Thipaan / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்திலேயே நல்லாட்சி இல்லை என்றும் ஊழலை ஒழிப்பதைத் தமது பிரதான பணிகளில் ஒன்றெனக் கூறிப் பதவிக்கு வந்த அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதத்திலேயே வரலாற்றில் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்று நாட்டில் இடம் பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது நல்லாட்சியின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துந்நெத்தி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அக்குழுவின் அறிக்கையிலேயே இந்த மாபெரும் ஊழலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மத்திய வங்கி நடத்திய பிணைமுறி ஏல விற்பனையின் போது, தமது மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதன் மூலம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதே அந்த அறிக்கையின் சாராம்சமாகும். இந்தப் பிணைமுறி, கொள்வனவின் மூலம் அர்ஜுன் அலோசியஸின் நிறுவனமான ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ முந்திய வருடத்தில் பெற்றதை விடக் கடந்த வருடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை வெளிவரும் முன்னரே ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் இந்தப் பிணைமுறி ஏல விற்பனையின் மூலம் மகேந்திரன் தமது மருமகனின் நிறுவனத்துக்குச் சாதகமாக செயற்பட்டு, நாட்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் குற்றம்சாட்டி வந்தன. இதன் காரணமாகவே மகேந்திரனின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்ததன் பின்னர் பிரதமர் அவரை மீண்டும் அப்பதவிக்கு நியமிக்க விரும்பியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் நியமிக்காது இந்திரஜித் குமாரசுவாமியை நியமித்தார்.
இன்று நாட்டில், கிராமங்களிலுள்ள சில்லறைக் கடைகளிலும் இந்த விடயம் பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு பேசுவோர்களில் ஒரு சாரார் மகேந்திரனைச் சாடியும் வேறு சிலர் அவர் நிரபராதி எனக் கூறியும் வந்த போதிலும் உண்மையிலேயே நாட்டு மக்களில் 15 வீதமானோருக்காவது இங்கு என்ன நடந்திருக்கிறது? மகேந்திரன் என்ன செய்திருக்கிறார்? நாட்டுக்கு எவ்வாறு நட்டம் ஏற்பட்டு இருக்கிறது? என்பது அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே! ஏனெனில், பிணைமுறி ஏல விற்பனை போன்ற விடயங்களில் சாதாரண மக்கள் சம்பந்தப்படுவதில்லை. பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையில் கல்வி கற்றவர்கள், பிணைமுறி வர்த்தகத்தைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் இங்கு உண்மையிலேயே என்ன நடந்திருக்கிறது என்பதை அவர்களிலும் பலருக்கு தெரியாது.
மத்திய வங்கிப் பிணைமுறியானது, அரசாங்கம் பொது மக்களிடம் கடன் பெற்றுப் பணம் திரட்டும் ஒரு முறையாகும். அரசாங்கத்துக்குப் பணம் தேவைப்படும் போது மத்திய வங்கி, சாதாரண வங்கி வட்டியை விடக் கூடுதலான வட்டிக்கு மக்களிடம் கடன் பெற்றுக் கொள்ளும் முறையாகும் இது. வேறு விதமாகக் கூறுவதாயின் நடைமுறையில் மத்திய வங்கிக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதற்காக மக்கள் பெறும் வாய்ப்பாகும். அல்லது, மத்திய வங்கியில் முதலீடு செய்வதற்காக மக்கள் பெறும் வாய்ப்பாகும்.
விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக பிணைமுறி என்றால் மத்திய வங்கி பிறரிடம் கடன் பெற்று அந்தக் கடன்காரருக்கு வழங்கும் கடன் பத்திரம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் நேரடியாக இவ்வாறு மத்திய வங்கியில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு நாட்டில் சகலருக்கும் கிடைப்பதில்லை. நாட்டில் வர்த்தக வங்கிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட சில நிறுவனங்களுக்கும் மட்டுமே அந்த உரிமை வழங்கப்படும்.
இந்த நிறுவனங்களுடனும் வங்கிகளுடனும் மத்திய வங்கி நடத்தும் இந்தக் கொடுக்கல் வாங்கல் முதன்மை வர்த்தகம் என்றும் அதில் ஈடுபடும் வங்கிகளும் நிறுவனங்களும் முதன்மை வர்த்தகர்கள் (primary dealers) என்றும் அழைக்கப்படுவர். மகேந்திரனின் மருமகனின் ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ நிறுவனமும் அது போன்றதோர் முதன்மை வர்த்தக நிறுவனமாகும்.
அந்நிறுவனங்கள் ஊடாகவே மற்றவர்கள் பிணைமுறி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அந்த நிறுவனங்கள் தரகரின் பங்கையே ஆற்றுகின்றன. இது இரண்டாம் தர வர்த்தகம் எனப்படும். இவ்வாறு பிணைமுறிகளில் முதலீடு செய்தவர்களுக்கு ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைகளின் பிரகாரமோ இணக்கம் காணப்பட்ட காலத்துக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும். பிணைமுறிக்கான ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததன் பின்னர் (maturity period) முதலீடு செய்தவருக்கு முதலீடு செய்யப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்படும்.
அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 100 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 30 வருடத்தில் (maturity period) திருப்பிச் செலுத்தப்படும் வகையில் பிணைமுறி விநியோகிப்பதாக மத்திய வங்கி அறிவித்தது. ஆனால், இறுதியில் 1,000 கோடி ரூபாய் வரையிலான பிணைமுறிகளை விநியோகித்திருந்தது. அதேபோல் அதற்கான வட்டி வீதத்தையும் பகிரங்கமாக அறிவிக்காமலேயே அதிகரித்தது.
அறிவிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பிணைமுறி விநியோகிப்பதாகவோ, அதற்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டதையோ மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, அந்நிறுவனங்கள் அவ்வளவு பெருமளவில் பிணைமுறி கொள்வனவு செய்ய முன்வரவில்லை. அவை ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் பிணைமுறிக்காகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. ஆனால், ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ அந்த நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளை கொள்வனவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றவர்கள் அவற்றைக் கொள்வனவு செய்ய முன்வராத நிலையில் அவற்றுக்கான போட்டியும் இல்லாமல் போயுள்ளது. எனவே அவற்றை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, இரண்டாம் தரச் சந்தையில் மிக அதிக விலைக்கு அவற்றை விற்கவும் அந்நிறுவனத்துக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் மிகப் பெரும் இலாபத்தை ஈட்டிக் கொண்டுள்ளது. முன் ஒருபோதும் இல்லாதவாறு கடந்த வருடம் அந்நிறுவனம் 520 கோடி ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார். இந்த வர்த்தகத்தால் அரசாங்கம் அடைந்த நட்டம் 160 கோடி ரூபாய் எனக் கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நிறுவனங்கள் அறிந்திருக்காததை ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ நிறுவனம் எவ்வாறு அறிந்து கொண்டது என்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாமனார், மருமகன் உறவே அதற்கான காரணம் என்பதே தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள காரணமாகும். உண்மையிலேயே இதுதான் நடந்தது என்றால் அது மாபெரும் மோசடி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தக் கொடுக்கல் வாங்கலால் அநாவசியமாக மத்திய வங்கி ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ நிறுவனத்துக்கு பல நூறு கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டியதாயிற்று. போதாக்குறைக்கு அந்நிறுவனம் மத்திய வங்கியிடமே 6,600 கோடி ரூபாய் கடன் பெற்று, அந்தப் பணத்திலேயே பிணைமுறிக் கொள்வனவும் செய்துள்ளது எனக் ‘கோப்’ குழு உறுப்பினரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார். இதுதான் இந்தச் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரமாகும். கடந்த வருடம் இவ்வாறு இரண்டு முறை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விடயம் நாட்டில் இவ்வளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதற்கான காரணம் இதனோடு சம்பந்தப்படுள்ள பணத்தின் அளவு மட்டுமல்ல; ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சியினர் இதில் “குற்றம் ஏதும் இடம்பெறவில்லை” எனக் கூறி மகேந்திரனைப் பாதுகாக்கப் பெரும் முயற்சியை மேற்கொண்டமையும் அதனால் இந்த விடயத்துக்கு பெரும் அரசியல் பெறுமதி கிடைத்தமையும் இது இந்தளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் காரணமாகியது.
பிணைமுறிப் பெறுமதியும் வட்டி வீதமும் அதிகரிக்கப்படவிருப்பதாக மகேந்திரன் தமது மருமகனுக்கு அறிவித்தார் என்ற ஊகத்தை, இப்போது ‘கோப்’ குழு விசாரணையொன்றின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதன்படி மகேந்திரன் இந்த மோசடிக்கு நேரடியாகவே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் அறவிட வேண்டும் என்றும் இது போன்றதோர் நிலைமை இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ‘கோப்’ குழு அறிக்கை கூறியுள்ளது.
குற்றவாளிகளுக்குச் சாதகமான வகையிலேயே ‘கோப்’ அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தாம் இதை விடக் கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதும் ‘கோப்’ குழுவின் தலைவர் சுனில் ஹந்துந்நெத்தி அதற்கு இணங்கவில்லை என்றும் இப்போது சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐ.தே.க இந்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தது என்பது சகலரும் அறிந்த விடயமே.
இந்தச் சர்ச்சை எழுந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐ.தே.கவில் எவரும் இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எந்த ஓர் இடத்திலும் கூறவில்லை. கடந்த வெள்ளிக் கிழமை வரை ஐ.தே.க மோசடிக்காரர்கள் பக்கம் இருந்ததா அல்லது மோசடிக்கு எதிராக இருந்ததா என்பதை உணர அது ஒன்று மட்டுமே போதுமானதாகும்.
மோசடி இடம்பெறவில்லை என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது. சர்ச்சை எழுந்தவுடன் ஐ.தே.க அதைப் பற்றி ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தது. அக்குழுவும் ஐ.தே.க நிலைப்பாட்டுக்கு நெருங்கிய கருத்தையே வெளியிட்டு இருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால, மகேந்திரனை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிக்காமைக்கு காரணம் இந்தப் பிணைமுறி விவகாரம் என்றே ஊகிக்க முடிகிறது. இல்லாவிட்டால் அவர் பிரதமரால் அப்பதவிக்கு சிபார்சு செய்யப்பட்டுத் தமது ஆட்சியின் கீழ் ஒன்றரை வருடம் மட்டுமே அப்பதவியை வகித்த மகேந்திரனை மீண்டும் நியமிக்காதிருக்க வேறு காரணம் இருக்கவில்லை. ஆனால், மகேந்திரன் அதன் பின்னரும் அரசாங்கத்தின் சார்பில் பல வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
‘கோப்’ குழுவுக்குள் இந்தப் பிணைமுறி விவகாரம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆராயப்பட்ட போது, அதனையும் ஐ.தே.க விமர்சித்ததாகச் செய்திகள் வெளியாகின. ‘கோப்’ தலைவரினதும் அக்குழுவிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் பலத்த வாதங்கள் காரணமாக, ஊழல் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக் கொள்ள நேரிட்ட போது, அர்ஜுன் அலோசியஸும் ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ நிறுவனமும்தான் அதற்குப் பொறுப்பாளர்கள் எனக்கூற, ஐ.தே.க நிர்ப்பந்திக்கப்பட்டது. அக்கருத்தை ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, ‘கோப்’ அறிக்கை வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அப்போதும் மகேந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என ஐ.தே.க கூறவில்லை. எனவே, இப்போது, தாம்தான் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு இடமளிக்கவில்லை என்றும் சில ஐ.தே.க தலைவர்கள் கூறுவதில் உண்மையுமில்லை; உண்மை அதற்கு நேர் மாறானதாகும்.
இப்போது, ஐ.தே.க அமைச்சர்களில் சிலர் ‘கோப்’ குழுக் கூட்டத்தில் இடம்பெற்றவற்றை வெளியிட்டமைக்கு ஊடகங்களையும் சாடுகின்றனர். தமது அரசாங்கம் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றியதை அவர்கள் மறந்துவிட்டுள்ளனர் போலும். ஆனால், அதேவேளை அஜித் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா போன்ற ஐ.தே.க அமைச்சர்கள் ‘கோப்’ கூட்டங்கள் ஊடகங்களுக்கு திறந்து விடப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். இது ஊடகங்களைச் சமாளிப்பதற்கான முயற்சியேயாகும்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இப்போதுள்ள கேள்வியாகும்? ஏனெனில், இதற்கு முன்னரும் இது போன்ற பாரிய ஊழல்களை அம்பலப்படுத்திய ‘கோப்’ குழு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு அப்பால் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உதாரணமாக 2007 ஆம் ஆண்டு ‘கோப்’ குழுவின் தலைவராகவிருந்த விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நாட்டில் 22 அரசாங்க நிறுவனங்களில் 16,000 கோடி ருபாய் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வளவுதான். மக்களுக்கு சொந்தமான அவ்வளவு பெருந்தொகைப் பணத்தை கொள்ளையடித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிபர்களுக்கு எதிராக எவ்வித் விசாரணையும் நடைபெறவில்லை. கொள்ளையடித்தவர்களுக்கும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் இடையில் நிலவிய உறவே அதற்குக் காரணம் என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் குறிப்பாக இரண்டு பிரதான வாக்குறுதிகளை முன்வைத்தே பதவிக்கு வந்தது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும் ஊழலை ஒழிப்துமே அந்த இரண்டு வாக்குறுதிகளாகும். ஆனால் இப்போது அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் பெருமளவில் உருவாகி வருகிறது. ஒக்டோபர் 12 ஆம் திகதி ஜனாதிபதி இலங்கை மன்றக் கல்லூரியல் ஆற்றி உரையை அடுத்தும், அரசாங்கம் தமது ஊழல் ஒழிப்புத் திட்டத்தைக் கைவிடப் போகிறதா என்ற கேள்வியை பலர் எழுப்பினர்.
விந்தை என்னவென்றால் திருடர்கள் என்று இந்த அரசாங்கத்தின் தலைவர்களால் வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தலைவர்களே இந்த அரசாங்கத்தின் தலைவர்களைப் பார்த்து திருடன் என்று கூறும் நிலை உருவாகியமையே! உண்மையிலேயே, பிணைமுறி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகேந்திரன் உட்பட ‘பேர்பெச்சுவல் டிரெஷரீஸ்’ நிறுவனத்தினதும் மத்திய வங்கியினதும் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கம் இழந்த நம்பிக்கையை மீளப்பெற முடியும்.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago