Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பூமிப்பந்தெங்கும் காட்சிகள் மாறுகின்றன, களங்கள் மாறுகின்றன. ஆனால், மக்கள் போராடியவாறே உள்ளார்கள். சில போராட்டங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்படுகின்றன. பல புலப்படாமல் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமற் போகின்றன.
கடந்த வாரம் மேற்கு ஆபிரிக்க நாடான பேர்கினா பாஸோவில் ஆட்சியைக் கைப்பற்றிய சதியும் அதற்கெதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதையும் ஊடகங்கள் கவனிக்கவில்லை. மேற்கு ஆபிரிக்காவின் மீதான ஆதிக்கத்துக்கான ஆட்டத்தின் புதிய காய்நகர்த்தலாகவே இவ் இராணுவச் சதியை கணிக்க வேண்டியுள்ளது.
பேர்கினா பாஸோ தனது எல்லையில் மாலி, நைகர், பெனின், டோகோ, கானா, ஐவரி கோஸ்ற் ஆகிய ஆறு நாடுகளைக் கொண்டது. பேர்கினா பாஸோவைச் சேர்ந்தவர்கள் பேர்கினேபியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தொடரும் இராணுவச்சதி நடவடிக்கைகளில், பேர்கினா பாஸோவின் எல்லைநாடுகளான நைகர், ஐவரி கோஸ்ட், மாலி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பேர்கினா பாஸோவில் ஒருவகையான இராணுவச் சதி அரங்கேறியிருக்கிறது. அதை நிகழ்த்தியவர்கள் ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவினர்.
பேர்கினா ‡பாஸோவின் வரலாறு இரத்தம் தோய்ந்தது. 18ஆம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் கொலனியவாதிகள், குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைத் துண்டாடியபோது, பேர்கினா பாஸோ பிரெஞ்சுக் கொலனியாதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 'அப்பர் வோல்ட்டா' என்று பெயர்கொண்டு அழைக்கப்பட்ட பேர்கினா ‡பாஸோ 1960ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றபோதும் அது தொடர்ச்சியாக பிரெஞ்சுக் கொலனியாதிக்கத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.
உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான பேர்கினா பாஸோவின் மக்கள் ஏனைய பிரெஞ்சுக் கொலனிகளில் மிகக்குறைவான சம்பளத்துக்கு கூலிகளாக வேலை செய்தனர். எதுவித கட்டமைப்பு வசதிகளோ, அடிப்படை வசதிகளோ அற்ற நாடாக பேர்கினா பாஸோ விளங்கியது. ஆட்சியாளர்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின் சொற்கேட்டு நடக்கும் பொம்மைகளாயிருந்தனர். இப் பின்னணியில் 1983ஆம் ஆண்டு புரட்;சியின் மூலம் தோமஸ் சன்காரா தனது 33ஆவது வயதில் நாட்டின் தலைவரானார். இடதுசாரிச் சிந்தனையாளரான சன்காரா, பேர்கினா
பாஸோவில் புரட்சிகர மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். நாட்டின் 'அப்பர் வோல்ட்டா' என்ற பெயரை பேர்கினா ‡பாஸோ என மாற்றினார். அதன் கருத்து 'நேர்மையான மனிதர்களின் மண்' என்பதாகும்.
நாட்டின் நிலங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுக்க நாடெங்கும் மரங்களை நடும் திட்டத்தைத் தொடக்கினார். அவரது திறமையான பேச்சும் செயலாற்றலும் இளைஞர்களை மிகவும் ஈர்த்தது. தலைநகருக்கு வெளியே கிராமங்கள் தோறும் மரங்களை நட்டுத் தோப்புக்கள் உருவாக வழி செய்தார். இதன் மூலம் நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு உகந்தனவாயின.
விவசாயிகளிடம் அறவிடப்பட்டு வந்த விவசாய வரி நீக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெருநிலச் சொந்தக்காரர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு சாதாரண விவசாயிகளிடம் விவசாயத்துக்காகக் கொடுக்கப்பட்டது.
'ஏகாதிபத்தியம் எங்கே என்று என்னைக் கேளாதீர்கள். நீங்கள் உணவு உண்ணுந் தட்டைப் பாருங்கள். அதில் உள்ள உணவைப் பாருங்கள். நாமே உற்பத்தி செய்யக்கூடிய உணவு, உலகின் எங்கோ ஒரு மூலையில் உற்பத்தியாகி எமக்கு ஏற்றுமதியாகிறது. இதில் தான் ஏகாதிபத்தியம் இருக்கிறது' என்று சொன்ன சன்காராவின் ஆட்சியில் பேர்கினா
பாஸோ உணவுற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. பதவிக்கு வந்த இரண்டாண்டுகளில் சன்காரா இதைச் சாதித்தார்.
நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டி அரச அலுவலர்கள், உள்நாட்டில் நெய்த உடைகளையே அணிய வேண்டும் என ஆணையிட்ட சன்காரா தானும் அவ்வுடைகளை அணிந்ததன் மூலம் அதற்கு முன்னுதாரணமானார்.
நகரங்களிலும் கிராமங்களிலும் வீடில்லாதோருக்கு வீடுகளை வழங்குவதற்காக அரச செலவிலேயே நகரங்களில் உள்ளவர்களுக்கான வீடுகளை அமைத்தார். வீடமைப்பு மூலப் பொருட்களைக் கிராமங்களுக்குக் கொண்டுசெல்லும் போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை. அதனாற் கிராமிய வீடமைப்பிற் சிக்கல்கள் வந்தன.
புகையிரதப் பாதையூடு நாட்டின் வடக்கையும் தெற்கையும் இணைப்பதன் மூலமே கிராமங்களுக்கான உதவிகளைக் கொண்டு செல்லமுடியும் என உணர்ந்த சன்காரா, மக்களின் ஒத்துழைப்புடன் பிற நாடுகளின் உதவியின்றி புகையிரதப் பாதையை அமைத்தார். தலைநகர் வாகடூகு உட்பட்ட நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலான தொடர்பாடலால் கிராமங்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றன.
சன்காரா பதவியேற்ற சில ஆண்டுகளில் பேர்கினா பாஸோ துரித வளர்ச்சி கண்டது. குறிப்பாக மிக வறுமைப்பட்ட மக்களின் எளிமையான வாழ்க்கையை மேம்படுத்திய நாடாகவும் ஆபிரிக்காவில் மிக விரைவாக உணவுப் பஞ்சத்தைத் தீர்த்த முன்மாதிரி நாடாகவும் பேர்கினா பாஸோ அமைந்தது.
இம் மாற்றங்கள் அண்டை நாடுகளின் புரட்சியாளர்களை ஊக்குவித்தது. கானாவின் குவாமெ என்குரூமாவையும் கினி பிஸோவின் அமில்கர் கப்ராலையும் அடுத்து ஆபிரிக்கக் கண்டத்தின் புரட்சிகரத் தலைவராக தோமஸ் சன்காரா உருவெடுத்தார். அவர் 'ஆபிரிக்காவின் சேகுவேரா' எனவும் அறியப்பட்டார்.
அவரது வளர்ச்சியும் ஏகாதிபத்தியத்துக்கும் கொலனியாதிக்கத்துக்கும் எதிரான அவரது நிலைப்பாடும் பிரான்ஸினதும் அமெரிக்காவின் விருப்புக்குரியதாக இருக்கவில்லை. 1987ஆம் ஆண்டு அவரது நண்பரும் பிரதம மந்திரியாகவும் இருந்த பிளேஸ் கொம்போரே சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இச் சதியின் போது தோமஸ் சன்காராவும் அவரது 12 தோழர்களும் கொல்லப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டளைப்படி செயற்பட்ட பிளேஸ் கொம்போரே நிலங்களைத் தனியார்மயமாக்கினார். சர்வதேச நிதி நிறுவனத்தினதும் உலக வங்கியினதும் கட்டமைப்புத் திருத்தங்கள் நடைமுறைப்பட்டன. பேர்கினா பாஸோ நவதாரளவாதப் பிடிக்குட் சிக்கியது.
சர்வாதிகாரியான பிளேஸ் கொம்போரே பிரெஞ்சு, அமெரிக்க அரசுகளின் நம்பிக்கைக்குரியவராகவும் மேற்கு ஆபிரிக்காவில் அமெரிக்க, பிரெஞ்சு நலன்களின் நம்பகமான காவலனாகவும் இருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேர்கினா பாஸோவில் அரசாங்கத்துக்கெதிரான மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிளேஸ் கொம்போரேயை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். அவர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் அரசு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கியது.
அரபு வசந்தத்தின் அலை மெதுவாக மேற்கு ஆபிரிக்காவிலும் பாயத் தொடங்கியுள்ளது என எல்லோரும் நினைத்த வேளை, இராணுவம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர் இடைக்கால அரசு தாபிக்கப்பட்டது. இடைக்கால அரசு இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி தேர்தல்களை நடத்த திட்டமிட்டிருந்த வேளையிலேயே கடந்த வாரம் இடைக்கால அரசுக்கெதிரான இராணுவச்சதி அரங்கேறியது.
இச் சதி வெறுமனே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் மட்டும் மேற்கொள்ளப்பட்டதல்ல. இப்பிரிவை உருவாக்கியவர் முன்னாள் ஐனாதிபதி பிளேஸ் கொம்போரே. கொம்போரேயின் ஆட்சிக் காலத்தில் மிக்க அதிகாரத்துடன் இருந்த இப் பிரிவினர் மேற்குலகின் 'குறிப்பாக பிரான்ஸின்' முக்கியமான கூட்டாளிகள். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் செய்த குற்றங்களும் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்திருந்தது.
மேலும், பதவி நீக்கப்பட்ட பிளேஸ் கொம்போரேயின் கட்சியோ அவருக்கு ஆதரவான கட்சிகளோ தேர்தல்களில் போட்டியிடுவதை இடைக்கால அரசாங்கம் தடை செய்தது. எனவே, பிரான்ஸின் ஆதரவைக் கொண்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாமற் போனது. கடந்த சில மாதங்களாக நடந்த மக்கள் போராட்டங்களும் அதைத் தொடர்ந்த எழுச்சிகளும் பிரான்ஸின் நலன்களுக்கு எதிரான ஆட்சியொன்று அமையும் திசையிலேயே போயின. அவை பிரான்ஸின் பிராந்திய நலன்களுக்குக் கேடு தரக் கூடியன.
2012ஆம் ஆண்டு ஜி-8 நாடுகள் பேர்கினா ‡பாஸோவுடன் ஓர் உடன்படிக்கை செய்தன. அது 'உதவிக்கான வர்த்தகம்' என்ற அடிப்படையில் அமைந்தது. அதன்படி 50,000 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் ஜி-8 நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அதற்குப் பிரதி உபகாரமாக அந்நாடுகள் பேர்கினா பாஸோவுக்கு நிதிஉதவி வழங்கும். அந் நிலங்களில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றி நிலங்களைப் பல்தேசியக் கம்பெனிகளுக்கு வழங்கும் பொறுப்பு பேர்கினா பாஸோ அரசாங்கத்தினுடையது.
கடந்த 10 ஆண்டுகளாகக் கனிப் பொருள் வளங்களைப் பெருமளவில் வழங்;கும் நாடுகளில் ஒன்றாக பேர்கினா ‡பாஸோ திகழ்கின்றது. ஆபிரிக்காவின் நான்காவது மிகப் பெரிய தங்க ஏற்றுமதியாளராக அது உள்ளது. முன்னாள் ஐனாதிபதி கொம்பாரேவின் இறுதி ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் ஏராளமான நிலங்கள் (கனிப் பொருள் வயல்கள், சுரங்கங்கள்) பிரெஞ்சுத் தனியார் நிறுவனங்களுக்குக் கையளிக்கப்பட்டன. இந் நிறுவனங்களின் நலன்களின் பாதுகாப்பு பிரான்ஸுக்குப் பிரதானமானது. அகற்றப்பட்ட பிரெஞ்சு சார்பாளரான கொம்போரே மீண்டும் பதவிக்கு வரும் வழிகள் இச் சதியின் மூலம் பிறந்துள்ளன.
கொம்போரே இப்போது அண்டை நாடான ஐவரி கோஸ்ட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஐவரி கோஸ்ட்டின் இரண்டாம் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற போது பிரான்ஸ் படைகள் அங்கு படையெடுத்து பிரான்ஸ் சார்பு ஆட்சியை நிறுவின. அவ்வாட்சியே ஐவரி கோஸ்ட்டில் நடைபெறுகின்றது. அதேபோல, 2013ஆம் ஆண்டு பேர்கினா பாஸோவின் அண்டை நாடான மாலியிலும் இராணுவத் தலையீட்டின் மூலம் பிரான்ஸ் தனக்குச் சார்பான ஆட்சியை உருவாக்கியது. மொத்தத்தில் மேற்கு ஆபிரிக்காவை தனது நேரடி, மறைமுக மிரட்டல்கள் மூலம் பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
அண்மைய சதிக்கு எதிராக பேர்கினேபியர்கள்; வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கடந்த நவம்பரில், சர்வாதிகாரி கொம்போரேயின் ஆட்சியை அகற்றப் போராடியதன் தொடர்ச்சியாகவே அவர்கள் இதைக் காணுகிறார்கள். போராடும் மக்களுக்கெதிரான துப்பாக்கிப் பிரயோகத்தில் சிலர் கொல்லப்பட்டபோதும் பேர்கினேபியர்கள் விடாது போராடுகிறார்கள். ஏகாதிபத்தியம் தனது நலன்களைக் காக்க எதையும் செய்யும் என்பதை பேர்கினா
‡பாஸோவில் பிரான்ஸின் வழி நாம் காண்கிறோம். ஆனால், பேர்கினா பாஸோ மக்களாகிய பேர்கினேபியர்கள்; தங்கள் புரட்சிகர தலைவரான தோமஸ் சன்காராவின் கனவை நனவாக்கப் போராடுகிறார்கள். கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன் தோமஸ் சன்காரா சொன்ன வரிகளை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்:
'புரட்சியாளர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால், அவர்களது சிந்தனைகளைக் கொல்ல முடியாது'.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago