Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
நீதிக்காக இலங்கையின் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவினதும் ஐ.நா. மனித உரிமை பேரவையினதும் தலையீடு இப்போது கவனத்திற்கொள்ளக் கூடிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும்.
இந்தியாவே ஒரு காலத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இயங்கி வந்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதாவது 1980களில் அக்கால புவிசார் அரசியல் நிலைமை காரணமாக இந்தியா தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி போன்றவற்றை வழங்கியது.
இந்தியா அப்போது அந்த உதவியை வழங்காவிட்டால், இலங்கையின் பிரிவினைக்கான போராட்டம் 1960களில் தமிழ் நாட்டின் பிரிவினைவாத போராட்டத்தைப் போல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு இருக்கக் கூடும்.
பின்னர் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றக்கொடுக்க இலங்கை அரசாங்கம் மீது நீண்ட காலமாகவே அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தது. இலங்கை அரசாங்கம் அதிகார பரவலாக்கல் என்ற கருத்தையே ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியாவே அவ்வரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளச் செயத்து.
கருத்தளவில் அதனை ஏற்றுக்கொண்டாலும் அதனை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தயங்கியபோது, அந்த அரசாங்கத்தின் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்து 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ள செய்ததும் இந்தியாவே.
ஆயினும், 1990ஆம் ஆண்டுகளில் நிலைமை மாறியது. இந்தியாவின் புவிசார் அரசியலில் ஏற்பட்ட பாரியதோர் மாற்றமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களும் அதன் விளைவாகப் புலிகளால் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டமையும் இந்திய நிலைப்பாட்டில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கருதலாம்.
இவற்றுக்குப் பின்னரும் இந்தியா தொடர்ந்து, தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வந்த போதிலும் அது வெறுமனே தமிழக மக்களின் வாக்குகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டது எனலாம்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அதே 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. அது வரை சோவியத் ஒன்றித்தின் முக்கிய நட்பு நாடான இந்தியாவில் அதே ஆண்டு பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டது. எனவே, இந்தியா தாம் அது வரை எதிர்த்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொண்டது.
இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளுடன் நெருங்கி இருந்தமையால் அது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகலாம் என்பதாலேயே இந்தியா இலங்கையைப் பலவீனப்படுத்த தமிழ் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தியது. இந்தியாவும் மேற்குலக நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டதன் பின்னர், இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் என்ற அச்சம் நீங்கி விட்டது. இந்த புவிசார் அரசியல் காரணத்தாலேயே இந்தியா படிப்படியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைவிட ஆரம்பித்தது.
2017 ஆண்டாகும் போது இந்தியா இலங்கை இந்திய ஒப்பந்தத்தையாவது பெரிதாக மதிக்கவில்லை. அவ்வாண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய இந்திய வெளியுறுவுச் செயலாளரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான கலாநிதி எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அப்போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலங்கை அரசாங்கம் பிரித்துள்ளதால் ஒப்பந்தத்தின் படி அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு அவரிடம் கோரிக்கை விடுத்தது.
போனது போகட்டும் புதிய நிலைமையில் தீர்வுகளைக் காண முயலுங்கள் என்ற அரத்தத்தில் அப்போது ஜெய்சங்கர் பதிலளித்து இருந்தார். அதாவது மாகாண இணைப்பை இந்தியா அப்போதே கைவிட்டு இருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய விடயத்தையும் இந்தியா கைவிட்டமை 2023 ஆம் ஆண்டு காணக்கூடியதாக இருந்தது. அது மாகாண இணைப்பைக் கைவிட்டதைப் பார்க்கிலும் பாரதூரமானதாகும்.
1987ஆம் முதல் அது வரை 36 வருடங்களாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் போதெல்லாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்க வேண்டும் என்பதை இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆயினும், 2023ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்த போது அந்த விடயம் ரனில் விக்ரமசிஙகவினதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினதும் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை. இரு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது மட்டும் மோடி அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இது தற்செயலானது அல்ல என்பது கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது தெரிய வந்தது. அந்த விஜயத்தின் போதும் இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கையில் 13ஆவது திருத்தம் இடம்பெறவில்லை. கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் போது மட்டும் மோடி அதனைப் பிரஸ்தாபித்தார்.
13ஆவது திருத்தமானது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சாரமாகும். அத்திருத்தத்தைக் கைவிடுவதானது அவ்வொப்பந்தத்தையே கைவிடுவதற்குச் சமமாகும்.
இப்போது அது போன்றதோர் நிலைமை ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் உருவாகி வருகிறது. அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வைப்பதே மனித உரிமை பேரவையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக 2012ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளால் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டு பத்துக்கு மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் மிக இலகுவாகவே நிறைவேற்ற முடியுமாக இருந்தது. மஹிந்தவே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே அப்பிரேரணை கூறியது. ௨௦௧௩ ஆம் ஆண்டு பிரேரணை மூலமும் அதுவே, பரிந்துரைக்கப்பட்டது.
அவை இலங்கை அரசாங்கத்தால் புறக்கணக்கபப்டவே இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றி மனித உரிமை பேரவையே விசாரணையொன்றை நடத்த 2014ஆம் ஆண்டுக்கான பிரேரணை மூலம் வழிவகுக்கப்பட்டது. அவ்விசாரணையின் அறிக்கை 2015ஆம் ஆண்டு வெளியாகியது. பாரியளவில் ஆட்கடத்தல், பொது மக்களைக் கொலை செய்தல், சிறுவர்களைப் பேரில் ஈடுபடுத்தல் போன்ற பல மனித உரிமை மீறல்களுக்கு அவ்வறிக்கை அரச படைகளையும் புலிகளையும் குற்றஞ்சாட்டியது. ஆனால் தனி நபர்கள் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை.
2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. மனித உரிமை மீறல்களை விசாரிக்க பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் உள்ளிட்ட பொறிமுறையொன்றை உருவாக்க அப்பிரேரணை பரிந்துரைத்தது. எனினும், ஒரு வருடத்துக்குள் தாம் அனுசரணை வழங்கிய அப்பரிந்துரைகளை அந்த அரசாங்கம் புறக்கணித்தது.
இந்த நிலையில் தான், பொறுப்புக் கூறலுக்கான தேசிய பொறிமுறை என்பது சாத்தியமற்றது என்ற அடிப்படையில் ஐ.நா. அமைப்பின் உறுப்பு நாடுகளில் இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக 2021ஆம் ஆண்டு பிரேரணையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, குற்றமிழைத்தவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டும் காப்பகம் ஒன்று ஜெனிவாவில் நிறுவப்பட்டது. இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (Sri Lanka Accountability Project) என்பது அத்திட்டத்தின் பெயராகும்.
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவது மற்றும் நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடை மற்றும் ஆதணத் தடை போன்றவற்றை விதிப்பதும் அதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
ஆயினும், அவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறியோருக்கு எதிராக ஏனைய நாடுகள் தத்தமது நாடுகளில் வழக்குத் தொடருமா என்பதே இங்கு எழும் கேள்வியாகும். இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது, அம்னெஸ்டி இண்டரநஷனல் அமைப்பும் இந்த சந்தேகத்தை எழுப்பியது. இப்போது, மனித உரிமை பேரவையே அதைப் பற்றி தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளது.
இம்முறை மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தனிகர் தமது அறிக்கையில் அதைப்பற்றி குறிப்பிடும்போது, இந்தப் பிரேரணையின்படி, எவருக்கு எதிராகவும் எந்தவொரு நாட்டிலும் இது வரை வழக்குத் தொடரப்பட்டதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு உறுப்பு நாடும் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) எந்தவொரு முறைப்பாட்டையும் செய்ததில்லை என்றும் அவர் கூறுகிறார்.
அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா போன்றோருக்கு சில நாடுகளில் பயணத் தடை விதிக்கப்பட்டது. அது மேற்படி பிரேரணையின் பரிந்துரையோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. ஆயினும், இதைப் பற்றி குறிப்பிடும்போது, மனித உரிமை உயர்ஸ்தானிகர் இது எவ்வகையிலும் குற்றவியில் வழக்கு விசாரணையொன்றுக்கு இணையாகாது என்று தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு அப்பால் செல்ல மனித உரிமை பேரவை உத்தேசிக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறியோர் உங்கள் நாட்டில் இருந்தால் உங்கள் நாட்டிலேயே வழக்குத் தாக்கல் செய்யுங்கள் என்று தெடர்ந்தும் கேட்பதை மட்டுமே தற்போது பேரவை செய்து வருகிறது. ஏமாற்றம் தான்.
26 minute ago
36 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
56 minute ago