்றது. பொதுத் தளத்தில் மட்ட ரகமான முறையில் சண்டையிடுவதையும் காண முடிகின்றது.   

ஆனால், உண்மையில் நேர்மையான, புத்தியுள்ள ஓர் ஆதரவாளன், அதை நடுநிலையாக நின்றே நோக்க வேண்டும். அவ்வாறான ஒரு விமர்சனம் தனது சார்புநிலை அரசியல்வாதிக்குப் பொருத்தமானதா என்பதை சிந்திக்க வேண்டும்.   

நமது நம்பிக்கையை வென்றவர் என்றாலும் அவர் அரசியல்வாதி என்பதையும் மறதிக்கும் தவறுக்கும் இடையில் படைக்கப்பட்ட மனிதன் என்பதையும் நினைவில் கொண்டு உண்மை கண்டறியும் ஆய்வொன்றை சுயமாக மேற்கொள்ள வேண்டும்.   

அதன்பின்னர் அந்த விமர்சனம் பிழை என்றால், மிக நாகரிகமான முறையில் பதிலிறுக்கலாம். சரியானது என்றால், தமது சமூகத்தின் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மறுபரிசீலிக்க வேண்டும்.   

இதேவேளை, கருத்துக்களை வெளியிடுவோரும் நாகரிகத்தை பேண வேண்டியிருக்கின்றது. தாறுமாறாக அரசியல் தலைவர்களைக் கிண்டலடிப்பதைத் தவிர்த்துக் கொள்வது பக்குவப்பட்ட சமூகத்தின் பண்பாகும்.  

விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க ஊடகவியலாளர்களுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு பொது மகனுக்கும் உரிமை இருக்கின்றது. 

ஆனால், அதற்கொரு முறையிருக்கின்றது. அவர்களை விமர்சிப்பதற்கும் நையாண்டி செய்வதற்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை புரிந்து செயற்பட வேண்டும்.

ஆனால், ஏகப்பட்ட இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட இன்றைய காலப்பகுதியில், பொதுவெளியில் நாகரிகம் என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது எனலாம்.  

ஓர் அரசியல் கட்சித் தலைவரை யாராவது ஒருவர் கேள்வி கேட்டுவிட்டால், அவரது செயற்பாடுகளை விமர்சித்து விட்டால், அதற்கான பதிலை, விளக்கத்தை அளிப்பதே நாகரிகமானது. 

ஆனால், அவ்வாறு ஒழுக்கமுள்ளவர்களாக நமது அரசியல்வாதிகள் அவர்களது சீடர்களையும் தீவிர ஆதரவாளர்களையும் வளர்க்கவில்லை என்பதற்கு அன்றாடம் பல சம்பவங்கள் அத்தாட்சியாக அமைகின்றன.   

அப்படி கேள்வி கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கு பதிலளிப்பதை விடுத்து, அதைச் கேட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிரான வசைபாடல்கள் தொடங்குகின்றன. அவன் மதம் மாறியவன் போல காட்டப்படுகின்றான்.  

இவ்வாறான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற போது, சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் அதை ஆற அமர யோசித்து, நமது அரசியல்வாதி இவ்வாறு செய்திருப்பாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் களத்தில் இறங்கி, கொச்சையான பதில்களை அளிக்க முற்படுகின்றனர்.   

தாம் ஆதரவளிக்கும் அரசியல்வாதியை யாராவது குறை சொல்லி விட்டால், சாறத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விடுகின்ற சிலர், சிலபோதுகளில், நிர்வாணமானது கூடத் தெரியாமல் பொதுத் தளங்களில் வாதிட்டுக் கொண்டு, அறிக்கைவிட்டுக் கொண்டு இருப்பார்கள்.   

இதுதான் முஸ்லிம் அரசியல் ஆதரவாளர்களில் பெரும்பாலானோரின் இன்றைய நிலையாக இருக்கின்றது. இவர்கள் யாரென்று தேடிப்பார்த்தால்.... அந்த அரசியல்வாதியிடம் தொழில் செய்பவராக, அடுத்த தேர்தலில் போட்டியிட இருப்பவராக, அவரிடம் தொழில் பெற்றவராக, அவரது எடுபிடியாக, அவருக்கு இரகசிய தகவல் சொல்லும் உளவாளியாக, அந்த அரசியல்வாதியின் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். 

காத்திரமான விவாதங்களை சமூகத்துக்காக முன்வைக்கின்றவர்களும் நியாயத்துக்காகத் தமது அரசியல்வாதிக்கு வக்காளத்து வாங்குவோரும் மிகச் சிலரே.   

உண்மையான ஆதரவாளர்கள் யாரும் இந்த அழுக்கு அரசியலுக்குள் சிக்க மாட்டான், சிக்கியிருக்கவும் கூடாது. ஏதேனும் ஒரு கட்சியின் உண்மையான ஆதரவாளன், ஓர் அரசியல்வாதியை விசுவாசித்தாலும் கூட, வெளியே அந்த அரசியல்வாதி பற்றி என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்பதை காதால் உள்வாங்கிக் கொள்வான்.  

 அதைப்பற்றி ஆழமாக யோசிப்பான். பிழை என்றால் பிழை என்பான், சரி என்றால் சரி என்பான். நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவான். இந்த நிலைமைகளையே இன்று உருவாக்க வேண்டிள்ளது.   

முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமை பற்றி, முஸ்லிம் மக்கள் பல வருடங்களாகப் பேசுகின்றார்கள். உண்மையிலேயே தலைவர்கள், தம்முடைய அரசியல் இலாபத்துக்காக இன்னும் பிரிந்திருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொண்டாலும்,ஆனால் சாமான்ய மக்கள் ஏன் இன்னும் ஒன்றுபடவில்லை என்ற கேள்வி எழுகின்றது.   

ஒரே இறைவனை வழிபடும் முஸ்லிம்கள் ஏன்பிரிந்திருக்கின்றீர்கள் என்று மாற்றுமத சகோதரர்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் என்ன? 

அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அரசியல்வாதிகளுக்குப் பின்னால் முஸ்லிம்கள் மந்திரித்துவிடப்பட்டுள்ளதும், அதன் காரணமாக அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் சரி காண்பதும், அவர்கள் காட்டுகின்ற பிழையான வழிகளிலும் பயணிக்க சித்தமாய் இருப்பதும் ஆகும்.  

எனவே முஸ்லிம்களுக்கு விடிவு வேண்டுமென்றால் அரசியல் கருத்து வேற்றுமைகளுக்கு அப்பால் நின்று, சரியைச் சரி எனவும் பிழையைப் பிழை எனவும் சொல்வதற்கு ஆதரவாளர்களும் வாக்காளர்களும் முன்வர வேண்டும்.  

 அதாவது, மாற்றம் நம்மில் ஏற்படாத வரையில், அவர்களது தவறுகளுக்கு ஆதரவாளர்கள் துணை போய்க் கொண்டிருக்கும் வரையில்... அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பது மகாமுட்டாள்தனமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .