2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள்

Mayu   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகாநந்தன் தவம்

74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக்  கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக  தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு  வருகின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத்  தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில்  சிவஞானம் ஸ்ரீதரன்  தலைவராகத்  தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக்கொண்டவன் என்ற தலைக்கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வியின் விளைவாகவே இன்று தமிழரசுக் கட்சி பிளவுபடுத்தப்படுகின்றது. 

 இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு சில குழறுபடிகளுடன் நடந்து முடிந்து விட்ட நிலையில், அதன் பொதுச்செயலாளர் தெரிவு கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றபோது, அரங்கேற்றப்பட்ட சதிகள், குழிபறிப்புக்கள், கட்சியைப் பிளவு படுத்தும் காய்நகர்த்தல்கள், கைகலப்புக்கள் ,பிரதேசவாத முன்னெடுப்புக்கள் எல்லாம் அந்த தலைவர் பதவி கிடைக்காத, அவமானம், ஆதங்கம், ஆத்திரத்தில்  நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சகுனித்தன ஆட்டமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு, பொதுச்சபையில் தனக்கு ஆதரவான பலர் இருந்தும் தலைவர் பதவிக்கான போட்டியில் தான் தோற்கடிக்கப்பட்டதை ஜீரணிக்க முடியாத நிலையில்  உள்ள சுமந்திரனும் அவரது விசுவாசியும் வலது கரமுமான சாணக்கியனுமே தமிழரசுக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள், பிளவுகள், குளறுபடிகளின் பிதாமகன்களாக உள்ளதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலரினால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது

தமிழரசுக் கட்சியின் கட்சியின் யாப்புப்படி தலைவர் பதவிக்குத்தான் வேட்பு மனுக் கோரி முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும். ஏனைய பதவிகளுக்கு அப்படித் தேர்தல் நடத்தப்படுவது பற்றி யாப்பில் எதுவும் இல்லை. கட்சியின் செயலாளர் உட்பட ஏனைய பதவிகள் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதே இதுவரை கால நடைமுறையாக இருந்து வந்தது.

தலைவர் தெரிவும் இதுவரை அப்படித்தான் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் இன்றி நடந்துவந்தது. ஆனால், இம்முறை சுமந்திரன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன் ஆகிய மூவரினதும் தலைவர் பதவிக்கான போட்டி   தேர்தல் மூலம் தெரிவு செய்ய வேண்டிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை விளைவு மற்றும் பதவி மோகங்களினால்  ஏனைய பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற மரபு மாற்றம் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டது.

 தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான ஸ்ரீதரன் கட்சியைப் பிளவின்றி, ஒற்றுமையாகக் கொண்டு செல்வதற்காக தன்னுடன் போட்டியிட்ட தலைவர் பதவி வேட்பாளரான சுமந்திரனுக்கு சிரேஷ்ட உபதலைவர் பதவியை வழங்குவதற்கு விரும்பினார். ஆனால், அதனை நிராகரித்த சுமந்திரன் கட்சியின் மரபுக்கு மாற்றாக  தனக்கு  பொதுச்  செயலாளர் பதவி வேண்டுமெனக் கோரினார்

ஆனால், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில்  தலைவர் வடக்கைச் சேர்ந்தவராக இருந்தால் பொதுச் செயலாளர் கிழக்கைச் சேர்ந்தவராகவும் தலைவர் கிழக்கைச் சேர்ந்தவராக இருந்தால் பொதுச்செயலாளர் வடக்கைச் சேர்ந்தவராகவும்  இருப்பதுமே மரபு. அதனை நன்கு தெரிந்து கொண்டே தலைவர் வடக்கைச் சேர்ந்தவராக உள்ள நிலையில் வடக்கைச்  சேர்ந்த தனக்கு பொதுச் செயலாளர் பதவி  வேண்டுமெனக்கோரி  சுமந்திரன்  தமிழரசுக் கட்சியை பிளவடைய வைக்கும் சூழ்ச்சிக்குப்  புள்ளி போட்டார்.

ஆனால், சுமந்திரனின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது அடுத்த காய் நகர்த்தலாகத் தனது விசுவாசிகளான கிழக்கைச் சேர்ந்த  மட்டக்களப்பு 
மாவட்ட கிளைத் தலைவரான இரா.சாணக்கியன் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவரான குகதாசன் அம்பாறை மாவட்ட கிளைத் தலைவரான கலையரசன்  ஆகியோரில்  ஒருவரைச் செயலாளர் பதவிக்குத்  தெரிவு செய்ய வேண்டுமென  அவர் முன்மொழிந்தார். 

