Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 10, செவ்வாய்க்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 ஏப்ரல் 09 , மு.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 139)
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது.
இக்கால இழுத்தடிப்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் அவரது கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், ஜே.ஆரின் சர்வதேச விஜயங்களும் அங்கு இலங்கையின் இனப்பிரச்சினையை அவர், அரசியல் பிரச்சினையாக அன்றி பயங்கரவாதப் பிரச்சினையாக முன்னிறுத்தி, இராணுவ உதவிகளைக் கோரியமை என்பன ஜே.ஆர் இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை, தமிழ்த் தலைமைகளுக்கு அழுத்தமாகப் புரியவைத்தது.
மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், தமிழ்த் தலைமைகளுக்கும் இடையிலான இணக்கம் குறைவடைந்து கொண்டே சென்றது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த் தலைமைகளிலிருந்து வேறுபட்டு, தம்முடைய நிலைப்பாட்டைத் தனித்து முன்வைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது.
1984 ஜூன் 24ஆம் திகதி, விடுதலைப் புலிகள் வௌியிட்டிருந்த அறிக்கையில், எங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்றது; ஏனென்றால், குறித்த தீர்வானது எமது போராட்டத்தின் பார்வையில் திருப்திகரமானதாக இல்லாதிருந்தால் தாக்குதல்கள் தொடரும் என்று ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் தமது நிலைப்பாட்டை எடுத்தியம்பியிருந்தது.
இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், தாம் ஜனநாயகத் தமிழ் தலைமைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தமது சுயத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பு வௌிப்படையாக இதன் மூலம் எடுத்துரைத்திருந்தனர்.
அதேவேளை, தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அல்ல; மாறாகத் தாமே என்பதை வலியுறுத்துவதாகவும் இது அமைந்தது. 1983 ‘கறுப்பு ஜூலை’யின் பின்னர், தமிழ் மக்களின் அரசியலில் ஓங்கத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கரம், இப்போது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பின்தள்ளுமளவுக்கு, அவற்றை மீறி ஓங்குமளவுக்கு உயர்ந்திருந்தது.
ஜே.ஆரின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில், ஜே.ஆரும் இதைத் தான் எதிர்பார்த்திருந்தார் என்பது புலப்படும். இது நிகழும் போதுதான், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை மறைத்து, இந்தப் போராட்டத்தைப் ‘பயங்கரவாதமாக’ முன்னிறுத்தி, அதை இராணுவ ரீதியில் அடக்கலாம்.
ஆகவே இந்த அறிக்கை, ஜே.ஆருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்காது. மாறாகக் காய்கள் அவர் நினைத்தவாறே நகர்வதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.
வளர்த்த கடா மார்பில் பாய்கிறதா?
“எங்கள் பொடியங்கள்” என்று அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள் அன்போடு அழைத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இன்று அந்தத் தமிழ்த் தலைமைகளையே மீறி வளர்ந்திருந்ததானது, அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
ஏனென்றால், அவர் இதை எதிர்பார்த்திருந்தார். அதனால்தான், முன்னொருமுறை அவரது பேச்சில் கூட, வரப்போகும் தீர்வானது எம்மை மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் திருப்தி செய்யத்தக்கதாக அமைய வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார்.
மேலும், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அமிர்தலிங்கத்துக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த அதிர்ச்சிகரமான வரவேற்பும் தமிழ்த் தலைமையின் தளம் மாறிக்கொண்டிருந்ததை, அவருக்குத் தௌிவித்திருக்கும்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் வௌிப்படையாகவே சர்வகட்சி மாநாடு, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது. கடந்த 17 வருட கால வரலாறு, எமக்கு இதைத் தான் உணர்த்துகிறது.
பழைய தலைமுறைத் தமிழ்த் தலைமைகள், சிங்களத் தலைவர்களுடன் பேசிப் பேசியே ‘முடியிழந்து’ போனாலும், தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பேச்சுவார்த்தை மூலம் வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை.
ஒரு புதிய, புரட்சிகரத் தலைமுறை அரசியல் தளத்துக்கு வந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். பழசாகிப்போன, தேங்கிப்போன அரசியல் நடிகர்களால், தமிழ் மக்களை இனியும் மகிழ்வுறுத்த முடியாது. அவர்கள் காலத்தின் தேவைப்பாட்டை இழந்துவிட்டார்கள். ஆகவே, இன்றுமுதல் நாம் விடுதலை வீரர்களின் வரலாறு படைக்கப்போகும் நடவடிக்கைகளைக் காணப்போகிறோம். அவர்களே தமிழ் மக்களின் புதிய பிரதிநிதிகள். அவர்கள் தான் எதிர்காலத்தின் நாயகர்கள்; மாறாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் அல்ல என்ற நிலைப்பாட்டைத் தமது உத்தியோகபூர்வ ஏட்டிலே பிரசுரித்தனர்.
மீண்டும் சத்தியாக்கிரகம்
தமிழ் மக்களின் பிரதிநிதி யார் என்ற பிரச்சினை தமிழ் மக்களிடையே இதற்கு முன்னர் பெரிதாக இருந்ததில்லை. 1956 வரை ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியாகவும், 1956 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டது.
1972இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தோடு, அந்த இடத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எடுத்துக் கொண்டது. ஆனால், இப்போது முதன்முறையாக, ஜனநாயக அரசியல் கட்சியொன்றிடமிருந்து, அந்தப் பலம் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் கைமாறத் தொடங்கியிருந்தது.
ஆகவே இந்தச் சூழலில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்று மீண்டும் நிரூபித்தாக வேண்டிய அரசியல் கட்டாயம், அமிர்தலிங்கத்துக்கு எழுந்திருந்தது. அதைச் செய்வதற்கு அவர், அவரது கட்சியின் பாலபாடமான சத்தியாக்கிரகத்தை கையிலெடுத்தார்.
ஜே.ஆரின் நடவடிக்கைகளின் அதிருப்தி கொண்ட அமிர்தலிங்கம், நாங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் போகப் போவதில்லை என்று அறிவித்ததுடன், ‘கறுப்பு ஜூலை’யின்” முதலாவது வருட நினைவேந்தலையொட்டி சத்தியாக்கிரகமொன்றை முன்னெடுக்க நடவடிக்கையெடுத்தார்.
இலங்கைத் தீவில், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வன்முறையற்ற அஹிம்சை வழியிலான மக்கள் போராட்டத்தின் முன்னோடியாக 1983 ஜூலை தமிழருக்கு எதிரான கலவரத்தின் முதலாண்டு நினைவையொட்டிய அஞ்சலி, உண்ணாவிரத மற்றும் வழிபாட்டு நிகழ்வு அமையும் என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
சத்தியாக்கிரகத்தைத் தமது அரசியல் போராட்டத்தை மீட்டெடுக்கும் வழிமுறையாக மட்டுமன்றி, வன்முறை வழிக்கு எதிரான தமது வழியை உணர்த்தும் அடையாளமாகக் கூட, அமிர்தலிங்கம் கையாள முனைந்திருக்கலாம்.
இதைப்பற்றி ஊடகங்களுக்கு, விரிவாக விளக்கமளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதோர் அரசியல் தீர்வொன்று, சர்வகட்சி மாநாட்டினால் எப்போதும் எட்டப்படப் போவதில்லை என்பது, இப்போது வௌிப்படையாகியுள்ளது. தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையான அளவில், தமது உரிமைகளை வென்றெடுத்துத் தருவோம் என்ற நம்பிக்கையை எம்மீது கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், இது மிகப் புனிதமானதொரு காரியம். நாம் எமது கடமையைப் பலவழிகளில் செய்வதற்கு முயன்றிருக்கிறோம். நாம் பேச்சுவார்த்தைப் பாதையில் முயற்சித்தோம்; நாம் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சித்தோம்; நாடாளுமன்றத்தின் ஊடாக இணங்கச் செய்ய முயற்சித்தோம்; நாம் உலக நாடுகளின் அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். ஆனால் சகலதும் பயன்தராது போய்விட்டன. உலகின் பலமற்றிருப்பவர்களுக்கான நடவடிக்கை வழியை, மஹாத்மா காந்தி காட்டிச் சென்றிருக்கிறார். நாம் ஜூலை 25ஆம் திகதி, அந்த வழியில் பயணிப்போம். நாம் உண்மையான சத்தியாக்கிரகிகளாக இருப்போம். இது தமிழ் மக்களுக்குத் துன்பத்தைத் தருமானால், அந்தத் துன்பத்தை முதலில் அனுபவிப்பவர்கள் நாமாக இருப்போம்” என்று தமது அடுத்த கட்ட நடவடிக்கையை உணர்ச்சிகரமாக விளக்கியிருந்தார்.
