Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
உரிமைகளை அடைந்து கொள்வதற்கு போராட்டங்களை நடத்துவது நமது நாட்டில் மாத்திரமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சாதாரணமாகனதாகவே இருக்கிறது.
அது தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கானது. அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வது. சமூகங்கள் தங்களது உரிமைக்காக நடத்துவது. தனிப்பட்டவர்கள், நிறுவனம் சார்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.
போராட்டம் என்பது சமூக, அரசியல், இனம், பொருளாதாரம் போன்ற உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் நடத்தப்படுவது வழமையாகும்.
தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது, நீதி அல்லது நியாயத்தை வழங்குவதற்கு நடுநிலைமைத் தரப்பு அல்லது நடுநிலைமையான மனோநிலையுள்ளவர்கள் தேவைப்படுவார்கள். அந்தவகையில்தான் இலங்கையில் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளையும் நாடி நிற்கின்றார்கள்.
உண்மையில் போராட்டங்களின் முதல் வழி அறவழிப் போராட்டமாகவே இருக்கிறது. போராட்டத்தின் இலக்கு அநீதியை எதிர்ப்பது மட்டுமே என்ற வகையில், அறப்போராட்ட வழிமுறையில் அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, புறக்கணிப்பு என்பன காணப்படுகின்றன. நடைபெறும் அநீதிக்குப் பொறுப்பான மனிதர்களின் தவறை உணரவைத்து மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக இது அமைந்துவிடுகிறது.
இந்த வகையிலான போராட்டம் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் மிக நீண்டகாலம் கைக்கொள்ள ப்பட்டு வந்தது. அறவழி பொய்த்துப் போன பின்னர், ஆயுதப் போராட்டம் கையிலெடுக்க ப்பட்டது. ஆயுதப்போராட்டம் தமிழர்களின் உரிமைகளைப் பெறும் முயற்சியின் கடைசிக்கட்ட நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் முடியாத ஒன்றாக மாறிப்போனது.
தற்போதைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், தமிழர் பிரதேசங்களைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிரான போராட்டம், வடக்கு- கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கோரும் வடக்கு மீனவர்களின் போராட்டம் போன்றவைகள் சூடுபிடித்திருக்கின்றன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம், சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து மேற்கொள்ளும் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம், வீதியை தடை செய்து பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக இடம்பெறும் போராட்டத்திற்கு தடைவிதித்து கட்டளையிட்டுள்ளது. இருந்தாலும் கொட்டகையை அகற்றிவிட்டு தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கிறன்றனர்.
அதேபோன்று 1814 நாள்களாகத் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களது போராட்டத்தையும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட ஆறு கட்சிகள் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு கையளித்த கடிதத்தையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு போராட்டத்தினை நடத்தியிருந்தது.
இவ்வாறிருக்க, இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கறுப்பு தினமாகவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அனுஷ்டித்தனர். கடந்த வருடமும் இத்தினத்தை கறுப்பு தினமாகவே அனுஷ்டித்திருந்தனர். இதற்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் தனியார் பஸ் சங்கங்கள், தமிழ்த்தேசியத்தின் பால் செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் ஒத்துழைப்புகள் மிகக்குறைவாகவே இருந்துள்ளன. போராட்டங்களின் வெற்றியானது ஒன்றிணைவுகளின் மூலமாகவே சாத்தியப்படுகின்றன.
ஐரோப்பியர்களின் கொலனித்துவ ஆட்சியிலிருந்து மீட்சி பெறுவதற்கான முயற்சிகளின் பயனாக சுதந்திரம் கிடைத்திருந்தது. அந்தச் சுதந்திரமானது தமிழ் மக்களால் அனுபவிக்க முடியாததாக இருக்கின்றது என்பதே தமிழர்களின் நிலைப்பாடு. போராட்டங்கள் அடக்கப்படுவது அல்லது முடிக்கப்படுவது தீர்வுகளின் ஊடாகவே இருந்தாலும், பல வேளைகளில் அடக்குமுறை அதிகாரத்தின் ஊடாகவும் கண்டு கொள்ளாது விட்டுவிடுவதன் ஊடாகவும் முடித்து வைக்கப்படுகின்றன. அடக்குமுறைகள் அப் போராட்டத்தின் வலிகளையும் வடுக்களையுமே விட்டுச் செல்லும்.
இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அடக்குதல்கள், நெருக்குதல்கள், கட்டுப்பாடுகள், சுரண்டல்கள், ஆக்கிரமிப்புகள், குடியேற்றங்கள், அத்துமீறல்கள் என பல வடிவங்கள் அடக்குதலாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இத்தனை தசாப்தங்களாக இப் பிரச்சினை நீள்கிறதென்றால் உண்மையில் பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதே உண்மையாகும்.
இந்த உண்மையை யாரும் தெரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி இந்த இடத்தில் தோன்றும். தெரிந்தும் தெரியாமலிருக்கும் சூட்சுமம் தீர்க்கப்பட முடியாததே. அதேபோன்றதே இலங்கையின் வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமுமாகும். “இது எமக்கான சுதந்திர தினம் அல்ல; எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும்” என்பது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கருத்தாக இருக்கிறது.
கடந்த வாரத்தில் வடக்குக்குச் சென்றிருந்த நீதியமைச்சர் அலி சப்ரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு உளரீதியான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், “எமது உறவுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் கொச்சைப்படுத்தல், மலினப்படுத்தலும் போராட்டங்களை அடக்குவதற்கான வழிமுறைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
நேற்றைய சுதந்திர தின எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம், “ஸ்ரீ லங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள்; சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், “அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால், அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டிய தேவை இருக்காது” என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புகள் தொடர்வதற்கு இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற நடைமுறைகளும் கைக்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளுமே காரணமாக இருக்கின்றன என்பது வெளிப்படையாகும். நாட்டின் பெரும்பான்மையினராக சிங்களவர்கள் ஒரு வகையிலும், சிறுபான்மையினரான தமிழர்கள் ஒருவகையிலும் பார்க்கப்படுகின்றமையானது பாரதூரமான பிரச்சினைகளையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்குள் மற்றொரு சிறுபான்மைத் தரப்பாக இருக்கின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் வேறுவிதமாக சிங்கள ஆளும் தரப்பினால் கையாளப்படுகிறார்கள்.
ஜனாதிபதி, மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஓவ்வொரு புதிய அரசங்கம் உருவாகும் போதும் தமிழர்கள் கொள்ளும் மகிழ்ச்சி சிறிது காலத்திலேயே காணாமல் போய்விடுகின்றதாகவே இருந்துவிடுகிறது. இது காலம் காலமாக நிகழ்வதாகவே இருக்கிறது.
சர்வதேச நிலைப்பட்டதாக உரிமை சார் பரப்பு மாறிவிட்ட நிலையில் நடைபெறுகின்ற போராட்டங்கள் முக்கியமானவை. அந்தவகையில்தான் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் இப்போது நிற்கிறது. மரபு வழித் தாயகம், வரலாற்று வாழ்விடங்கள், பாரம்பரிய தாயகம், தாய்நாடு எனப் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் கையாளப்படுகின்ற நிலையில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கான சாதிப்பைச் சந்தேகக்கண்ணோடே பார்க்க முடிகிறது.
5 minute ago
9 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
23 minute ago
24 minute ago