2026 மார்ச் 05, வியாழக்கிழமை

பலுனை உடைக்கப் பட்டப்பாடு

Editorial   / 2026 மார்ச் 05 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹைதராபாத் பயணத்தில் கற்ற வாழ்வியல் பாடங்கள்

அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com

இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு மற்றும் பாடசாலை நேர நீடிப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் கல்வி முறை ஒரு புதிய கோணத்தை எமக்குக் காட்டியது. எனது ஹைதராபாத் விஜயத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்கள், வெறும் ஏட்டுக்கல்வியைத் தாண்டி வாழ்வியலோடு இணைந்தவையாக இருந்தன.

எம்முடைய பயணத்தின் புதன்கிழமை (04) காலை, “I love my heart” என்ற தலைப்பில் அமைந்த யோகா பயிற்சியுடன் தொடங்கியது. உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்த அந்த காலைப் பொழுது மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்தது. அதனை அடுத்தடுத்து பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற புத்தவனத்தை பார்வையிடுவதற்காக நாங்கள் தங்கியிருந்த Dr. MCRHRD நிறுவனத்திலிருந்து காலை 6 மணிக்கே எமது பஸ் புறப்பட்டது. சுமார் மூன்று மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, நல்கொண்டா மாவட்டத்தின் விஜயபுரி படகுத் துறையை அடைந்தோம். அங்கிருந்து கிருஷ்ணா நதியில் ஒரு மணிநேரப் படகுப் பயணம்.  

இந்தப் பயணத்தில் எம்மோடு தெலுங்கானாவைச் சேர்ந்த சுமார் 300 மாணவிகளும் பயணித்தனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அந்த மாணவிகளுடன் உரையாடியது ஒரு சிறந்த அனுபவம். பல மொழிகளில் பாடல்களைப் பாடி எங்களை மகிழ்வித்த அவர்கள், விடைபெறும்போது ஒரு இனிய நினைவை விட்டுச் சென்றனர்.

அங்குள்ள மாணவிகளுடன் பேசியதில் இருந்து சில முக்கிய விடயங்களை அறிந்துகொண்டேன்:

தரம் 6 முதல் 8 வரை மொழிப்பாடங்களுடன் (தெலுங்கு/உருது, இந்தி, ஆங்கிலம்) கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே முதன்மையாகக் கற்பிக்கப்படுகின்றன.

மூளைக்கான வேலைப்பாடு என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. பாடப்புத்தகங்களைத் தாண்டி, அறிவுத்திறன் பயிற்சிகளுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வியப்பிற்குரிய விடயமாக, தரம் 3 முதலே அங்கு 'கோடிங்' கற்பிக்கப்படுவதாக அந்த மாணவிகள் கூறினர்.

சனிக்கிழமைகளில் புத்தகப் பைகள் No Bag Day  இன்றி பாடசாலைக்கு வரும் மாணவர்கள், சதுரங்கம் மற்றும் புதிர்கள் மூலம் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள்.

எங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள் 'Lecturing' செய்வதை விட, 'Learning by Doing' (செய்யக் கற்றுக்கொள்) என்ற முறையிலேயே பயிற்சிகளை வழங்கினர். அதில் பலூன் உடைக்கும் விளையாட்டு ஒரு மறக்க முடியாத பாடம்.

  பலூனை ஊதி நடுவில் போட்டுவிட வேண்டும். ஆனால், தோல் பட்டையிலிருந்து விரல் வரையோ அல்லது இடுப்பிலிருந்து பாதம் வரையோ உள்ள உறுப்புகளைப் பயன்படுத்தாமல் அதை உடைக்க வேண்டும்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுத்தியைக் கையாண்டனர்: சிலர் தலையால் முட்டி உடைத்தனர். ஒருவர் தரையில் படுத்து வயிற்றால் அமிழ்த்தி உடைத்தார். மற்றொருவர் கடித்து உடைக்க முயற்சித்தார். ஒருவர் எதிர்பாராத விதமாகப் பாய்ந்து உடைக்க முயன்றார், ஆனால் அது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் செல்லுபடியாகவில்லை.

இந்தச் சிறிய விளையாட்டு, ஒரு சிக்கலைத் தீர்க்கும்போது (Problem Solving) நாம் எவ்வளவு தூரம் படைப்பாற்றலோடு சிந்திக்க வேண்டும் என்பதையும், விதிகளுக்கு உட்பட்டு இலக்கை அடைவதையும் எமக்குக் கற்றுத்தந்தது.

ஹைதராபாத் விஜயம் என்பது வெறும் சுற்றுலா அல்ல; அது ஒரு தேடல். இலங்கையின் கல்வி முறையில் நாம் கொண்டுவர விரும்பும் மாற்றங்களுக்குத் தெலுங்கானாவின் இந்த 'விளையாட்டு வழிக் கற்றல்' முறை ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எங்கள் குழுவிற்கு வளவாளராக இருந்த அனைவருக்கும் நன்றியை கூறுவது மட்டுமன்றி, 'விளையாட்டு வழிக் கற்றல்' எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கற்றுக்கொண்டேன்.

1.Dr.K.V.Kurmanath, Propaganda through Media  என்ற தலைப்பிலும் 2. Building Trust between Media and Public Relations and     Communication Challenges in Crisis Management என்ற தலைப்பில் Sri Ajit Pathak கற்பித்தனர்.

 3.Growing role of Artificial Intelligence in Mass Media என்ற தலைப்பில் Prof. Rahul Dass கற்பித்தார். 4.The World of Cinematography - What Journalist and Media Professionals Should Know என்ற தலைப்பில் Sri Farhatullah Beig,  கற்பித்தார். 05) Importance of Social Media in Modern Governance என்ற தலைப்பில் Sri Pankaj Pachauri கற்பித்தார்.

நான்கு சுவர்களுக்கு கற்றுக்கொடுத்ததை விடவும், களவிஜயமும் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அத்துடன், மறுநாள் வியாழக்கிழமை (17) புத்தவனத்தை பார்வையிடுவதற்குச் சென்றோம்… 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .