Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதங்களை முன்னிறுத்தி, அண்மைக்காலமாக இலங்கையெங்கும் நடந்தேறும் நிகழ்வுகள் அச்சமூட்டுவன. அவை, இயல்பான மனஎழுச்சியின் விளைவுகள் என்று கொள்ளவியலாதவாறு திட்டமிட்டு நடந்துள்ளன.
இவை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அப்படியாயின் மதங்களுக்குள் முரண்பாடுகள் ஏன் தோற்றம் பெறுகின்றன என்ற வினா முதன்மையானது.
போருக்குப் பிந்தைய இலங்கைச் சூழலில், ‘பொது எதிரி உருவாக்கம்’ என்பது தோற்றம்பெறவில்லை. களத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான முடிவு, இலக்கு வைப்பதற்கு எதிரியற்ற நெருக்கடிக்கடியை, இலங்கையின் சமூக-அரசியற்பரப்பில் உருவாக்கியது. இது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலானது.
இதன் பின்னணியிலேயே பல்வேறு மதஞ்சார் முரண்பாடுகள் கூர்மையடைந்தன. அவை ஓர் அலைபோல, கடந்த பத்தாண்டுகளில் நிகழ்கின்றன. இது முஸ்லிம்களுக்கும் எதிரான பௌத்த பெருந்தேசியவாதத்தின் செயற்பாடுகளே.
இதேகாலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துத் தேசியவாத அமைப்புகளின் வருகை கவனிக்கத்தக்கது.
ஒருபுறம் பொதுபல சேனா போன்ற பௌத்த பெருந்தேசியக் குழுக்கள்; மறுபுறம், வாகாபிச சிந்தனையையும் இஸ்லாமிய சர்வதேசியத்தையும் பரப்பும் அமைப்புகள்; இந்தியாவின் இந்து அமைப்புகளின் ஆதரவு பெற்ற அமைப்புகள்; எவாஞ்சலிஸ்ற் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் என மதஞ்சார் நெருக்கடிகளையும் சகிப்பின்மையையும் அதிகரிக்கும் அமைப்புகளின் உருவாக்கம், வருகை, அவற்றின் நிலைபேறு என்பன, இலங்கையின் மிகப் பெரிய சவால்களாயுள்ளன.
இலங்கையில் அதிகரித்துவரும் மதச்சகிப்பின்மை, நீண்ட வரலாற்றைக் கொண்டது. அந்த வரலாற்றின் எச்சசொச்சங்கள் மீண்டும் மீண்டும் கிளறப்பட்டு மதப்பகையாகவும் முரண்பாடாகவும் தோற்றம் பெறுகின்றன.
கொலனி ஆட்சிக்காலத்தில் கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்றச் செயற்பாடுகள் ஏற்படுத்திய பொதுசன மனக்கசப்பு, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் பௌத்த, சைவ மீளெழுச்சிகளுக்குக் காரணமாயிற்று.
அதேபோல, 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை ஹீனாயான, மஹாயான பௌத்தப் பிரிவுக் கட்கிடையே இருந்துவந்த பகைமை, பௌத்தத்துக்கு எந்த மதத்துடனும் இருந்த முரண்களைவிடக் கடுமையானது.
பௌத்தப் பிரிவுகளுக்கிடையே இருந்துவந்த மோதல்களும் பெரும்பாலும் மதகுருமாரையும் அவர்களைச் சார்ந்தோரையும் கொண்ட போட்டிப் பிரிவுகள், அரச சலுகைகளுக்காகப் போட்டியிட்டதன் விளைவுகளே.
19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த பௌத்தர்களுடனான ஒரு மோதலையடுத்து, கத்தோலிக்க சமூகம், பெரிதும் சிங்கள-பௌத்தர்களைக் கொண்டதொரு சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது.
மேற்குக் கரைப்பகுதியில் (நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம்) வாழ்ந்த கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோரைத் தமிழுக்குப் பதிலாகச் சிங்களத்தைத் தமது வீட்டுமொழியாக்குமாறு, திருச்சபை தூண்டியது.
இதேவேளை, இலங்கையில் நாடளாவிய முறையில் நடந்த முதலாவது இனமோதலான, 1915இன் முஸ்லிம்-விரோத வன்முறையைத் துண்டுவதில், சிங்கள வணிகர் மற்றும் முஸ்லிம் வணிகர்களுக்கு இடையிலான போட்டி மய்யமாக இருந்தது.
முஸ்லிம்களே அம் மோதலில் பெரிதும் பாதிக்கப்பட்டோராய் இருந்த போதும், கொலனிய ஆட்சி, முஸ்லிம்களுடன் நடந்துகொண்ட முறையை விடக் கடுமையாகச் சிங்களவர்களுடன் நடந்துகொண்டது என்ற சிங்கள நோக்கு, சிங்களப் பௌத்த மனத்தாங்கலை ஆழமாக்கியது. இவற்றின் தொடர்ச்சியை இப்போது காண்கிறோம்.
மதங்களின் நிறுவனமாதலும் மதங்களுக்கும் அரசியலுக்கும் உள்ள நெருக்கமான உறவும் கவனிக்கத்தக்கன.
புறக்கணிக்க இயலாதபடி, அரசியல் தேவைகளுக்காகவும் அதுசார் நலன்களுக்காகவும் மதம் பிரதான பங்காற்றுகிறது. மதஞ்சார் அடையாளங்கள், முன்னிறுத்தப்படும்போது, அது சமூகங்களையும் இனக்குழுக்களையும் ஒன்றுபடும் உழைக்கும் மக்களையும் பிரிக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு வசதியானது. ஒற்றைப்பரிமாண மதஞ்சார் அடையாள உருவாக்கம், ஒற்றுமையையன்றி வேற்றுமையையே முன்னிறுத்துகிறது.
மதம் ஒரு வலுவான கருவி; அது முரண்பாடுகளின் ஊடு வளர்கிறது; உணர்ச்சிவயப்படுத்துகிறது; மதத்தின் மீதான விமர்சனத்தையோ தாக்குதலையோ தனிப்பட்டதாகக் கொள்ளச் செய்கிறது; இதன்மூலம் மீளிணக்கத்தையும் ஒற்றுமையையும் சாத்தியமற்றதாக்குகிறது.
விழுந்த குண்டுகளோ, துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாக்களோ, தமது குறி எந்த மதத்துக்குரியது என்பதை அறியாதவை.
செம்மணியிலும் மன்னாரிலும் சூரியகந்தவிலும் புதையுண்டவர்களின் மதத்தை, அந்த மண் அறியாது.
வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் காணாமல் போனோரின் கதியை, மதம் அறியாது.
அகதி முகாம்களுக்குள், அவலுக்கும் வழியின்றி அவலப்படுவோரின் மதத்தைப் பசி அறியாது.
உணவுப் பொட்டலங்களுக்காக வரிசையில் நிற்கையில், கழிவறைகளுக்காகக் காத்துக்கிடக்கையில் முட்கம்பிச் சுவர்கள் மூச்சை அடைக்கையில் மதங்கள் கொண்டா நாம், எம்மை மீட்டோம், மனிதம் கொண்டே எம்மை, நாம் மீட்டோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago