Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2021 ஜூன் 12 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா கோலோச்சும் இன்றைய கால கட்டம், வாழ்வா சாவா என்றுதான் இருந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் வலுத்தே வருகிறது. கொரோனாவை அரசாங்கம், அரசியலுக்காகவும் அதிகாரத்துக்காகவும் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகிறது. அதற்கு மாவட்டம், மாகாணம், தேசியம் போன்ற மட்ட வேறுபாடுகளும் இல்லை. இருந்தாலும், அதற்குள்ளும் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில், பொருளாதார அரசியல், சமூக அரசியல், இன அரசியல் சார்ந்து நாடு நகர்கிறது.
மட்டக்களப்பு மாவட்டமானது, கிழக்கின் முக்கிய அரசியல் அதிகாரங்கள், பலம்மிக்கதாக நகர்கின்ற பிரதேசமாகும். இந்த நிலையில்தான் மாவட்டத்தின் ஓட்டமாவடியை மையப்படுத்திய பதிவாளர் செயற்பாடு, கோரளைப்பற்றுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அது ஒரு விழாவுக்கு நிகராக, கடந்த 31ஆம்திகதி மகிழ்ச்சி கொண்டாடவும் பட்டது. அதற்குள் அது ஓர் அரசியல் கபளீகரம் என்று சொல்லுமளவுக்கான வேலைத்திட்டம் நடைபெற்று, ஒரு வாரத்துக்குள் இல்லாமலும் செய்யப்பட்டிருக்கிறது.
இதில், தமிழர்கள் பிரயோகித்த அஸ்திரம் பயனற்றுப் போயிருக்கிறது. எடுத்த முயற்சி பயனற்றுப் போனதைக் குறித்துக் கவலை கொள்ளாமல், இனி எடுக்கும் நடவடிக்கைகள், முயற்சிகள், சிந்தித்து நகர்த்தப்பட வேண்டும் என்று பாடம் கற்றுக் கொண்டதாகவே கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக கொள்ளப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு முடிவாக இருக்கச் செய்யப்பட வேண்டும். இல்லையானால் தேசிய மட்டத்தில் இருக்கும் அதிகாரத்துக்கு அது இழுக்கே.
நாட்டில் நடைபெற்றுவரும் எந்தவொரு விடயமும், இன ஆதிக்க அரசியலாகப் பெயர் சூட்டப்படுவதற்கு அந்நடவடிக்கையின் தன்மை, அதன் ஆதிக்கம், ஆளுகை மற்றும் பல விடயங்களும் காரணமான இருப்பதாகவே கொள்ள வேண்டும். இந்தப் பதிவாளர் பிரிவு மாற்றப்பட்டதற்கும் அவ்வாறான காரணம் இருப்பதாக குற்றமும் சாட்டப்படுகிறது.
இவ் விடயத்துக்கு இறுதி நேரத்தில், முன்னாள் கிழக்கு மாகாணத்தின் இரண்டு முதலமைச்சர்கள் சம்பந்தப்பட்டனர். ஒருவர் கிழக்கின் முதல் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
மற்றையவர் நசீர் அஹமட். தற்போதைய நாடாளுமன்றத்தில் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுப்பினர்கள். அதற்கும் மேலாக இருவரும் ஆளும் தரப்புடன் நெருக்கமானவர்கள்.
இப்போது, இந்தப்பதிவாளர் பிரிவின் மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் சிவநேசதுரை சந்திரகாந்தன். அது நிறுத்தப்பட்டதற்கு, நசீர் அஹமட் காரணம். இதனை முஸ்லிம், தமிழ் அரசியல் ஆதிக்கமாகக் கொண்டாலும், இது கடந்த சில வருடங்களிலிருந்து தொடங்கப்பட்டதொரு விடயமல்ல என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
1973 - 1974களிலிருந்து ஆரம்பமான இந்த பதிவாளர் விடயம், கடந்த காலங்களில் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படாமை காரணமாக தூண்டப்படவில்லை.
ஆனால், கடந்த 2012 காலப்பகுதியில் இப் பதிவாளர் விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் கையிலெடுக்கப்பட்டு நகர்த்தப்பட்டு வந்துள்ளது; இதனை அவர் உறுதிப்படுத்துகிறார்.
அப்போதிலிருந்து, திரைமறைவில் மாவட்டத்திலிருந்த ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் காதும் காதும் வைத்தது போன்று, சமாளிக்கப்பட்டே வந்திருக்கிறது.
இந்த அரசாங்க காலத்தில் இவ்விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் கையிலெடுக்கப்பட்டு, நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த இப்பிரச்சினை, நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வதனைவிடவும், மூடிக்கிடந்த பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
இந் நடவடிக்கை சரிவராமல் போனதற்கு, அதன் ஆரம்பகாலங்களிலிருந்தான வரலாறுகளும் நடைமுறைகளும் காரணமாகும். ஆனாலும், இனிவரப்போகும் சிக்கல்கள்தான் மிகச்சிரமமானவையாக இருக்கப்போகின்றன.
அதில் முக்கியமானது, கோரளைப்பற்றிலுள்ள மூன்று பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, 1990களில் உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, 2003 களில் 08 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவையே அவை.