அரசியல் பயணத்துக்கான பாதை
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்த அஹிம்சை வழி சத்தியாக்கிரகத்தைக் கேலிக்கூத்தாகப் பார்த்தன. ஆயுத வழியே ஒரே வழி என்பதில் அவை உறுதியாக இருந்தன. உங்கள் அஹிம்சை வழி தோற்றுவிட்டது. இனி ஆயுத வழிதான் ஒரே வழி என்ற செய்தியை அவை அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் தெரிவித்ததோடு, துண்டுப் பிரசுரங்கள் மூலம் இந்தச் செய்தியைத் தமிழ் மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
தமிழ் மக்கள் இந்தக் கேலிக்கூத்தில் பங்குபெறக் கூடாது என்பது தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் நிலைப்பாடாக இருந்தது.
இந்த நிலையில், ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், குறிப்பாக வடக்கில் கணிசமானளவில் அதிகரிக்கத்தொடங்கியிருந்தது. மறுபுறத்தில், அரசாங்கமும் இராணுவத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் வௌிநாட்டு உதவிகளுடன் பலப்படுத்திக் கொண்டிருந்தது.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு அரசாங்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்துவதும், அதிலும் குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள் நடத்தும் போக்கும் 1984இல் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.
அடுத்தடுத்த வருடங்களில், இயல்பாகிப் போன வன்முறை நிறைந்த வாழ்வியலின் ஆரம்ப காலம் இது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளை விட, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பும் இதைத் தான் விரும்பியிருக்க வேண்டும் போலும்.
ஏனென்றால், பேச்சுவார்த்தை முறையில் இந்த இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டும் என்ற அவசியப்பாட்டை ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் மட்டுமே வௌிப்படுத்தின. ஜே.ஆரும் அதை விரும்பியிருந்தால், அதைச் செய்வதற்கு ஒரு தடையும் இருந்திருக்காது; மறுபுறத்தில், இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் அனைத்தும் அதற்கு ஆதரவளித்திருக்கும்.
ஆனால், ஜே.ஆர், அதைச் செய்யத் தவறியதால், அவரும் இராணுவ வழியையே, அதாவது வன்முறை வழியையே தேர்ந்தெடுத்தார் என்பதே நிதர்சனமாகிறது.
அமிர்தலிங்கம் தரப்பினர் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நினைவேந்தலை, அஹிம்சை வழியில் அணுகத் தயாரான வேளை மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கறுப்பு ஜூலையின் முதலாவது ஆண்டு நிறைவை, வன்முறைத் தாக்குதல்கள் மூலம் நினைவு கொள்ளத் தயாராகிறார்கள் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி எதிர்பார்த்தார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், “கறுப்பு ஜூலையின் போது, இலங்கைச் சிறைகளில் 51 தமிழ்க் கைதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டதை முன்னிறுத்தி, பயங்கரவாதிகள் 51 அரச படையினரைக் கொல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆகவே, இலங்கை அரசாங்கமும் தாக்குதல்களை எதிர்கொள்ள, மிகவும் எச்சரிக்கையுடன் தயாராக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இரண்டு அடிப்படைகளில் இருந்தது எனலாம். முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதரான வன்முறைத் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல். அடுத்ததாக, தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டிவிட்டு, அந்த இடத்தை தமதாக்கிக் கொள்ளுதல்.
இதில் ஜனநாயக தலைமைகளை, குறிப்பாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் பிரதிநிதிகள் என்ற ஸ்தானத்திலிருந்து இல்லாதகற்றுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு நிகராக, ஜே.ஆர் அரசாங்கமும் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டது.
இந்த நிலையில், 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோயிலின் முன்றலில் இடம்பெறவிருந்த சத்தியாக்கிரகத்துக்கு வருகை தந்த அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago
09 Dec 2024