2025 ஜூலை 19, சனிக்கிழமை

பிர​ச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை​யா?

Princiya Dixci   / 2017 ஒக்டோபர் 31 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறக்கும்போதே வெற்றியோடு பிறந்த மனிதன், வாழ்க்கைப் பயணத்தின்போது தோல்வியைக் கண்டு அஞ்சுகின்றான். பல்லாயிரக்கணக்கான விந்துகளுடன் போட்டிபோட்டு, அவற்றைப் பின்தள்ளி, தாயின் கருவுக்குள் வீரியத்தோடு முந்திக் கொண்டு நுழையும் போதே, வெற்றி நமக்கு அடிமையாகி விடுகின்றது.   

பிறப்புக்கு முன்னரே, சமபலமிக்கவர்களுடன் அச்சமின்றிப் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாம், உயிர் - சதை கொண்ட வாழ்க்கையில் மாத்திரம் வெற்றி கிட்டாது என ஏன் அஞ்ச வேண்டும்?   

அச்சத்தின் விளைவு தோல்வி. தோல்வியின் உந்துதலாலே பல தற்கொலைகள் இன்று அரங்கேற்றப்படுகின்றன. தற்கொலைக்குத் துணையாகக் கொலைகளும் இணைந்து கொள்கின்றன.   

நாட்டிலிருந்து நாளாந்தம் வெளிவரும் செய்தி அறிக்கைகளில், தற்கொலைச் செய்தி அறிக்கைகளின் பட்டியல், நீண்டு கொண்டே செல்கின்றது. அவ்வாறே, கடந்த வௌ்ளிக்கிழைமை (27), பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவமும் இப்பட்டியலில் இணைந்து கொண்டது.   

யாழ்ப்பாணம், அரியாலை, மாம்பழம் சந்திப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், சடலங்களாக மீட்கப்பட்டனர். அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, தாயாரான கிருஷாந்தன் சுநேந்திரா (வயது 28), அவரது மூத்த மகளான கிருஷாந்தன் ஹர்ஷா (வயது 4), இரண்டாவது மகனான கிருஷாந்தன் சஜித் (வயது 2), மூன்றாவது மகனான கிருஷாந்தன் சரவணா (வயது 1) ஆகியோரே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.  

தன்னுடைய பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்த அத்தாய், தானும் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.   

இக்குடும்பத்தின் தலைவரான கணவன் இராமன் கிருஷாந்தன், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி, தற்கொ​லை செய்துகொண்டுள்ளார். கிருஷாந்தன், தனது நண்பரொருவருக்கு 11.7 மில்லியன் ரூபாய் பணத்தை, நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் கொடுத்து ஏமாந்தமையால், பூர்விக சொத்துகள் சிலவற்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.  

இதனால் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். முதலில் அவர் விஷத்தைக் குடிந்து அவஸ்தைப்படுவதைப் பொறுக்க முடியாத மனைவி, விஷத்தைத் தானும் அருந்தாது, பிள்ளைகளுக்கும் கொடுக்காது, கணவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனளிக்காது கிருஷாந்தன் உயிரிழந்துள்ளார். எனினும், கடனை வாங்கி ஏமாற்றிய நண்பன், சுவிற்ஸர்லாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளாரெனக் கூறப்படுகிறது.   

இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் வட மாகாணம் முதலிடத்தைப் பிடித்துள்ளதென, களுத்துறையில் கடந்த வாரம் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வைத்து, சமூக நலன்புரி சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தார். மன உளைச்சல் காரணமாகவே, வட மாகாணத்தில் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.  

கோரமான யுத்தத்துக்கு முகங்கொடுத்த வட மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு, யுத்தம் ஓய்ந்து எட்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான மனநல ஆலோசனைகள் நடத்தப்படாத நிலையிலேயே, வடக்கில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமைக்குப் பிரதான காரணமெனக் கூறப்படுகின்றது.  

தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகளின்போது அதனை ஈடுகொடுக்க முடியாமையினாலே, அப்பிரச்சினைகள் காலப்போக்கில் மன அழுத்தமாக மாறி, இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர்.   

அதேவேளை சமூக, கலாசார, பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்ப விவகாரங்கள், கடன் தொல்லைகள் காரணமாகவும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துள்ள நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளும், தற்கொலைகள் அதிகரிப்பதற்குப் பிரதான காரணங்களாகச் சுட்டிக்காட்டிப்படுகின்றன.   

அவ்வாறே, மட்டக்களப்பு, ஏறாவூர் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர், பல நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாது, தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.   

அரியாலைச் சம்பவத்துக்கு 10 நாட்களுக்கு முன்னர் அதாவது, இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவர் உயிர்நீத்தார்.   

யோகேஸ்வரி, அவர் இறப்பதற்கு அடுத்த நாள், 3 நிறுவனங்களுக்கு சுமார் 25,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை கடன் தவணைப் பணமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்துள்ளார். அதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், கடன் திருப்பிச் செலுத்தும் தவணைத் தினத்துக்கு முதல் நாளன்று, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

யோகேஸ்வரி, கடன் தவணைப் பணம் திருப்பிச் செலுத்த முடியாமல் மனமுடைந்து மயானம் அமைந்துள்ள பகுதிக்கும் ஓரிருமுறை சென்று, தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட விடயமும், பொலிஸ் விசாரணைகளில் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கிராமங்களில் மக்களின் காலடிக்கே சென்று வணங்கி, கடன்களைப் பெற வழிவகுக்கும் நிதி நிறுவனங்கள், பின்னர் அம்மக்களின் உயிர்களைப் பறிக்கின்றன.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில் 2,323 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன எனவும், 79 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் தெரிவித்துள்ளது.   

இது தொடர்பாக அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2015ஆம் ஆண்டு, 37 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதுடன், 18 வயதுக்குட்பட்ட 420 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 120 ஆண்களும் 280 பெண்களும் அடங்குகின்றனர். 18 வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 630 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 200 ஆண்களும் 430 பெண்களும் அடங்குகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டோரில் 250 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 90 ஆண்களும் 160 பெண்களும் அடங்குகின்றனர்.  

“அதேபோன்று, 2016ஆம் ஆண்டில் 42 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதுடன், 18 வயதுக்குட்பட்ட 219 பேர் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளனர். 18 வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 732 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில், 203 ஆண்களும் 429 பெண்களும் அடங்குகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டோரில் 72 பேர், தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 35 ஆண்களும், 37 பெண்களும் அடங்குகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வடக்கு, கிழக்கில் நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கை சனத்தொகையில் 100,000க்கு 14 அல்லது 15 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.   

30 வயதுக்கும் குறைந்தவர்களே, அதாவது 15-24 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என, அண்மைக்கால ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.   

தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடர்பில், கடந்த வருடம் 3,025 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதில், கூடுதலானோர் ஆண்களாவர். அவர்களின் எண்ணிக்கை, 2,339 ஆகும். 686 பெண்கள், கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.   

ஆகக் கூடுதலானோர், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டனர் என்று, பொலிஸ் விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.   

குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை, 603 ஆகும். அதற்கு அப்பால், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக 151 பேரும், தொழில் பிரச்சினை காரணமாக 21 பேரும், அன்பு முறிந்தமையால் 272 பேரும், போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையால் 125 பேரும், பரீட்சைகளில் தோல்வியடைந்தமையின் காரணமாக 9 பேரும், மனநலம் பாதிக்கப்பட்டிருந்தமையால் 244 பேரும், உடலில் ஏற்பட்டிருந்த பல்வேறான குறைபாடுகள் காரணமாக 381 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆய்வு அறிக்கைகள், பொலிஸ் அறிக்கை, ஊடகச் செய்தி அறிக்கைகள் என அனைத்துமே, இலங்கையில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை எடுத்துக்காட்டுகின்றன.   

எனவே, தனியொரு நபரின் உயிர்தானே போகின்றது என, இந்த விடயத்தில் அரசாங்கம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் செய்வதற்கு முனைய வேண்டும்.   

“வறுமை தொடர்பான எமது நாட்டின் புள்ளிவிவரங்களுக்கமைய, 7 சதவீதமானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருக்கின்றனர். இலங்கையில் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, திருப்திப்பட முடியாதுள்ளது” என்று, கடந்த வாரம் இடம்பெற்ற கிராம சக்தி தேசிய செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்திருந்தார்.   

“அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்றபோது விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன எனக் கேட்ட போது தம்மை வங்கிகளிடமிருந்து விடுவித்துத் தருமாறு கேட்டார்கள். அதனைக் கருத்திலெடுத்து, 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், நிதி நிறுவனங்களால் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதற்கான திட்டத்தை, நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்த எதிர்பார்க்கிறோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கூற்று, ஏழை மக்களுக்கு எவ்வாறு வழிவகுக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

தற்கொலைகளைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு பிர​ஜை மத்தியிலும் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். அப்போது தான், உலக நாடுகளுள் நாம் முன்னேற்றமடைய முடியும்.
இவ்வாறு தற்கொலைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் திட்டங்ளையும், இலங்கை அரசாங்கமும் வகுக்க வேண்டும். 

அண்மையில் வெளியான தென்னிந்தியத் திரைப்படமான தரமணியில், ஒரு விடயத்தைப் பார்க்க முடிந்தது. நாயகி அன்ட்ரியா ஜெர்மியா, தற்கொலைக்கு முயலும்போது, “தற்கொலை எண்ணம் உங்களுக்குள் தலைதூக்குமாயின் நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது 104 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசுவதுதான். மறுமுனையில், உங்களுடன் பிரியத்துடன் அக்கறைகொண்டு, உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்கு அரச பணியாளர்கள் காத்திருக்கின்றார்கள்” என்ற குரல் ஒலிக்கும். இது போன்று ஊடகங்கள் வாயிலாகவும் மக்களை விழிப்பூட்டலாம்   

மேலும், தனியொரு மனிதனுக்கு ஏற்படுகின்ற உள நெருக்கீட்டைத் தணித்துக் கொள்வதற்கு, உள ஆரோக்கியமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக, ஆன்மீக, சமூகசார் பணிகளில் ஈடுபடலாம்.   

உயிரொன்றின் பெறுமதியை உணரந்து கொண்டாலே, எம்மால் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமாயின் எந்தச் சூழ்நிலையிலும் நாம் மனதை மகிழ்ச்சியாய் அமைத்துக்கொள்ள வேண்டும்.  

பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை; பிரச்சினையே வாழ்க்கையும் இல்லை. எனினும், நம்பிக்கைத் துரோகத்துக்கு உயிர்களை மாய்த்து, தன்னுயிரை மாய்ப்பதுதான் தீர்வென்றால், பிறந்த குழந்தை முதல் சகலருமே ஒவ்வொருநாளும் உயிரைப் பலமுறை மாய்த்துகொள்ளவேண்டும்.  

வாழ்வதற்கு உதவியவர்களை ஏமாற்றக்கூடாது; ஏமாந்துவிட்டோம் என்பதற்காய், வாழ்க்கையை வெறுக்கவும் கூடாது. இவ்வுயிர் உன்னுடையது அல்ல. அதைப் பலவந்தமாய் உன்னால் பிடுங்கிக்கொள்ள இயலாது; அடுத்தவர்களின் உயிர்களையும் பிடுங்கமுடியாது. ஆகவே, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழக்கிக்கொண்டால், யாருக்கும் இவ்வுலகில் பிரச்சினையே இருக்காது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X