தமிழ் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் முஸ்லிம்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபை, கல்வி வலயங்கள், வைத்தியசாலைகள் என கிழக்கில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையிலேயே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியதாக, பதிவாளர் விவகாரம் இருக்கிறது. இது முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சந்திரகாந்தனுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் இரண்டு பக்கங்களுக்கும் சாதக பாதகங்களையே, கடந்த காலங்களில் கொடுத்திருக்கின்றன.
அதில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்கிற போட்டி, கடந்த அரசாங்கங்களில் எப்படியோ இப்போதைய அரசாங்கத்திலும் அப்படியே இருக்கிறது.
தற்போதைய அரசாங்கத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி தம்மை கிழக்கிலுள்ள தமிழர்கள் அடக்க முனைகிறார்கள் என்பதான முஸ்லிம்களின் பார்வை ஒன்றிருக்கிறது. ஆனாலும் தமிழர்களின் பெரும்பாலானவர்களில் முஸ்லிம்களும் தங்களுடன் இணைந்தே வருவார்கள், செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையே இருக்கிறது.
இந்த எண்ணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் இருந்தாலும் கூட, இந்த எதிர்பார்ப்பை முன்நகர்த்துவதற்கு அரசியல் தரப்புகளும் சரி, சமூக மட்டத்தினரும் சரி முயற்சிகளை மேற்கொண்டதாக இல்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இப்போதும் நப்பாசையுடன்தான் இருக்கிறது என்பதற்கு, கடந்த மாகாண சபையின் முதலமைச்சை, முஸ்லிம்களுக்கு வழங்கியதை உதாரணமாகக் காட்டுகிறார்கள்.
இது பிழை என்றும் சரியென்றும் வாதாடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம்களுடன் இசைந்து பேசி, அதனைத் தரமுயர்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் அக்கட்சிக்கு இருக்கிறது.
ஆனால், அது நடைபெறக்கூடியதல்ல என்கிற முடிவுடன் ஆளும் தரப்பையும், ஆளும் தரப்பு ஆதரவு அணியையும் கல்முனை மக்கள் நாடிக் கொண்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச பதிவாளர் விவகாரம் குறித்து வெளியிட்ட கருத்தில், “ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை, அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற்சி” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அவருடைய கருத்துகளின் படி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்புகளுக்கான பதிவுச்சான்றிதழ்கள், கடந்த 48 வருடங்களாக, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தாலே வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதாகும்.
ஆனால், ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. 1990களிலாகும். எல்லோரும் சொல்வதுபோல், 48 வருடங்களாக இருந்த நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதல்ல.
அவ்வாறானால் கோரளைப்பற்று மேற்கு எனப்படும் ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இந்தப்பதிவாளர் மாற்றம், நடைபெறாமல் இருந்தது தவறு என்பதை, இதில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.
இன விடுதலைப் போராட்டப் பயங்கரம், இன்னல்கள், காட்டிக் கொடுப்புகள், காணாமல்போதல்கள், நெருக்குதல்கள், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருந்த தமிழர்கள், இவ்வாறான விடயங்களை கணக்கில் கொள்ளவில்லை.
தங்களுடைய பொருளாதாரத்தை, சமூக மேம்பாட்டு விடயங்களை அடைந்து கொள்வதற்கான காலம் என்ற வகையில், இப்போது சில நகர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமே என்ற வகையில்தான், பதிவாளர் விவகாரம் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இது தொடக்கமாகவே இருக்கவேண்டும்; இருக்கும்.
இந்த ஒழுங்கில், கோரளைப்பற்றிலிருந்து வேறு வேறு வருடங்களில் பிரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இரண்டு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான எல்லைகள் பிரிக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியமை நேர்மையான நியாயத்தின் படி நடைபெற வேண்டும்.
அது நடைபெறும் போது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள், ஏற்கெனவே, காணி மற்றும் வாழிடங்களுக்கான நிர்வாக எல்லைகளில், சிலரின் அதிகாரத் தொல்லைகளுக்கு உட்பட்டு உள்ளனர். இன்னும் அவ்வாறான அதிகாரப் பயங்கரவாதமே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
அதிகாரப்பகிர்வை கோருகின்ற ஓர் இனம், தம்முடன் பிணைந்து வாழும் மற்றொரு இனத்தைத தொடர்ச்சியாக நசுக்குவதும் வஞ்சிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. ஆயுதக்கலாசாரத்தால் ஓரினத்தை மண்டியிட வைப்பதில், தோற்றுப்போன அரசியல்வாதிகள், தற்போது அதிகார பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்கமுடியுமென நப்பாசை கொண்டுள்ளனர்.
குறித்த இனத்தின் மீது, பாரபட்சங்களைச் செலுத்தும் இந்தக் கருவறுத்தல்கள் தொடர்வதற்கு நான், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கருத்துகள் வௌிப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பொப்பிக்கப்படும்; பொய்ப்பிக்கப்படவும் வேண்டும்.
இல. அதிரன்
athirantm@gmail.com
(கட்டுரையாளர்)
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago