2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்‌ஷர்கள்

Johnsan Bastiampillai   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்...?” என்று கேள்வியெழுப்புகின்றார். 

நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்‌ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. 

அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம், நாட்டு மக்களை சமையல் எரிவாயுவுக்காக, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வைத்திருக்கின்றது.

நாட்டில், சமையல் எரிவாயுவை இன்றைக்குப் பெறுவது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர்களைச் சுமந்து கொண்டு, நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்த காட்சிகளை, கடந்த சில நாள்களாகக் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் நகரங்கள் காட்டின. 

நீண்ட வரிசையில் காத்திருந்தும், சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களைப் பெற முடியாது, காலிச் சிலிண்டர்களை சுமந்து கொண்டு, வீட்டுக்கு சென்றோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானது. நகரப் பகுதிகளில் நிலை இப்படியென்றால், கிராமங்களில் நிலைமை இன்னும் மோசமானது. ஒரு மாத காலத்துக்கு முன்னர் இருந்தே, சமையல் எரிவாயுவைக் கிராமங்களில் பெறமுடியாமல் இருந்தது.

ராஜபக்‌ஷர்களை நாட்டின் நம்பிக்கையான தலைவர்களாக, நிர்வாகிகளாக முன்னிறுத்தி, தேர்தல் காலத்தில் முழங்கிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர், சமையல் எரிவாயு கிடைக்காத நிலையில், மண்ணெண்ணை அடுப்பைப் பாவிப்பது பற்றிப் பேசியிருந்தார். 

இன்னொருவர், களிமண் அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது பற்றியும் அந்த அடுப்பை எரிப்பதற்கு, தேங்காய் சிரட்டைகளைப் பெறுவது பற்றியும், சமூக ஊடகமொன்றில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். 

இவர்கள் எல்லோரும் கொழும்பு மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். யாருக்கு என்ன கிடைக்கிறதோ இல்லையோ, கொழும்பு மேற்றட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட, நாட்டை ஆண்ட எந்த அரசாங்கமும் அனுமதித்ததில்லை. 

அதனால், அவர்களுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களின் அன்றாடப் பிரச்சினை தொடர்பிலான எந்த அறிவும் அனுபவமும் இருந்ததும் இல்லை. ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் குழப்பத்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும், அதனால் எழும் நெருக்கடி என்றால் என்ன என்று புரியத் தொடங்கி இருக்கின்றது.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உழுந்து, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விதித்தார்கள். உழுந்தின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை எட்டியது.

உழுந்தின் மீதான இறக்குமதித் தடையை நீக்குமாறு, கொழும்பு மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புகள் அரசாங்கத்திடம் கோரிய போது, உழுந்தை  தமிழ் சிறுபான்மை மக்களே, அதிகமாக நுகர்பவர்கள்; அதனால், அதன் மீதான இறக்குமதிக்கான தடையை நீக்க வேண்டியதில்லை என்ற தோரணையிலான பதில் வழங்கப்பட்டது.

உழுந்தின் மீதான தடை, சிங்கள மக்களைப் பெரியளவில் பாதிக்கவில்லை. அவர்களின் உணவுப் பழக்கத்தில், உழுந்து அவ்வளவு பெரிய வகிபாகத்தை எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னொரு நாளில், அரிசி இறக்குமதியை அரசாங்கம் மட்டுப்படுத்தியது. இலங்கையின் அரிசி ஆலை முதலாளிகள், இதுதான் சந்தர்ப்பம் என்று, அரிசி விலையைத் தாறுமாறாக உயர்த்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரிசியின் விலை 30 சதவீதத்தால் அதிகரித்து இருக்கின்றது.

இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பது, இலங்கையின் பணம் வெளிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் என்ற பொருளாதார சிந்தனை முன்வைக்கப்படுகின்றது. அதில், குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கின்றது. ஆனால், நாட்டு மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடிக் கொண்டு, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எந்தவோர் அரசாங்கமும் முடிவுகளை எடுக்க முடியாது. ராஜபக்‌ஷர்கள் அதனை எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்று, மக்களின் வாழ்வாதாரத்தைக் கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுவிட்டது. வட்டிக் கடைகளிலும் கடன்களிலும் காலத்தைக் கடத்தும் நிலையொன்றுக்குள் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் சென்றுவிட்டார்கள். அப்படியான நிலையில்தான், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதித் தடையும் அதனால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பும், பெரும் சுமையாக மாறுகின்றது.

நாட்டின் எந்தவொரு பாகத்திலும், பால்மா பைகளைப் பெற முடியாத சூழல் இருக்கின்றது. இலங்கை மக்களின் உணவு, தேநீரோடு ஆரம்பிப்பது! பல இலட்சக்கணக்கான மக்களின் காலை உணவே, பால் தேநீர் மட்டுந்தான். 

அப்படியான நிலையில், பால்மா பைகளுக்கான தட்டுப்பாடு, அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிஇந்தியா உள்ளிட்ட நாடுகள் போல, இலங்கையில் பால் தேநீர், நேரடியாகப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. ஏனெனில், நேரடியான பாலின் விலை, பால்மா விலையோடு ஒப்பிடும் போது மிகவும் அதிகம்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்தினரின் சமையல் எரிவாயு விநியோக குழப்பத்தை விமர்சித்த ராஜபக்‌ஷர்கள், இன்றைக்கு தேநீர் தயாரிப்புக்கான பால்மாவுக்கான தட்டுப்பாடு, உணவுத் தயாரிப்பில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் அரிசிக்கான விலை அதிகரிப்பு என்று செய்து, இறுதியில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு வரையில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.  

நாட்டின் உள்ளூர்   பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது என்பது, எந்தவோர் அரசாங்கமும் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்களின் பொருளாதார நிலை, அத்தியாவசியப் பொருட்களின் நெருக்கடிகள் குறித்து, எந்தவித தெளிவும் இல்லாமல், முடிவுகளை எடுக்கும் போது, நாடு இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். 

இதனால், நாட்டில் கறுப்புச் சந்தையொன்று பெரிய அளவில் வளரும். ஒரு சில பண முதலைகள் மாத்திரம் கறுப்புப் பணத்தை  சேர்க்கும். கறுப்புப் பணத்தால் நாட்டுக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. அதுதான், துறைசார் நிபுணர்களுடன் ஆலோசித்து, ஆட்சியாளர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதாகும். 

நாடு ஏற்கெனவே கடனில் முழ்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பணப்பெறுமதி என்பது படுவீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி, இன்றைய சூழலில் 230 ரூபாய் அளவுக்கு வந்துவிட்டது. வங்கிகளுக்கு ஊடாக 200 ரூபாய் அளவில் பேணப்பட்டாலும், உண்மை நிலை மோசமானது. அதனால்தான், அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வும் கிடுகிடுவென அதிகரித்திருக்கின்றது.

ராஜபக்‌ஷர்களின் புதிய இலங்கைக்கான இலக்கு என்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு என்கிற சாதாரண மக்களின் மீதான நெருக்கடிகளுடன் ஆரம்பித்திருக்கின்றது. 

ராஜபக்‌ஷர்களுக்காக அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளும் இவ்வாறான கறுப்பு விடியலுக்கானதா என்று தென் இலங்கை கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதற்கான எந்தவோர் ஏற்பாடுகளையும் காண முடியவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X