இதில், திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவரான குகதாசன் நீண்டகாலமாகக் கனடாவில் வசித்து வந்த நிலையில் நாடு திரும்பி  2020ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். சம்பந்தனின் விசுவாசியாக இருந்து பின்னர் சுமந்திரனின் விசுவாசியானவர்.

 அடுத்தவரான மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவரான இரா.சாணக்கியன் யுத்தத்தின் இறுதிக்கட்டம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்தவர். அக்கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தவர். அதன்பின்னர் சில வருடங்களாகவே தமிழரசுக் கட்சியில்  இணைந்து சுமந்திரனின் அரவணைப்பினால் எம்.பியானவர். அடுத்தவரான அம்பாறை மாவட்ட கிளைத் தலைவரான கலையரசன்  அப்பாவி. அரசியல் சூதுவாது அறியாதவர்.

 இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் தீவிர விசுவாசிகளும் யுத்த காலத்தில் கட்சிக்காக உயிரைப் பணயம் வைத்துச்  செயற்பட்டவர்களும் இன்றுவரை கட்சிக்காக உழைப்பவர்களுமான முன்னாள் எம்.பிக்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் அணியினர் சுமந்திரனின் முன்மொழிவுகளை ஏற்க மறுத்ததுடன், பொதுச்செயலாளர் பதவிக்கு  ஸ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்தனர்.

இதனால் பொதுச்செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கடும் போட்டியைப்  பயன்படுத்தி தனது விசுவாசிகளையே கட்சியின் உயர்பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். அதன்மூலம் தலைவர்  ஸ்ரீதரனை செயற்பட முடியாத தலைவராக்கி கட்சியில் தான் நினைத்ததையே நடத்தி முடிக்க வேண்டுமெனச் சுமந்திரன்  “பொதுச்செயலாளர்” பதவியை வைத்துப்போட்ட புள்ளியை வைத்து அவரது விசுவாசியான சாணக்கியன் போட்ட கோலமே இன்று தமிழரசுக் கட்சியை அலங்கோலமாக்கியுள்ளது.

ஸ்ரீதரனைத் தலைவராக்கிய கிழக்கைச் சேர்ந்த அணியினருக்குச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை, அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்குக் கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்பதும் தான்  பிரச்சினைக்குக் காரணம் என சுமந்திரன்-சாணக்கியன்  தரப்பும்  இப்போது செயலாளராக இருப்பவர் தலைவர் தேர்தலில் சுமந்திரனை வெளிப்படையாக ஆதரித்தவர். 

சிரேஷ்ட உபதலைவராக இருப்பவர் சுமந்திரனைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தவர் ஏனைய பதவிகளில் உள்ள சாணக்கியன் உட்படப் பலரும் சுமந்திரனின் விசுவாசிகள். எனவே, தமிழரசுக் கட்சியை சுமந்திரன் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள்  எடுக்க முயற்சிக்கின்றார் என்பது  குகதாசனை ஏற்க மறுப்பவர்கள் குற்றச்சாட்டு.  

 தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி  கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் வடக்கு தெளிவாக உள்ள நிலையில், கிழக்கில் அந்தப் பதவி திருகோணமலைக்கா மட்டக்களப்பிற்கா  என்பதில் கிழக்கு மாகாண உறுப்பினர்களே மோதல்களில் ஈடுபட்டுள்ளதுடன் எட்டிக்குப் போட்டியாக  ஊடக மாநாடுகளையும் நடத்தி சேற்றைப் பரஸ்பரம் வாரி இறைக்கின்றனர் இதனால் தமிழரசுக் கட்சிதான் நாற்றமடிக்கின்றது. 

ஏதாவது பிரயத்தனங்களை மேற்கொண்டு குகதாசனையோ ஸ்ரீநேசனையோ பொதுச்செயலாளராக நியமித்தால் கூட அவர்களுக்கு மற்றைய தரப்பினர் கட்டுப்படுவார்கள், புதிய பொதுச்செயலாளரால் கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்  அது மட்டுமல்ல பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியை வைத்து புதிய தலைவரான ஸ்ரீதரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்தும் அசையக்கூடச் சுமந்திரன் தரப்பு தவிடு பொடியாக்கி விட்டது  என்பதே உண்மைநிலை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .